20 ஆவது திருத்தச் சட்டம் : ஆபத்தான பயணம்

11 Oct, 2020 | 12:34 PM
image

 சத்ரியன்

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ 20 ஆவது திருத்தச் சட்டத்தைக் கையில் எடுத்துள்ளதன் மூலம், ஆபத்தான ஒரு பயணத்தை ஆரம்பித்திருக்கிறார்.

ஏற்கனவே, நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கின்ற இந்த திருத்தச் சட்டமூலம், கடுமையான விமர்சனங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் உள்ளாகியிருக்கிறது.

அரசாங்கத்தின் பங்காளிகளே இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவார்களா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்த திருத்தச் சட்டத்தின் இரண்டு முக்கியமான விடயங்கள், தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு உதவிய பேரினவாதச் சக்திகளைக் கூட, அதிருப்தி கொள்ள வைத்திருக்கிறது.

முதலாவது, ஜனாதிபதியின் அதிகாரங்களை என்றுமில்லாதளவுக்கு பலப்படுத்தப்படுதல். இரண்டாவது, இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடிய நிலை.

இந்த இரண்டு விடயங்களிலும், தற்போதைய அரசாங்கத்தின் நகர்வுகளுக்கு ஆதரவளிக்க, அரசாங்கத்தில் இருக்கின்ற பலரே தயங்குகின்றனர்.

அவ்வாறு தயக்கத்தை வெளிப்படுத்தியுள்ளவர்களில் ஒருவர் விஜேதாச ராஜபக்ச. அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்று குழம்பிப் போயுள்ளதாக கூறியிருக்கிறார்.

இந்த திருத்தச் சட்டத்தினால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

விஜேதாச ராஜபக்ச அங்குமிங்குமாக தாவுகின்ற ஒரு அரசியல்வாதி தான். ஆனாலும் அரசியலமைப்பு விவகாரங்களில் நிபுணர் என்பதை இந்த இடத்தில் மறந்து விடக் கூடாது.

தற்போதைய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர் பதவி கொடுக்கப்பட்ட போது அதனை நிராகரித்தவர். எதிர்பார்த்த பதவி கிடைக்கவில்லை என்பதற்காக அவர் எதிர்க்கிறாரா என்பதை ஒதுங்கி வைத்து விட்டு, அவர் கூற வந்திருக்கின்ற விடயத்தை முதலில் பார்க்க வேண்டும்.

20 ஆ வது திருத்தம் நிறைவேறினால், மிகவும் சக்திவாய்ந்த கூரிய வாளாக ஜனாதிபதி மாறி விடுவார் என்று அவர் கூறியிருக்கிறார்.

இப்போதைய ஜனாதிபதிடம் அந்த வாள் இருப்பது பற்றி அதன் ஆபத்து பற்றி யாரும் பேசவில்லை. ஏனென்றால் அவர் சிங்களத் தேசியவாதிகளால் உருவாக்கப்பட்டவர்.

இவருக்குப் பின்னால் வரப் போகிறவரிடம் இந்த வாள், கிடைக்கும் போது, அதனை அவர் எவ்வாறு கையாளுவர் என்பது தான் விஜேதாச ராஜபக்சவுக்கு மாத்திரமன்றி ஞானசார தேரர் போன்ற சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளுக்கும் இருக்கக் கூடிய பிரச்சினையாகும்.

கோட்டாபய ராஜபக்ஷவை அவர்கள் நம்புகிறார்கள். அவர் மீது எந்தப் பிரச்சினையும் அவர்களுக்கு இல்லை. ஆனால் அவருக்குப் பின்னர் ஜனாதிபதியாக வரப் போகிறவர் இந்த பதவியை எப்படி பயன்படுத்துவாரோ என்ற பயம் சிங்கள அடிப்படைவாதிகளுக்கு அதிகமாகவே இருக்கிறது.

இந்த கூரிய வாள் தவறானவர்களின் கையில் கிடைத்து விடக்கூடாது

என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அதனால் தான், 20 ஆவது திருத்தச் சட்டத்தை அவர்கள் எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த நிலையானது, 20 ஆவது திருத்தச் சட்டத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது.

நாடாளுமன்றத்தில் இந்த திருத்தம் முன்வைக்கப்படும் போது, எத்தனை பேர் எதிர்த்து வாக்களிப்பார்கள் என்று கூற முடியாது. அதுபோல, இரட்டைக் குடியுரிமை விடயத்திலும் அரசாங்கம் கடும் நெருக்கடியை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறது.

பசில் ராஜபக்சவை நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வருவதற்காகத் தான், இரட்டைக் குடியுரிமையை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடும் வகையில் திருத்தம் செய்ய முயற்சிக்கப்படுகிறது.

இங்கே சிங்கள பௌத்த அடிப்படைவாதிகள், பசில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதை எதிர்க்கவில்லை. அவரது வழியில், வெளிநாடுகளில் உள்ளவர்களும், நாடாளுமன்றம் வந்து விடுவார்களோ என்று தான் அஞ்சுகிறார்கள்.

புலம்பெயர் புலிகளையும் நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வரும் வேலை இது என்று பலரும் கூச்சல் போடத் தொடங்கியிருப்பது, அரசாங்கம் எதிர்பாராத ஒரு நெருக்கடியாக மாறியிருக்கிறது.

எந்த சிங்கள பௌத்த தேசியவாதம், கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வந்ததோ, எந்த சிங்கள பௌத்த பேரினவாதம், ராஜபக்ச குடும்பத்தை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வந்ததோ, அதே சிங்கள பௌத்த பேரினவாதம் தான், இந்த முரண்பட்ட நிலைப்பாட்டில் இருக்கிறது.

இங்கு சிங்கள பௌத்த பேரினவாதம் கோட்டா, பசில், மகிந்த போன்ற தனிநபர்களை முக்கியமானதாக பார்க்கவில்லை. அவர்களை ஒரு கருவியாகத் தான் பார்க்கிறது. 

அவர்களூடாக எவ்வாறு பேரினவாதத்தை வலுப்படுத்தலாம் என்று தான் பார்க்கிறது.

இவர்களுக்குப் பின்னால் வரக் கூடியவர் எந்தளவுக்கு தம்முடன்

ஒத்துழைப்பாரோ என்று அஞ்சுகிறது. அவ்வாறான ஒருவரின் கையில் அதிகாரம் கிடைத்து விட்டால் என்ன செய்வது என்று யோசிக்கிறது. இதுதான் ராஜபக்ச குடும்பத்தினருக்கு வந்திருக்கின்ற சிக்கல். ஆளும்கட்சிக்குள் இருக்கும், எதிர்ப்பாளர்களையும், சிங்கள பௌத்த அடிப்படைவாத சக்திகளையும் சமாளித்துக் கொண்டு 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது ஒன்றும், சுலபமான காரியமாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியவில்லை.

இப்போது ஆளும்கட்சிக்குள் 20 ஆவது திருத்தச் சட்ட விடயத்தில் தோன்றியிருக்கின்ற குழப்பங்களுக்கு குடும்ப ரீதியான அதிகாரப் போட்டிகளும் காரணமாக இருக்கக் கூடும்.

ஏனென்றால், இந்த திருத்தத்தை முன்வைத்திருப்பது பொதுஜன பெரமுன அல்ல. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. அவர் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரோ, தலைவரோ கூட கிடையாது. அவர் தன்னை பொதுமையான ஒருவராக, பொது வேட்பாளராக போட்டியிட்டு வென்ற ஒருவராக தொடருவதையே விரும்புகிறார்.

ஆனால் இவ்வாறான நிலை தான் சிக்கலானது. இதுவே கோட்டாபய ராஜபக்ஷ பொதுஜன பெரமுன கட்சியின்

தலைவராக இருந்திருந்தால், அவர் வைத்ததே சட்டம் என்றிருக்கும். ஆனால் துரதிஷ்ட வசமாக கட்சி அவரிடம் இல்லை. இதனால் நாடாளுமன்றத்தில் அவரால் எந்தளவுக்கு அதிகாரம் செலுத்த முடியும் என்ற சந்தேகங்கள் உள்ளன.

இதே பிரச்சினையை தான் மைத்திரிபால சிறிசேனவும் எதிர்கொண்டார். பொதுவேட்பாளராக போட்டியிட்டு வென்ற அவர், ரணில் விக்ரமசிங்கவுடன் சேர்ந்து அமைத்துக் கொண்ட கூட்டு அரசாங்கம் அதிக நாட்கள் வெற்றிகரமாக செயற்படவில்லை.

6 மாதங்கள் தான் நாடாளுமன்றமும், ரணில் விக்ரமசிங்கவும் தமக்கு ஒத்துழைத்ததாக மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருக்கிறார்.

மைத்திரிபால சிறிசேனவிடம் நாடாளுமன்றத்தில் போதிய பலம் இல்லை. அதனால், தான் நினைத்தது போன்று அவரால் செயற்பட முடியவில்லை.

அதேபோன்ற நிலைக்குத் தான் இப்போது கோட்டாபய ராஜபக்சவும் தள்ளப்பட்டு வருகிறார்.

20 ஆவது திருத்தச்சட்டம் நாடாளுமன்றததில் விவாதத்துக்கு வரும் போது தான், ஆளும்கட்சிக்குள் அதற்கு எந்தளவுக்கு எதிர்ப்பு இருக்கிறது என்பதையும் அதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்பதையும் தெளிவாக பார்க்க முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21
news-image

ஒரே புள்ளியில் அமெரிக்கா - இந்தியா

2024-04-15 18:24:18