(வாஸ் கூஞ்ஞ)

தலைமன்னார் பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பேசாலையில் கோவில், மதுபானசாலை ஆகிய இடங்களில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 

குறித்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக தலைமன்னார் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேசாலையிலுள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானக் கதவை உடைத்து உட்புகுந்த திருடர்கள் கோயில் மூலஸ்தானத்தில் இருந்த முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய சிலைகளில் இருந்த அம்மன் தாளி, இயந்திரங்கள் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

அத்துடன் மூலஸ்தான பகுதிக்குள் இருந்த அலுமாரியையும் உடைத்து அதற்குள் இருந்த பொருட்களையும் களவாடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. களவாடப்பட்ட பொருட்களின் பெறுமதி எவ்வளவு என்று கணக்கிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இன்று வியாழக்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு கோவில் குருக்கள் பூசை செய்ய சென்றவேளையிலே இவ் சம்பவத்தைக் கண்டு தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையீடு செய்துள்ளார்.

இதேவேளை, கோவிலுக்கு சற்றுத் தூரத்தில் இருக்கும் மதுபான விற்பனைசாலை ஒன்றில் முன் கதவை உடைத்து உட்புகுந்த திருடர்கள் மதுபான போத்தல்கள் மற்றும் இருபதாயிரம் ரூபா பணத்தையும் களவாடிச் சென்றுள்ளதாகவும் களவாடப்பட்ட மதுபான போத்தல்களின் பெறுமதி தெரியவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக தலைமன்னார் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து தலைமன்னார் மற்றும் பேசாலை பொலிசாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது விடயமாக இதுவரைக்கும் எவரையும் கைது செய்யல்லையென பொலிசார் தெரிவிக்கின்றனர்.