ஜே. ஆர். அரசியலமைப்பின் கெடுதியான பகுதிகளை திருப்பிக் கொண்டு வருதல்

01 Sep, 2020 | 03:53 PM
image

பயன்தராத பழையவற்றுக்கு மீண்டும் செல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை. பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத்தினாலும் கடன்களை மீளச் செலுத்துவதிலுள்ள பிரச்சினைகளினாலும் தோற்றுவிக்கப்படுகின்ற சவால்களையும் நோக்கும்போது அரசாங்கம் கவனம் செலுத்துவதற்கு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த பல விவகாரங்கள் இருக்கின்றன.

-பேராசிரியர் ரொஹான் சமரஜீவ-

இலங்கை எதிர்நோக்குகின்ற கடன் நெருக்கடியையும் விட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கே அரசாங்கம் கூடுதல் முக்கியத்துவத்தை கொடுக்கின்றது என்று செய்திகளை பார்க்கும்போது தோன்றுகிறது. 1978அரசியலமைப்பை எதிர்த்தவர்கள் அதிலுள்ள மோசமான அம்சங்களை திருப்பிக்கொண்டு வருவதில் நாட்டம் காட்டுவது விசித்திரமாக இருக்கிறது.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம்

1978 அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதி நேரடியாக மக்களினால் தெரிவு செய்யப்படுகின்றார். அவரது ஆணை பாராளுமன்றத்திலிருந்து சுயாதீனமானதாகும். பாராளுமன்றமும் கூட அதன் ஆணையை மக்களிடமிருந்து பெறுகிறது. அந்த ஆணை ஜனாதிபதியிலிருந்து சுயாதீனமானது. வேறு பல நாடுகளை போலன்றி, எமது அரசாங்கத்தை அமைக்க நாம் கனிசமானளவு செலவில் இரு தேர்தல்களை நடத்த வேண்டியிருக்கின்றது. ஒருசில மாத இடைவெளியில் பெரும் செலவு பிடிக்கின்ற இரு தேர்தல்களை நடத்துவதிலும் அதனோடு இணைந்த நிச்சயமற்ற தன்மைகளினால் பொருளாதாரம் மீதும் அரசியல் சமுதாயத்தின் மீதும் சுமைகள் திணிக்கப்படுவதிலும் உள்ள நியாயப்பாட்டை பற்றி விவாதம் எழக்கூடும். ஒவ்வொரு தேர்தலும் இரு செலவுக்கூறுகளைக் கொண்டிருக்கின்றன் தேர்தலை நடத்துவதற்கு அரசுக்கு ஏற்படுகின்ற செலவும் வேட்பாளர்களுக்கு ஏற்படுகின்ற மொத்த செலவுகளுமே அந்த இரு கூறுகளாகும். (2020 பொதுத் தேர்தலுக்கான செலவு 300கோடிக்கும் அதிகமானதென்று மதிப்பிடப்பட்டிருக்கின்றது) இதில் வேட்பாளர்களுக்கு ஏற்படுகின்ற செலவுகூறு முழுமையாக சான்றுடன் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றது. கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட ரஞ்சன் ராமநாயக்கா வெளியிட்ட விவரங்களின் அடிப்படையில் நோக்குகின்றபோது, ஒரு வேட்பாளருக்கு ஏற்படுகின்ற செலவின் அடிமட்ட அளவு 55இலட்சம் ரூபாவாகும். இந்தத் தொகையை மொத்த வேட்பாளர் தொகையினால் பெருக்கினால் வேட்பாளர்களுக்கு ஏற்பட்ட முழுச்செலவையும் தெரிந்து கொள்ளலாம். பொதுத் தேர்தலில் 15ஆயிரத்துக்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், மொத்தத்தொகை 7500 கோடி ரூபா வரையில் இருக்கலாம்.

கலப்பற்ற வெஸ்மினிஸ்டர் பாணி ஆட்சிமுறைக்கும் குறைவான ஒன்றுக்கு திரும்பிச் செல்வது இரு சாத்தியமான தீர்வுகளை கொண்டிருக்கிறது. ஒன்று, அதிகாரமிக்க ஜனாதிபதிகளைக் கொண்டிருக்கின்ற மியன்மார் போன்ற நாடுகளில் செய்யப்படுவதைப் போன்று தேசிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற உறுப்பினர்களையும் மாகாண சபை உறுப்பினர்களையும் உள்ளடக்கிய தேர்தல் மன்றம் (Electoral College) ஒன்றினூடாக ஜனாதிபதியை தெரிவு செய்வது. மற்றது, அமெரிக்காவில் செய்யப்படுவதைப்போன்று ஒரே நாளில் ஜனாதிபதித் தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் நடத்துவது.

19ஆவது திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டு இப்போது மீண்டும் திருப்பிக் கொண்டுவருவதற்கு நாட்டம் காட்டப்படுகின்ற 1978 அரசியலமைப்பின் மூலத்தத்துவமோ அல்லது ஆக்கக்கூறோ இதுவல்ல. பொதுத் தேர்தல் நடைபெற்று புதியதொரு பாராளுமன்றம் முதன்முதலாக கூடிய தினத்திலிருந்து ஒரு வருடத்துக்கு பிறகு பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரமே அதுவாகும். ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் இருந்து கிடைக்கப்பெறுகின்ற இரு ஆணைகளும் ஒன்றிலிருந்து ஒன்று சுயாதீனமானவையாக இருக்குமானால், அந்த பாராளுமன்றத்துக்கு உரித்தான பதவிக்காலத்தில் ஆறில் ஒன்று மாத்திரமே காலாவதியான பிறகு அதை தன்னிச்சையாக கலைப்பதற்கு ஜனாதிபதியாக பதவிவகிக்கும் தனிநபரை அனுமதிப்பதில் அர்த்தம் ஏதும் இல்லை. அத்துடன் அவ்வாறு கலைப்பது பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களுக்கும் மக்களினால் வழங்கப்பட்ட ஆணையை செல்லுபடியற்றதாக்குவதாக அமையும்.

இந்த பிரச்சினைக்குரிய அதிகாரத்தை ஜனாதிபதி குமாரதுங்க 2004இல் துஷ்பிரயோகம் செய்ததைத் தொடர்ந்து பொருத்தமான அரசியலமைப்பு ஏற்பாட்டை திருத்தம் செய்ய வேண்டும் என்ற நல்லறிவு பிறந்தது. அதனால் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினூடாக அது திருத்தப்பட்டது. 2015ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் ஒரேயொரு உறுப்பினரின் எதிர்ப்பை தவிர மற்றைய சகலரினதும் முழுமையான அங்கீகாரத்தை பெற்றது. தற்போதைய அரசியலமைப்பின் கீழ் பாராளுமன்றம் ஒன்றின் பதவிக்காலம் முடிவுக்கு கொண்டுவரப்படக்கூடிய பல வழிகள் இருக்கின்றன. ஜனாதிபதியின் மனம்போனபோக்கு அதில் ஒன்றாகும். ஆனால், அவ்வாறு தனது மனப்போக்கில் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்க விரும்பினாலும் கூட அதன் ஐந்து வருட பதவிக்காலத்தில் நான்கரை வருடங்கள் கடந்த பிறகு அல்லது அதன் ஆணையின் 90சதவீதம் காலாவதியானதன் பிறகு மாத்திரமே செய்ய முடியும்.

இப்போது உரிய காலத்துக்கு முன்கூட்டியே பாராளுமன்றம் கலைக்கப்படும் அச்சம் இல்லாமல் மக்களுக்கு இருக்கக்கூடிய சட்டவாக்க அதிகாரத்தை பாராளுமன்றம் செயற்படுத்த முடியும். ஒரு வருடத்துக்கு பிறகு எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை தன்னிச்சையான முறையில் ஜனாதிபதி முடிவுக்கு கொண்டுவரும் ஏற்பாடு நடைமுறையில் இருந்தபோது அவரின் அதிகாரங்களை கட்டுப்படுத்துவதற்கான தரப்புகளும் சமப்படுத்தல்களும் பயனுறுதியுடையவையாக இருக்க முடியாது. அதேபோன்றே ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட ஒரு வருடத்துக்கு பிறகு எந்தநேரத்திலும் அவர் மீது அரசியல் குற்றப் பிரேரணை கொண்டு வந்து அவரை பதவி நீக்கம் செய்ய தீர்மானிப்பதும் பொருத்தமானதல்ல. ஜனாதிபதி மீது அரசியல் குற்றப் பிரேரணையின் அடிப்படையில் அவரை பதவிநீக்குவதற்கு பாராளுமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், அதற்கு சிக்கலான நடைமுறை தேவைப்படுகிறது. பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரத்தை கட்டுப்படுத்துவதற்கு கொண்டுவரப்பட்ட ஏற்பாடு ஜே.ஆர். அரசியலமைப்புக்கு செய்யப்பட்ட நல்லறிவுடைய மாற்றமாகும். அதை மேம்பாடான ஒரு நடவடிக்கை என்றும் சொல்லலாம். 

அமைச்சரவை பருமனின் கட்டுப்பாடுகள்

அமைச்சரவையின் பருமனுக்கு ஒரு உச்ச வரம்பு இல்லாதது 1978 அரசியலமைப்பிலுள்ள இன்னொரு தவறாகும். பிரமாண்டமான அமைச்சரவை குறித்து மக்கள் மத்தியில் பரவலான எதிர்ப்பு இருக்கிறது. மிகவும் பழைமையான அரசியலமைப்பு ஜனநாயகத்தில் அமெரிக்காவில் திணைக்களங்கள்(அமைச்சுக்கள் அங்கு அவ்வாறு தான் அழைக்கப்படுகின்றன) எண்ணிக்கையிலும் பெயரிலும் நிர்ணயிக்கப்பட்டவையாகவே இருக்கின்றன. புதிய அமைச்சு ஒன்றை உருவாக்குவதற்கு காங்கிரசின் அங்கிகாரம் தேவை. ஜே.ஆர்.ஜெயவர்தனா ஜனாதிபதியாக இருந்தவேளையில் கூட அமைச்சுக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கான தேவை எழுந்தது. ஆனால், இந்த மட்டுப்பாடு மத்திய அரசாங்கத்திலன்றி மாகாண அரசாங்கங்களுக்கு மாத்திரம் பிரயோகிக்கப்பட்டது.

அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தம் குறைபாடுடைய தீர்வொன்றையே வழங்கியிருக்கிறது. ஆனால், என்னயிருந்தாலும் இது முன்னேற்றகரமானது. அமைச்சுகளைப் பற்றி விசேஷப்படுத்தி அது கூறவில்லை. ஆனால், அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் உச்சவரம்பு 30என்ற ஏற்பாடு அதில் உள்ளது. அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சர்களினதும் பிரதியமைச்சர்களினதும் எண்ணிக்கையும் கூட 40ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த திருத்தம் தேசிய அரசாங்கத்துக்கான நடைமுறை பற்றி தெளிவாக வரையறுக்கப்படாத ஒரு ஏற்பாட்டைக் கொண்டிருக்கிறது. அதில் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்பட முடியும். தர்க்க நியாயமற்ற அமைச்சுகளை இன்னமும்கூட உருவாக்கலாம். ஆனால், அவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

தேசிய அரசாங்கம் என்பது என்ன என்பதை தெளிவாக வரையறுப்பதன் மூலமாக அல்லது அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 30ஆக மட்டுப்படுத்துவதற்கு இருக்கின்ற ஏதாவது விதிவிலக்கை அகற்றுவதன் மூலமாக இந்த சட்ட ஓட்டையை அடைப்பதே இப்போது செய்யப்பட வேண்டியதாக இருக்கிறது. அமைச்சுக்களை பெயர் குறிப்பிட்டு வரையறுப்பதும் அரசியல் அனுகூலத்துக்காக தர்க்க நியாயமற்ற அல்லது கோமாளித்தனமான அமைச்சுகளை உருவாக்குவதை தடுப்பதுமே உண்மையான மேம்பாடாக அமைய முடியும்.

சுயாதீன ஆணைக்குழுக்கள்

திரைக்கு பின்னாலிருந்து அதிகாரபீடங்களை இயக்குபவரான பசில் ராஜபக்ச, 19ஆவது திருத்தத்திலுள்ள ஏற்பாடுகளில் எவற்றை தொடர்ந்தும் பேண வேண்டும் என்பது தொடர்பிலான தனது கருத்துக்களில் சுயாதீன ஆணைக்குழுக்களை குறிப்பிடவில்லை. தேர்தல் ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் மூலமாக வெளிக்காட்டப்பட்டிருக்கும் சுயாதீன ஆணைக்குழுக்களின் பெறுமதியை அடிப்படையாகக் கொண்டு நோக்கிடும்போது, பழைய மாதிரி தேர்தல் திணைக்களம் ஒன்றை மீண்டும் கொண்டுவரும் யோசனை குறித்து பிரேரிக்கப்படும் சாத்தியம் இல்லை. உயர்பதவி நியமனங்களுக்கான நடைமுறைகள் தொடர்பில் அரசியலமைப்புக்கான 18ஆவது திருத்தத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு திரும்பி செல்லக் கூடும். அந்த திருத்தமே தனது சட்டக்கல்லூரி நண்பர்களில் ஒருவரை கொழும்பிலுள்ள அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு செல்லும்போது அலரிமாளிகைக்கு வந்துவிட்டு போகுமாறு கேட்டு இலங்கையின் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி நியமனத்தை அன்றைய ஜனாதிபதி வழங்குவதற்கு அனுமதித்தது.

உண்மையான சுயாதீனத்துக்கு தேவையான நிபந்தனைகளை தொடர்ந்தும் பேணுவதாக இருந்தால் முக்கியமான நியமனங்களுக்கான கூட்டுப் பொறுப்பை ஒப்படைக்கக்கூடிய தற்போதைய அரசியலமைப்பு பேரவை போன்ற ஒரு கட்டமைப்பு அவசியமாகும். சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் உகந்த முறையிலும் அவர்கள் சலுகை காட்டாமலோ அல்லது அஞ்சாமலோ தங்களது கடமைகளை செய்யக்கூடியதாக அவர்களை சுலபமாக பதவியிருந்து நீக்கமுடியாத நடைமுறையொன்று கடைபிடிக்கப்பட்டால் மாத்திரமே சாத்தியமாகும்.

சுயாதீன ஆணைக்குழுக்களின் தோல்விக்கான சான்றாக பொலிஸ் ஆணைக்குழுவின் ஏற்பாடுகளை சிலர் சுட்டிக்காட்டுவார்கள். சுயாதீன ஆணைக்குழுக்கள் செம்மையாக செயற்படும் கலாசாரத்தை உருவாக்க காலம் எடுக்கும். நடைமுறைகளும் சட்டங்களுமே சுயாதீன ஆணைக்குழுக்கள் அவற்றின் அதிகாரங்களை பயனுறுதியுடைய முறையில் செயற்படுத்துவதற்கான அவசியமான நிபந்தனைகளாகும். அதிகாரம் ஒப்படைக்கப்பட்டிருப்பவர்களின் செயற்பாடுகளே போதுமான நிபந்தனைகளாகும்.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா நியாயமற்ற தீர்ப்புகளை வழங்கி நீதித்துறைக்கு கறை ஏற்படுத்தினார் என்பதற்காக சுயாதீனமான நீதிபதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அகற்ற வேண்டும் என்று யோசனை முன்வைக்கப்படுவதில்லை. இதில் நீதிபதிகளை பதவிநீக்கம் செய்வதற்குரிய உகந்த ஏற்பாடுகளை நீக்காதிருப்பதும் முக்கியமாகும். அதேபோன்றே 19ஆவது திருத்தத்தினால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவை நீதித்துறை நியமனங்களையும் ஏனைய முக்கியமான நியமனங்களையும் செய்வதற்கான ஒரு மட்டுப்படுத்தப்பட்ட ஆணையுடன் தனி மனிதன் ஒருவரை அனுமதிக்க வகை செய்யக்கூடிய பாசாங்கு ஆணைக்குழுக்களினால் பதிலீடு செய்யப்படக்கூடாது. பெரிதும் விசனத்துக்குரியதாக இருந்த 18ஆவது திருத்தத்தின் கீழ் அது சாத்தியமானது.

ஏன் அவசரம்?

எந்தக் கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் நாட்டின் நலனை மனதில் கொண்டிருக்கக்கூடிய எவரும் அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தத்திலுள்ள மேற்கூறப்பட்ட அம்சங்கள் பேணப்பட வேண்டியதை ஆதரிக்கவும் வேண்டும். இவை 1978 அரசியலமைப்பில் உள்ள வெளிப்படையான குறைபாடுகளை சீர் செய்வதற்கு தேவையாக இருந்த மாற்றங்களாகும். பயன்தராத ஒரு விடயத்துக்கு திரும்பி செல்ல எந்த காரணமும் இல்லை.

பாராளுமன்றத்தில் கிடைத்திருக்கும் பிரமாண்டமான பெரும்பான்மை பலத்தை நோக்கும்போது அரசாங்கத்துக்கு கவனம் செலுத்துவதற்கு பல முக்கியமான பிரச்சினைகள் இருக்கின்றன. மிகவும் சுருங்கிபோயிருக்கும் பொருளாதாரத்தினாலும் கடனை மீள செலுத்துவதிலுள்ள பிரச்சினைகளினாலும் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் சவால்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். இன்னொரு மகத்தான தேர்தல் வெற்றிக்கு பிறகு 2010இல் அரசியலமைப்புக்கான 18ஆவது திருத்தத்தை அவசரப்பட்டு நிறைவேற்றிய தவறை மீண்டும் ஏன் செய்ய வேண்டும்?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04