மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக மக்கள் சேவைக்கென வழங்கப்படும் அரச தொழிலில் அரசியலில் ஈடுபடாமல் நேர்மையாக தொழில் செய்ய வேண்டும். மக்களுக்கு பணியாற்ற கிடைத்த இந்த மகத்தான சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

மலையகத்தில் உள்ள பிரஜாசக்தி நிலையங்களின் ஊழியர்களுக்கான மூன்று மாத சம்பள நிலுவைக்கொடுப்பனவு வழங்கும் வைபவம் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைப்பெற்றது. 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் உரையாற்றுகையில்,

எமது தமிழ் முற்போக்கு கூட்டணி முழுமையாக அரசியல் கொள்கையுடன் நீண்ட கால திட்டமிடல்களை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது. அதன் பிரகாரம் எனக்கு கிடைத்த அமைச்சின் ஊடாக மலையகத்தில் நிச்சயமாக பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவேன். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு. அதற்காக அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.

அரசியல் பகையுடனும் காழ்புணர்ச்சியுடனும் மக்களுக்கு சேவையாற்ற முடியாது. மலையக மண்ணில் பிறந்தவர் என்ற வகையில் முழுமனதோடு பராபட்சமின்றி நான் சேவையாற்றி வருகின்றேன். அதனால் தான் உங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை கொடுப்பனவை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுத்தேன். ஆட்சி அமைந்தவுடன் உடனடியாக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அவ்வாறு சிலர் பகல் கனவு காண்கின்றனர்.

எமது சமூதாயத்தில் பிறந்து எமது சமூதாயத்திற்கு சேவையாற்றக்கூடிய நல்ல சந்தர்ப்பம் உங்கள் அனைவருக்கும் கிடைத்துள்ளது. அதனை பயன்படுத்தி நேர்மையாக அரச தொழிலில் ஈடுபடுங்கள்.

பிரஜாசக்தி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல்கள் குறித்து ஆராயுமாறு எனது அதிகாரிகளுக்கு பணித்துள்ளேன். விரைவில் உண்மைகள் கண்டறியப்பட்டு தவறுகள் இடம்பெற்றுள்ளமை உறுதி செய்யப்படுமாயின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.