ஒலுவில் பகுதியில் நோன்பு பெருநாளன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட 13 பேரில் 8 பேரை விளக்கமறியலில் வைக்குமாறும் 5 பேரை பிணையில் செல்லுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதிவான் நீதிமன்ற நீதிபதியுமான நளினி கந்தசாமி முன்னிலையில் கைதுசெய்யப்பட்ட 13 பேரையும் ஆஜர்படுத்திய போதே மேற்படி தீர்ப்பை வழங்கினார்.

அம்பாறை, ஒலுவில் வெளிச்சவீட்டு வீதியில்  கடந்த 6 ஆம் திகதி நோன்பு பெருநாளன்று பிற்பகல்  இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒலுவில்  அஷ்ரப் நகரைச் சேர்ந்த அகமட் லெப்பை அசாரூதீன் (22வயது), ஒலுவில் வெளிச்சவீட்டு வீதியைச் சேர்ந்த ஏ.ஆ. சனூஸ் (22வயது) என்ற இரு இளைஞர்களும்  உயிரிழந்தனர்.

அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி ஒலுவில் சந்தியிலிருந்து ஒலுவில் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற போது, ஒலுவில் பகுதியிலிருந்து ஒலுவில் சந்தி நோக்கி 7 மோட்டார் சைக்கிள்களில் 14 பேர்  வேகமாக வந்த போது இடம்பெற்ற விபத்திலேயே ஒலுவில் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருமே  உயிர் இழந்தனர்.

இவ்விபத்து சம்பவம் இடம்பெற்ற தினம் பொலிசார் அவ்விடத்துக்கு சென்றபோது மோதி விபத்தை ஏற்படுத்தியவர்கள் உட்பட கூட வந்தவர்களுமாக மொத்தம் 13 பேரும் படுகாயமடைந்த இருவரையும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமல், மோதி விபத்தை ஏற்படுத்திய தடயப் பொருளான மோட்டார் சைக்கிள்களையும் அவ்விடத்தில் இருந்து கொண்டு சென்று சம்பவத்தை முழுமையாக மறைப்பதற்காக முயற்ச்சித்துள்ளார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிசார் 13பேரையும் கைது செய்து மன்றில் ஆஜர்படுத்தினர்.

ஒலுவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 13 பேரை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது 9 பேரை இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதுடன் ஏனைய ஐந்து பேரும் இம்முறை  உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் என்பதை கவனத்திற்கொண்டு தாய் அல்லது தகப்பன் உட்பட ஒரு இலட்சம் ரூபா இரு சரீரப்பிணையிலும் ஐயாயிரம் ரூபா காசுப்பிணையிலும் விடுவித்தார்.

அத்துடன் வெள்ளிக்கிழமைகளில் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் எனவும் மாணவாகள் ஐவருக்கும் மேலும் உத்தரவிட்டார்.

நேற்று முன்தினம் புதன்கிழமை (13) மாலை அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதிவான் நீதிமன்ற நீதிபதியுமான திருமதி நளினி கந்தசாமி முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே மேற்படி தீர்ப்பை வழங்கினார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் கடந்த ஞாயிற்று கிழமை (10) நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.