ஓய்வுக்குத் திரும்பும் தமிழ்த் தேசிய அரசியல் -கபில்

03 Sep, 2020 | 03:18 PM
image

பொதுத்தேர்தல் ஆரவாரங்கள் முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகப் போகிறது.  தேர்தல் பிரசார காலத்தில், கடுமையான பிரசாரங்கள், குற்றச்சாட்டுகள், வாக்குறுதிகள் என்று மும்முரமாக இருந்த தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு இப்போதும் மீண்டும் ஓய்வு நிலைக்கு பின்நகரத் தொடங்கியிருக்கின்றன.

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை பெரும்பாலும் இவ்வாறு தான் இருந்து வந்திருக்கின்றன.

அவ்வப்போது தேர்தல்களின் போதும், பின்னர் வெவ்வேறு பிரச்சினைகளின் போது பொங்கியெழுவது, அதற்குப் பின்னர் தணிந்து போவதுதான் அவர்களின் வரலாறு.

ஆனால் அரசியல் என்பது அதுவல்ல. அதுவும் மக்களுக்கான அரசியல் என்பது இன்னும் வலுவானதாகவும், வேகமானதாகவும் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்று.

அரசியலில் இருப்பை நிலைநிறுத்துவதற்கு எப்போதும் இயங்கிக் கொண்டேயிருக்க வேண்டும்.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, அதன் தலைவராக இருந்த மு.கருணாநிதியின் கேள்வி – பதில் அறிக்கை, தினத்தந்தி, தினகரன், மாலைமலர், மாலைமுரசு போன்ற பத்திரிகைகளில் வந்து கொண்டேயிருக்கும்.

முக்கியமான கேள்வி - பதில்கள், தினமலர், தினமணி நாளிதழ்களிலும் இடம்பிடிக்கும்.

அவரே எழுப்பும் கேள்வியும், அவரே எழுதும் பதில்களும் தான் அவை. அதனை கருணாநிதியோ, அல்லது அவரது உதவியாளர் சண்முகநாதனோ தான் எழுதிப் போடுவார்கள்.

இது கருணாநிதி என்றொரு அரசியல் தலைவர் இருக்கிறார் என்பதை தினமும் காலையும், மாலையும் நாளிதழ்களைப் படிப்பவர்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். எங்காவது எப்போதாவது ஏதாவது ஒரு பிரச்சினைக்காக போராட்டங்கள், கண்டனக் கூட்டங்கள் அல்லது விழாக்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும். இவையெல்லாம் தான், தமிழகத்தில் பல கட்சிகளின் இருப்பை உறுதி செய்து கொண்டிருக்கின்றன.

அரசியல் கட்சி என்பது மக்கள் மயப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். அதனைச் செய்ய முடியவில்லையேல், மக்களுக்காக போராடுபவையாக இருப்பதாகவேனும் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தேர்தல்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வரும். அந்த தேர்தல்களில் வெற்றியைப் பெறுவது ஒரு முறை தான். ஆனால் அதற்காக ஐந்து ஆண்டுகள் உழைப்பு முக்கியம்.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பார்த்து, நாடாளுமன்றத்தில் எதனைச் சாதித்தீர்கள் என்று துணிச்சலுடன் கேள்வி எழுப்பிய கட்சிகள் பல.

ஏனென்றால், அவர்களுக்கு அதுவரை அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதனால் அவர்களால் அந்தக் கேள்வியை எழுப்ப முடிந்தது. இப்போது நிலைமை அப்படியில்லை. 

முன்னர் கூட்டமைப்பிடம் அந்தக் கேள்வியை எழுப்பிய, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் போன்றவர்கள் தவிர, ஏனையவர்களும் நாடாளுமன்றத்துக்குச் சென்றிருக்கிறார்கள்.

இப்போது, அவர்கள் உள்ளே என்ன செய்யப் போகிறார்கள் என்று எல்லோரும் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

விக்னேஸ்வரனின் முதலாவது நாடாளுமன்ற உரை சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது, கஜேந்திரகுமாரும், தனது நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்ற கருத்தே உள்ளது.

இலங்கையின் தொன்மைக் குடிகள் தமிழர்களே என்றும், தமிழ் மொழியே என்றும் விக்னேஸ்வரன் கூறியதை வைத்துக் கொண்டு சிங்கள உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள்.

சிங்கள மொழியை விட தமிழ் மொழி தொன்மையானது என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இருந்து உருவாகியது தான் சிங்களம். 

இவ்வாறான நிலையில் தமிழ் மொழியின் தொன்மையை பேச முயன்றதை நாட்டின் இறைமைக்கு விடப்பட்ட சவால் போன்று பிரச்சினை எழுப்ப முயன்றுள்ளனர்.

இது, விக்னேஸ்வரனின் கருத்துக்களுக்கு நாடாளுமன்றத்தில் வருங்காலத்தில் பிரச்சினைகள் எழுப்பப்படும் என்ற சமிக்ஞையை வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்த தமிழ் நாட்டின் தொன்மையான மொழி அல்ல என்பதை நிரூபிக்க தம்முடன், பகிரங்க விவாதம் நடத்த வருமாறு விக்னேஸ்வரனுக்கு சவால் விடுத்திருக்கிறார் அமைச்சர் உதய கம்மன்பில.

இவையெல்லாம், நாடாளுமன்றத்தில் சூடு பிடிக்கப்போகும் விடயங்களாகத் தான் இருக்கப் போகிறது.

அதுபாலவே, கஜேந்திரகுமார் ஒரு நாடு இரு தேசம் என்பதை கூறி தமிழ்த் தேசத்தின் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தளவுக்கு வெளிப்படைத்தன்மையுடன் பேசுவது குறைவு தான்.

அதேவேளை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதேயளவுக்கு நாடாளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைக்க முனையும் போது அவரைச் சுற்றி வளைத்து தாக்க அரசதரப்பில் உள்ளவர்கள் தயாராவார்கள்.

ஆனால், தமிழ்த் தேசத்தின் உரிமைகள் பற்றி அவர் பேசிய போது, சிங்கள உறுப்பினர்கள் பெரும்பாலும் அமைதியாக இருந்தமை ஆச்சரியம் தான்.

அவரது இந்த உரை இடம்பெற்ற போது, கஜேந்திரகுமாரின் கட்சிக்குள் எரிமலை புகை விட்டுக் கொண்டிருந்தது. அதனை மறைப்பதற்கும், அவருக்கு ஒரு கவசம் தேவைப்பட்டது.

எது எவ்வாறாயினும், விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமாரும் நாடாளுமன்றத்தில் வாதங்களை முன்வைப்பதை மாத்திரம் முன்னெடுக்க முடியுமே தவிர, இதுவரை கூட்டமைப்பு என்ன செய்தது என்று அவர்கள் எழுப்பிய கேள்வியைப் போன்று எழுப்பப்படும் கேள்விக்கு பதிலளிக்க முடியாத நிலையே இருக்கும். இதுமட்டும் தான் மக்களுக்கான அரசியல் அல்ல.

மக்களின் பிரச்சினைகளின் பக்கம் அவர்கள் எந்தளவுக்கு செல்லப் போகிறார்கள் என்பதும் முக்கியம்.

பொதுத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்த் தேசியக் கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்ற என்று பார்த்தால், தேர்தல் கால அலுப்பில் இருந்து அவர்கள் விடுபடவில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

தேர்தலுக்குப் பிறகு அவர்கள் பெரும்பாலும், ஓய்ந்து போய் விட்டார்கள் அல்லது உள்ளக சண்டைகளுக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எடுத்துக் கொண்டால், தேர்தல் முடிந்த அடுத்த நாளே உள்ளக முரண்பாடுகளுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. சசிகலா ரவிராஜ் விவகாரம், பின்னர் மாவையின் தலைமைப் பதவி, அடுத்து தேசியப் பட்டியல் என்று தொடங்கிய இந்தப் பிரச்சினை இப்போது நாடாளுமன்றக் குழு பேச்சாளர், கொடரா பதவிகள் என்று போய் கொண்டிருக்கிறது.

ரெலோ கூட்டமைப்பின் பேச்சாளர் பதவிக்கு முட்டி மோதுகிறது. புளொட் நாடாளுமன்ற குழு தலைவர் பதவியை கோருகிறது. இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் பங்காளிகளுக்கு விட்டுக்கொடுக்க முடியாது என்று தமிழரசு அடம்பிடிக்கிறது.

இந்த இரண்டையும், கடந்த முறை தாங்களே வைத்திருந்தபோது, மற்றவர்களுக்கும் பங்கிட்டு கொடுக்க வேண்டும் என்ற நியாயம் அவர்களுக்கு தெரியவில்லை.

அதுபோல தேர்தல் முடிந்ததும், மணிவண்ணனை கழற்றி விட்டு, உள்ளக மோதல்களுக்கான புதிய களத்தை திறந்து விட்டிருக்கிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

கூட்டமைப்பின் மீது அதிருப்தி கொண்டு முன்னணியின் பக்கம் சாய்ந்தவர்கள், இந்த நிலையைக் கண்டு இதைவிட அவர்களே மேல் என்று திரும்பிப் பார்க்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக தலைவர்கள் நடத்தும் உள்வீட்டுப் போராட்டங்கள் தான் இப்போது கவனத்தைப் பெற்றிருக்கின்றன. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் விக்னேஸ்வரன் நாடாளுமன்றம் சென்ற பின்னர், சம்பிரதாய நிலைக்கு சென்று விட்டது.

அவ்வப்போது சில போராட்டங்கள், ஊடகச் சந்திப்புகளுக்கு அப்பால் அரசியலை முன்னகர்த்தும் மார்க்கம் இவர்களுக்குத் தெரியவில்லை.

இம்முறை, அங்கஜன் இராமநாதன் நாடாளுமன்றத்துக்குச் சென்றதற்குக் காரணம், 2015இல் தோல்வியடைந்த பின்னர், அவர் முன்னெடுத்திருந்த செயற்திட்டங்கள்.

தெரிவு செய்யப்பட்ட இடங்களை மையப்படுத்தி, வேலைத் திட்டங்களை முன்னெடுத்ததன் பலனை அவர் அறுவடை செய்திருக்கிறார்.

இதற்கு ஐந்து ஆண்டுகள் உழைப்பு தேவைப்பட்டது. குறிப்பிட்டளவான மக்களையும், இளைஞர்களையும் தன்பக்கம் இழுத்துக் கொள்ள அவர் கையாண்ட உத்திகள் இப்போதைக்கு வெற்றியைக் கொடுத்திருக்கின்றன.

கஜன்களுக்குக் கூட அவ்வாறு தான். அவர்கள் 10 ஆண்டுகள் உழைத்தே, இரண்டு ஆசனங்களைப் பிடித்திருக்கிறார். ஆனால் அங்கஜனுக்கு 5 ஆண்டு உழைப்பு அவரது ஆசனத்தை உறுதி செய்திருக்கிறது. கூட்டமைப்பு 10 ஆண்டு உழைப்பை வீணடித்ததன் பலனாக, 6 ஆசனங்களை இழந்திருக்கிறது.

இவ்வாறான நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் அடுத்த ஐந்து ஆண்டுகள் எப்படி உழைக்கப் போகின்றன என்பதே அடுத்த பொதுத் தேர்தலில் அவர்களுக்கான இடத்தை உறுதிப்படுத்தும்.

ஒரு பக்கத்தில், அபிவிருத்தி அரசியல், இன்னொரு பக்கம் சலுகை அரசியல் எல்லாவற்றையும் போட்டி போட்டுக் கொண்டு உரிமை அரசியலை முன்னெடுப்பது இலகுவானதல்ல. அவ்வாறு முன்னெடுப்பதற்கு, கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அதற்கு இப்போதே தயாராக வேண்டும்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் அவ்வாறான முனைப்பில் இருப்பதாக தெரியவில்லை. அவ்வாறான உற்சாகம் அவர்களிடம் தெரியவில்லை.  அவர்கள் உள்ளக குத்துவெட்டுகளில் தான் கவனம் செலுத்துவதாகவே தெரிகிறது.

இது மீண்டும் சலுகை, அபிவிருத்தி அரசியலுக்கு முன்பாக, உரிமை அரசியல் மண்டியிடும் நிலையை ஏற்படுத்தி விடலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13