இந்தியாவில் கேரள மாநிலம் கோழிக்கோடை சேர்ந்தவர் தாசன் (வயது 50) கூலி தொழிலாளி. இவர் அந்த பகுதியை சேர்ந்த 5, 6 வயது மதிக்கத்தக்க சிறுவர்களிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு உள்ளார்.

சாக்லேட் வாங்கிக் கொடுத்து ஏமாற்றியும் மிரட்டியும் சிறுவர்களிடம் அவர் இதுபோன்ற பாலியல் கொடுமைகளை தொடர்ந்து அரங்கேற்றி உள்ளார். அவரால் பாதிக்கப்பட்ட சில சிறுவர்கள் தங்களுக்கு தாசன் செய்த பாலியல் கொடுமைகளை பெற்றோரிடம் தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கோழிக்கோடு பொலிஸார் உதவியை நாடினார்கள்.

இதைதொடர்ந்து தாசனை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவரால் 30 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் இதுபோல பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் தாசனை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.இது தொடர்பான வழக்கு கோழிக்கோடு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த 5 வருடங்களாக நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சங்கரன் நாயர் நேற்று தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட தாசனுக்கு 30 ஆண்டு விளக்கமறியலில் தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிபதி தனது தீர்ப்பில் ‘‘தாசன் தனது குழந்தைகளை விட வயது குறைந்த சிறுவர்களிடம் கொடூரமாக நடந்துகொண்டு உள்ளார். இதற்காக அவருக்கு இந்த கடும் தண்டனை விதிக்கப்படுகிறது.’’ என்று கூறி உள்ளார்