தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒன்றிணைவு காலத்தில் தேவை!

27 Sep, 2020 | 03:48 PM
image

-கபில்

தியாகி திலீபன் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடை, தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை நீண்ட இடைவெளிக்குப் பின்னர்,  ஒரே அரங்கிற்கு கொண்டு வந்திருக்கிறது.

கடைசியாக, கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, தமிழ்த் தேசிய நிலைப்பாடு கொண்ட கட்சிகளை ஒன்றிணைத்து பொதுவான நிபந்தனைகளை முன்வைத்துப் பேரம் பேசுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முயற்சியினால், அந்தப் பேச்சுக்கள் நடந்து கொண்டிருந்த போதே, சி.வி.விக்னேஸ்வரன் அவசரப்பட்டு வெளியிட்ட அறிக்கையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வெளியேற்றமும், பொது இணக்கப்பாட்டு ஆவணத்தில் ஒன்றுபடும் சூழலை ஏற்படுத்த தவறி விட்டது.

அந்த ஆவணத்தில் ஒப்பமிட்ட கூட்டமைப்பும் அதற்கு மாறாகவே முடிவை எடுத்து சஜித் பிரேமதாசவை ஆதரித்தது.

அதற்குப் பின்னர், தமிழ்த் தேசிய கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில், இருந்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விலகிக் கொண்டது.

ஏனைய தரப்புகளும், அவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளத் துணியவில்லை.

எல்லாத் தரப்புகளுடனும் ஊடாடக் கூடிய, பொதுவான தளம் அல்லது கட்டமைப்பு ஒன்று தமிழ் பரப்பில் இல்லாமையும், அந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படாமைக்குரிய முக்கியமான காரணம் எனலாம்.

பொது அரங்கில் எல்லாக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் நோக்கில் செயற்பட முனையும் தனிநபர்களும், அமைப்புகளும் கூட, ஏதோ ஒரு அரசியல் சார்பை, அல்லது நிலைப்பாட்டைக் கொண்டவையாகவே இருந்து வந்திருக்கின்றன.

இது, நடுநிலையான – பொதுத் தரப்பாக அவர்களை அடையாளப்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்துகிறது.

இதுவே, எல்லோரையும் ஒரே அரங்கில் கொண்டு வந்து பேச வைக்க- அல்லது செயற்பட வைக்கக் கூடிய வல்லமையற்ற நிலையை உருவாக்கி விடுகிறது.

மன்னார் ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகைக்குப் பிறகு, இத்தகைய முயற்சிகளில் வெற்றி பெற்ற ஒரே தரப்பு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தான்.

ஆனால், அவர்களின் முயற்சிகளும் கடந்த ஆண்டு தோல்வியில் முடிந்த பின்னர், பொது தளத்தில் இருந்து ஒன்றிணைப்பு முயற்சிகளை முன்னெடுக்கக் கூடிய தரப்பு வெறுமையாகவே இருந்தது. இப்போதும் இருக்கிறது.

இப்போதைய நிலையில் தமிழ்த் தேசிய நிலைப்பாடுகளைக் கொண்ட அரசியல் கட்சிகளை அரசியல் ரீதியாக ஒன்றிணைப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்றாகி விட்டது.

ஒவ்வொருவரும் ஏதோ ஒரு அரசியல் அங்கீகாரத்தைப் பெற்று விட்ட நிலையில், அதன் ஊடாக தமது தனித்துவத்தையும், கட்டமைப்பையும் பலப்படுத்துவதிலேயே அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.

எனவே, அரசியல் ரீதியாக ஒன்றிணைப்பது என்பது குதிரைக் கொம்பான விடயம்.  அதற்கு விடுதலைப் புலிகள் போன்ற ஒரு சக்தியே தேவை. அது தற்போது தமிழர் தரப்பில் இல்லை.

அரசியல் ரீதியாக தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகளை ஒன்றிணைப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை.

ஆனால், பொதுவான தளத்தில், தமிழ்மக்களின் பிரச்சினைகள் விடயத்தில் தமிழ்த் தேசிய நிலைப்பாடுடைய கட்சிகளால் ஒன்றுபடுவதற்கான வாய்ப்புகள் இன்னமும் உள்ளன.

திலீபன் நினைவேந்தல் தடைக்கு எதிரான ஒன்றிணைவு அதனை உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த ஒன்றிணைப்பை, பொதுத்தரப்பு எதுவும் சாத்தியப்படுத்தவில்லை. அரசியல் தரப்புகளே தமக்கிடையில் உருவாக்கியிருக்கின்றன.

பொதுத் தேர்தலில் மாவை சேனாதிராசா தோல்வியடைந்தது கூட, இதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது என்று கூறலாம்.

அவர் இப்போது தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக இருந்தாலும், தமிழ் அரசியல் போராட்டத்தில் அவர் வகித்த காத்திரமான பங்கு, ஏனைய தரப்புகள் மத்தியில் அவருக்கான மதிப்பை  தக்க வைத்திருக்கிறது.

கடைசி வரை வர இணங்காத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட, இப்போது தான் அழைப்பு கிடைத்தது என்று சமாளித்துக் கொண்டு இணைந்தது.

உண்மையில் அழைக்காமல் வந்திருக்க வேண்டும். ஏனென்றால் இது பொதுவான உரிமை. எல்லோருக்கும் இதில் கடப்பாடு உள்ளது.

எப்படியோ தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் ஒருவழியாக ஜனாதிபதி, பிரதமருக்கான கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தன.

அதற்குள் எத்தனையோ அக்கப்போர்கள் நடந்திருந்தாலும், அந்தக் காரியம் நிறைவாகவே முடிந்தது.

இந்த ஒத்துழைப்பை- தேர்தல் அரசியலுக்கு அப்பால் கொண்டு செல்வதற்கான உபாயம் தான் இப்போது தேவைப்படுகிறது.

தமிழ் அரசியல் பரப்பின் ஒற்றுமையின்மையை சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளப் பார்த்தன.

அதனை அனுமதிக்காமல், தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று காண்பிக்க வேண்டியது முக்கியம். அதுவே பேரினவாதத்தை கலங்க வைக்கும். 

இந்த ஒற்றுமையை வரவேற்று அறிக்கை வெளியிட்ட அசாத் சாலி, முஸ்லிம் கட்சிகளும் இதுபோன்று ஒன்றிணைவது அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தமிழ் அரசியலுக்கு வெளியே இந்த ஒன்றிணைவு எந்தளவுக்கு கவனத்தை ஈர்த்திருக்கிறது என்பதற்கு உதாரணம்.

இந்தநிலையில், இப்போது பொதுவான பிரச்சினைக்காக பொதுவான தளத்தில் ஒன்றிணையத் தயாராக உள்ள தமிழ்த் தேசிய கட்சிகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்ற கேள்வி எழுகிறது.

அதற்கான வாய்ப்புகளை ஆராய வேண்டிய தருணம் வந்து விட்டது,

ஏனென்றால், சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களின் போக்கு தமிழர்களின் நலன்களுக்கு பெரும் பாதிப்பை கொடுக்கும். இவ்வாறான நிலையில், அரசியல் ரீதியான போராட்டங்கள் இனி தவிர்க்க முடியாதவையாக இருக்கும்.

மூடிய அறைக்குள் இருந்து அரசியல் செய்யும் நிலை இனி தமிழ் அரசியல் பரப்பில் இருக்காது. இதற்கு, தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும்.

அந்த ஒருங்கிணைப்பைச் செய்யக் கூடிய பொதுத் தரப்பு ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும்.

திலீபன் நினைவேந்தல் தடைக்கு எதிராக தமிழ்க் கட்சிகளை மாவை சேனாதிராசா ஒன்றிணைக்கும் பணிகளைத் தொடங்கியதுமே, அவசர அவசரமாக ச.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் பதவியைத் துறந்தார்.

பேரவையை அரசியல் சார்பற்ற சிவில் அமைப்பாக மாற்றியமைக்கவே தான் விலகிக் கொண்டதாக அறிவித்தார்.

மாவையின் முயற்சிகளை வரவேற்று அறிக்கை வெளியிட்ட அவர், எதிர்காலத்தில் பேரவை ஊடக பொதுத் தளத்தில் ஒன்றிணையலாம் என்றும் கூறியிருக்கிறார்.

ஆக, பேரவையை பொதுத் தளத்துக்கு கொண்டு வர விக்னேஸ்வரன் தரப்பு விரும்புகிறது.  அது அவர்களுக்குச் சாதகமானது. விக்னேஸ்வரனை மையப்படுத்தி, அவரது ஆதரவாளர்களே அதனை உருவாக்கினர்.

எனவே ஏனைய கட்சிகள் பேரவையை பொதுத் தரப்பாக கட்டியெழுப்ப விரும்புமா என்ற சந்தேகம் உள்ளது.

இன்னொரு பக்கத்தில், புதியதொரு தளத்தைக் கட்டியெழுப்புவதற்கான அவசியமும், அதற்குரிய கட்டமைப்பும் தேவை. அதனை உடனடியாக மேற்கொள்வதிலும் சிக்கல்கள் உள்ளன.

தேர்தல், கட்சி அரசியலுக்கு வெளியே வந்து மாவை சேனாதிராசா போன்ற ஒரு மூத்த அரசியல்வாதி அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளலாம். இதிலும் சிக்கல்கள் இருக்கின்றன.

இந்தச் சிக்கல்களை தீர்ப்பதில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள், தமக்கிடையில் குறைந்தபட்ச தொடர்பாடலையாவது கொண்டிருக்க வேண்டும்.

தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைகள், அதற்கான தீர்வுகளை அடையாளம் காண்பதற்கு குறிப்பிட்ட ஒரு கால இடைவெளிக்குள் தமிழ்க்கட்சிகளின் தலைமைகள், சந்தித்துக் கலந்துரையாடிக் கொள்வது இத்தகைய சிக்கல்களுக்கான தீர்வைத் தரக் கூடும்.

அத்தகைய தொடர்பாடல் கட்டமைப்பு, எதிர்காலத்தில் வலிமையான தமிழ்த் தரப்பு ஒன்றின் உருவாக்கத்துக்கு காரணமாக அமையலாம்.

இதற்கான சூழலை உருவாக்கிக் கொள்வது காலத்தின் தேவை. அதனை எல்லா தமிழ்த் தேசிய அரசியல் சக்திகளும் புரிந்து கொண்டால், பேரினவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது கடினமானதாக இருக்காது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04