(எம்.எப்.எம்.பஸீர்)

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது கொலன்னாவ பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்ப்ட்ட முன்னாள் தொழிற் சங்கங்கள் குறித்த ஜனாதிபதியின் ஆலோசகர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரின் கொலை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. இது தொடர்பிலான அறிவிப்பை இது குறித்த வழக்கை விசாரணை செய்து வந்த ட்ரயல் அட்பார்  நீதிமன்றம் இன்று அறிவித்தது.

ஷிராண் குணரட்ன (தலைவர்), பத்மினி என். ரணவக்க, என்.சி.பி.சி. மொராயஸ் ஆகிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ட்ரயல் அட் பார் முறை மூலம் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் இன்று குறித்த வழக்கின் வாய் மொழி மூல வாதங்கள் நிறைவு பெற்றதையடுத்தே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இன்றைய தினம் வாய் மொழி மூல வாதங்கள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி வரை எழுத்து மூல வாதங்களை சமர்பிக்க கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள் குழாம் ஆட்சேபனங்கள் இருப்பின் அத்திகதிக்கு முன் எழுத்து மூல வாதங்களாக அவற்றை  சமர்பிக்குமாறும் தீர்ப்பை செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி வழங்குவதாகவும் அறிவித்தனர்.