'தங்க மனிதன்' என்று அழைக்கப்பட்ட தத்தா புஹே, அவரது மகன் முன்னிலையில் பாரிய கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

தங்க மனிதன் என்றழைக்கப்பட்ட  தத்தா புஹே ( வயது 48), சில வருடங்களுக்கு முன்னர் முற்றிலும் தங்கத்தினால் செய்யப்பட்ட சேட்டுடனும், கனமான தங்கச்சங்கிலிகளுடனும், முரட்டுத்தனமான தங்க காப்புகளுடனும், 10 விரல்களில் மோதிரங்களுடனும் இவர் தோன்றிய படங்கள், சமூக வலைத்தளங்களில் பரவிவந்த நிலையில் அவர் 'தங்க மனிதன்' என்று அழைக்கப்பட்டு வந்தார்.

மராட்டிய மாநிலம் புனேயைச் சேர்ந்த இவர் ஒரு தொழிலதிபராவார். இவர் இன்று காலை புனேயில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புஹேயும் அவரது மகனும் பிறந்தநாள்  கொண்டாட்டமொன்றுக்காக சந்தேகநபர்களால் அழைக்கப்பட்டுள்ளதாகவும்  மகனுடன் காரில் சென்று கொண்டிருந்த புஹேயை மறித்த சந்தேக நபர்கள் அவரை கல்லால் அடித்துக் கொலை செய்திருப்பதாகவும், பணப்பிரச்சினை காரணமாக புஹே கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சம்பவத்தின் போது 22 வயதான புஹேயின் மகன் தப்பிஓடியுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. 

 இச் சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் அவரது மருமகன் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

3.5 கிலோ எடையுடன், 22 காரட் தங்கத்தினால், 15 கைவினைக்கலைஞர்களின் உழைப்பில் முற்றிலும் தங்கத்தினால் உருவாக்கப்பட்ட இந்திய ரூபா 1.27 கோடி மதிப்பில் செய்யப்பட்ட இவரின் சேட் இவரை பிரபலமடையச் செய்தது. மேலும், உலகின் மிகவும் விலை மதிப்பான சேட் என்று மதிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.