ஆடை தொழிற்சாலைக்குள் எவ்வாறு கொரோனா பரவியது?

Published By: J.G.Stephan

11 Oct, 2020 | 05:18 PM
image

- ரொபட் அன்டனி  
 
1. வெளிநாடுகளைப்போன்று கொரோனாவுடன்  வாழ பழகிக்கொள்ளவேண்டுமா?  

2. கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள  25 வைத்தியசாலைகளில்  2366 கட்டில்கள் உள்ளன. தொற்றாளர்  அதிகரித்தால் கொரோனாவுக்கான  தனித்த வைத்தியசாலைகள் தயார்ப்படுத்தப்படுவது அவசியமாகும்?

3. சனத்தொகையில் 18 வீதமானோர் வயது முதிர்ந்தோர். எனவே வயதானவர்கள் குறித்து அதிக கவனம் இன்றியமையாதது.  

4.  நூறு வருடங்களுக்குமுன் ‍ஏற்பட்ட பிளேக்  தொற்றுநோயின்   இரண்டாவது அலையின்போதே மிக அதிகளவான உயிரிழப்புகள்   உலகில் பதிவாகின. எனவே மக்கள்  சுகாதார அறிவுறுத்தல்களை புறக்கணிக்கக்கூடாது.


 மக்கள்  வைரஸ் தொற்றுநோய் நாட்டில் இருந்ததையே மறந்துவிட்டு செயற்பட்டுக்கொண்டிருந்த சூழலில் தற்போது யாரும் எதிர்பாராவிதமாக மூன்றாவது பரவல் அலை  ஆரம்பித்திருக்கிறது.


மிகவும் கட்டுப்பாடாக ஊரடங்கு சட்டங்களை அமுல்படுத்தி மக்களும் மிகவும் பொறுப்புடன்நடந்துகொண்ட நிலையில் ஆரம்பத்தில்  இலங்கை  தொற்று பரவலை  கட்டுப்படுத்தியது. இலங்கையில் முற்றாக இந்த வைரஸ் அழிக்கப்பட்டதாகவே கருதப்பட்டது. அதனாலேயே நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.  மக்கள்  அன்றாட செயற்பாடுகளை  சுகாதார அறிவுரைகளையும் மறந்துவிட்டு அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்தனர்.

எனினும் இப்போது மீண்டும்  மூன்றாவது அலை தனது தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது‌‌. முற்றாக அழிக்கப்பட்டதாக கருதப்படும் ஒரு வைரஸ் எவ்வாறு மீண்டும் பரவமுடியும் என்ற  கேள்வி பொதுவாக  மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. ஆனால் அதுதான் இந்த வைரஸ் தொற்றின் தன்மை என்பதை சுகாதாரத் துறையினர் சுட்டிக் காட்டியிருக்கின்றனர்.

கம்பஹாவில்....
 மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட புதிய கொத்தணி பரவல் காரணமாக   ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.   இந்த  தொழிற்சாலை  கொத்தணி பரவலானது நாட்டின் ஏனைய 15 மாவட்டங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 தற்போது நாட்டின் சில பகுதிகளில் இந்த கொத்தணி பரவலுடன் தொடர்புடையதாக கருதப்படும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்‌.  உயர்கல்வி நிறுவனம், பாடசாலைகள், வைத்தியசாலைகள்,  பொலிஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.  அந்த தொற்றாளர்களின் நேரடி தொடர்பாளர்களை கண்டுப்பிடித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் பாதுகாப்பு தரப்பினராலும் சுகாதாரத்துறையினராலும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆடை தொழிற்சாலைக்கு எவ்வாறு  தொற்று வந்தது

 சுமார் இரண்டு மாதகாலத்தின் பின்னர் திடீரென எவ்வாறு  ஆடை தொழிற்சாலைக்கு தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பான விடயம் மர்மமாகவே இருந்துவருகிறது. அந்த தொற்றின் மூலம் என்னவென்பதை கண்டுபிடிப்பதை இலக்காகக் கொண்டு சுகாதார துறையினரும் பாதுகாப்பு தரப்பினரும் முயற்சித்து வருகின்றனர்.   தொற்று  மூலம் கண்டுபிடிக்கப்படாமல்  இருக்கின்றது.  
அதாவது தற்போது இந்த ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட தொற்றின் அடுத்த கட்ட தொடர்பாளர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு  தனிமைப்படுத்தல் இடம்பெறுகின்றன. ஆனால் தொழிற்சாலையை தாக்கிய முதல் மூலம்  எங்கிருந்து வந்தது என்பது இன்னும் மர்மமாகவே இருக்கின்றது.


அப்படியானால் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு தொற்றை பரப்பிய மூலம் இப்போது எங்கே இருக்கின்றது ?அது இப்போதும் எங்கே தொற்றுக்களை பரப்பிக் கொண்டிருக்கின்றது?  என்பது தொடர்பிலேயே நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
 ‍எனவே அபாயம் நீடிக்கின்றது.     அந்த அபாயத்தை தவிர்க்க வேண்டுமானால் மக்கள் அனைவரும் சரியான முறையில் சுகாதார கட்டுப்பாடுகளை பின்பற்றுவது தவிர்க்கப்பட முடியாததாகும்.  


 ஆடை தொழிற்சாலைக்கு இந்தியாவிலிருந்து  சிலர் வருகைதந்ததாகவும் அவர்களினால் தொற்று ஏற்பட்டது என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில்  அதனை குறித்த நிறுவனம் மறுத்துள்ளதுடன் பாதுகாப்பு துறையினரும்  அது குறித்து விளக்கியுள்ளனர்.  
இந்தியாவிலிருந்து யார் வந்தது?  

குறித்த நிறுவனத்தின் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இருக்கின்ற கிளையிலிருந்து 48 இலங்கையர்கள் கடந்த 22ஆம் திகதி விசேட விமானம் ஊடாக மத்தளை விமான நிலையத்திற்கு வருகைதந்திருக்கின்றனர்.  பாதுகாப்பு தரப்பினரின் தகவல்களின்படி குறித்த 48 பேரும் கடந்த ஆறாம் திகதி வரை 14நாள் தனிமைப்படுத்தலை தென்பகுதியில் ஒரு ஹோட்டலில் முடித்துவிட்டு தற்போது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 48 பேரில் ஒருவர்கூட  மினுவங்கொடை  தொழிற்சாலைக்கு வரவில்லையென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  இதேவேளை இந்தியாவிலிருந்து சில அதிகாரிகள்   தொழிற்சாலைக்கு வந்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் அந்தக் குற்றச்சாட்டை  தொழிற்சாலை நிறுவனம் முற்றாக மறுத்துள்ளதுடன் அவ்வாறு யாரும் வருகைதரவில்லை என்பதை உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது.
விடை தெரியாத கேள்வி  

அப்படியானால் எங்கிருந்து  தொழிற்சாலைக்கு முதலாவது தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் விடை தெரியாத  மூலமாகவே நீடித்துக்கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்லாமல் அது இன்னும் அபாய நிலையை  தோற்றுவித்திருக்கிறது.

 வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்புகின்றவர்களுக்கு  தொற்று ஏற்படுவது பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அவர்கள்  தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏதாவது ஒரு தொழில்நுட்ப கோளாறு காரணமாக அப்படியான ஒரு சந்தர்ப்பத்திலிருந்து தொற்று  ஆடை தொழிற்சாலைக்கு பரவியதா  என்ற  கேள்வியும் அதிகாரிகள் மத்தியில் எழுந்திருக்கிறது. ஆனால் அதற்கு இன்னும் விடைகாணமுடியாத நிலைமையே நீடித்துக் கொண்டிருக்கிறது.

 இந்தநிலையில் குறுகிய  நாட்களில் அதிகமான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டும்கூட ஏன் நாடு இன்னும் முழுமையாக முடக்கப்படவில்லை அல்லது ஊரடங்குசட்டம் பிறப்பிக்கப்படவில்லை என்ற கேள்வியை பலரும் எழுப்புகிறார்கள்.  மறுபுறம் அரசாங்கம் உயர்தர மற்றும் புலமைப்பரிசில்   பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் கூறியிருக்கிறது.

இந்நிலையில் ஆரம்பத்தில் மார்ச்  மாதம் 100 நோயாளர்கள் அளவில் அடையாளம் காணப்பட்டபோதே நாடு இரண்டு மாதங்கள் முடக்கப்பட்டு கொத்தனி பரவல்கள் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது இந்தளவு அதிகமான நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டும் நாடு முடக்கப்படவில்லை என்ற கேள்வியை பலர் எழுப்புகின்றனர். ஆனால் உரிய நேரத்தில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றே  அரசாங்க தரப்பில் சுட்டிக்காட்டப்படுகின்றது.  

உலக நிலை
உலகை பொறுத்தவரை அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, பிரேசில், மெக்சிகோ மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலேயே மிக அதிகளவான பாதிப்பு உலக அளவில் ஏற்பட்டிருக்கிறது.

உலகில் இதுவரை 36726,000 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 லட்சத்து 63ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் 217000 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்தியாவில் 106000 பேர்வரை உயிரிழந்துள்ளதுடன் பிரேசிலில் 148000  பேர் பலியாகியுள்ளனர்.

மெக்சிகோவில் 82ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதுடன் பிரான்ஸ் பிரிட்டன் ஆர்ஜென்டினா கொலம்பியா ஸ்பெயின் பெரு போன்ற நாடுகளிலும் அதிகளவு உயிரிழப்புகள் பதிவாகியிருக்கின்றன.

இந்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, போன்ற நாடுகளில் ஆரம்பத்தில் குறிப்பிட்டளவு நாடு முடக்கப்பட்ட போதிலும் கூட சுமார் ஒருமாதகாலத்தின் பின்னர் நாடு திறக்கப்பட்டது.   முடக்கம் தளர்த்தப்பட்டு மக்கள் கொரோனாவுக்கு மத்தியில் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி நடந்து கொள்ளவேண்டும் என்றவிடயம் அந்நாடுகளில பின்பற்றப்படுகிறது.  கெரோனாவுடன்  வாழ பழகிக்கொள்வோம் என்ற ஒரு கோட்பாடு அங்கு பின்பற்றப்படுவதை  காணமுடிகிறது. அவ்வாறான நிலைமை தற்போது இந்தியாவிலும் ஏற்பட்டிருக்கிறது. அங்கும் கொரோனா  ஒருபுறத்தில் போய்க்கொண்டிருக்கின்றது, மக்கள் தமது அன்றாட செயல்பாடுகளை மறுபுறத்தில் முன்னெடுத்து கொண்டிருக்கின்றனர்.
கொரோனாவுடன் வாழ பழகுவதா?  

இலங்கையும் அவ்வாறானதொரு நிலையை நோக்கி செல்கிறதா என்ற கேள்வியும் எழுகின்றது. அதாவது நாட்டை முடக்காமல் மக்கள் முடியுமானவரை சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி கட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்வதன் மூலம் இதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான செயல்முறையை  பின்பற்றுவதா?

காரணம் தொடர்ந்து இவ்வாறு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஒரு கொத்தணி பரவல்  பரவிக்கொண்டிருக்குமானால்   நாட்டை முடக்கிக் கொண்டிருப்பது    சாத்தியமற்றதாகும்.   முடக்கும் பட்சத்தில் பொருளாதாரம் உள்ளிட்ட ஏனைய அனைத்து துறைகளும் கடுமையாக வீழ்ச்சி அடையும். அது நீண்டகாலத்தில் நாட்டுக்கு பாதிப்பைக் கொடுக்கும்.

ஆகமொத்தத்தில்  மக்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதே இங்கு முக்கியமாக அமைகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை குறுகிய காலத்தில் அழித்துவிட முடியாது என்றும் அது இன்னும் சில வருடங்களுக்கு இருக்கும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனமும் கூறிவருகிறது.  

 மக்கள் தாமாக முன்வந்து தமக்கு இந்த வைரஸ் தொற்றுவரக்கூடாது என்பதை உணர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை  பின்பற்றுவதே  முக்கியமாகும்.  ஆனால் அதற்கான வசதிகள் சகல இடங்களிலும் இருக்கின்றனவா? காரணம் பொதுப்போக்குவரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்தப்படுகிறது. ஆனால்  குறித்த அறிவுறுத்தல்கள் மற்றும் கட்டுப்பாடுகளின் பிரகாரம் பயணிகள் பயணிக்க முடியுமா அது நடைமுறைசாத்தியமா  என்பதும் சிந்திக்கப்படவேண்டும்.  

மூன்றாவது அலை  தந்த படிப்பினை

 மினுவாங்கொடை ஆடைதொழிற்சாலை கொத்தணி பரவலானது எமக்கு பல்வேறு படிப்பினைகளையும் கற்றுத்தந்திருக்கிறது.  தொற்றை கட்டுப்படுத்தி விட்டோமென்று நாம் மார்தட்டினாலும்கூட அது எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு மீண்டும் தாக்கும் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கேற்ற வகையில்  கட்டுப்பாட்டுடன் வாழப்பழகிக்கொள்வதே  யதார்த்தமாகும்.  
கொரோனா வைரஸ் தொடர்பில் பயம் எந்தளவுதூரம் இருக்கின்றதோ அதேயளவு மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் இருக்கவேண்டும்.   சமூக இடைவெளியை பேணுதல், கைகளை அடிக்கடி கழுவுதல், முக கவசங்களை சரியான முறையில் அணிதல், கை குலுக்குவதற்கு பதிலாக கைகூப்புதல், தமக்கு அருகில் இருக்கும் பொருட்களை அடிக்கடி தொடாதிருத்தல், அவ்வாறு தொட்டால் உடனடியாக சனிடைசர்  அல்லது சவர்க்காரமிட்டு கைகளை கழுவிக்கொள்தல்,   கைகளை கழுவாமல் வாய் மூக்கு பகுதிகளைத் தொடுவதைத் தவிர்த்தல், பொது போக்குவரத்தின்போது மிகவும் கட்டுப்பாடான முறையில் நடந்து கொள்ளுதல், வர்த்தக நிலையங்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது இடைவெளியை பேணுதல் என்பனவற்றில்  கவனம் தேவையாகும்.  

இலங்கையிடம் மட்டும்  மெஜிக் இருக்கிறதா?
இலங்கையினால் மட்டும் மெஜிக் ஒன்றைபோன்று  வைரஸ் பரவலை தடுத்துவிடமுடியாது. உலக நாடுகள் வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றன.   இலங்கை இரண்டுமாத காலமாக ஒரு தொற்றாளரையும் அடையாளம் காணவில்லை என்பதற்காக அதனை முற்றாக ஒழித்து விட்டோம் என்று அர்த்தமல்ல.  மக்கள் இன்னும் மிகஅதிகமாக கவனமாக இருக்கவேண்டிய கட்டாயத்திலிருக்கின்றனர் என்பதே உண்மையாகும்.
100 வருடங்களுக்கு முன்னர் பிளேக் என்றதொரு தொற்றுநோய் உலக நாடுகளை தாக்கியது. அதில்கூட இரண்டாவது அலை வைரஸ் பரவலின் போதே மிகஅதிகளவான உயிரிழப்பை உலகநாடுகள் சந்தித்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த இரண்டாவது மூன்றாவது அலை பரவல் என்பது மிகவும் பயங்கரமானதாகும்.  மக்களின் சுகாதார விழிப்புணர்வும் கட்டுப்பாடும் முக்கியமாகும்.

வயதானவர்கள்  
அமெரிக்கா, இந்தியா, மெக்சிகோ, பிரேசில் போன்ற நாடுகளில்   வயது முதிர்ந்தவர்கள் மற்றும் ஏற்கனவே வேறு நோய்கள் இருக்கின்றவர்கள் அதிக அளவில் உயிரிழந்திருக்கின்றனர். எனவே கொரோனா வைரஸ் தொற்றானது வயது முதிர்ந்தவர்களை அதிகளவில் தாக்குகின்றது.    எனவே   வயது முதிர்ந்தவர்கள் மிகவும் கவனமாக  இருக்க வேண்டும்.


மினுவாங்கொடையில் ஏற்பட்ட கொத்தணி பரவலில்கூட நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் மூன்று விதமானோரே வயதானவர்களாக இருக்கின்றனர். அதுமட்டுமன்றி இதற்கு முன்னரும் கூட இலங்கையில் தொற்றுக்குள்ளானவர்களில் வயது முதிர்ந்தவர்கள் வீதம் குறைவாகும். அதனாலேயே இலங்கையில் உயிரிழப்பு விதமானது மிகவும் குறைவாக அதாவது 0.3 விதமாக பதிவாகியிருக்கிறது.  எனவே வயது குறைந்தவர்கள் வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே பலநோய்கள் காணப்படுகின்றவர்களை பாதுகாக்கவேண்டும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் தற்போதைய சனத்தொகையில் 18 வீதமானோர் வயதானவர்களாக காணப்படுகின்றனர்.‌எனவே  எச்சரிக்கை அவசியம்.  


2366 படுக்கைகள்
தற்போது நாட்டில் 25 வைத்தியசாலைகள் கொரோனா  சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் சுமார் 2366 கட்டில்கள் காணப்படுகின்றன. அதுவே தற்போயே கொள்ளளவாக உள்ளது. இந்நிலையில் நோயாளர்களின் எண்ணிக்கை அதையும் தாண்டினால் ஒரு சிக்கல்நிலை தோன்றலாம். அது தொடர்பில் அரசாங்கம் தற்போதே திட்டமிடவேண்டும். எனினும்  தேவைப்படின் மேலும் வைத்தியசாலைகள்  கொரோனாவுக்காக பெறப்படும் என்று  சுகாதார அமைச்சர்  பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.  


 அதனால்  நிலைமையை புரிந்துகொண்டு மக்களும் மிகவும் கட்டுப்பாடுடன் தம்மை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் செயற்படுவது அவசியமாகும்.‌  மக்கள் தாங்கள் சரியான முறையில் சுகாதார அறிவுறுத்தல்களை பேணினால் நிச்சயம் இதிலிருந்து வெளியே வரமுடியும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41