முன்னணிக்குள் வந்த முட்டுப்பாடு

20 Sep, 2020 | 03:42 PM
image

 - கபில்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் அண்மையில் நடந்து வரும் சம்பவங்கள், பொதுத் தேர்தலில் கிடைத்த இரண்டு ஆசனங்கள், அந்தக் கட்சிக்கு வெற்றியாக அமைந்திருக்கிறதா அல்லது குழப்பத்தைக் கொடுத்திருக்கிறதா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துவதாக உள்ளது.

கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு விட்ட நிலையில், கட்சிக்குள் கலகம் தீவிரமடையத் தொடங்கியிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, தேசிய அமைப்பாளர் மற்றும் பேச்சாளர் பதவிகளில் இருந்த சட்டத்தரணி மணிவண்ணன், முதலில் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

அதன் பின்னர், அவரது உறுப்புரிமையும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சித் தலைமையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற போதும், கட்சிக்கென அவ்வாறான எழுத்து மூலமான ஒரு கட்டமைப்பே இல்லை என்று கூறியிருக்கிறார் சட்டத்தரணி மணிவண்ணன்.

அத்துடன், தாமே தொடர்ந்தும் தேசிய அமைப்பாளராக இருப்பதாக கூறிக் கொள்ளும் மணிவண்ணன், புதிய அமைப்புகளை கட்டமைக்க ஆரம்பித்திருக்கிறார்.

இதையடுத்து, முன்னணிக்குள் குழப்பமான நிலை தீவிரமடைந்து வருகிறது.

மணிவண்ணனை சுற்றி குறிப்பிடத்தக்க ஆதரவாளர்கள் இருப்பதும், அவருக்கு கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் ஆதரவு இருப்பதும், அவரது பலமாக உள்ளது.

இதனால் அவரை வெளியே துரத்தும் முடிவை எடுத்தாலும், அவரை கட்சிச் செயற்பாடுகளில் இருந்து முற்றாக விலக்கி வைக்க முடியாத அல்லது அவரது கட்சி செயற்பாடுகளுக்கு தடைவிதிக்கக் கோரி நீதிமன்றம் செல்ல முடியாத நிலை கட்சித் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.

உண்மையைச் சொல்வதானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் போலவே, தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஒரு வெறும் கூடு தான்.

அந்தப் பெயருக்குள் எந்த நிர்வாக கட்டமைப்பும் கிடையாது., அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற கட்சியின் பெயருக்குள் தான் எல்லாமே இருக்கிறது.

அகில இஙலகை தமிழ் காங்கிரஸ் கட்சியின் அடையாளத்தைக் காப்பாற்றுவதற்காகவே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறது ஜி.ஜி.பொன்னம்பலம் குடும்பம் என்றொரு விமர்சனம் தமிழ் அரசியல் பரப்பில் உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திய கஜேந்திரகுமார், தாமும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை இதுவரை பதிவு செய்யாமல் இருக்கிறார்.

மணிவண்ணன் தரப்பும், முன்னணியைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை, மக்கள் முன்கொண்டு சென்ற அளவுக்கு, அதனை சட்டரீதியாக கட்டமைக்கவில்லை என்பதே உண்மை. இந்தளவுக்கு முன்னணிக்குள் சட்டத்தரணிகள் ஆதிக்கம் அதிகம்.

அதனால் தான், மணிவண்ணனுக்கு எதிராக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நீதிமன்றத்தை நாடுவதற்கு தயக்கம் உள்ளதாகவும், கூறப்படுகிறது.

கட்சி கட்டமைப்பு குறித்து எந்த எழுத்து வடிவ ஆவணமும் இல்லை என்ற மணிவண்ணனின் கூற்றில் இருந்தே நிலைமைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இவ்வாறான நிலையில், மணிவண்ணன், கட்சியை விட்டு நீக்கப்பட்டாலும், அவர் வெளியேறாமல், இருப்பது தான் “கஜன்”களின் அணிக்கு சிக்கலாக உள்ளது.

மணிவண்ணனை நீக்கிவிட்டோம் என்று அறிவித்ததும், அவர் ஒதுங்கிப் போயிருந்தாலோ, வேறு கட்சியில் சேர்ந்திருந்தாலோ அவர்களால் நிம்மதியாக இருந்திருக்கலாம்.

ஆனால், மணிவண்ணன் அவ்வாறு செய்யவில்லை. செய்யப் போவதுமில்லை. அது அவரது அரசியல் செல்வாக்கை உடைத்து விடும்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் பிளவுகள் ஏற்படுவது சிங்களப் பேரினவாதக் கட்சிகளுக்கே சாதகமாக அமைவதாக கூறுகின்ற மணிவண்ணன், அவ்வாறான நிலைக்கு தாம் இடமளிக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.

அதனால் தான், அவர் உள்ளிருந்தே போராடத் தொடங்கியிருக்கிறார். தமிழ் அரசியல் பரப்பில் இது ஒரு முக்கியமான விடயம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டில் அதிருப்தி ஏற்பட்டபோது, கஜேந்திரகுமார் உள்ளிருந்து போராடவில்லை. வெளியே வந்து தனியாக கட்சியை தொடங்கினார். பின்னர், ஈபிஆர்எல்எவ்வும், அவ்வாறே வெளியேறியது.

சி.வி விக்னேஸ்வரனும் வெளியேறி தனியாக கட்சியை ஆரம்பித்தார்.

அனந்தி, சிவகரன், அருந்தவபாலன் போன்றவர்கள் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து வெளியேறினார்களே தவிர உள்ளிருந்து போராடவில்லை.

சிவாஜிலிங்கம், சிறிகாந்தா ஆகியோர் கூட்டமைப்பில் இருந்தும் ரெலோவில் இருந்தும் வெளியே புதுக்கட்சி தொடங்கினார்கள். ஆக, கூட்டமைப்பில் அல்லது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் இருந்தவர்கள், அதிருப்தி ஏற்பட்டபோது அதற்கு காரணமானவர்களுக்கு எதிராக போராடாமல், உள்ளிருந்தே எதிர்ப்பை வலுப்படுத்தாமல், வெளியே போனார்கள்.

அதனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு – தமிழ்த் தேசிய அரசியல் தலைமைத்துவம் உடைந்து துண்டு துண்டானது.

அதன் விளைவு அண்மைய தேர்தலில் வலுவாக எதிரொலித்திருக்கிறது, உள்ளிருந்தே போராடியிருந்தால், கூட்டமைப்பை தவறாக வழநடத்த முற்பட்டவர்களின் கரங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். அவர்களை பலவீனப்படுத்தியிருக்கலாம்.

வெளியே போனவர்கள் தம்மை பலப்படுத்திக் கொள்ளலாம் என்று எதிர்பார்த்தனரே தவிர, தமிழ்த் தேசிய அரசியல் பலவீனப்படுத்தப்படுகிறது என்று பார்க்கவில்லை.

இந்த இடத்தில் மணிவண்ணனின் நிலைப்பாடு மாறுபட்டதாக உள்ளது. அவர் உள்ளிருந்தே, அழுத்தங்களைக் கொடுக்க முனைகிறார்.

இதுதான் அவரை கட்சியை விட்டு ஒதுக்க முயற்சித்தவர்களுக்கு சிக்கலைக் கொடுத்திருக்கிறது.

மணிவண்ணனே, உள்ளூராட்சி கட்டமைப்புகளை ஒழுங்குபடுத்துவது, கட்சியின் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கு பொறுப்பாக இருந்தவர்.

அதன் மூலம் அவர் செல்வாக்குப் பெறுவதை ஒரு கட்டத்தில் கட்சித் தலைமை விரும்பாமல் போயிருக்கலாம்.

இப்போது அவர் தனது பலத்தைக் கொண்டு மணிவண்ணன் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை, தமிழ் தேசிய சட்டத்தரணிகள் அணி என்று தனி அமைப்புகளை உருவாக்கத் தொடங்கியிருக்கிறார்.

இவை எல்லாம் கட்சியின் கட்டமைப்புகள் தான் என்று அவர் கூறிக்கொண்டாலும், அது முழுமையாக மணிவண்ணனின் விசுவாசிகளால் கட்டமைக்கப்படுகிறது. இது கஜன்களின் தலைமைக்கு கடுமையான சவாலை ஏற்படுத்துகிறது.

ஏனென்றால் மணிவண்ணனுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இளங்கோவும், சட்டத்தரணியும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வளர்ச்சிக்கு வெளியெ இருந்து ஆதரவு கொடுத்து வந்தவருமான சி.அ.யோதிலிங்கம் போன்றவர்களும், பார்த்திபன் வரதராஜன் போன்ற துடிப்பு மிக்க உள்ளூராட்சி பிரதிநிதிகளும் இருக்கிறார்கள்.

இவர்களின் ஆதரவுடன் கட்சியைப் பலப்படுத்துகிறார் மணிவண்ணன் என்பது, அவர் தன்னையும் சேர்த்தே பலப்படுத்துகிறார் என்பதையே அர்த்தப்படுத்துகிறது.

இந்த இடத்தில் மணிவண்ணனின் வளர்ச்சியை கஜன்களின் தலைமையால் தடுக்க முடியாது. அவ்வாறு சட்டரீதியாக அணுகப் போனால் அது அவர்களுக்கே ஆப்பாக அமையும்.

அதேவேளை, தன்னை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வளர்த்துக் கொள்வதில் மணிவண்ணன் உறுதியாக இருக்கிறார்.

அவர் இதுவரை அவ்வாறு வளர்த்துக் கொண்டதன் விளைவாகத் தான், நாடாளுமன்றத் தேர்தலில் அவர் மூலம் வாக்குகளை பெறுவதற்காக வேட்புமனுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தார்.

தொடர்ந்தும் கட்சிக்குள் தனது பலத்தை அவர் வெளிப்படுத்தினால் வேறுவழியின்றி தலைமை அவருடன் இணங்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். அதுவே மணிவண்ணனின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எனினும், அவரை எதிரியாக- துரோகியாக காட்டத் தொடங்கி விட்ட கஜன்களுக்கு, அவருடன் இணக்கத்தை ஏற்படுத்துவது கடினமான காரியமாக இருக்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49