இந்தியாவின் புதிய பொருளாதார பாய்ச்சலில் இலங்கை நன்மையடையுமா?

04 Oct, 2020 | 04:19 PM
image
  • பொருளாதார அபிவிருத்தி என்பதை மீண்டும் வரைவிலக்கணப்படுத்த வேண்டியுள்ளது
  • அனைத்து நாடுகளும் இறக்குமதியை கட்டுப்படுத்தினால் நாம் யாருக்கு ஏற்றுமதி செய்வது?  
  • நிலைத்த உறுதியான பொருளாதார கொள்கை அவசியம்  
  • பகுதியளவு, உதிரிப்பாக உற்பத்தியிலேயே அதிகளவு கவனம் செலுத்தப்படவேண்டும் 

 -நேர்காணல் ரொபட் அன்டனி  

 உலகை ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக  இலங்கையின் பொருளாதாரம் பாரிய பாதிப்பை சந்தித்திருக்கின்றது. உள்ளக வர்த்தகம் சர்வதேச வர்த்தகம்  சுற்றுலாத்துறை என இலங்கை பொருளாதாரத்தின் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது.   இந்நிலையில் இலங்கையானது கொரோனாவுக்கு பின்னர் அல்லது  கொரோனாவுக்கு மத்தியில் எவ்வாறு பொருளாதாரத்தை  சீரமைக்கவேண்டும் மற்றும் கட்டியெழுப்பவேண்டும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுவருவதுடன் கலந்துரையாடல்களும்  இடம்பெறுகின்றன.  

அந்தவகையில்    இந்த விடயம் குறித்து கொழும்பு பல்கலைக்கழகத்தின்   பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி  கணேசமூர்த்தி  பல்வேறு  விடயங்களை பரந்துபட்டவகையில்  முன்வைக்கிறார்.  அவருடனான கலந்துரையாடல் வருமாறு,

கேள்வி : கொரோனா  வைரஸ் தொற்று பொருளாதார ரீதியில் எனக்கு ஏற்படுத்திய பாடம் என்ன? 

பதில் : கொரோனா தாக்கத்தினால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டிருக்கின்ற பாதிப்பு முதற்தடவையாக இடம்பெற்றது அல்ல. இதற்கு முன்னரும் பல தடவைகளில் பல்வேறு காரணிகளினால் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நோய்கள், யுத்தங்கள் பொருளாதார முகாமைத்துவ வீழ்ச்சிகள் என்பவற்றினால் இதற்கு முன்னர் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. எனினும் தற்போதைய வைரஸ் தொற்று ஒருபடி மேலே சென்று நீண்ட காலமாக பொருளாதாரத்தை பாதித்துக் கொண்டிருக்கிறது. 

உணர்த்திய பாடம் 

 உலக நாடுகள் தொழில்நுட்ப ரீதியில்  முன்னேற்றம் அடைந்திருந்தாலும்கூட இயற்கையென்று வரும்போது அதனை மீறினால்  அது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே  தொற்றுநோய் எமக்கு கற்றுக்கொடுத்த பாடமாகும்.  தற்போது கிடைக்கின்ற புதிய தகவல்களின்படி இயற்கையாகவே காடுகளுக்குள், இயற்கை வளங்களுக்குள் ஒளிந்திருக்கின்ற வைரஸ்கள், பங்கசுகள் போன்றவற்றை   தட்டி எழுப்புகிற  செயற்பாட்டை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.  எதிர்காலத்திலும் இவை இருக்குமென்று கூறப்படுகிறது. எனவே இவை ஒவ்வொன்றுக்கும் காரணம் மனிதனின் செயல்பாடுகளையேயன்றி வேறொன்றுமில்லை என்பது தெளிவாகிறது.  காரணம் ஒவ்வொரு நாடும் தனது பொருளாதார நோக்கத்தின் பின்னால் சென்று கொண்டிருக்கின்றனவே தவிர மனிதனுக்கு என்ன தேவை என்பதை இன்னும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. 

மகிழ்ச்சி அபிவிருத்தி 

அபிவிருத்தி எனும்போது நாம் அமெரிக்கா  சீனா  மற்றும் பல நாடுகளை கூறுகின்றோம். ஆனால் இந்த நாடுகள் உண்மையிலே வளர்ச்சியடைந்திருக்கின்றனவா? உலக மகிழ்ச்சி என்ற ஒரு சுட்டி இருக்கின்றது. நாடுகளில் மக்கள் எந்தளவு தூரம் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பது இதன் மூலம் கணிக்கப்படுகிறது. பூட்டானில் இது ஆரம்பிக்கப்பட்டது. பூட்டான் பொருளாதார ரீதியில்  வறிய நாடு. ஆனால் பூட்டான் மக்கள் சந்தோஷமாக வாழ்கின்றனர். ஐரோப்பாவிலும் சில சிறிய நாடுகள் பொருளாதார ரீதியில் பாரிய வளர்ச்சியடையவில்லை.  ஆனால் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். ஆகவே பொருளாதார வளர்ச்சி அல்லது பொருளாதார அபிவிருத்தி என்பதை நாம் மீண்டும் வரைவிலக்கணப்படுத்த வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டிருக்கிறது.  

கேள்வி : தற்போது இலங்கையில் இறக்குமதி கட்டுப்படுத்தப்படுகிறது. (2020.10.04) இந்நிலையில் கொரோனாவுக்கு பின்னரான இலங்கையின் பொருளாதாரம் எவ்வாறு இருக்க வேண்டும்?

பதில் : இவ்வாறான  நெருக்கடி வரும்போது அனைத்து நாடுகளுமே  இறக்குமதியை கட்டுப்படுத்த விளையும். இலங்கை மட்டும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறமுடியாது.  இறக்குமதியை கட்டுப்படுத்துவது இது முதலாவது தடவையும் அல்ல. 1929 ஆம் ஆண்டு உலக பெருமந்தம் குறித்த நெருக்கடி   ஏற்பட்டபோது    கைத்தொழில் நாடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டன. அப்போது அந்த  நாடுகள் தமது நாட்டுக்குள் வருகின்ற பொருட்களை கட்டுப்படுத்த தீவிரமாக முயற்சித்தன. இறக்குமதிகளை கட்டுப்படுத்தின.   அப்போது  முழு உலக நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது.  அனைத்து நாடுகளும் தமது பாதுகாப்புக்காக கொள்கைகளை நடைமுறைப்படுத்தமாக இருந்தால் எமது நாட்டின் உற்பத்திகளை எந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்வது? இலங்கை தேயிலை மற்றும் புடவைக் கைத்தொழில் உற்பத்தியில்  தங்கியிருக்கிறது. அனைத்து நாடுகளும் இறக்குமதியை கட்டுப்படுத்தினால் இவற்றை நாம் எங்கே ஏற்றுமதி செய்வது?  

இறக்குமதி கட்டுப்பாடு  தொடர முடியாது  

இறக்குமதி தடைகளை தற்காலிகமாக கொண்டு  வரலாமே  தவிர எமக்கு தேவையான அனைத்து பொருட்களையும் நாமே உற்பத்தி செய்துகொள்கிறோம் என்று கூறிவிட்டு இருக்க முடியாது. அவ்வாறு ஒரு நாடு நினைக்குமானால் அதைவிட முட்டாள்த்தனம் ஒன்றுமில்லை.  நாடு அவ்வாறு பொருளாதார வளர்ச்சியை அடைய முடியாது. இலங்கையின் சனத்தொகை 21 மில்லியன். இறக்குமதி கட்டுப்பாட்டு கொள்கையை பின்பற்றினால்  உள்நாட்டில் எதை உற்பத்தி செய்தாலும்  21 மில்லியன் மக்களுக்கு  மட்டுமே  செய்யவேண்டும். சந்தையை அதற்குமேல் விரிவாக்க முடியாது.   அதிக பொருள் உற்பத்தி செய்யும் போது பொருளாதார வளர்ச்சியென்று கூறுகின்றோம். அப்படியானால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க அதிகளவு உற்பத்தி செய்யப்பட வேண்டும். ஒரு சிறிய சந்தையை வைத்துக்கொண்டு பொருளாதார வளர்ச்சியை அடைய முடியாது. ஆனால் இவ்வாறான நெருக்கடிகளின் போது பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்காக கட்டுப்பாட்டு கொள்கைகளை தற்காலிகமாக பின்பற்றலாம்.   அது நீண்ட காலத்துக்கு செல்லுமாக இருந்தால் பொருளாதாரத்திற்கு எந்த நன்மையும் கிடைக்காது. 

கேள்வி : இலங்கை கொரோனாவுக்கு பின்னர் எவ்வாறான துறைகளில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது? 

பதில் : எமது நாட்டின்   பிரச்சினையானது  பொருளாதாரக் கொள்கைகளில் உறுதிப்பாடின்மையாகும். ஒரு பொருளாதாரக் கொள்கையையும் உறுதியாக செயல்படுவதாகத் தெரியவில்லை. ஒருதடவை எடுக்கப்படுகின்ற பொருளாதார கொள்கையானது அடுத்த இரண்டு மாதங்களில் மாற்றப்படுகிறது. பின்னர் முற்றிலும் மாறுபட்ட ஒரு கொள்கையை  அமுல்படுத்தும் நிலைமை காணப்படுகிறது.  

உறுதியான கொள்கை அவசியம்  

இலங்கையில் உள்ளூரில் 25, 26 வீதமே சேமிப்பு காணப்படுகிறது. ஆனால் முதலீடானது 33 சதவீதத்திற்கு அதிகமாக இருக்க வேண்டும். இந்த பற்றாக்குறையை எங்கிருந்து பெறுவது? எனவே வெளிநாட்டு முதலீடுகள் அவசியமாகும். எனினும் அரசாங்க  கொள்கைகளில்  நிலைத்த போக்கின்மை வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.  மேலும் நிலையற்ற நிலைமையிலே முதலீடு செய்வதற்கு உலக நிறுவனங்கள்  விரும்பாது. அரச கொள்கைகளின் உறுதிப்பாடு என்பது மிக முக்கியமாகும்.  

அரசாங்கத்தின் கொள்கை உறுதியாக நிலையாக இருக்குமானால் வெளிநாட்டு முதலீடுகளை வரவழைக்கலாம்.    மேலும்  ஏன் இலங்கைக்கு முதலீடுகள் வரவேண்டும் என்ற காரணத்தை   தெளிவாக கூறாவிட்டால் முதலீட்டு நிறுவனங்கள் இலங்கைக்கு வராது.   ஒரு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனம் இந்தியாவுக்கு செல்லாமல் இலங்கைக்கு வருவதில்  என்ன நன்மையுள்ளது  என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். 

இந்தியாவின் பொருளாதார பாய்ச்சல் 

தற்போதைய சூழலில் பல வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறுகின்றன. அந்த நிறுவனங்களின் முதலீடுகளை கவர்வதற்கு இந்தியா ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறது.   ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஒரு நாடான லக்சம்பர்க்கின்  பரப்பளவை போன்ற இருமடங்கு நிலப்பரப்பை இந்தியா தனது நாட்டில் வெளிநாட்டு முதலீடுகளுக்காக  தயார் செய்துகிறது.  

சீனாவிலிருந்து வெளியேறுகின்ற அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பாரிய நிறுவனங்கள் இந்தியாவுக்கு செல்ல விருப்பம் கொண்டுள்ளன.  அவ்வாறு பல நிறுவனங்கள் இந்தியாவுக்கு வரும்போது அந்த பொருளாதாரத்தின் மற்றும்  வர்த்தகத்தின் தாக்கத்தின் ஒரு பகுதி நன்மையை அண்டை நாடான இலங்கை பெறும் சந்தர்ப்பம் உள்ளது. ஆனால் அந்தப்பயனை பெறுவதற்கான  தயார் நிலையில் இலங்கை இருக்கின்றதா? 

 அயலவன் வளர்ச்சியடையும்போது நீங்களும் வளர்ச்சியடைவீர்கள் என்று  கூறப்படுவதுண்டு.  ஐரோப்பிய நாடுகள் வளர்ச்சி அடைந்தமைக்கு  இங்கிலாந்தில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சி  காரணமாகும். ஜப்பானில் ஏற்பட்ட வளர்ச்சி ஜப்பானை அண்டிய  நாடுகளுக்கும் பரவியது. இதுபோன்று இந்தியா பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையுமாயின் அந்த பொருளாதாரத்தின் விரிவாக்கம் இலங்கை போன்ற மிக நெருங்கிய அண்டை நாட்டுக்கு நன்மையை கொடுக்கும். அதனை பயன்படுத்திக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பமும் இருக்கின்றது.   

கேள்வி :அதற்கு என்ன செய்வது ? 

பதில் : சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் வொக்ஸ் வோகன் நிறுவனத்தின் ஊடாக கார் தொழிற்சாலை ஒன்றை  ஆரம்பிப்பதற்கு முயற்சிக்கப்பட்டது.  அதாவது  ஒரு முழுமையான காரை இங்கு உற்பத்தி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உலகில் இன்று அரைவாசிக்கு மேற்பட்ட வர்த்தகம் முழுமையாக உற்பத்தி செய்யும் வர்த்தகம் அல்ல. பகுதியளவு அல்லது உதிரிபாக வர்த்தகமே உலகில் அதிகளவு காணப்படுகிறது. சீனாவில் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது என்றால் அந்த பொருளில் இருக்கின்ற அனைத்து உதிரிப்பாகங்களும் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டவையல்ல.  பல நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு சீனாவுக்கு அனுப்பப்பட்டு அங்கு அந்த பொருள் முழுமைபடுத்தப்பட்டு ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

இலங்கை செய்யவேண்டியது

எனவே தற்போது இந்தியாவுக்கு வரப்போகின்ற வெளிநாட்டு நிறுவனங்களின் உற்பத்திகளுக்கு ஏதாவது உதிரிப்பாகத்தை உற்பத்தி செய்து வழங்க முடியுமென்றால் அங்கேதான் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தங்கியிருக்கிறது.  இதனை உற்பத்தி அல்லது பெறுமதிசேர் வலையமைப்பு என்றும் கூறுவார்கள். ஒவ்வொரு உற்பத்தியிலும் ஏதாவது ஒரு துணை உற்பத்தியை ஏனைய நாடுகள் செய்ய முடியுமென்றால் அது பாரிய நன்மையை பெற்றுத்தரும். உதாரணமாக அப்பிள் ஐபோனின் ஒரு உதிரிப்பாகத்தை இலங்கை உற்பத்தி செய்தால் அங்கு எமது வெற்றி தங்கியிருக்கும். 

இந்தியாவிலிருந்து இலங்கை அதிக மோட்டார் சைக்கிள்களையும் முச்சக்கர வண்டிகளையும் இறக்குமதி செய்கிறது.  இந்தியாவின் இரண்டாவது சந்தையாக முச்சக்கர வண்டிகளுக்கு மோட்டார் சைக்கிள்களுக்கு இலங்கையே காணப்படுகிறது. ஆனால் இவற்றில் ஏதாவது ஒரு சிறிய உதிரிப்பாகத்தையாவது இலங்கை உற்பத்தி செய்கிறதா? 

எனவே இவ்வாறு இலங்கைக்கு வருகின்ற பொருட்களில்  ஏதாவது ஒரு உதிரிப்பாகத்தை  நாங்கள் உற்பத்தி செய்கின்றோமென்று இந்தியாவுடன் இலங்கை பேரம்பேச வேண்டும்.  உதிரிப்பாக உற்பத்தி அல்லது இடைநிலை பொருள் உற்பத்தியில் இலங்கை கவனம் செலுத்தினால் இலங்கையின்  பொருளாதாரம் வளர்ச்சியடையும்.  

இலங்கை ஒரு பொருளை முழுமையாக உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் சீனாவை போன்று இலங்கையின் ஊழிய செலவு அதாவது தொழிலாளர்களுக்கான செலவு குறைவாக இருக்க வேண்டும். சீனாவின் தொழிலாளர் ஊழியம் விலை குறைவானது.  அதனால்தான் வெளிநாட்டு நிறுவனங்கள்   அங்கு முதலீடுகளை செய்கின்றன.  அதனால் முழுமையான பொருள் உற்பத்தி நடைபெறுகிறது. இலங்கையினுடைய தொழிலாளர் ஊழியம் செலவுகூடியது.  ஆனால் தரமானது. பயிற்றப்பட கூடியதுமாகும்.  எனவே இலங்கையின் எதிர்காலம்  தெற்காசியாவில் ஏற்பட்டு வருகின்ற  புதிய போக்குகளோடு இலங்கை தன்னை எந்தளவுக்கு இணைத்துக்கொள்கிறது என்பதிலேயே தங்கியிருக்கிறது. 

கேள்வி : அப்படியானால் பிராந்திய பொருளாதார ஒன்றிணைவு முக்கியமா? 

பதில் : பொருளாதார ரீதியான பிராந்திய ஒன்றிணைவில் பல காரணிகள் காணப்படுகின்றன. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இரு தரப்பு உடன்படிக்கைகள் காணப்படுகின்றன. விரைவில் மற்றுமொரு உடன்படிக்கை கைச்சாத்திடப்படுமென தெரிகிறது.  இரு தரப்பு  சுதந்திர உடன்படிக்கையில் சுமார் 7500 பொருட்களை வர்த்தக தீர்வைகளின்றி பரிமாறிக்கொள்ள முடியும்.  ஆனால் இவற்றில் மிகக் குறைந்தளவான பொருட்களையே இலங்கை ஏற்றுமதி செய்கிறது. அந்த இயலுமை எமக்கில்லை.  அதில் கூறப்பட்டுள்ள பொருட்களில் அரைவாசிக்கும் அதிகமான பொருட்களை  நாம் ஏற்றுமதி செய்யவேண்டும்.

கேள்வி : இலங்கையில் பொருளாதார கொள்கை வகுப்பாளர்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் என்ன? 

பதில்: தற்போது தீர்மானம் எடுக்கக்கூடிய நிலையில் இருப்பவர்கள் பொருளாதாரத்தை மூடவேண்டும் என்றே கருதுகிறார்கள். அனைத்தையும்   இங்கேயே உற்பத்தி செய்துகொள்ள முடியுமென்று கருதுகின்றனர். உதாரணத்துக்கு தற்போது மஞ்சள் இறக்குமதியை தடை செய்திருக்கின்றனர். மஞ்சள் என்பது ஒரு இயற்கை கிருமிநாசினியாகும். செனிடைசர்  இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ள  நிலையில் இயற்கை கிருமிநாசினியான மஞ்சளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் என்பது ஒரு வாரத்தில் ஒரு மாதத்தில் உற்பத்தி செய்யக்கூடிய பொருளல்ல.  விவசாயப் பொருட்களில்  தன்னிறைவு அடைய வேண்டும். 

அதனை மறுக்க முடியாது.   ஆனால் அதற்காக  ஐம்பது ரூபாவுக்கு வாங்கிய 100 கிராம் மஞ்சளை ஏன் 280 ரூபாய் கொடுத்து பெற வேண்டும்?  இலங்கையில் ஆயிரக்கணக்கானவர்களே மஞ்சள் உற்பத்தி செய்கின்றனர்.   எனவே ஆயிரக்கணக்கானவர்களின்  நன்மைக்காக இலட்சக்கணக்கான நுகர்வோரை  கஷ்டப்படுத்துவது முறையல்ல. மஞ்சள் உற்பத்தியில் உள்ளூரில் தன்னிறைவு  வேண்டுமெனின் உற்பத்தியாளர்களை அழைத்து அவர்களுக்கான ஒரு உற்பத்தி இலக்கை வழங்க வேண்டும்.   அவர்களின் உற்பத்தி சந்தைக்கு வருகின்றபோது இறக்குமதியை தடுக்கலாம்.   முறையான திட்டங்களின்றி ஓரிரவில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள்  பொருளாதாரத்துக்கு நன்மை தராது.    

கொள்கை வகுப்பாளர்களின் வகிபாகம் 

 பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்கள் முறையான கொள்கைகளை வகுக்க வேண்டும். அவை நீண்ட காலம் நிலைத்திருக்கவேண்டும். அவ்வப்போது ஏற்படுகின்ற காயங்களை ஆற்றுவதை போன்று திட்டங்கள் இருக்கக்கூடாது. தற்போதைய நிலைமையில் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிப்பது தவறல்ல. ஆனால் எந்த பொருளின் மீது கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் என்பது ஆராயப்படவேண்டும். 

அத்தியாவசியமற்ற ஆடம்பர பொருட்களின் இறக்குமதியை அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவது முறையல்ல. உள்ளூர் விவசாயிகளை பாதுகாப்பதற்காக இதனை செய்வதாக கூறினாலும் அவர்களின் பிரச்சினை சந்தை  தொடர்பானதாகும். அந்தப்பிரச்சினைகளுக்கு தீர்வை காணாமல் இறக்குமதியை கட்டுப்படுத்தி உள்ளூர் விவசாயத்தை ஊக்குவிக்க முடியாது.  எனவே கொள்கைத் திட்டத்தை வகுக்கின்றவர்கள் ஏற்கனவே வந்துள்ள ஆய்வுகளின் முடிவுகளை உள்ளீடாக பயன்படுத்த வேண்டும்.  

கேள்வி : வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதில் எமது பக்கம் உள்ள குறைபாடுகள் என்ன? 

பதில் : எமது நாட்டிலிருந்து  பொருளை ஏற்றுமதி செய்வதற்கான செலவு அதிகமாகும்‌. வெவ்வேறு நிறுவனங்கள் வெவ்வேறு சான்றிதழ்கள் என பல்வேறு சிக்கல்கள் உள்ளன. நீண்டகாலம் காத்திருத்தல் செலவு அதிகம் என பல விடயங்கள் உள்ளன. இதற்காக ஒற்றைச்சாளரம்  என்ற ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டது. அதில் பல கலந்துரையாடல்கள் நடைபெற்றன.  நானும் கலந்துகொண்டேன். 

ஆனால் இதனை அமுல்படுத்துவதற்கு அதிகாரிகள் விரும்புவதில்லை போன்ற காரணங்கள் என்ற  கூறப்பட்டது. இந்த ஒற்றைச் சாளர முறை எனப்படுவது ஒரு ஏற்றுமதியாளர் ஒரு விண்ணப்பத்திலேயே தனது அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி கொள்வதாகும். அதனை இலங்கை தொடங்கியது. இப்போது என்ன நிலையில் உள்ளது என்பது தெரியவில்லை. 

கேள்வி : எவ்வாறான குறைபாடுகள் எமது பக்கத்தில் உள்ளன?

பதில் : முக்கிய குறைபாடாக அரச கொள்கைகளில் நிலைத்தன்மையின்மையை கூறலாம். அத்துடன் இலங்கையில் ஊழிய செலவு அதிகமாகும். தொழில் சட்டங்கள் இறுக்கமாக உள்ளன. இவை முதலீட்டாளர்களை பெரும்பாலும் கவர்வதில்லை. உட்கட்டமைப்பு வசதிகளை பொறுத்தவரையில் இலங்கை தற்போது நல்ல நிலையில் இருக்கின்றது. தொழில்நுட்பத்துறையில் இலங்கை உயர்ந்த நிலையில் இருக்கின்றது. வீதி கட்டமைப்பு நன்றாக இருக்கிறது.  ஆனால் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு முகாமைத்துவம் அவசியமாகும். மின்சக்தி செலவும் இலங்கையில் மிக அதிகமாக உள்ளது. பங்களாதேஷில் ஒரு அலகு மின்சாரத்தின் செலவை விட இலங்கையில் ஒரு அலகு மின்சாரத்தின் செலவு 10 மடங்கு அதிகமாகும். 

கேள்வி : கொள்கை வகுப்பாளர்கள் ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொருளாதார ரீதியான உங்கள் ஆலோசனை என்ன?

பதில் : கொள்கை வகுப்பாளர்கள் அவ்வப்போதைய தேவைக்காக கொள்கைகளை வகுத்து இருக்கின்ற கொள்கைகளையும் மழுங்கடித்துவிட கூடாது. முதலீட்டாளர்கள் ஒரு குறுங்கால லாபத்தை அடிப்படையாக கொண்டு செயல்பட கூடாது. அபாயங்களை தாங்கி நீண்டகால ரீதியில் முதலீடு செய்யக்கூடிய முதலீட்டாளர்கள் இங்கில்லை. அவ்வாறான இலங்கையர்கள் இன்று பங்களாதேஷில் முதலீடு செய்துள்ளனர். எனவே அதற்கு ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கும் இங்கு ஒரு கடப்பாடு இருக்கின்றது. சில விடயங்களை அதிக அளவில் புகழ்வது சில விடயங்களை முற்றாக நிராகரிப்பது போன்றவை இடம்பெறுகின்றன. யாராயிருந்தாலும் கொள்கை வகுப்பு திட்டங்களில் சரியான கருத்துக்களை  வெளியிடுவதற்கு தயங்கக்கூடாது. 

வட்டி வீதக் குறைப்பு  

 அரசாங்கம் தற்போது வட்டி வீதங்களை கணிசமாக குறைத்திருக்கிறது. முதலீட்டாளர்கள் அதிகளவில் இலங்கைவந்து முதலீடு செய்யவேண்டுமென்பது இதற்கு காரணமாகும். ஆனால் முதலீட்டை தீர்மானிக்கும் காரணி வட்டி வீதம் குறைப்பு மட்டுமல்ல. வர்த்தகத்தை இலகுவாக செய்யக்கூடிய சூழல் இங்கே இருக்கின்றதா என்பதை சகலரும் பார்க்கின்றனர். ஊழியர் செலவு, நெகிழ்வுத் தன்மை மற்றும் மின்சக்தி செலவு என்பவையே அதிக அளவில் பார்க்கப்படுகின்றன. ஊழியர் செலவு மற்றும் மின்சக்தி செலவு அதிகமாக இருந்தாலும்கூட அந்த இரண்டையும் சமாளித்து இலங்கையில் முதலீடு செய்யக் கூடிய ஏனைய விடயங்கள் நல்லநிலையில் உள்ளனவா? 

இவற்றையே முதலீட்டாளர்கள் ஆராய்வர்.  இலங்கையில் சுற்றாடல் தொடர்பான சட்ட திட்டங்களும் கடினமானவையாக உள்ளன. எனினும்  அது விட்டுக்கொடுக்கப்பட முடியாத ஒரு முக்கியமான துறையாகும். சுற்றாடல் விடயங்கள் மீறப்பட்டால் இலங்கையின் வளர்ச்சி நிலையானதாக இருக்காது. அபிவிருத்தி என்பது இருக்கின்ற இயற்கைச் சூழலைப் பாதிக்கும் அளவுக்கு இடம்பெறக்கூடாது. 

கேள்வி : சீனா போன்ற நாடுகள் இலங்கையை பொருளாதார ரீதியில் சிக்கியதாக கூறப்படுகிறது

பதில் :வலுவான நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகளை தங்களுடைய தேவைகளுக்காக பயன்படுத்துவது இரகசியமான விடயமல்ல.  புதிய விடயமுமல்ல.  நாடுகள் தமது இறைமையையும் தமது தற்சார்பு நிலையையும்  பேணிக்கொண்டு அழுத்தங்களை சமாளிக்க  முயற்சிக்கின்றன. முழுமையாக நாம் சரணடைந்து விடுவோம் என்று கூறுவதற்கில்லை. இலங்கை எந்தவொரு நாட்டையும் பகைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. 

கேள்வி : சீனாவுடனான எமது பொருளாதாரத் தொடர்புகள் எதிர்காலத்தில் எவ்வாறு அமையும்

பதில் : சீனாவின் சாலை மற்றும் கடல்வழி திட்டத்தை நாம் சரியாகப் பயன்படுத்தினால் நன்மையடைய முடியும். இந்தியாவைப் பகைத்துக் கொள்ளாமல் இதனை செய்ய வேண்டும். இந்தியாவின் அனுமதியின்றி இதனை இலங்கை செய்ய முடியாது. ஆனால் இலங்கை இந்தியா மற்றும் சீனாவுடன் ஒரு சமநிலையை வேண வேண்டும்.  அதில் எந்த தவறும் இல்லை.  

ஊரடங்கு காலப்பகுதி  

இரண்டு மாதங்களில் சில துறைகள் அதிகளவு இலாபமீட்டின. பல துறைகள் பொருளாதரத்தில் பாதிக்கப்பட்டன. சில துறைகள் என்ன செய்வதென்று தெரியாமல் ஏதோ செய்கிறோம் என்று சில பாய்ச்சலை வெளி்காட்டியிருந்தன. குறிப்பாக  தொலைத்தொடர்பு வலையமைப்பு பாரிய லாபமடைந்தது. சில்லறை வர்த்தக துறை நன்றாக பயனடைந்தது. சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டது.  ‌ 

ஆனால் இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் சுற்றுலாத்துறையை தேவைக்கு அதிகமாக மிகைப்படுத்தி வைத்துக்கொண்டுள்ளனர்.  சுற்றுலாத்துறை என்பது மிக முக்கியமான துறைதான். ஆனால் சுற்றுலாத் துறையின் மீது மட்டுமே  கவனம் இருக்குமானால் இதுபோன்ற நெருக்கடிகளின்போது மோசமாக அடி வாங்குவோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13