அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் நாமல் : மயந்த திஸாநாயக்க

Published By: R. Kalaichelvan

02 Oct, 2020 | 03:11 PM
image

(எம்.மனோசித்ரா)

20 ஆவது திருத்தத்தின் மூலம் ராஜபக்ஷாக்கள் குடும்ப ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கு முயற்சிக்கின்றனர். இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையாக அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷவை களமிறக்க எதிர்பார்த்துள்ளனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

20 ஆவது திருத்தத்தின் மூலம் ராஜபக்ஷாக்கள் அவர்களது குடும்ப ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவே முயற்சிக்கின்றனர். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷவை களமிறக்க எதிர்பார்த்துள்ளனர்.

அதற்கான முயற்சியே 20 ஆவது திருத்தத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது. எனவே இதனை தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்போம்.

19 ஆவது திருத்தத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காகவே மக்கள் ஆட்சியை அவர்களிடம் ஒப்படைத்தனர். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கலந்துரையாடி இணக்கப்பாட்டுடன் 19 இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் எதிர்பார்த்த போதிலும் அந்த எதிர்பார்ப்பு அரசாங்கத்தால் நிறைவேற்றப்படவில்லை.

தற்போது தேங்காய் வாங்கச் செல்லும் போது அளவு நாடாவை எடுத்துச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சில கடைகளில் தேங்காய் விற்பனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரிசி மற்றும் சீனி என்பவற்றுக்கும் இதே நிலைமையே ஏற்பட்டுள்ளது. இது போன்ற பாரதூரமான நிலைமையே தற்போது நாட்டில் காணப்படுகிறது.

20 ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்காக மாத்திரம் மக்கள் பெரும்பான்மையை வழங்கவில்லை. சிறந்த அரசாங்கத்தை அமைத்து பொருளாதாரத்தை மேம்படுத்தி வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் ஜனநாயகத்தை ஸ்திரப்படுத்துவதற்குமே மக்கள் ஆணை வழங்கினர். ஆனால் 20 இல் ஜனநாயகம் முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right