மதிப்பிற்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு,

04 Oct, 2020 | 11:08 PM
image

மதிப்பிற்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு,

What Mahinda Rajapaksa becoming Sri Lankan PM means for India

ஜனாதிபதித் தேர்தலில் உங்கள் சகோதரர் கோதாபய பெருவெற்றி பெற்று ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் உங்களுக்கு கடிதம் எழுதவேண்டுமென்று நினைத்தேன்.

மீண்டும் பாராளுமன்றத்தேர்தலில் தங்களது புதிய கட்சி பிரமிக்கத்தக்க வெற்றியைப்பெற்று நீங்கள் மீண்டும் பிரதமராக வந்த வேளையிலும் எழுதவேண்டுமென்று நினைத்திருந்தேன்.

ஆனால், என்னவோ அதுவும் கைகூடவில்லை. இனிமேலும் தாமதிக்கக்கூடாது என்பதால் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

அரசியலமைப்பிற்கான 19 வது திருத்தம் இல்லாவிட்டால் நீங்கள் மீண்டும் ஜனாதிபதியாக வந்திருப்பீர்கள். சகோதரரின் வெற்றி உண்மையில் உங்களின் ஊடாக குடும்பத்தவர்களுக்கு நாடளாவிய சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்ட ஆதரவின் விளைவானதுதானே!

ஒரு வாரத்திற்கு முன்னர் இந்திய பிரதமர் மோடியுடன் இணையவழி உச்சிமாநாட்டை நடத்தினீர்கள்.

கொரோனா பிரச்சினை இல்லையென்றால் அவரை நீங்கள் கொழும்பிற்கு அழைத்தோ அல்லது அவர் உங்களை டில்லிக்கு அழைத்தோ மாநாட்டை அமர்க்களமாக நடத்தியிருப்பீர்கள்.

அவருடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆராய்ந்தீர்கள். இத்தடவை பிரத்தியேகமாக இருநாடுகளுக்கும் இடையிலான பௌத்தமதம்சார் உறவுகளை மேம்படுத்துவதற்காக ஒரு கோடி 50 இலட்சம் டொலர்கள் மானிய உதவியை இந்தியா அறிவித்திருக்கிறது.

தற்போது கொழும்பிலிருக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பல சந்தர்ப்பங்களில் இருநாடுகளுக்கும் இடையிலான பௌத்த கலாசாரப்பிணைப்புக்கள் குறித்துப் பேசியதை நான் செய்திகளில் படித்திருக்கிறேன். இந்த உதவியை இந்தியா வழங்க முன்வந்தமைக்கு பாக்லேயின் முயற்சிகள் முக்கிய காரணமாகவும் இருந்திருக்கலாம். அது வேறு விடயம்.

உச்சிமாநாட்டின் போது மோடி அரசியலமைப்பிற்கான 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நல்லிணக்கச்செயன்முறையை முன்னெடுத்து தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் நீங்கள் அந்தத் திருத்தம் குறித்து அப்போது எதையும் பேசவில்லை.

அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு மோடி விடுத்த வேண்டுகோள் இருநாடுகளும் கூட்டாக விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதற்கு இருதரப்பினரும் இணங்கிக்கொண்டிருக்கிறீர்கள்.

ஆனால், உங்களது அலுவலகம் தனியாக விடுத்த அறிக்கையில் 13 பற்றியோ அல்லது அவர் விடுத்த வேண்டுகோள் பற்றியோ எதனையும் காணவில்லை.

அந்த திருத்தம் பற்றி மோடி முன்னரும் கூறியிருக்கிறார் என்றாலும், தற்போது புதிய அரசியலமைப்பை வரைவதற்கான செயன்முறைகளில் அரசாங்கம் இறங்கியிருக்கும் நிலையில் பொதுஜன பெரமுனவின் தலைவர்களும் அமைச்சர்களும் மாகாணசபைகளையும் 13 வது திருத்தத்தையும் முற்றாக ஒழிக்கவேண்டும் என்று இடையறாது வலியுறுத்திவரும் வேளையில் அவர், 'சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான செயன்முறைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது அவசியமானது" என்று வலியுறுத்தியிருப்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

ஆனால் நீங்கள் 'இலங்கை மக்களால் அளிக்கப்பட்ட ஆணையின் பிரகாரம் முன்னெடுக்கப்படுகின்ற நல்லிணக்க செயன்முறை ஒன்றினூடாக சகல இனக்குழுக்களினதும் அபிலாசைகளை நிறைவேற்றுவதை நோக்கி இலங்கை செயற்படும்" என்று பொதுப்படையாகக் கூறிமுடித்துவிட்டீர்கள். ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் பொதுஜன பெரமுனவிற்கு தென்னிலங்கை மக்கள் அளித்திருக்கக்கூடிய ஆணையை நல்லிணக்க செயன்முறைகளை முன்னெடுப்பதற்கான ஊக்கத்தைத்தரும் ஒன்றாக என்னால் கருதமுடியவில்லை.

அதனால் அந்த ஆணையின் பிரகாரம் முன்னெடுக்கப்பட வேண்டியிருக்கின்ற நல்லிணக்கச்செயன்முறை என்று நீங்கள் கூறுவது எனக்குப் புரியவில்லை.

13 வது திருத்தத்தை நீக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவது குறித்து மோடி அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிய பலரும், குறிப்பாக தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள்.

மோடியின் அறிவிப்பு அதற்கு உரிய பதிலைத் தந்திருக்கிறது. அந்த திருத்தத்தை நீக்குவதற்கான எந்த நடவடிக்கையையும் தடுக்கவேண்டிய தார்மீகப்பொறுப்பு புதுடில்லிக்கு இருக்கிறது என்று கூறிவந்த தமிழ் அரசியல்கட்சிகளுக்கு மோடியின் வலியுறுத்தல் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.

ஆனால், நடைமுறையில் சாத்தியமாகக்கூடியது என்னவென்பது சந்தேகத்திற்குரியதே. பத்திரிகைகளின் ஆசிரியர்களை கடந்தவாரம் சந்தித்தபோது 13 குறித்து தனது நிலைப்பாட்டை மோடி தெரிவித்ததாகவும் அரசியலமைப்பின் பிரகாரம் காரியங்கள் நடக்கும் என்றும் கூறியிருக்கிறீர்கள்.

இத்தடவை மாத்திரமல்ல, ஜனாதிபதியாகப் பதவியேற்ற கையோடு புதுடில்லிக்கு விஜயம்செய்த உங்கள் சகோதரருடன் கூட்டாக மோடி நடத்திய செய்தியாளர் மாநாட்டில் 13 வது திருத்தத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

ஆனால், சகோதரர் அதுகுறித்து எதுவும் பேசவில்லை. அதேபோன்றே நீங்களும் பெப்ரவரியில் புதுடில்லிக்கு சென்ற வேளை 13 பற்றி மோடி விடுத்த வேண்டுகோள் குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால், டில்லியில் நேர்காணல்களில் சகோதரர்கள் இருவருமே பெரும்பான்மையின மக்கள் விரும்பாத எதையும் உங்களால் தமிழர்களுக்குக் கொடுக்கமுடியாது என்பதை வெளிப்படையாகவே கூறினீர்கள்.

உத்தியோகபூர்வ சந்திப்புக்களில் நீங்கள் எதையும் பேசாவிட்டாலும் 13 பற்றிய இந்திய அக்கறைக்கு உங்களது பதில் என்னவென்பதை டில்லியில் பலமாகக் கேட்கக்கூடியதாகவே சொல்லிவிடுகிறீர்கள்.

ஜனாதிபதியாக இருந்தவேளையில் சர்வதேச சமூகத்திடமும் இந்தியாவிடமும் 13 பிளஸ் பற்றியெல்லாம் பேசினீர்கள். உங்களுடன் இருப்பவர்கள் 13 ஐ ஒழிக்கவேண்டுமென்று பேசும்போது நீங்கள் இப்போது மௌனமாக இருக்கின்றீர்கள். புதிய அரசியலமைப்புகள் வரையப்படும் போது சிறுபான்மை சமூகங்களின் அரசியல்நலன்கள் கவனத்திலெடுக்கப்பட வேண்டியது அவசியம்.

ஆனால், இலங்கையின் இரு குடியரசு அரசியலமைப்புக்கள் கொண்டுவரப்பட்ட வேளைகளில் சிறுபான்மை சமூகங்களின் நலன்கள் உதாசீனம் செய்யப்பட்டன. அதன் விளைவாக நாடு செலுத்திய விலையை அறிவீர்கள்.

உங்களது அரசாங்கம் முன்னெடுக்கும் அரசியலமைப்பு வரைவு செயன்முறைகளில் அதே தவறு இடம்பெறக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு. போரை வென்ற காரணத்தினால் உங்களுக்கும் சகோதரர்களுக்கும் சிங்கள மக்கள் மத்தியில் அமோகமான ஆதரவு இருக்கிறது. சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் சிங்கள பௌத்த சமூகத்தவர்களால் வேறு எந்தவொரு தலைவரையும் விடக்கூடுதலாக நேசிக்கப்படுபவர் நீங்கள்தான் என்பதில் சந்தேகமில்லை.

சிங்கள மக்கள் மத்தியில் அத்தகைய செல்வாக்கைக்கொண்ட உங்களிடம் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்த்துவைப்பதற்கு சிங்கள மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய ஆற்றல் இருக்கிறது என்று பலரும் நம்புகிறார்கள். சம்பந்தன் ஐயா கூட அதை பல தடவைகள் பாராளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.

நீங்கள் அதை அமைதியாக புன்னகைத்தவாறே பார்த்துக்கொண்டிருப்பீர்கள். சிறுபான்மை சமூகங்களின் அபிலாசைகளை ஓரளவேனும் நிறைவேற்றுவதற்கு முயற்சித்தால் சிங்களவர்களின் ஆதரவு இல்லாமல்போய்விடும் என்று அஞ்சுகிறீர்களா?

ராஜபக்ஷாக்கள் தமிழர்களுக்குத் தமிழீழத்தை பிரித்துக்கொடுத்தால் கூட சிங்களவர்கள் சந்தேகிக்க மாட்டார்கள் என்றுகூட சில சிங்கள நண்பர்களே என்னிடம் பகிடியாகக் கூறுவார்கள். தங்களது நலன்களுக்குப் பாதகமான எதையும் நீங்கள் செய்யமாட்டீர்கள் என்ற நம்பிக்கை அந்த மக்களுக்கு. அதை ஆக்கபூர்வமான முறையில் - எமது எதிர்கால சந்ததிகள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கப் பயன்படுத்துவதே உங்கள் அரசியல் வாழ்வின் நிலையான மரபாக இருக்கவேண்டும்.

இதுவே எனது பிரார்த்தனை.

இப்படிக்கு,

ஊர்சுற்றி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13