பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுப்பதில் பெரும் சவால் : விசேட வைத்திய நிபுணர் பிரத்தியேக செவ்வி

Published By: R. Kalaichelvan

11 Oct, 2020 | 09:38 AM
image

• மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை வைரஸ் பரவலின் ‘மூலம்’ கண்டறியப்படவில்லை

• பரீட்சைகளுக்கு முகங்கொடுப்போர் அச்சமடைய வேண்டியதில்லை

• வைரஸ் பரவல் குறைவடைவதற்கான காலத்தை வரையறுத்துக் கூற முடியாது

• ஒரேயொரு தொற்றுநோய் கொத்தணியே உள்ளதோடு இன்னமும் சமுதாயப் பரவலாக மாறவில்லை

நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் தொடர்பாளர்கள் கண்டறியப்படுவதும் குறுகிய காலத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளைச் செய்வதும், அவர்களை தனிமைப்படுத்துவதும் பெரும் சவாலான விடயமாக உள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார்.

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

(நேர்காணல்:- ஆர்.ராம்)

கேள்வி:- ஆடைத்தொழிற்சாலையில் முதலாவதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பெண்ணுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது கண்டறியப்பட்டுள்ளதா?

பதில்:- தொற்றுக்குள்ளான பெண், முதலாம் நிலை மூலம் அல்ல. அவருக்கு பிறிதொருவரிடத்திலிருந்தே தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் இரண்டாவது அல்லது மூன்றாவது தொடர்பாளராகவே இருக்க முடியும் என்ற கருதுகின்றோம்.

தற்போதைய நிலையில் அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் பற்றிய தடமறியும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம். இதுவரையில் இரண்டாம் தொற்றுப் பரவலுக்கான மூலம் கண்டறியப்படவில்லை.

கேள்வி:- தற்போதைய சூழலில் தடமறியும் விசாரணை எவ்வளவு தூரம் முன்னேற்றகரமாக அமைந்திருக்கின்றது?

பதில்:- கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட ஆடை உற்பத்தி நிறுவனத்தில் உள்ள அனைத்து ஊழியர்களினதும் கடந்தகால நடமாட்டங்கள் பற்றி முழுமையான தகவல்களை சேகரிக்க வேண்டியுள்ளது. 

அதன் ஊடாகவே தொற்றுக்கான மூலத்தினை கண்டறிய முடியும்.

இந்த நிறுவனத்தில் 1400இற்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர். ஆகவே அவர்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தும் அதேநேரம், அவர்களின் நடமாட்டங்கள் பற்றி முழுமையான தடமறியும் செயற்பாடு அவசியமாகின்றது.

ஆகவே அதுவொரு பரந்து பட்டதும், நீண்டதுமான தடமறியும் விசாரணையாகும்.

அதனை நாங்கள் படிப்படியாக முன்னெடுத்து வருகின்றோம்.

கேள்வி:- இந்த தொற்று இலங்கைக்கு வெளியிலிருந்தான வருகைகளால்

ஏற்பட்டதா?

பதில்:- இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட தடமறியும் விசாரணைகளின்

அடிப்படையில் அவ்விதமான தகவல்கள் எவையும் பதிவாகவில்லை.

கேள்வி:- மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் இந்த தொற்று

எக்காலப்பகுதியில் பரவியிருக்கின்றது என்பது உறுதியாக

கண்டறியப்பட்டுள்ளதா?

பதில்:- அந்த ஆடைத்தொழிற்சாலையைச் சேர்ந்தவர்கள் கொரோனா

அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனையயோர்

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த இருதரப்பினரிடத்திலும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கடந்த மாதம் 20ஆம் திகதிக்கு முன்னதாகவே தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

கேள்வி:- தற்போது ஏற்பட்டு வரும் கொரோனா தொற்றுப் பரவல் வீரியம்

மிக்கதாக காணப்படுகின்றதா?

பதில்:- தற்போது தடமறியும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் வைரஸின் வீரியம் தொடர்பில் இப்போதே கூறிவிடமுடியாது. ஆனால், கடந்த தடவையுடன் ஒப்பிடுகையில் கணிசமானளவுக்கு பரவியுள்ளது.

கேள்வி:- தற்போதைய பரவலை ஒரு தரப்பினர் இரண்டாவது அலை என்கிறார்கள் பிறிதொரு தரப்பினர் மூன்றாவது அலை என்கிறார்களே?

பதில்:- கொரோனா வைரஸ் பரவலை 'அலை'யாக வரைவிலக்கணப்படுத்துவதைப் பொறுத்து தான் இந்த விடயம் அடங்குகின்றது.

சில சமயங்களில் சமுதாயப்பரவலை அடிப்படையாக வைத்து 'அலை' என்று கணிக்கப்படுவதுண்டு. அதேபோன்று திடீரென கட்டுக்கடங்காத தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பையும் 'அலை' யாக கொள்வதுண்டு. 

எமது நாட்டில் கூட அண்மைய நாட்களில் தொற்றாளர் கொத்தணிகள் பத்தைத் தாண்டிச் சென்றிருந்தது. தற்போது அது குறைந்து வருகின்றது.

கேள்வி:- கடந்த 24மணிநேரத்தில் எத்தனை தொற்றாளர் கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன?

பதில்:- மினுவாங்கொடையில் மட்டும் தான் உள்ளது.

கேள்வி:- தற்போது சமுதாயத் தொற்று ஏற்பட்டுள்ளதாக கொள்ளமுடியுமா?

பதில்:- தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புபட்டவர்கள் பரந்தளவில் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர். எனினும், தற்போது வரையில் சமுதாயத் தொற்றாக வைரஸ் பரவல் மாறவில்லை.

அவ்வாறு மாறுவதற்கு முன்னதாக கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், பொதுமக்கள், கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதற்கு அப்பால் சமகாலத்தில், அநாவசியமாக பொதுவெளியில் நடமாட்டத்தினை தவிர்ப்பதே பொருத்தமானதாகும். அவ்வாறான செயற்பாட்டின் மூலம் பாரிய விளைவுகளைத் தடுக்க முடியும்.

கேள்வி:- தொற்றாளர்களை அடையாளம் காண்பதில் பலத்த சவால்கள்

காணப்படுவதாக கூறப்படுகின்றதே?

பதில்:- ஆம், ஆடைத்தொழிற்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றார்கள். ஒருவர் தலா, பத்துபேருடன் தொடர்பு பட்டுள்ளார் என்று வைத்துக்கொண்டாலே பரிசோதனை செய்ய வேண்டியவர்களின் எண்ணிக்கை 10ஆயிரத்திற்கும் அதிகமாகச் செல்கின்றது.

இவ்வாறு எண்ணிக்கை அதிகரிக்கின்றமையும், நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் தொடர்பாளர்கள் கண்டறியப்படுவதும் குறுகிய காலத்தில் பி.சி.ஆர். பரிசோதனையை செய்வதும், அவர்களை தனிமைப்படுத்துவதும் பெரும் சவாலான விடயமாக அமைகின்றது. ஆகவே தான் தடமறியும் செயற்பாட்டில் பொதுமக்களும் ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோருகின்றோம்.

கேள்வி:- பி.சி.ஆர்.பரிசோதனைகளைச் செய்வதற்கான போதுமான உபகரண வசதிகளும், ஆளணியும் காணப்படுகின்றதா?

பதில்:- பி.சி.ஆர்.பரிசோதனைகளை மேற்கொள்ளும்,ஆய்வுகூட பணியாளர்கள் 24மணிநேரமும் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றார்கள். ஒரு பி.சி.ஆர்.பரிசோதனையை மேற்கொள்வதற்கு ஆகக்குறைந்தது ஆறு மணிநேரம் எடுகின்றது.

இந்த அடிப்படையில் இயலுமான வரையில் பிரிசோதனைகளை விரைந்து முனனெடுத்துக்கொண்டிருக்கின்றோம்.

கேள்வி:- தற்போதைய சூழலில் பரீட்சைகள் நடத்தப்படுவது தொடர்பில் விமர்சனங்கள் காணப்படுகின்றதே?

பதில்:- விமர்சிப்பதற்கு ஒன்றுமில்லை. புலமைப்பரிசில், மற்றும் உயர் தரப் பரீட்சைகளில் வரையறுக்கப்பட்ட குழுமத்தினரே பங்கேற்கின்றனர்.

ஆகவே அவர்களை அடையாளப்படுத்துவதும், பாதுகாப்பு வரைமுறைகளை பின்பற்ற வைப்பதும் பிரச்சினைக்குரிய விடயமல்ல. போக்குவரத்தின் போது மட்டுமே அவர்கள் விசேட கவனமெடுக்க வேண்டியது மட்டுமே கரிசணையாக உள்ளது.

அவ்வாறிருக்கையில் இந்த மாணவர்களுக்கான பரீட்சைகளை பிற்போடுவதால் அவர்களின் எதிர்காலமே சிதைக்கப்படும். கொரோனா வைரஸ் விவகாரம் எக்காலம் வரையில் நீடிக்கும் என்று வரையறுத்துக் கூற முடியாது.

வெள்ளப்பெருக்கென்றால் குறிப்பிட்ட காலத்தில் நீர் வடிந்தோடி விடும் என்று கூறலாம். ஆனால் கொரோனா வைரஸ் விடயம் அவ்வாறானதல்ல.

அப்படியிருக்கையில் பரீட்சைகளை பிற்போட்டு எதிர்கால சந்ததியினரை பின்னோக்கி தள்ளிவிட முடியாதல்லவா? ஆகவே நாம் சவாலுக்கு முகங்கொடுத்தே ஆகவேண்டும்.

கேள்வி:-வைத்தியசாலைகளுக்கு பொதுமக்கள் பிரசன்னமாவதில் அச்சமான மனநிலையைக் கொண்டிருக்கின்றமை தொடர்பில் கவனம் செலுத்தினீர்களா?

பதில்:- சாதாரண மக்கள் மத்தியில் இவ்விதமான அச்சமான மனநிலைமைகள் உள்ளமை உண்மைதான். ஆனால் அவர்கள் அச்சப்பட வேண்டியதில்லை. வைத்திய சாலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்றாளர்களுக்காக பிரத்தியேக நோயாளிகள் அறை உள்ளிட்ட பிரிவுகள் இயங்குகின்றன. ஆகவே அச்சமின்றி பொதுமக்கள் மருத்துவ சேவையை பெற முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49