அரசாங்கத்தின் அவசரம்!

20 Sep, 2020 | 04:26 PM
image

-என்.கண்ணன்

20 ஆவது திருத்தச் சட்டவரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நாளில் இருந்தே, அதனைச் சுற்றிய கடுமையான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

பொதுவாகவே இவ்வாறான யோசனைகளை சமர்ப்பிக்க முன்னர், உள்ளக விவாதங்கள் நடத்தப்படுவதுண்டு. ஆனால் தற்போதைய அரசாங்கம் அவ்வாறு உள்ளக விவாதங்களுக்கு இடமளிக்கவில்லை.

அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவுக்கு அனுமதி பெறப்பட்டதும், அது வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

இந்த வரைவைத் தயாரித்தது யார்- இது யாருடைய சிந்தனையில் உதித்தது என்ற கேள்விக்கு யாருமே பதிலளிக்கத் தயாராக இல்லை.

முதலில் இந்த வரைவு குறித்த சர்ச்சைகள் எழுந்த போது, இதனைத் தான் தயாரிக்கவில்லை என்று மறுத்திருந்தார் நீதி அமைச்சர் அலி சப்ரி.

அதற்குப் பின்னர், இந்த சர்ச்சைகள் உச்சக்கட்டத்தை அடைந்த போது, பேராசிரியர் ஜிஎல்.பீரிசும் தான் இந்தக் குழந்தைக்கு தந்தையில்லை என்று மறுத்திருக்கிறார்.

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ஆவணம், அமைச்சரவையின் அங்கீகாரத்துடன், வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டிருக்கிறது, ஆனால் அதனை வரைந்தவர்- அதற்கு பொறுப்பாக இருந்தவர் யார் என்பதில் தெளிவான பதில் இல்லை.

பொதுஜன பெரமுனவில் பல சட்டத்தரணிகள் இருந்தாலும், பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ் தான் அரசியலமைப்பு விவகாரங்களைக் கையாளுபவர்.

அவர் சந்திரிகா காலத்தில் இருந்து பல அரசியலமைப்பு திருத்தங்களுக்கு மூளையாக இருந்தவர்.

இப்போதைய அரசாங்கத்தில் அவரிடம் அரசியலமைப்பு விவகாரங்களை கையாளும் அமைச்சோ, நீதி அமைச்சோ இல்லை. கல்வி அமைச்சராகவே இருக்கிறார்.

ஆனாலும், அவர் சட்ட விவகாரங்களில் ஆற்றல்மிக்கவர் என்பதால், தான் பிரதமர் மகிந்த ராஜபக்சவினால், 20 ஆவது திருத்தச் சட்டவரைவை மீளாய்வு செய்யும் குழுவின் தலைவராக நியமித்திருந்தார்.

இவரும், இந்த வரைவைத்  தான் தயாரிக்கவில்லை என்று கூறுகிறார்.

இந்த விவகாரங்களைக் கையாளக் கூடிய நிலையில், அரசாங்கத்தில் உள்ள இன்னுமொருவர் சட்டத்தரணி அலி சப்ரி. நீதியமைச்சராக இருக்கிறார்.

இவர் அரசியலமைப்பு விவகாங்களில் மிகப்பெரிய வல்லுனர் என்று கூறமுடியாவிடினும், சட்டநுணுக்கங்களை அறிந்தவர். சிறந்த சட்டத்தரணிகளில் ஒருவர்.

அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், நேரடியாக அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவர். ஜனாதிபதிக்கு நெருக்கமான அவரும் தனக்கும் இதற்கும் தொடர்பில்லை என்கிறார்.

பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ், மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய விசுவாசி. அலி சப்ரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நெருங்கிய விசுவாசி.

இவர்கள் ஒருவரை ஒருவர் மறைக்கப் பார்க்கிறார்களா அல்லது எல்லோரும் சேர்ந்தே இதனை மறைக்க முனைகிறார்களா?

ஏனென்றால், இந்த திருத்த வரைவு மிகவும் ஆபத்தான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதனை நடைமுறைப்படுத்தினால், ஜனாதிபதி எல்லையற்ற அதிகாரங்களைக் கொண்டவராக மாறுவார். ஒரு சர்வாதிகாரியாக கூட அது ஜனாதிபதியை மாற்றக் கூடும்.

அதற்குப் பின்னால் நடக்கக் கூடிய விடயங்களுக்கு இந்த வரைவைத் தயாரித்தவரே பொறுப்புக்கூற வேண்டியவராக இருப்பார்.

எனவே, இந்த வரைவுக்கு யாரும் தனிப்பட்ட முறையில் பொறுப்புக்கூற அஞ்சுகின்றனரா என்று தெரியவில்லை.

அதேவேளை அரசினால் முன்வைக்கப்பட் திருத்தம் என்ற வகையில், அனைத்து அமைச்சர்களும் இதற்கு பொறுப்பு என்று அமைச்சர் பீரிஸ் கூறியிருப்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயமாக உள்ளது.

அதேவேளை அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த வரைவுக்கு அதனை தயாரித்த, தானே பொறுப்பு என்று ஜனாதிபதி கூறியதாக அமைச்சர் மகிந்த அமரவீர கூறியிருக்கிறார்.

இந்த வரைவு வெளியிடப்பட்ட பின்னர், எதிர்க்கட்சிகளிடம் இருந்து மாத்திரமன்றி, ஆளும்கட்சிக்குள் இருந்தும், சிங்களத் தேசியவாத அமைப்புகளிடம் இருந்தும் தோன்றிய எதிர்ப்புகள் அரசாங்கத்தை பெரிதும் குழப்பமடையச் செய்திருக்கிறது.

எதிர்க்கட்சிகள் மத்தியில் இருந்து எதிர்ப்பு வருவது இயல்பு தான். அதுவும் இவ்வாறான ஒரு திருத்தத்துக்கு எதிர்ப்பு வராது என்று எந்த அரசாங்கமும் எதிர்பார்க்காது.

ஆனால், சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளும் எதிர்க்கிறார்கள், ஆளும்கட்சிக்குள்ளேயும் எதிர்ப்பு இருக்கிறது என்பது தான், அரசாங்கத்துக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்த திருத்த வரைவைக் கொண்டு வருவதற்குப் பின்னால் ஒரு சக்தி இருப்பது போலவே, இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்குப் பின்னாலும் ஒரு சக்தி இருப்பதாக தெரிகிறது.

இதனை ஜனாதிபதி தரப்பிலேயே தயாரிக்கப்பட்டது என்று கூறப்படுகின்ற நிலையில், இதில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் பொறுப்பு என்ன என்ற கேள்வியும் வருகிறது?

20 ஆவது திருத்த வரைவை மீளாய்வு செய்ய பிரதமர் குழுவை நியமித்த போது ஐக்கிய மக்கள் சக்தி கிண்டலடித்ததை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

அவர்கள் கொண்டு வந்த வரைவை அவர்களே மீளாய்வு செய்கிறார்கள் என்றால், அதன் உள்ளடக்கம் அவர்களுக்கே தெரியாமல் இருந்ததா என்பதே கேள்வியாக இருந்தது.

இந்த வரைவை மீளாய்வு செய்த குழுவின் அறிக்கை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு திருத்தம் செய்யப்படும் என்று கூறப்பட்ட போதும் அவ்வாறு நடக்கவில்லை.

அதற்குத் தானே பொறுப்பு என்று கூறி, நாடாளுமன்றத்தில் திருத்தங்களைச் செய்யுமாறு ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

இது, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் அவர்களின் முடிவுகளுக்கிடையில் முரண்பாடுகள் இருப்பது போன்ற தோற்றப்பாட்டை காட்டுகிறது.

அதேவேளை தற்போதைய அரசாங்கத்துக்குள் குடும்ப ஆதிக்கத்துக்கு எதிரான குழுக்களும் இருக்கின்றன. புறச்சக்திகளின் தலையீடுகளுக்கு எதிரான தரப்புகளும் இருக்கின்றன. மிகமிக கடும்போக்குவாதிகளும் இருக்கிறார்கள்.

இவ்வாறானவர்கள் மத்தியில் வரைவின் சில பகுதிகள் அதிருப்தியை தோற்றுவித்துள்ளது. அவர்கள் இதில் திருத்தங்களை எதிர்பார்க்கிறார்கள்.

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இந்த வரைவை சட்டமாக்க முனைகிறது. அதனை தடுப்பதில் எதிர்க்கட்சிகள் மாத்திரம் செயற்பாட்டில் இருக்கின்றன என்று கூற முடியாது.

இந்த திருத்தத்தின் உள்ளடக்கம் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளரே கவலை வெளியிட்டிருக்கிறார். அமெரிக்கா போன்ற நாடுகள் இதனைக் குறித்து கருத்து வெளியிடவில்லை.

ஆனால், 19ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கு உதவிய – ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்த உதவிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றன இந்த வரைவை விரும்பப் பேவதில்லை.

இது நாட்டில் சர்வாதிகாரப் போக்கை தலையெடுக்கச் செய்து விடும் என்ற கவலை அவர்களுக்கு இருக்கும்.

இவ்வாறான நிலையில், உள்நாட்டு சக்திகள் மாத்திரமன்றி புறச் சக்திகளும் கூட இந்த வரைவுக்கு எதிரான அணிகளை ஒன்று திரட்டுவதில் இறங்கக் கூடும்.

இதுதான் அரசாங்கத்துக்கு உள்ள ஆபத்து.

அரசாங்கம் இந்த வரைவை அவசரமாக நிறைவேற்ற முற்படுவதற்கும் இதுவே முக்கிய காரணம். அரசாங்கத்திடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கூட நூலிழையில் தான் இருக்கிறது.

கால இழுபறி ஏற்படும்போது, அரசதரப்புக்குள் பிளவுகள் ஏற்படக் கூடும். அவ்வாறானநிலை வருவதை தடுக்கவே, அரசாங்கம் அவசரப்பட்டு திருத்தத்தை நிறைவேற்றத் துடிக்கிறது.

முன்னதாக, மீளாய்வுக் குழுவின் பரந்துரைகளை உள்ளடக்கி புதிய வர்த்தமானி வெளியிடப்படும் ஜனாதிபதி உறுதிமொழி கொடுத்தார் என்று ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருந்தார்.

இப்போது புதிய வர்த்தமானியை வெளியிடாமல், நாடாளுமன்றத்தில் அதனை முன்வைக்க முனைகிறது அரசாங்கம்.

புதிய வர்த்தமானி வெளியிட்டால், 14 நாட்கள் கழித்தே நாடாளுமன்றத்தில் அதனை முன்வைக்க முடியும்.இந்த திருத்த வரைவு நிறைவேற்றுவதற்கு மாத்திரமன்றி  தடுப்பதற்கும் பலர்  முற்படுகிறார்கள்.

அதனை யார்- எப்படிச் செய்யப் போகிறார்கள் என்பது தான் கேள்வி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04