இந்தியா வைத்துள்ள ஆப்பு

Published By: Vishnu

04 Oct, 2020 | 04:38 PM
image

-சத்ரியன்

தேர்தலில் கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற மக்கள் ஆணையை வைத்துக் கொண்டு,  தாம் நினைத்த எல்லாவற்றையும் செய்து விடலாம் என்று கருதியிருந்த அரசாங்கத்துக்கு,  இந்தியா சில வரையறைகளுக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக 13 ஆவது திருத்தம் மற்றும்,  தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வு ஆகிய விடயங்கள் தொடர்பாக இந்தியா  வெளிப்படுத்தியிருக்கும் நிலைப்பாடுகளே அவை.

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் செவ்வி ஒன்று கடந்த 15ஆம் திகதி ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகியது.

அந்த செவ்வியில்  முன்னைய அரசாங்கம் வடக்கு- கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு பற்றி பேசியது, தற்போதைய அரசாங்கம் அது பற்றிப் பேசுவதில்லையே,  என்பதைச் சுட்டிக்காட்டி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்  ரம்புக்வெல்ல,  “அவர்களில் (தமிழர்கள்) பெரும்பாலானவர்கள் இனப்பிரச்சினை பற்றி பேசுவதில்லை,   பொருளாதார தீர்வு தான் அதிகம் தேவைப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த கேள்வி அப்படியானால் 13ஆவது திருத்தச் சட்டத்தை- அதிகாரப்பகிர்வை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை நிராகரிக்கிறீர்களா?  என்று எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், 13 ஆவது திருத்தம் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும், 1986 ஆம் ஆண்டில் இருந்து பொலிஸ் அதிகாரம் காணி, அதிகாரங்கள் குறித்து பேசி வருகிறோம்  என்று பதில் அளித்திருந்தார்.

 1987 ஆம் ஆண்டு இந்திய -இலங்கை உடன்பாடு கைச்சாத்தானது. 1988ஆம் ஆண்டில் தான் 13 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதற்குப் பின்னர்தான் மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. 

ஆனால் அரசாங்கப் பேச்சாளரான அமைச்சர் ரம்புக்வெல்ல, 1986 ஆம் ஆண்டிலிருந்தே பொலிஸ், காணி அதிகாரங்கள் குறித்து பேசப்பட்டு வருவதாக கூறியிருக்கிறார்.

அவரது கூற்றில் உள்ள தவறு இப்போது முக்கியமானதல்ல - விட்டு விடலாம்.

அடுத்த கேள்வி, இந்த முயற்சிக்கு பின்னாலிருந்த இந்தியாவிற்கு 13 வது திருத்தம் தீர்வு அல்ல என்பதை நீங்கள் சொல்லப் போகிறீர்களா, என்று கேட்கப்பட்டது.

அதற்கு ரம்புக்வெல்ல,  இந்தியாவும் இதில் உண்மையாக இருக்கவில்லை என்பது தான் என் தாழ்மையான கருத்து என்றும், அந்த நேரத்தில் ஒரு பிரச்சினையிலிருந்து விடுபடவே அவர்கள் விரும்பினார்கள் என்றும் கூறியிருந்தார்.

ஒரு பக்கத்தில் சரத் வீரசேகர போன்ற அரசாங்கத்தின் அமைச்சர்கள் 13ஆவது திருத்தத்தை ஒழிக்கப் போகிறோம் என்று கூறிக் கொண்டிருக்கின்ற நிலையில்,  ரம்புக்வெல்ல போன்றவர்கள் 13 ஆவது திருத்தத்தில் இந்தியாவே அக்கறைப்படவில்லை என்பது போன்ற தோற்றப்பாட்டைக்  காட்டிக் கொண்டிருந்தார்கள்.

அதேசமயம் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க போன்றவர்கள் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும் தவறவில்லை.

இவ்வாறானதொரு குழப்பம் மிகுந்த-   13ஆவது திருத்தம் குறித்த, இந்தியாவின் நிலைப்பாடு குறித்த, பொய்யான விம்பம் ஒன்று அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த சூழலில் தான், இந்திய பிரதமர் நரேந்திர மோடி,  பிரதமர் மகிந்தவுடன், மெய்நிகர் இருதரப்பு பேச்சுக்களை நடத்தியிருக்கிறார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கொண்ட அரசின் தலைவரான பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனேயே இந்தப் பேச்சுக்கள் நடத்தப்பட்டிருக்கின்றன என்பது கவனிக்க வேண்டிய விடயம்.

13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் மட்டுமல்ல, அதற்கு அப்பால் சென்றும், தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் என்று  வாக்குறுதி கொடுத்திருந்தவர் மகிந்த ராஜபக்ச.

அவரிடமே இந்தியா மீண்டும் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்.

 13வது திருத்தச் சட்டம் குறித்தோ, தமிழர் பிரச்சினை குறித்தோ இந்தியா அக்கறைப்படவில்லை, தாங்கள் நினைந்த மாதிரி நடந்து கொள்ளலாம் என்ற இறுமாப்பு, அரச தலைவர்களிடம் குடிகொள்ளத் தொடங்கியிருந்த நிலையில் தான், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறார்.

இருதரப்பு உறவுகள் குறித்து பேசப்பட்ட அந்த மெய்நிகர்  மாநாட்டில், மிக விரிவாக இந்த விவகாரம் குறித்து, பேசப்பட்டிருக்கிறது.

அதுவும், 13 ஆவது திருத்தத்தையும், மாகாண சபைகளையும் நிராகரிக்கும், எதிர்க்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் முன்னிலையில் தான், இந்தியப் பிரதமர் இதனை கூறியிருக்கிறார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ,தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில்,  நீதியான, சமத்துவமான, அமைதியான, கௌரவமான, தீர்வை வழங்க  வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் வலியுறுத்தியிருக்கிறார்.

இந்திய- இலங்கை பிரதமர்களின் கூட்டறிக்கையில் இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பினும், பிரதமர் செயலகம் வெளியிட்ட சிங்கள மொழி அறிக்கையில் இவை பற்றி எதுவுமே கூறப்படவில்லை.

எனினும், கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது முக்கியமானது. அது ஒரு உடன்பாடு போன்றது.

2010இல் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனுடன் இணைந்து அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  வெளியிட்ட கூட்டறிக்கை தான், இன்று வரை அரசாங்கத்துக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது.

அதுபோலத்தான் இப்போதைய கூட்டறிக்கையையும் சாதாரணமானதாக எடுத்துக் கொள்ள முடியாது.

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற இந்தியாவின் கருத்து அதில் இடம்பெற்றுள்ளது. இது ஒரு விடயம்.

தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய  தீர்வாக இந்தியா 13 ஆவது திருத்தச் சட்டத்தை தான் கருதிக் கொண்டிருக்கிறது என்ற நிலைப்பாடு பலருக்கு இருந்தது.

இந்த கூட்டறிக்கையின்படி,  தமிழர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற கூடிய அரசியல் தீர்வையும் 13 ஆவது திருத்தத்தையும் இந்தியா குழப்பிக் கொள்ளவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

13 ஆவது திருத்தச் சட்டம் தமிழர் பிரச்சினைக்கான இறுதியான தீர்வு அல்ல, என்பதை இந்தியா ஏற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால்,  இந்தியாவோ பிரச்சினையை கைகழுவுவதற்காகத் தான்,  13 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது என்ற தொனியில் கருத்துக்களை வெளியிட்டு இலங்கை அரசாங்கம் குழப்பத்தை ஏற்படுத்த முனைந்தது.

இந்தியப் பிரதமரின் இந்த உறுதியான நிலைப்பாடு இப்போது அரசாங்கத்துக்குள் இரு வேறு அணிகளை உருவாக்கியிருக்கிறது.

ஒரு அணி மாகாணசபைகள், 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.

அதில் ஜனாதிபதியும், அவரது முக்கிய ஆதரவாளர்களும் உள்ளடங்குகின்றனர்.

இன்னொரு அணியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வாசுதேவ,  பிரசன்ன ரணதுங்க போன்றவர்கள் இருக்கிறார்கள்.

இப்போதைய நிலையில்,  மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது என்ற இறுமாப்பில், 13 ஆவது திருத்த விடயத்தில் அரசாங்கம் கையை வைக்க முயன்றால், அது தமக்கு தாமே வைத்துக் கொள்ளும் ஆப்பாகத் தான் அமையும்.

ஏனென்றால், 13 இற்கு ஆதரவான அல்லது நடுநிலையான தரப்பு பலம் குறைந்ததாக இருந்தாலும், அதனை குறைத்து மதிப்பிட முடியாது.

அதற்கு அப்பால், இந்தியாவின் வலுவான ஆதரவுப் புலம் அதற்கு உள்ளது என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், 13 இன் மீது கைவைக்க அரசாங்கம் எடுக்கக்கூடிய எந்தவொரு முயற்சியுமே அதற்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும்.

இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கைக்கு முன்னுரிமை என்ற கொள்கையை கடைப்பிடித்தாலும்,  அது அமைதியான கொந்தளிப்பில்லாத இலங்கையைத் தான் எதிர்பார்க்கிறது.

13 ஆவது திருத்தம் மீது கை வைக்கப்பட்டாலோ, தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு மறுக்கப்பட்டாலோ, அமைதியான இலங்கையை எதிர்பார்க்க முடியாது என்பது இந்தியாவுக்கு நன்றாகத் தெரியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22