இந்தியாவில் அடிக்கடி பாலியல் வன்முறைகளுக்கு முகங்கொடுக்கும் தலித் பெண்கள்

Published By: J.G.Stephan

11 Oct, 2020 | 03:49 PM
image

சிவம் விஜ்

  • சாதியைத் தவிர வேறெதுவும் காரணமில்லை
  • உயர் சாதிப் பெண்ணை தலித் ஆணொருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
  • ஒருபோதும் கேள்விப்படப் போவதில்லை. சாதி அடிப்படையிலான பாலியல் வன்முறைகளின் பின்னணியை விளங்கிக்கொள்ள வேண்டும்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸ் பகுதியில் தலித் பெண்மணியொருவர் பலரால் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தலித்துக்கள் மீதான அட்டூழியங்கள் என்று கூறப்படுகிறது. அவ்வாறு அழைப்பதில் பலருக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. பாலியல்  வல்லுறவு மற்றும் கொலைக்கும் சாதிக்கும் என்ன தொடர்பு? தலித் அல்லாத பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படவில்லையா? சாதியை எந்தவித காரணமுமின்றி இந்த விடயத்துக்குள் இழுக்கக் கூடாதென்று அவர்கள் கூறுகிறார்கள்.

இந்திய கிராமப் புறங்களில் தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட ஒவ்வொரு சம்பவத்தைப் போன்றும் ஹத்ராஸ் சம்பவத்திலும் சாதி முழுமையாக சம்பந்தப்பட்டிருக்கிறது.

ஹத்ராஸ் சம்பவத்தை ஆழமாகப் பார்ப்போம். இருபது வயது பெண்ணை தாக்கூர் சமூகத்து ஆண்கள் ஏன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்தார்கள்? இந்த சம்பவம் 2012 டிசம்பரில் புதுடில்லியில் ஜோதிசிங் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதைப் போன்றதா? இல்லை. ஜோதிசிங் வீட்டுக்குப் போவதற்காக ஒரு பஸ்ஸில் ஏறினார். அந்த பஸ் தனக்கொரு பொறி என்பதையும் அதற்குள் இரவு கேளிக்கைக்காக எவராவது  அகப்பட மாட்டார்களா என்று எதிர்பார்த்துக்கொண்டு மதுபோதையடன் ஆண்கள் இருந்தார்கள் என்பதும் அவளுக்கு தெரியாது. அந்த சம்பவத்தில் சாதி பற்றி பேசுவதற்கு எதுவமில்லை. ஜோதிசிங் இல்லாவிட்டால் வேறு எந்தப் பெண்ணாவது அந்த கொடுமைக்கு இலக்காகியிருக்கக்கூடும்.

ஹத்ராஸ் சம்பவத்தில் தாக்கூர் ஆண்கள் அந்த தலித் பெண்ணை தெரிந்தவர்களாக இருந்தார்கள். அவர்கள் அயலவர்களும் கூட. இரண்டு குடும்பங்களுக்கிடையில் 20 வருடங்களாக தகராறு இருந்து வந்திருக்கிறது. வெறுமனே ஒரு குடும்பத் தகராறில் சாதி எங்கே சம்பந்தப்பட்டிருக்கிறது என்று நீங்கள் எவராவது கேட்கக்கூடும். இதற்கு பதில் தேவையானால் இவ்விரு குடும்பங்களுக்கும் இடையிலான பழைய தகராறு பற்றி நோக்குவோம்.

இந்த தலித் குடும்பத்துக்கு சில விவசாய நிலங்கள் இருக்கின்றன. 20 வருடங்களுக்கு முன்னர் தாக்கூர் குடும்பம் தங்களது எருமைகளை தலித் குடும்பம் வளர்த்த பயிர்களை மேய்வதற்கு கொண்டு வந்தார்கள். தலித் குடும்பம் ( குறிப்பாக சம்பந்தப்பட்ட பெண்ணின் பாட்டனார் ) எருமைகளை அந்தப் பயிர்களை மேய விடாமல் இழுத்துச் செல்லுமாறு தாக்கூர்களை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகின்றது.  இத்தகைய தகராறொன்று எந்த இரு நபர்களுக்கும் இடையில் ஏற்படக்கூடியதே. இரு தாக்கூர் குடும்பங்களுக்கு இடையில் கூட ஏற்படலாம். ஆனால், இங்குதான் தகராறு சாதி சம்பந்தப்பட்டதாக மாறுகின்றது.

ஒரு தாக்கூருடன் வீறாப்பாக பேசுவதற்கு ஒரு தலித் ஆணுக்கு துணிச்சல் இருப்பதா என்று தாக்கூர் குடும்பம் ஆத்திரமடைந்தது. இதுதான் பிரச்சினையின் ஆணிவேர். இதன் விளைவாக மூண்ட வன்முறை, அச்சுறுத்தல்கள், வழக்குகள், எதிர்ப்புக்கள் இறுதியில் ஒரு பெண்ணின் கொலையில் முடிவடைந்திருக்கிறது.

“எருமைகளை மேய விட வேண்டாமென்று ஒரு தலித்;தினால் துணிச்சலுடன் சொல்ல முடியுமா என்று அவர்கள் ஆத்திரப்பட்டார்கள். அவரை ஒரு கத்தியால் தாக்கினார்கள் தனது கழுத்தைக் காப்பாற்றுவதற்கு எனது பாட்டனாரர் முயற்சித்த போது அந்த கூரிய ஆயுதம் அவரது கை விரல்களை வெட்டி துண்டாடிவிட்டது” என்று பாலியல் வல்லுறவுக்கு பின்னர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரர் ஊடகங்களுக்கு கூறினார். “ இங்கு மக்கள் இன்னமும் தீண்டாமையை கடைப்பிடிக்கிறார்கள். எங்களது வீட்டை கடந்து செல்வது தங்களது கௌரவத்தை குறைக்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஒரு தாக்கூர் தங்களைக் கடந்து போகும்போது எமது பாட்டனாரோ பாட்டியோ எழுந்து நிற்கிறார்கள். எம்மிடம் ஏதாவது சொல்ல வேண்டிய தேவை இருந்தால் ஒரு தாக்கூரோ அல்லது பிராமணரோ எமது வீடுகளுக்கு வருவதை ஒருபோதும் காண மாட்டீர்கள். அவர்க்ள ஒரு ஆளை அனுப்பித்தான் செய்தியை சொல்லுவார்கள். சில ரொட்டித் துண்டுகளுக்கு கைமாறாக எமது மூதாதையர்கள் தாக்கூர்களினதும் பிராமணர்களினதும் வீடுகளை துப்பரவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இன்று நாம் அவர்களது வீடுகளை துப்பரவு செய்வதும் இல்லை. அவர்கள் தங்களுக்கு உரியது என்று  எண்ணும் மரியாதையை நாம் கொடுப்பதுமில்லை என்பதால் தாக்கூர்கள் இன்று ஆத்திரமடைந்து இருக்கிறார்கள்.” என்றும் அந்த சகோதரன் மேலும் விளக்கினார்.

வெவ்வேறு சாதிக் குழுக்கள் வெவ்வேறு பகுதிகளில் பிரிந்து வாழ்வதை இந்தியாவின் எந்தக் கிராமத்திற்கு சென்றாலும் பார்க்க முடியம்.  வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களின் வீடுகள் அல்லது நிலங்கள் அருகருகாக இருந்தால் அங்கே அடிக்கடி தகராறுகள் மூளுகின்றன. கிராமத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கும் உயர் சாதியைச் Nசுர்ந்தவர்களிடம் தலித்துக்களைப் பற்றி கேளுங்கள். தலித்துக்கள் தங்கள் சொல்லை இப்போது கேட்பதில்லை. முன்னரெல்லாம் எமக்கு அடி பணிந்தவர்களாக இருந்தார்கள். இப்போது அதெல்லாம் மாறிவிட்டது என்று அவர்கள் பதில் கூறுவார்கள். இந்த நிலைவரம் உயர் சாதிகளுக்கு வெறுப்பைக் கொடுத்தது. அடக்குமுறையையும் நில அபகரிப்பையும் பலவந்தமாக தொழில் செய்விக்கப்படுவதையும் பாலியல் வன்முறைகளையும் தலித்துக்கள் எதிர்க்கும் போது அடிக்கடி அவர்கள் வன்முறையை சந்திக்க வேண்டியிருக்கிறது.

தலித் பெண்கள் ஏன் இலக்காகிறார்கள்?
மற்றவர்கள் வளர்க்கும் பயிர்களை எருமைகள் மேய விடுவது தொடர்பான சர்ச்சை சாதி பற்றியதேயாகும். ஏனென்றால், தாங்கள் ஆதிக்க சாதியினர் என்பதால் அவ்வாறு தலித்துக்களின் பயிர்களை தங்களது எருமைகள் மேய்வதனால் எந்தப் பிரச்சனையும் வராது என்று தாக்கூர்கள் நினைக்கிறார்கள். தாக்கூரின் பயிர்ச்செய்கையில் ஒரு தலித் தனது கால்நடைகளை மேய விட்டதாக ஒருபோதும் நீங்கள் கேள்விப்பட முடியாது.

இத்தகைய வேறு சம்பவங்களில் தலித்துக்கள் எதிர்த்துப் பேசி ஆட்சேபிக்கும் போது தலித் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் கொடுமைகள் அல்லது பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுவதில் அதுபோய் முடிகிறது. நிலப்பிரபு யார் அடிமை யார் என்பதைக் காட்டுவதற்காக தலித் குடும்பத்தவர்களுக்கு உயர் சாதியினர் இறுதி ஆயுதமாக பெண்ணின் கண்ணியம் மீதான அத்துமீறல்களைப் பயன்படுத்துகிறார்கள்.

லக்னோவைச் சேர்ந்த பிரபலமான தலித் செயற்பாட்டாளரான ராம்குமார் பல தசாப்தங்களாக தலித்துக்களுக்கு எதிரான பல அட்டூழியங்களை ஆவணப்படுத்தி வருகிறார். ஹத்ராஸ் பாலியல் வல்லுறவு மற்றும் கொலை சம்பவம் சாதி வேறுபாட்டுடன் சம்பந்தப்பட்டதா என்று அவரிடம் கேட்டகப்பட்ட போது குற்றஞ்சாட்டப்பட்ட ஆண்கள் தலித்துக்களாக அல்லது முஸ்லிம்களாக இருந்திருந்தால் இந்த கேள்வியை நாங்கள் கேட்டிருக்க மாட்டோம் என்று கூறினார்.

அது முஸ்லிம் ஆண்களாக இருந்திருந்தால், அந்தப் பெண் உயர் சாதியைச் சேர்ந்தவராகவும் ஆண்கள் தலித்துக்களாகவும் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
அவர்கள் முஸ்லிம் ஆண்களாக இருந்திருந்தால் அதுவொரு இந்து – முஸ்லிம் பிரச்சினையாக மாறியிருக்கும். அத்தகைய பிரச்சினை இந்த நாட்களில் எத்தகைய விளைவுகளுக்கு வழிவகுக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது தலித் ஆண்களாக இருந்திருந்தால் மாநிலம் பூராகவும் தலித்துக்களுக்கு எதிரான வன்முறையாக மாறியிருக்கும். வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டிருக்கும் என்று குமார் கூறுகிறார்.

“ஒன்றல்ல பலநூறு அத்தகைய சம்பவங்களை நான் பார்த்திருக்கிறேன். தலித்துக்கள் துணிச்சலுடன் நீதி கேட்கும் போது இவர்களது தாய்மாரும் மகள்மாரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதுதான் உங்களுடைய பெறுமதியென்று முழு தலித் சமூகத்திற்கும் காட்டுவதே அத்தகைய கொடுமையின் பின்னணியிலுள்ள நோக்கமாகும். இவ்வாறு கொடுமையை செய்வதன் மூலம் தலித் குடும்பத்தின் வாயடைக்கச் செய்யக்கூடியதாக இருப்பதுடன் சர்ச்சைக்குரிய நிலத்தையும் கைவிட்டு பொலிஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட முதல் முறைப்பாடும் வாபஸ் பெறப்படுகிறது.

பாலியல் வல்லுறவு ஒரு மானக்கேடான செயஙலாகவும் அவமதிப்பான செயலாகவும் நோக்கப்படுகிறது. அதனால் பாதிக்கப்படுகின்ற பெண்களின் பல குடும்பங்கள் அமைதியாக இருப்புதுடன் அன்றாடம் இடம்பெறுகின்ற சாதி ஒடுக்கு முறையை எதிர்ப்பதையும் நிறுத்தி விடுகிறார்கள். ஆனால், தங்களது அடிப்படை உரிமைகளையும் நீதியையும் ‘ தவறாக’ கேட்கின்ற தலித்துக்களை மௌனமாக்குகின்ற ஒரு பிரச்சினை அல்ல இது.

தலித் பெண்களின் உடல்கள் மீது தங்களுக்கு உரிமை இருப்பதாக உயர் சாதி ஆண்கள் நினைக்கிறார்கள். இந்த நினைப்பு வளர்ந்து கொண்டு வருவதையே நாம் காண்கிறோம். உயர் சாதி ஆண்களிடமிருந்து தூர விலகி இருக்குமாறு தங்களது மகள்மாரை தலித் பெற்றோர் கேட்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், தங்களால் நீதிக்காகப் போராட முடியாது என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இப்போது மக்கள் நீதிக்காக போராடுகிறார்கள்.

சுருக்கமாகச் சொல்வதானால் தலித் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாக உயர்சாதி ஆண்கள் நினைப்பதால் அந்த பெண்கள் அடிக்கடி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.  தலித்; குடும்பம் அடக்குமுறையை எதிர்க்கும் போது அதாவது உயர் சாதி மக்களின் கால்நடைகளிடமிருந்து தங்களது பயிர்களை காப்பாற்ற நினைக்கும் போது, நில அபகரிப்பின் போது, ஒதுக்கி வைக்கப்படும் போது அதைத் தலித் குடும்பம் எதிர்த்தால் நிலைமை மேலும் மோசமாகிறது.

தலித் பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் பற்றிய செய்திகளினால்  செய்திப் பத்திரிகைகள் நிறைந்து கிடக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு தலித் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக தலைப்புச் செய்திகளை பத்திரிகைகளில் காண முடியும். தலித் பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பில் அறிக்கையொன்றை தயாரித்த சிவில் சமூகக் குழுவொன்றில் குமார் அங்கம் வகித்தார். அந்த அறிக்கையை வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர் மகாநாடொன்றில்  பத்திரிகையாளர் ஒருவர் உயர் சாதி பெண்களுக்கெதிரான அட்டூழியங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் குபுரல் கொடுப்பதில்லை என கேட்டார்.

“ ஒரு தலித் ஆண் பிராமணப்  பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய ஒரு தனிச் சம்பவத்தையாவது எனக்கு கூறுங்கள் பார்க்கலாம்” என்று அந்தக் கேள்விக்கு பேராசிரியர் ரமேஷ் தீக்சித் பதில் கூறியதாக குமார் நினைவு படுத்தினார்.

தலித் பெண்ணொருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் சாதிப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டதல்ல என்று கூறுகின்றவர்களுக்கு பேராசிரியரின் அந்த பதில் மாத்திரமே உண்மையை உணர்த்த போதுமானது. ஹத்ராஸில் பாலியல் கொடுமைக்கு பிறகு கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரர் அந்த சம்பவத்தில் பிரதான பிரதிவாதி பற்றி பின்வருமாறு பத்திரிகைகளுக்கு கூறினார்,

“ சந்தீப் ஒரு குடிகாரன். எப்பொழுதுமே பெண்களுக்கு தொல்லை கொடுப்பவன். ஆனால், அவனைப் பற்றி எவருமே முறைப்பாடு செய்ததில்லை.”

ஏன் எவருமே அவனுக்கெதிராக ஒருபோதும் முறைப்பாடு செய்யவில்லை. அவனொரு தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதே காரணமாகும். அவன் எந்தவொரு அநியாயத்தையும் செய்து விட்டு சட்டத்திலிருந்து தப்பிச் செல்லக்கூடியதாக இருக்கிறது. சட்டத்தின் பிடியில் அகப்படாமல் சுதந்திரமாக அவன் அவ்வாறு செய்வதற்கு அவனது சாதி அந்தஸ்து இடம் கொடுக்கிறது.

இதுவெல்லாம் ஒன்றும் புதியதும் அல்ல: தெரியாததும் அல்ல. இந்துத்வா ஆதரவாளர்கள் பாலியல் வல்லுறவுக்கும் சாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக்கூற விரும்புகிறார்கள். ஏனென்றால், இந்து சாதி முறைமையின் அன்றாட அட்டூழியங்களை நிராகரிக்க அவர்கள் விரும்புகிறார்கள். அவ்வாறு நிஜராகரிப்பது அத்தகைய கொடுமைகள் இல்லையென்று பாசாங்கு செய்வதற்கு மாத்திரமல்ல சாதி முறைமை தொடர்ந்து வளருவதை   உறுதிப்படுத்துவதற்கும் ஆகும். இந்துத்வா சக்திகள் பெருமளவில் உயர் சாதியின் ஆதிக்கத்தில் உள்ளவையாகும்.

சாதிக்கும் பால்நிலைக்கும் இடையிலான வெளிப்படையானதும் எல்லோருக்கும் தெரிந்ததுமான இடைத்தொடர்பை சுட்டிக்காட்டுவது முக்கியமாகிறது. ஏனென்றால், உயர் சாதியைச் சேர்ந்த தாராள சிந்தனை கொண்ட சிலர் கூட இந்த இடைத்தொடர்பை (ழுடிஎழைரள யனெ றுநடட – முழெறn ஐவெநசளநஉவழையெடவைல டிநவறநநn உயளவந யனெ பநனெநச ) விளங்கிக் கொள்கிறார்கள் இல்லை அல்லது இல்லையென்று பாசாங்கு செய்கிறார்கள். தாராள சிந்தனை கொண்டவர்களாக கருதப்படக்கூடிய ஒரு பத்திரிகையாளர் ஒரு கூட்டு பாலியல் வல்லுறவையும் கொலையையும் சாதி அட்டூழியமாக நாம் சிறுமைப்படுத்தக் கூடாதென்று விரும்புகிறார் என்றால் சில இந்தியர்கள் இந்தியாவுக்கு எப்போதாவது வந்திருக்கிறார்களா என்று ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது.


( த பிரின்ட் ) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04