ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  எம்.எச்.எம்.அஷ்ரபை நினைவு கூருதல்

11 Oct, 2020 | 02:27 PM
image

- டி.பி.ஜெயராஜ்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தனித்துவமான தலைவர் மொஹமட் ஹ_சைன் மொஹமட் அஷ்ரபின் 20ஆவது நினைவு தினம் செப்டெம்பர் 16ஆம் திகதி வந்துபோனது. அவர் மரணமடைந்த வேளையில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்தில் கப்பல் போக்குவரத்து துறைமுகங்கள் புனர்நிர்மாணம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக பதவி வகித்தார். அவர் 2000 செப்டெம்பர் 16ஆம் திகதி ஹெலிகொப்டர் விபத்தில் வேறு 14பேருடன் சேர்த்து, கொல்லப்பட்டார்.

விதிவசமான அன்றைய தினம் காலை எம்.எச்.எம்.அஷ்ரப், சுமார் 9.30 மணியளவில் கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் இலங்கை விமானப்படையின் எம்.ஐ.17 ஹெலிகொப்டரில் ஏறினார். அம்பாறைக்கு செல்வதற்கான அந்த பயணத்தில் இலங்கை விமானப்படையை சேர்ந்த இரு விமானிகளும் இருந்தனர்.

45நிமிடங்களுக்கு பிறகு ஸ்குவாட்ரன் லீடர் சிரான் பெரேரா ஓட்டிச் சென்ற அந்த ஹெலிகொப்டருடனான வானொலி தொடர்பை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் இழந்தனர். சப்ரகமுவ மாகாணத்தில் கேகாலை மாவட்டத்தில் அரநாயக்கா பகுதியில் ஊராகந்த மலைத்தொடரில் ஹெலிகொப்டர் மோதியது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. ஹெலிகொப்டர் சிதைவுகளுக்குள்ளிருந்து 15 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 

அஷ்ரபின் இறுதிச் சடங்கு அன்றைய தினம் பின்னிரவில் கொழும்பு ஜாவத்தை முஸ்லிம் மையவாடியில் இடம்பெற்றது. அவர் ஏற்கனவே தான் இறந்து சிலமணி நேரத்துக்குள் தனது உடலை அடக்கம் செய்துவிட வேண்டும் என்று குடும்ப உறுப்பினர்களிடம் கூறியிருந்தார்.

அஷ்ரபின் மரணத்துக்கு பிறகு இரண்டு தசாப்தங்கள் கடந்து விட்டன. ஆனால், அவரது மரணம் முஸ்லிம் அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது என்பதையும் அந்த வெற்றிடம் இன்றும் நிரப்பப்படவில்லை என்பதையும் எவரும் மறுக்க முடியாது. 20வருடங்களுக்கு பின்னரும் கூட அவரது மறைவு ஏற்படுத்திய தாக்கம் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் மீதும் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் மீதும் குறிப்பிடத்தக்க செல்வாக்கை தொடர்ந்து செலுத்திக்கொண்டிருக்கின்றது.

கிழக்கில் மக்களின் செல்வாக்கை இழந்துபோவதை தவிர்க்க விரும்புகின்ற – செல்வாக்கை தொடர்ந்து தக்கவைக்க விரும்புகின்ற அல்லது மேலும் கூடுதல் செல்வாக்கை பெற விரும்புகின்ற எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் அஷ்ரப் என்ற மந்திரப் பெயரை எப்பொழுதும் புகழ்ந்து கொண்டிருக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில் அரசியல் ரீதியில் ஓரங்கட்டுப்படவிடக்கூடாதே என்ற பயத்தில் அஷ்ரபின் அரசியலை கண்டன விமர்சனம் செய்வதற்கு எந்தவொரு அரசியல்வாதியும் துணிச்சல் கொள்வதில்லை.

மர்ஹ{ம் அஷ்ரபின்

அரசியல் மதிப்பின் மர்மம்

மர்ஹ_ம் எம்.எச்.எம்.அஷ்ரபின் அரசியல் மதிப்பின் மர்மம் இன்னமும் தொடர்ந்து நீடிப்பதற்கான காரணம் தான் என்ன? அவர் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் தனது காலத்தை வெகுவாக முந்தியவர். தனது சமூகத்தின் பயன்படுத்தப்படாத பரந்த அரசியல் ஆற்றலை புரிந்துகொண்ட அஷ்ரப், இந்த மண்ணில் தனது மக்களுக்கு அவர்களுக்கு உரிய சரியான இடம் கிடைப்பதை இயலுமாக்கிய பாதை ஒன்றை வகுப்பதற்கு முற்பட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னோடி தலைவர் காத்தான்குடியை சேர்ந்த அஹமத் லெப்பையுடன் சேர்ந்து 1981 செப்டெம்பரில் அஷ்ரப், கட்சியை ஆரம்பித்தார். எவ்வாறெனினும், 1986ஆம் ஆண்டில் கட்சியின் தலைமைத்துவத்தை முறைப்படியாக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு காங்கிரஸ{க்கு புதிய நோக்கையும் செல்நெறியையும் கொடுத்தவர் எம்.எச்.எம்.அஷ்ரப்தான்.

அஷ்ரபின் செயல் நோக்குடனான ஆர்வச் சுறுசுறுப்பும் இலட்சிய பற்றுடனான சக்தியும் காரணமாக அவர் தலைவராக இருந்த 15வருட காலத்திலும் பலபல விடயங்களை முஸ்லிம் காங்கிரஸ் சாதித்தது. அவரின் மக்கள் கவர்ச்சியும் அரசியல் கூர்மதியும் அர்ப்பணிப்பும் தலைமைத்துவத்துக்கான தனித்துவமான குணாதிசயங்களும் நீண்டகாலமாக கவனிக்காமல் விடப்பட்ட கிழக்கு மாகாண முஸ்லிம்களை வளம்பெறக் கூடிய ஒரு அரசியல் சமுதாயமாக உருவாக்கி எடுக்க வகை செய்தன.

இலங்கையின் நெருக்கடியும் மோதலும் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான ஒரு பிரச்சினையாக மிகவும் எளிமையான முறையில் நோக்கப்பட்ட ஒரு நேரத்தில் முஸ்லிம்களினால் எதிர்நோக்கப்பட்ட பிரச்சினைகளை அஷ்ரபின் முயற்சிகள் முன்னரங்கத்துக்கு கொண்டு வந்தன.

 நாவன்மையுடனும் செயற்திறனுடனும் அஷ்ரபினால் நியாயப்படுத்தப்பட்டு குரல் கொடுக்கப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்வொன்றை காணமுடியாமல் இருக்கின்றதாக தோன்றுகின்ற இனநெருக்கடி என்பது வெறுமனே சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையிலான இருதரப்பு பிரச்சினை மாத்திரமல்ல, முஸ்லிம்களையும் சம்பந்தப்படுத்திய முத்தரப்பு பிரச்சினை என்ற பொதுவான விழிப்புணர்வுக்கு வழிவகுத்தது.

இலங்கை முஸ்லிம்களின்  தனித்துவமான இனத்துவ அடையாளம்

சோனகர்கள் என்றும் அறியப்பட்ட இலங்கை முஸ்லிம்கள் தனித்துவமான இனத்துவ அடையாளம் ஒன்றை கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையின் சனத்தொகையில் 9.6சதவீதத்தினராக இருக்கும் முஸ்லிம்களில் மூன்றில் இரண்டு பங்கினர் சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட 7 மாகாணங்களிலும் சமத்துவமான தொகையிலும் எஞ்சியவர்கள் தமிழ் பெரும்பான்மையை கொண்ட வடக்கு - கிழக்கு மாகாணங்களிலும் வாழ்கின்றனர். சிங்கள மக்கள் மத்தியில் வாழுகின்ற பிரிவினர் உட்பட முஸ்லிம் சமூகத்தின் பெருமளவானோர் வீடுகளில் தமிழ் மொழியை பேசுவதுடன் தமிழ்பேசும் மக்கள் என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள். பெரும்பாலான முஸ்லிம் பாடசாலைகளில் போதனா மொழி பிரதானமாக தமிழேயாகும். அந்த சமூகம் உயர்நிலையை எட்டிய பெரும் எண்ணிக்கையான தமிழ் கல்விமான்களையும் அறிஞர்களையும் பத்திரிகையாளர்களையும் கவிஞர்களையும் தந்திருக்கிறது. 

இவ்வாறாக இருந்தபோதிலும், அந்த சமூகம் தம்மை தமிழர் என்று அல்ல, முஸ்லிம்கள் என்றே கருதுகிறது. இந்த முஸ்லிம் உள்முக உணர்வு இனத்துவ – மொழியின் அடிப்படையில் அல்ல, மத அடிப்படையில் ஆனது. இந்த சமூக கலாசார யதார்த்தம் அண்மைகாலங்களில் கூடுதலான அரசியல் பரிமாணங்களை பெற்றுக் கொண்டது.

நாடுபூராகவும் சிதறி வாழுகின்ற ஒரு சமூகமாக இலங்கை முஸ்லிம்கள் இருக்கின்ற போதிலும் கிழக்கு மாகாணத்திலேயே தனியான மிகப்பெரிய சமூகமாக வாழ்கிறார்கள்.

பெரும் எண்ணிக்கையான முஸ்லிம்கள் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் எழுவான்கரை என்று அழைக்கப்படுகின்ற கரையோர பகுதிகளின் ஓரமாக தமிழ் கிராமங்கள் மத்தியில் இடையிடையில் வாழ்கிறார்கள். படுவான்கரை என்று அறியப்பட்ட மட்டக்களப்பு வாவியின் மேற்கு புற பகுதி தமிழர்களை அதிக பெரும்பான்மையாக கொண்டதாகும்.

கிழக்கு மாகாணம் கனிசமான முஸ்லிம் வாக்குகளை கொண்ட ‘முஸ்லிம் நிலப்பகுதிகளை’ கொண்டதாகும். இது ஒவ்வொரு தேர்தலிலும் அந்த மாகாண முஸ்லிம்கள் குறைந்தபட்சம் 4-7 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு உதவுகிறது. சில சந்தர்ப்பங்களில் கிழக்கு  மாகாணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த மொத்த முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் சுமார் 50சதவீதமாகவும் அமைந்திருக்கிறார்கள். 

இத்தகையதொரு அனுகூலமான தகைமை இருக்கின்ற போதிலும் முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த தலைமைத்துவம் பல வருடங்களாக கிழக்கு முஸ்லிம்களின் கரங்களில் இருக்கவில்லை. ஒப்பீட்டளவில் மேம்பட்டவர்களாக இருந்த மத்திய, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களின் முஸ்லிம் தலைவர்களே முஸ்லிம் சமுதாயத்தின் விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்ததுடன் கிழக்கை சேர்ந்த முஸ்லிம்கள் மீது மேலாட்சி செலுத்துபவர்களாகவும் விளங்கினர். ஆனால், இந்த நிலைவரம் எல்லாம் அஷ்ரபின் வருகையுடன் மாற்றமடைந்தது.

அஷ்ரபின் வருகை

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை முஸ்லிம் கிராமத்தில் 1948 ஒக்டோபர் 23இல் பிறந்தவர் அஷ்ரப். அவரது தகப்பனாரின் பெயர் மொஹமட் மீராலெப்பை ஹ_சைன் (ஹ_சைன் விதானை) தாயார் பெயர் மதீனா உம்மா. அதே பிராந்தியத்தில் கல்முனை நகரில் அஷ்ரப் வளர்ந்தார். கல்முனையில் பாடசாலை கல்வியை முடித்துக்கொண்ட அஷ்ரப் கொழும்பு சட்ட கல்லூரியில் பிரவேசித்தார்.

 சட்டக்கல்லூரி பரீட்சையில் முதலாம் தர சிறப்புடன் சித்தியெய்தினார். சட்டமா  அதிபர் திணைக்களத்தில் அரச சட்டத்தரணியாக குறுகிய காலம் பணியாற்றிய அஷ்ரப், பிறகு அந்த பதவியை இராஜினாமா செய்துவிட்டு வெளியில் சட்டத் தொழிலை மேற்கொண்டார். அடுத்து அவர் கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து முதலில் சட்டகலைமாணி பட்டத்தையும் பிறகு முதுமாணி பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். இந்த சாதனைகளை அவர் 1995ஆம் ஆண்டு அமைச்சராக பதவிவகித்த வேளையில் சாதித்தனர்.

கம்பளையை சேர்ந்த பேரியல் இஸ்மாயிலை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் ரயில் பயணம் ஒன்றின்போது சந்தித்து காதலர்களாயினர். தனது கணவருக்கு பலம்மிக்க தூணாக விளங்கிய பேரியல், கணவரின் மரணத்துக்கு பிறகு தீவிர அரசியலில் பிரவேசித்தார். அமைச்சரவை அமைச்சராக வந்த முதலாவது முஸ்லிம் பெண் என்ற வரலாற்றையும் பேரியல் படைத்தார்.

அவர் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரின் கீழ் வெவ்வேறு நேரங்களில் வீடமைப்பு, நிர்மாணம், பொதுவசதிகள், கைத்தொழில் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்தி போன்ற பல அமைச்சு பொறுப்புகளில் இருந்தார். அத்துடன் அவர் சிங்கப்பூருக்கான உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றினார். அஷ்ரபினதும் பேரியலினதும் ஒரே ஒரு மகனான அமான், கொழும்பில் தனது சொந்த விளம்பர முகவர் நிலையத்தை நடத்தி வருகிறார். 

பின்னரான வருடங்களில் விட்டுக்கொடுக்காத ஒரு முஸ்லிம் தேசியவாதியாக விளங்கியபோதிலும் அஷ்ரப் எப்போதும் தமிழ்மொழிக்கும் அதன் சிறப்புக்கும் நெருக்கமானவராக இருந்தார்.

கல்முனையில் வெஸ்லி மேல்நிலை பாடசாலையின் பழைய மாணவனாகவும் பிறகு சட்ட மாணவனாகவும் தமிழர்களுடன் அவர் நெருங்கி பழகினார். அரசியலின் விளங்கா போக்குகளுக்கு மத்தியிலும் அஷ்ரப் தனது தமிழ் மாணவ நண்பர்களுடனும் சகபாடிகளுடனும் தனிப்பட்ட நட்புறவை தொடர்ந்து பேணினார். தமிழ்மொழியிலும் இலக்கியத்திலும் புலமை கொண்டவராக அவர் விளங்கினார்.

தனது இளமை காலத்தில் சமத்துவம் என்ற பெயரில் அவர் ஒரு சஞ்சிகையையும்  வெளியிட்டார். அத்துடன் தமிழ் தினசரியான தினபதிக்கு பகுதிநேர செய்தியாளராகவும் பணியாற்றினார்.

அஷ்ரப் தமிழில் ஒரு உணர்ச்சிமிக்க பேச்சாளராவார். மேலும் ஒரு கவிஞர் என்ற வகையில் தனது சிந்தனைகளுக்கான வாகனமாக தமிழை நன்கு பயன்படுத்திக் கொண்டார். அவர் வெளியிட்ட ‘நான் எனும் நீ’ என்ற கவிதை தொகுதி பாராட்டத்தக்கது என்றாலும் அவரது விசுவாசிகள் கூறுவது போல பெரும் சிறப்புவாய்ந்த தொகுதியல்ல. எது எவ்வாறாயினும், சமகால தமிழ் - முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவிதைகளை இயற்றுவது மாத்திரமல்ல வாசிக்கவும் செய்கிறார்கள்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் இணை ஸ்தாபக தலைவரான தந்தை செல்வநாயகத்தினால் கவரப்பட்டவராக அஷ்ரப் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். செல்வநாயகத்தை பெரிதும் நேசித்த அவர் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் தமிழ்பேசும் மக்களுக்கான சமஷ்டிவாத நோக்கை விரும்பியவராக இருந்தார். புத்தளம் பள்ளிவாசலில் சிங்கள பொலிஸாரினால் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பாராளுமன்றத்தில் செல்வநாயகம் பிரச்சினை கிளப்பியதை எப்போதும் அவர் பெரிதாக மதித்தார். அந்த நேரத்தில் புத்தளம் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான நைனா மரிக்கார் உட்பட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் புத்தளம் கொலைகள் குறித்து மௌனம் சாதித்தார்கள். 

தமிழரசுக் கட்சியின் மேடைகளில் உரையாற்றி வந்த அஷ்ரப், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தனித் தமிழீழத்துக்கான கோரிக்கையை ஏகமனதாக ஏற்றுக்கொண்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க வட்டுக்கோட்டை மாநாட்டிலும் பங்கேற்றார்.

தமிழீழம்

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மேடைகளில் தமிழீழத்துக்காக ஆர்வத்துடன் அஷ்ரப் பிரசாரம் செய்துகொண்டிருந்த வேளையில், 1977 நான் அஷ்ரபை முதன்முதலாக சந்தித்தேன். கல்முனையை சேர்ந்த சட்டத்தரணி ஏ.எம்.சம்சுதீனுடன் சேர்ந்து முஸ்லிம் ஐக்கிய முன்னணியை ஆரம்பித்த அஷ்ரப், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துடன் ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டார். சம்மாந்துறை, கல்முனை, புத்தளம், மூதூர் ஆகிய தொகுதிகளில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உதயசூரியன் சின்னத்தின் கீழ் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டார்கள்.

சேருவில தொகுதியில் போட்டியிடுவதற்கு பெயர் குறிப்பிடப்பட்ட இன்னொரு முஸ்லிம் வேட்பாளர் இறுதி நேரத்தில் நியமன பத்திரங்களை தாக்கல் செய்ய தவறினார்.

அஷ்ரப் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் 1977இல் தீவிரமாக பிரசாரம் செய்தார். அந்த நேரத்தில் அவர் அண்ணன் அமிர்தலிங்கத்தினால் தமிழீழத்தை பெற்று தரமுடியாவிட்டாலும் கூட தம்பி அஷ்ரப் அதை பெற்று தருவேன் என்று பகிரங்கமாக கூறினார். அமிர்தலிங்கம் தனித் தமிழீழ இலட்சியத்தை கைவிட்டாலும் கூட அந்த இலட்சியத்தை அடைவதற்கு அஷ்ரப் தொடர்ந்து பாடுபடுவார் என்று கூறுகின்ற அளவுக்கு அஷ்ரபின் பேச்சுகள் அமர்க்களமானவையாக இருந்தன.

அஷ்ரபை பொறுத்தவரை தமிழீழம் என்ற கோரிக்கையுடன் அவர் தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட போதிலும்கூட கிழக்கு மாகாண முஸ்லிம்கள் வேறுவிதமாக சிந்தித்தார்கள். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் சார்பிலான முஸ்லிம் ஐக்கிய முன்னணி வேட்பாளர்களை அவர்கள் நிராகரித்தார்கள். தமிழ் முஸ்லிம் அரசியல் நோக்கு ஒன்றை பகிர்ந்துகொள்வதில் அஷ்ரபுக்கு பெருவிருப்பம் இருந்தபோதிலும் கூட கிழக்கு மாகாண முஸ்லிம்கள் வேறுபட்ட சிந்தனைகளை கொண்டவர்களாக இருந்தனர் என்பதை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டின. 1977பொதுத் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தமிழ் வேட்பாளர்கள் பெரு வெற்றி பெற்ற அதேவேளை, முஸ்லிம் ஐக்கிய முன்னணியை சேர்ந்த முஸ்லிம் வேட்பாளர்கள் எவரும் ஒரு ஆசனத்திலும் வெற்றிபெறவில்லை. இது அஷ்ரபின் கண்களை திறந்தது.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அவருடனான உறவுகள் படிப்படியாக கசப்படைய தொடங்கின. 1981 மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல்களில் மன்னாரிலும் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தமிழ் வேட்பாளர்களையே நிறுத்தியது. முஸ்லிம்களையும் அந்த வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்க வேண்டும் என்று அஷ்ரப் விரும்பினார். ஆனால், அவரது விருப்பம் நிராகரிக்கப்பட்டது. இது ஏற்கனவே கசப்பான உணர்வுகளை கொண்டிருந்த அஷ்ரப், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியிலிருந்து தன்னை முற்றுமுழுதாக விடுவித்துக்கொள்ள உதவியது.

ஆனால், தங்களது அரசியல் பயிற்சியை தமிழரசுக் கட்சியில் பெற்றுவிட்டு தேர்தல்களில் வெற்றிபெற்ற பிறகு சந்தோஷமாக கட்சிமாறிய ஏனைய பழைய முஸ்லிம் தலைவர்களை போன்று சிங்களவர்களின் ஆதிக்கத்திலான தேசிய கட்சியொன்றில் அஷ்ரப் சேர்ந்து கொள்ளவில்லை.

தமிழ் மற்றும் சிங்கள அரசியலிலிருந்து சுயாதீனமான தனியான பாதை ஒன்றை முஸ்லிம்கள் வகுக்க வேண்டிய தேவை ஒன்றை அஷ்ரப் உணர்ந்து கொண்டார். இந்த உணர்வு காத்தான்குடியை சேர்ந்த அகமத் லெப்பையுடன் அணிசேர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பதற்கு வழிவகுத்தது. 1981 செப்டெம்பர் 21 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெரும்பாலும் அரசியல் பிரச்சினைகளை விடவும்  சமூக கலாசார விவகாரங்களில்  கூடுதல் அக்கறை கொண்ட ஒரு கிழக்கு மாகாண அமைப்பாகவே இருந்தது. 

1983 ஜூலையில் நாடு முழுவதும் தமிழருக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவன்முறைகளும் அதைத் தொடர்ந்து தீவிரமடைந்த தமிழ் தீவிரவாதிகளின் ஆயுத போராட்டமும் அரசியல் தொடுவானில் தமிழீழம் சாத்தியமானது என்ற நிலைவரத்துக்கு வழிவகுத்தன. உருவாகக்கூடிய தமிழீழ அரசில் தங்களது எதிர்காலம் குறித்து அச்சம் கொண்டவர்களாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மாறினார்கள்.

மறுபுறத்தில், இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை இலங்கை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முஸ்லிம்கள் காட்டிய எதிர்ப்பை அலட்சியப்படுத்தும் வகையில் ஜே.ஆர்.ஜெயவர்தனா அரசாங்கம் செயற்பட்டது முஸ்லிம் சமுதாயத்தை குழப்பத்துக்குள்ளாக்கியது. இந்தப் பிரச்சினை தொடர்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு காரணகர்த்தாவாக அஷ்ரப் இருந்தார். ஆனால், இலங்கை முஸ்லிம்கள் அந்த நேரத்தில் வளர்ந்து வரும் இஸ்லாமிய உணர்வு மற்றும் தீவிரவாத உலகப்போக்கிலிருந்து விதிவிலக்கானவர்களாக இருந்தார்கள்.

பாரம்பரியமாக கிழக்கு முஸ்லிம்களில் கனிசமான தொகையினர் விவசாயிகளாக மீனவர்களாக அல்லது வர்த்தகர்களாக இருந்தனர். ஆனால், கிழக்கில் முஸ்லிம் சமுதாயம் படித்த – எதிர்காலம் பற்றிய ஆர்வத்தை கொண்ட ஒரு புதிய இளைஞர் பரம்பரையை தோற்றுவித்தது. இவையெல்லாம் சேர்ந்து அஷ்ரபும் அவரது பாணி அரசியலிலும் தேசிய அரங்கத்துக்கு வருவதற்கு பொருத்தமான சூழ்நிலையை தோற்றுவித்தன. ஆயுதம் ஏந்திய தமிழ் தீவிரவாதத்தின் எழுச்சி, முஸ்லிம்களின் அரசியலுக்குள் அரசியல் உணர்வு கிளம்ப காரணமாயிருந்தது. 

கல்முனை – காரைதீவு பகுதிகளில் அரச கையாட்களினதும் தமிழ் தீவிரவாத குழுக்களினாலும் 1985 ஆம் ஆண்டு தூண்டிவிடப்பட்ட தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான வன்செயல் இதற்கொரு ஊக்கியாகியது. அந்த கல்முனை – காரைதீவு தமிழ் - முஸ்லிம் வன்முறை அஷ்ரபை நேரடியாக பாதித்தது. தமிழ் தீவிரவாதிகளினால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்ற பயத்தில் அஷ்ரப் கொழும்புக்கு தப்பியோடிவர நிர்ப்பந்திக்கப்பட்டார்.

முஸ்லிம் காங்கிரஸின் மீள் எழுச்சி

ஒரு அரசியல் அகதியாக அஷ்ரப் கொழும்புக்கு நகர்ந்தமை அவரது வாழ்வில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. கிழக்குக்கு அப்பால் நாட்டின் தலைநகரில் அஷ்ரபின் அரசியல் விரிவடைய தொடங்கியது. முஸ்லிம் மக்கள் மத்தியில் அவர்களது உயர்வர்க்க தலைவர்களின் நடவடிக்கைகள் பெரும் பரவலான ஏமாற்றத்தை கொடுத்ததை அஷ்ரப் அடையாளம் கண்டுகொண்டார்.

 தங்களது அடையாளத்தை முனைப்பாக துணிச்சலுடன் வெளிப்படுத்த வேண்டிய ஆர்வமும் தேவையும் இருந்ததையும் அஷ்ரப் அடையாளம் கண்டுகொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் சேர்ந்த முஸ்லிம் தலைவர்களின் அரசியலை அஷ்ரப் வெறுத்தார்.

கொழும்பில் தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்ட அஷ்ரப், முஸ்லிம் காங்கிரஸை மீள கட்டியெழுப்ப தொடங்கினார். 1986 நவம்பர் 29இல் கொழும்பில் புஞ்சிபொரளையில் தேசிய மாநாடொன்றை கூட்டிய அவர் கட்சியின் தலைமைத்துவத்தை முறைப்படி பொறுப்பேற்று அகமட் லெப்பையை மிகவும் அமைதியாக அந்த பொறுப்பிலிருந்து விடுவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் முக்கியமான இந்த தருணத்தை நான் நேரில் கண்டவன். வீரகேசரியில் ஒரு பத்திரிகையாளனாக நான், காலஞ்சென்ற எனது நண்பனும் சகாவுமான எம்.பி.எம்.அஸ்ஹருடன் சேர்ந்து இந்த மாநாட்டில் பங்குபற்றினேன். பிறகு அஸ்ஹர் நவமணி என்ற முஸ்லிம் வாரப்பத்திரிகையின் ஆசிரியரானார். 

அந்த மாநாட்டில் முஸ்லிம் பிரதிநிதிகள் இன்றும் தொடருகின்ற நீண்ட பயணத்துக்கான தீர்க்கமான காலடியை எடுத்துவைத்தபோது அங்கு நிலைமை மிகவும் உணர்ச்சிபூர்வமானதாக இருந்தது. 1986-88 காலகட்டத்தில் அஷ்ரபுடன் நான் நெருக்கமான தொடர்பை கொண்டிருந்தேன். தனது மக்களுக்காக அவர் புதிய நோக்கையும் பயணத்தையும் ஆரம்பித்ததை அவருடன் நெருக்கமாக இருந்து அவதானித்தவன் நான். அவரது இலட்சியங்களில் சிலவற்றை அடைவது அந்த நேரத்தில் சாத்தியமற்றதாக தோன்றியது.

முஸ்லிம்கள் சிங்களவர்களுடனும் தமிழர்களுடனும் சமத்துவமாக தனியான ஒரு அடையாளத்தை கொண்டவர்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று அஷ்ரப் விரும்பினார்.

நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள முஸ்லிம் மக்களுக்கு அவர்களின் சொந்த சுயாதீனமான அரசியல் கட்சி ஒன்று தேவைப்பட்டது. அந்த பாத்திரத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டியிருந்தது. அஷ்ரப் படிப்படியாக முஸ்லிம் காங்கிரஸை ஒரு அகில இலங்கை கட்சியாக மாற்றுவதற்கு அதன் இலட்சியங்களை படிப்படியாக வகுத்து கொண்டதுடன் அரசியலமைப்பையும் மீள வரைந்தார். அந்தக் கட்சி தேர்தல் ஆணையாளரினால் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டு 1988 பெப்ரவரி 18இல் அதற்கென மரம் சின்னம் ஒதுக்கப்பட்டது.

அஷ்ரபின் தலைமையின் கீழான ‘புதிய’ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1988இல் மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட்டது. வடக்கு - கிழக்கு இணைந்த மாகாணத்தில் 17ஆசனங்களையும் மேல் மாகாணம், வடமேல் மாகாணம், மத்திய மாகாணம், மற்றும் தென் மாகாணம் ஆகியவற்றில் 12ஆசனங்களையும் பெற்றது. துளிர்விட்டுக் கொண்டிருந்த கட்சி மனதில் பதியத்தக்க செயற்பாடுகளை மாகாண சபைத் தேர்தல்களில் காட்டுவதற்கு விகிதாசாரத் தேர்தல் முறை உதவியது. முஸ்லிம் காங்கிரஸ் பக்குவமான கட்சியாக மாறியது.

1987 ஜூலை இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கை மீது அதிருப்தி கொண்டிருந்தார். அந்த உடன்படிக்கை முஸ்லிம்களின் எதிர்பார்ப்புகளையும் கருத்துகளையும் அலட்சியம் செய்வதாக உணர்ந்தார். என்றபோதிலும், அவர் உடன்படிக்கைகளின் ஏற்பாடுகளையும் ஆதரித்தார். 1988 வடக்கு - கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பங்கேற்ற முஸ்லிம் காங்கிரஸ், முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜர் தலைமையிலான நிர்வாகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக வந்தது.  

அஷ்ரபின் நெகிழ்வு போக்கு

முஸ்லிம் மக்கள் மீது அஷ்ரப் கொண்டிருக்கும் கவர்ச்சியான செல்வாக்குக்கு அப்பால் நிலைவரங்களுக்கு ஏற்ப செயற்படக்கூடிய அவரது நெகிழ்வு போக்கே அவரது பலமாகும். வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம் பிரிவுகளை உள்ளடக்கியதாக நிலத்தொடர்ச்சியற்ற முஸ்லிம் பெரும்பான்மை சபை ஒன்றை (Territorially non-contiguous Muslim Majority Council) உருவாக்க வேண்டும் என்பதே முஸ்லிம் காங்கிரஸின் அடிப்படை கோரிக்கையாகும். உத்தேச வடக்கு – கிழக்கு இணைப்பின்போது கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் (17சதவீதத்துக்கு சுருங்கிவிடாமல்) 33சதவீதமாக இருப்பதை பேணுவதே இந்த விவகாரத்தில் அஷ்ரபின் நியாயப்பாடாகும். 

நிலத்தொடர்ச்சியற்ற அலகு ஒன்றுக்கான கோரிக்கை சாதிக்கப்படமுடியாதது என்பதை அஷ்ரப் கண்டுகொண்டபோது அவர் சம்மாந்துறை, பொத்துவில் மற்றும் கல்முனை ஆகிய தேர்தல் பிரிவுகளை உள்ளடக்கிய நிலத்தொடர்ச்சியுடனான தென்கிழக்கு மாகாண சபை ஒன்றை உருவாக்குவதற்கான கோரிக்கையை முன்வைத்தார். அத்துடன் வடமாகாணத்துடன் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்கள் இணைக்கப்படுவதற்கு ஆதரவளிக்கவும் அவர் தயாராக இருந்தார்.

பத்து வருடங்களில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் வடக்கு – கிழக்கு இணைப்பை பிரிக்கும் ஏற்பாடு ஒன்று உட்பட இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு போதுமான பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்படுமானால் அதைகூட அவசியமானால் ஏற்றுக்கொள்வதற்கு அவர் தயாராக இருந்தார்.

பின்னரான வருடங்களில் தனது சமூகத்தின் நலன்களுக்காக தமிழ் அரசியல்வாதிகளுடன் அஷ்ரப் மோத வேண்டியும் ஏற்பட்டது. இது தவிர்க்க முடியாததாக இருந்தது. ஆனால், கிழக்கில் தற்போது இருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளில் பலரை போலன்றி அஷ்ரப் தமிழ் மீதும் தமிழர் மீதும் மெய்யான அனுதாபத்தை கொண்டிருந்தார். தமிழர்களின் மனக்குறைகளை விளங்கிக்கொண்ட அவர் அவர்களின் அபிலாஷைகளையும் மதித்தார். 

அடிப்படை பிரச்சினை சிங்கள பெரும்பான்மையினவாதமே என்பதையும் அதை தோற்கடிப்பதற்கு சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் சிலவகை புரிந்துணர்வுகள் அவசியம் என்பதையும் அஷ்ரப் உணர்ந்து கொண்டார்.

முஸ்லிம்களின் நலன்கள் மீது உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருந்த அதேவேளை, அஷ்ரப் எப்பொழுதும் தமிழர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு தயாராகவே இருந்தார். இந்த விடயத்தில் அஷ்ரபின் சிந்தனையை ஏற்றுக்கொள்கின்ற ஒருசில கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளும் இருந்தார்கள்.

தனது சொந்த சமூகத்தின் நலன்களே அஷ்ரபுக்கு அதிமுக்கியமானவையாக இருந்த அதேவேளை, தமிழர்களின் பிரச்சினைகள் மற்றும் மன குறைபாடுகள் மீது கடுமையான அனுதாபத்தை கொண்டிருந்தார்.

தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் நலன்கள் முரண்படுகின்ற விடயங்களை தவிர, தமிழர்களின் நியாயபூர்வமான அபிலாசைகள் நிறைவேறுவதற்கு உதவுவதற்கு அஷ்ரப் முயற்சித்தார். இந்திய வம்சாவளி தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ_டன் ஒரு செயற்பாட்டு உறவுமுறையை வளர்த்து கொள்வதற்காக அவர் புரிந்துணர்வை எட்டியிருந்தார்.

தேசிய ஐக்கிய முன்னணி

குறுகிய கட்சி மனப்பான்மையுடைய கட்சித் தலைவர் என்ற நிலையிலிருந்து ஒரு தேசிய தலைவராக மாற்றம் பெற்றமையே அஷ்ரபின் மிகப்பெரிய சிறப்புவாய்ந்த பண்பாகும்.

1988இல் கொழும்பு காலிமுகத்திடலில் தாஜ்சமுத்திரா ஹோட்டலில் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்தினதும் அரசியல் குழுவினதும் உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றியபோது, அவர் பின்வருமாறு கூறினார். ‘இந்நாட்டில் ஒரு சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சி என்ற வகையில் நாம் எமது ஆற்றல்களின் எல்லைகளை எட்டிவிட்டோம். 

நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் பெருமளவில் நாம் சேவை செய்ய வேண்டுமானால், தேசிய அரசியலுக்குள் எமது அனுபவ எல்லைகளை விரிவுபடுத்தவும் அந்த தேசிய அரசியலுக்குள் எமக்கான ஒரு பாத்திரத்தை வரையறை செய்து கொள்ளவும் முயற்சிக்க வேண்டும’;.

தேசிய ஐக்கிய முன்னணியை ஆரம்பித்த அஷ்ரப் 1999 ஆகஸ்ட் 23 அதை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்தார். அந்த வேளையில், அவர் முஸ்லிம் இனத்துக்கு அப்பால் நோக்கி ஏனைய சமூகங்களுக்கு நேசக்கரம் நீட்டவும் தயாராக இருந்தார். 2012ஆம் ஆண்டளவில் நிலையான சமாதானத்தை காண்பதற்கான செயற்திட்ட வரைவொன்றையும் அஷ்ரப் கொண்டிருந்தார்.

தேசிய ஐக்கிய முன்னணியின் பிறப்பு முஸ்லிம்களுக்கென பிரத்தியேகமான கட்சி ஒன்றை தொடங்கிய முன்னாள் தமிழீழ ஆதரவாளர் பிறகு படிமுறை வளர்ச்சி கண்டு பரந்த தேசியவாத நோக்கை கொண்ட ஒருவராக மாறியதை குறித்து நின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் முன்னிலை கட்சியாக இருந்த அதேவேளை, தேசிய ஐக்கிய முன்னணி சகல சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பரந்த நோக்கம் கொண்டதாக இருந்தது. அஷ்ரப் தனது இந்த நோக்கை நடைமுறைபடுத்துவதற்கு உயிருடன் இருந்திருந்தால் முஸ்லிம் காங்கிரஸினதும் தேசிய ஐக்கிய முன்னணியினதும் எதிர்காலம் எத்தகையதாக இருந்திருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. 2000 ஒக்டோபர் 10ஆம் திகதி நடத்தப்படவிருந்த பொதுத் தேர்தலுக்கு ஒருசில வாரங்கள் முன்னதாக அஷ்ரப் மரணமடைந்தனர்.

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து 7எம்.பி.க்களும் தேசிய ஐக்கிய முன்னணியிலிருந்து 4எம்.பி.க்களும் பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்தனர். துரதிர்ஷ்டவசமாக பிளவு ஒன்று ஏற்பட்டு முஸ்லிம் காங்கிரஸ் ரவூப் ஹக்கீம் தலைமைத்துவத்தின் கீழும் தேசிய ஐக்கிய முன்னணி பேரியல் அஷ்ரப் தலைமைத்துவத்தின் கீழும் தனித்தனியாக இயங்கத் தொடங்கின. ஒரு முக்கியமான கட்டத்தில் அஷ்ரபின் உயிர் பிரிந்தமை தேசிய ஐக்கிய முன்னணியின் மகத்தான நோக்கினால் வழங்கப்பட்ட வரையறைகளற்ற சாத்தியபாடுகளுக்கு ஒரு பின்னடைவாக அமைந்தது.

இறக்கும் வரை அஷ்ரப் வடக்கு - கிழக்கு மாகாணங்களின் முஸ்லிம்களின் கேள்விக்கு இடமின்றிய தேசிய தலைவராக விளங்கினார். அஷ்ரப் இன்று உயிருடன் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரது மெய்கருத்தும் உணர்வும் முஸ்லிம் அரசியல் விழிப்புணர்வில் இன்னமும் பரவி நிற்கிறது. அவரது வாழ்வில் கிழக்கு முஸ்லிம் அரசியலில் மிகவும் மக்கள் செல்வாக்குடைய தனியொரு தலைவராக விளங்கினார். அவரது மரணத்துக்கு பின்னரும்கூட அந்த மந்திரம் முஸ்லிம் மக்கள் மீதான பிடியை தொடரவே செய்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04