ஞானசார தேரரின் சாட்சியத்தை ஜம் இய்யதுல் உலமா சபையின் பிரதி செயலாளர் ஒலிப்பதிவு செய்தமையால் பரபரப்பு

11 Sep, 2020 | 07:24 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்குள் தனது தொலைபேசியை, திட்டமிட்டு எடுத்துச் சென்று,  பொதுபல சேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரின்  சாட்சியத்தை, அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் பிரதி செயலாளர்களில் ஒருவரான அஷ் ஷெய்க் முர்ஷித் முளப்பர்  நேற்று முன் தினம் ஒலிப்பதிவு செய்தமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 இந் நிலையில் தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய  குறித்த மெளலவிக்கு எதிராகவும், தொலைபேசியை ஆணைக் குழுவுக்குள் எடுத்துச் செல்ல உதவியதாக கூறப்படும் சட்டத்தரணிக்கு எதிராகவும் மேன் முறையீட்டு நீதிமன்றம் ஊடாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வா, ஆணைக் குழுவின் செயலாளருக்கு நேற்று ஆலோசனை வழங்கினார்.

 அத்துடன் தொலைபேசியை ஆணைக் குழுவுக்குள் கொண்டு செல்ல உதவிய சட்டத்தரணிக்கு எதிராக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஒழுக்காற்று பிரிவில் முறையிடுமாறும் அவர் செயலாளருக்கு நேற்று ஆலோசனை வழங்கினார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க  விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி  விசாரணை ஆணைக் குழுவின்  சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில்  இடம்பெற்று வருகின்றது.

 இந் நிலையில், அவ்வாணைக் குழுவில், அண்மையில் பொது பலசேனவின் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் சாட்சியமளித்திருந்தார். 

அவரது சாட்சியத்தில் கூறப்பட்ட விடயங்களை சவாலுக்கு உட்படுத்தி,  அதனால் தமது தரப்புக்கு   பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி 10 முஸ்லிம் அமைப்புக்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு அறிவித்திருந்தன.

 அதனையடுத்து, கடந்த 8 ஆம் திகதி செவ்வாய் முதல், பொதுபல சேனாவின் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் குறுக்குக் கேள்வி எழுப்ப, அந்த 10 முஸ்லிம் அமைப்புக்களுக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டன.

 அதன்படி நேற்று முன் தினம்,  அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை சார்பில் ஆஜரான சட்டத்தரணியின் குறுக்கு விசாரணைகள்  ஆரம்பமாகின.

 இதன்போது, அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் பிரதி செயலாளர்களில் ஒருவரான முர்ஷித் முளப்பர் மெளலவி ஆணைக் குழுவில் பொது மக்கள்  இருக்க முடியுமான பகுதியில்  இருந்தார்.

 இதன்போது அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவு அதிகாரிகள் அவரை, ஆணைக் குழுவின் சாட்சி விசாரணை அறைக்கு வெளியே அழைத்து சென்று பரிசீலித்த போது, அவர், கையில் வைத்திருந்த  குறிப்பு புத்தகம் இடையே கையடக்கத் தொலைபேசி ஒன்றினை வைத்து, ஞானசார தேரர் வழங்கும் சாட்சியத்தை ஒலிப் பதிவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

 குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகளை ஒளி, ஒலிப் பதிவு செய்வதை அவ்வாணைக் குழு தடைசெய்துள்ள நிலையில்,  கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்களை உள்ளே கொண்டு செல்வதையும் தடை செய்துள்ளது.

 இவ்வாறான பின்னனியில், குறித்த மெளலவியின் செயற்பாடு பெரும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், அவர் ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டு சுமார் இரு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்கு மூலமும் பதிவு செய்யப்பட்டது.

 இதன்போது தனது தொலைபேசியை  ஜம் இய்யதுல் உலமா சபை சார்பில் ஆஜராக வந்த சட்டத்தரணிகள் குழுவில் அடங்கிய ஒரு கனிஷ்ட சட்டத்தரணியிடம் கொடுத்து, ஆணைக் குழுவுக்குள் எடுத்துச் சென்றுள்ளமையும், ஆணைக் குழுவுக்குள் வைத்து அதனை பெற்று, இவ்வாறு ஒலிப்பதிவு செய்துள்ளமையும் தெரியவந்துள்ள நிலையிலேயே நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்க ஆணைக் குழுவின் தலைவர், ஆணைக் குழு செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 இந்த ஆலோசனையை வழங்கும் போது, தலைமை நீதிபதி ஜனக் டி சில்வா, அங்கிருந்த சட்டத்தரணிகளை நோக்கி, தமது எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து சட்ட ரீதியாக ஆணைக் குழுவுக்குள் நடந்துகொள்ளுமாறு எச்சரித்தமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56