'20 ஆவது சட்டமூலத்தில் திருத்தங்களுக்கு இடமில்லை': இருப்பது போன்றே  நிறைவேற்றவே தீர்மானம் - அமைச்சர் தினேஷ் திட்டவட்டம் 

Published By: J.G.Stephan

07 Sep, 2020 | 12:54 PM
image

ரொபட் அன்டனி


1. பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு தேவை 

2. புதிய அரசியலமைப்பு விரைவில் 

3.எதிர்க்கட்சிகள் எதிர்த்தாலும் 20ஐ நிறைவேற்றுவதில் சிக்கல் இல்லை 

3.  அரசியலமைப்பின் 19 அகற்றாவிடின் நாட்டை நடத்துவது கடினம் 

5. தேசிய பாதுகாப்பு ஸ்திரத்தன்மைக்கு முக்கியத்துவமளித்துள்ள ’20’

6. 42 வருடங்கள் பழைமையான அரசியமைப்பு நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாகவுள்ளது 

7. பாராளுமன்ற பேரவையில் மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டுமே  இடம் 

8. சிவில் சமூகம் ஆலோசனைகளை வழங்கலாம் 

9. தீர்மானம் எடுக்கும்  இடத்தில் மக்கள் பிரதிநிதிகளே இருக்கவேண்டும்


அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தில்  புதிய திருத்தங்களை உள்வாங்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை. அனைத்து விடயங்களையும் நன்றாக ஆராய்ந்தே இதனை தயாரித்துள்ளோம். அதனால் திருத்தங்கள் அவசியமாகாது என்று  வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். 

தற்போது 20 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டாலும் விரைவில் முழுமையான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். அதற்கான  நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக புதிய அரசியலமைப்பை வரைவதற்கு    நிபுணர் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது  என்றும் அவர் குறிப்பிட்டார். 

அரசியலமைப்பின்  20 ஆவது திருத்தச் சட்டம்  தொடர்பில்  கேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய குறுகிய நேர செவ்வியிலேயே  அவர் இவற்றை குறிப்பிட்டார். செவ்வியின் விபரம் வருமாறு 

கேள்வி அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம்  பற்றி? 
பதில்  நாட்டின் நிர்வாகம்  மற்றும் கொண்டு நடத்தல் என்பனவற்றுக்கு பாரிய தடையாக 9  ஆவது திருத்தச் சட்டம் காணப்படுகின்றது.  நாட்டை கொண்டு நடத்துவதில் பாரிய தடைகள் 19 ஆவது திருத்தம் காரணமாக ஏற்பட்டன. அதனை கடந்த ஆட்சியில் மக்கள் கண்டனர்.  அதனை நாம் மறக்க முடியாது.   மக்களின் மற்றும் பாராளுமன்றத்தின்  தேவைகள் நிறைவேற்றப்படவேண்டும். தடைகளை நீக்கி நாட்டை முன்னோக்கி நகர்த்தவேண்டும். அதற்காகவே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்.  நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும்   அதன் இருப்பு   ஸ்திரத்தன்மை என்பனவற்றை கருத்திற்கொண்டே  அரசாங்கம்  20 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவந்துள்து. 

ஆனால் தற்போது 20 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டாலும் விரைவில் முழுமையான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். அதற்கான  நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக புதிய அரசியலமைப்பை வரைவதற்கு    நிபுணர் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.  அந்த குழு  அதற்கான  நடவடிக்கைகளை  ஆரம்பிக்கும்.   மிக முக்கியமாக  நாட்டின்  தேர்தல் முறையை  விரைவாக  மாற்றவேண்டியுள்ளது.   அத்துடன் தற்போதைய அரசியலமைப்புக்கு 42 வருடங்கள் கடந்துவிட்டன.  19 தடவைகள் இந்த அரசியலமைப்பு திருத்தப்பட்டள்ளது. அதாவது அரசியலமைப்பே மாறிவிட்டுள்ளது.   அதுவே தற்போது மக்களின் முன்னேற்றத்துக்கு  தடையாக உள்ளது. எனவே  புதிய அரசியலமைப்பை அரசாங்கம் விரைவாக கொண்டுவரும்.  

கேள்வி  புதிய அரசியலமைப்பு எப்போது வரும்? 
பதில் புதிய அரசியலமைப்பும்  குறிப்பிட்ட காலப்பகுதியில் கொண்டுவரப்படும்.  புதிய அரசியலமைப்பு தொடர்பில்   பாராளுமன்றத்தில் அஙகம் வகிக்கும் கட்சிகள் தமது யோசனைகளை  சமர்ப்பிக்க முடியும்.     அதனை விரைவுபடுத்தவே   நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.   புதிய அரசியலமைப்பு குறித்து பாராளுமன்றத்தில் சகல கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும்.  

கேள்வி சரி 20 ஆவது திருத்தச் சட்டத்தில் இரட்டைக் குடியுரிமை விடயம்  விமர்சனத்துக்கு உட்பட்டுள்ளதே? 
பதில் அனைத்து விடயங்களையும் துண்டு துண்டாக கொண்டிருக்க முடியாது.  அதனால் தான் விரைவில் புதிய அரசியலமைப்பை கொண்டுவரவுள்ளதாக அறிவிக்கின்றோம். 

கேள்வி  அப்படியானால் 20 ஆம் திருத்தத்தை  கொண்டுவராமல்  புதிய அரசியலமைப்பையே கொண்டு வந்திருக்கலாமே? 
பதில்  அதுவரை நாட்டை கொண்டு நடத்தவேண்டுமே?    19 ஆம் திருத்தத்துடன்  நாட்டை கொண்டுநடத்த முடியுமா?   அரசியல்வாதிகள் மட்டுமன்றி  மக்கள் பிரதிநிதிகள் அற்றவர்களும் இந்தக் கட்டமைப்பில் இருக்கின்றனரே? இதனூடாக சமூக பிரச்சினைகளை தீர்க்க முடியாதுள்ளது.    பாராளுமன்றத்தை ஜனாதிபதியினால் கலைக்க முடியாதுள்ளது.  பொருளாதார அரசியல் பிரச்சினைகள் வந்தால் எதனையும் செய்ய முடியாதுள்ளது.  அரசியலமைப்பில் ஒரு  சமத்தன்மை இல்லாமல் உள்ளது. அதனை  பல துண்டுகளாக உடைத்துவிட்டனர்.   அதனால் தான் முதலில் 20 ஆவது திருத்தத்தை கொண்டுவந்துவிட்டு பின்னர்  புதிய  அரசியலமைப்பை கொண்டுவர நடவடிக்கை எடுக்கவுள்ளோம். 

கேள்வி அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக ஏன் பாராளுமன்ற பேரவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது? 
பதில் 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவான அரசியலமைப்பு பேரவை  முறையற்று செயற்பட்டது.    கடந்தகாலங்களில்  இதனால் பல நெருக்கடிகள் ஏற்பட்டன.   அரசியலமைப்பு பேரவையில் மக்கள் பிரதிநிதிகள் மட்டும் இருக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர்களும் இருந்தனர்.  அவ்வாறு  இருக்க முடியாது.  அதனால் தான்  அதனை மாற்றியமைக்கவேண்டியேற்பட்டது. எனவே தான் அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக  பாராளுமன்ற பேரவை வரவுள்ளது. 

கேள்வி  ஏன் சிவில் சமூகம் தீர்மானம் எடுக்கும் இடத்தில் இருக்கக்கூ்டாதா? 
பதில் சிவில் சமுகம் ஆலோசனை வழங்கலாம். ஆனால் தீர்மானம் எடுக்கும்  இடத்தில் மக்கள் பிரதிநிதிகளே இருக்கவேண்டும். காரணம்  மக்களின் கேள்விகளுக்கு பதில் மற்றும் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் மக்கள் பிரதிநிதிகள் ஆவர். 

கேள்வி  அப்படியெனின் அரசியலமைப்பு பேரவை தோல்வியடைந்துவிட்டதா? 
பதில்  அதனால் நல்லது நடக்கவில்லை.  எனவேதான் பாராளுமன்ற பேரவை வருகின்றது. 

கேள்வி ஆனால்  பாராளுமன்ற பேரவை வந்தாலும் அதனால் உயர் பதவிகளுக்கு  நியமனங்களை செய்ய முடியாது அல்லவா? பெயரளவில் மட்டுமா? 
பதில்  நாம்  அரச இயந்திரத்தில் எவ்வாறு வேலை செய்கின்றோம் என்பதுதான் முக்கியமானது.   உதாரணமாக சில வழக்குகள் விரைவில் முடிவடைகின்றன. சில வழக்குகள் நீண்டகாலம் இழுத்தடிக்கப்படுகின்றன.  எனவே  நீங்கள் முன்வைக்கின்ற விடயம் பாரிய அம்சம் அல்ல.  

கேள்வி எனினும்  நிறைவேற்று அதிகாரத்தை கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள் எதுவும் 20 இல்  இல்லையே? 
பதில்   ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள்? நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கே இருக்கின்றது. அரச சேவையை நடத்துதல் பாராளுமன்றத்தின் பொறுப்பு. இவ்வாறு  கட்டுப்படுத்தும்  கருவிகள் மற்றும் வழிகள் பல உள்ளன.   முன்னாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன மற்றும்  முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் முதலில் தயாரித்த 19 ஆவது திருத்தம் வேறு அவர்கள் இறுதியில் நிறைவேற்றிய திருத்தம் வேறாகும்.   சர்வஜன வாக்கெடுப்பு என்று வருகின்ற அனைத்து ஏற்பாடுகளையும் நீக்கினர். இறுதியில்  நெருக்கடியின்போது ஜனாதிபதியினால் பொலிஸ்மா அதிபரை மாற்ற முடியாத   19 ஆவது திருத்தத்தை கொண்டுவந்தனர். அதனூடாக நாட்டை  கொண்டு செல்ல முடியாது.  அதனை அனைவரும் செயற்பாட்டு ரீதியாக கண்டோம்.   எனவே தான் அதனை  மாற்றி  20 ஆம் திருத்தத்தை கொண்டுவருகின்றோம்.  தேசிய பாதுகாப்பு நாட்டின் நீடித்த இருப்பு மற்றும் ஸ்திரத்தன்மை என்பனவற்றுக்கு முக்கியத்துவம் அளித்தே 20 ஆம் திருத்தம் கொண்டுவரப்படுகின்றது.

 கேள்வி ஒரு வருடத்தில் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றதே? ’
பதில் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கவேண்டும்.  அரசியல் நெருக்கடிகள் ஏற்படும்போது  பொருளாதார சிக்கல்கள் நேர்கின்ற போது  தவறான சர்வதேச உடன்படிக்கைகளை கைச்சாத்திட முயற்சிக்கும்போது  அவற்றை தடுத்து நிறுத்தவேண்டும். அதற்கு  ஜனாதிபதிக்கு அந்த அதிகாரம் இருக்கவேண்டும்.  மக்களுக்கு மீண்டும் அரசாங்கத்தை அமைக்க சந்தர்ப்பம் வழங்குவது அவசியமாகும்.  ஆனால்  19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் என்ன  நெருக்கடி ஏற்பட்டாலும் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது.  அதனால் அதனை மாற்றியுள்ளோம். 

கேள்வி ஐக்கிய மக்கள் சக்தி தமிழ்க் கூட்டமைப்பு போன்ற எதிர்க்கட்சிகள்  20 ஐ கடுமையாக எதிர்த்துள்ளனவே? 
பதில் 20 ஆம் திருத்தத்தை நிறைவேற்றுவதில் எங்களுக்கு சிக்கல் இல்லை.   விரைவாக மாகாண சபை தேர்தலை நடத்தவேண்டும். 19 ஆவது திருத்தத்தின் காரணமாகவே  மாகாண சபை தேர்தலையும் நடத்த முடியாமல் உள்ளது. 

கேள்வி 20 ஆவது திருத்தம்  குறித்தும்  கட்சிகள் திருத்தங்களை முன்வைத்தால் அவை உள்ளீர்க்கப்படுமா? 
பதில்  அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தில்  புதிய திருத்தங்களை உள்வாங்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை. அனைத்து விடயங்களையும் நன்றாக ஆராய்ந்தே இதனை  தயாரித்துள்ளோம். அதனால் திருத்தங்கள் அவசியமாகாது. அதனை அவ்வாறே நிறைவேற்றுவதே எமது நோக்கமாகும்.  

அதனால்தான் 19 ஆம் திருத்தத்தில் இருந்த  முக்கிய சில விடயங்களை  நீக்கவில்லை.  தகவல் அறியும் உரிமை அவ்வாறே இருக்கின்றது. அத்துடன்  பதவிக்காலம்   பதவி வகிக்கும்  தடவைகள் என்பனவற்றில் மாற்றங்கள் இல்லை.   அவை நீக்கப்படவில்லை.  மாறாக நீக்கப்படவேண்டிவை நீக்கப்பட்டுள்ளன.  அதனால் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலத்துக்கு   மேலதிக திருத்தங்கள் அவசியமாகாது. 

கேள்வி  எவ்வளவு காலத்தில் 20 ஆவது   சட்டமூலம் நிறைவேற்றப்படும்? 
பதில் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் இரண்டு வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அங்கும் சில  நடவடிக்கைகள் உள்ளன. யாராவது உயர்நீதிமன்றம் போகலாம்.  எனவே 20 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற  ஆக கூடியது  42 நாட்கள் தேவைப்படும்.  

கேள்வி் மீண்டும் பிரதமர் பதவி பலமில்லாத பதவியாக போய்விட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றனவே? 
பதில்  யாரும் எதனையும் கூறலாம். எவ்வாறும் வகைப்படுத்தலாம்.  

கேள்வி இரட்டை குடியுரிமை விவகாரத்தில் ஆளும் கட்சிக்குள்ளேயே முரண்பாடுகள் உள்ளன போன்றுள்ளதே? ’
பதில் அவ்வாறு இருக்கின்றதா? 

கேள்வி அமைச்சர் விமல் வீரவன்ச வாசுதேவ நாணயக்கார போன்றோர் அதில் முரண்பாட்டுடன் இருப்பதாக தெரிகின்றதே? 
பதில்  தனிப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படலாம். ஆனால் அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.  அமைச்சரவையில் அனைவரும் அங்கீகாரம் அளித்துள்ளனர். 

கேள்வி பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றம் வருவாரா? 
பதில்  நீங்கள் எழுப்புவது  எதிர்காலம்  தொடர்பான ஒரு கேள்வியாகவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு தடவையில் வீடு செல்வேன் என்றார். ஆனால் மீண்டும் பாராளுமன்றம் வந்தார்.  அவ்வாறுதான் நிலைமை உள்ளது.  

கேள்வி  20 ஆவது திருத்தத்தை ஜனநாயகத்தின் மரணப்பொறி என்று  ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளாரே? 
பதில்  ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியை மரண பொறிக்குள் கொண்டுவந்துவிட்டாரே? கட்சி தோல்வியடைவது வேறு. ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின்  இன்றைய நிலை?  இப்படி நடக்கும் என்று எந்த தலைவராவது நினைத்தார்களா?   1947 ஆம் ஆண்டிலிருந்து  ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது. ஆனால் இப்படியான ஒரு நிலை ஏற்படவில்லை.    

கேள்வி  20 ஐ பார்க்கும்போது எதிர்காலத்தை நினைத்தால் அச்சம் ஏற்கின்றது என்று மங்கள சமரவீர கூறியுள்ளாரே? 
பதில்  யாரும் எதனையும் கூறலாம். ஆனால் உலகத்தில் எதுவும் நிரந்தரமில்லை. கொரோனா வரும் என்று யாரும் நினைத்தோமா? ஆனால் வந்துவிட்டது.  அப்படித்தான்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04