தற்போதெல்லாம் மாசடைந்த புறச்சூழல், சுத்திகரிக்கப்படாத பணியிடச்சூழல் மற்றும் வாழிடச்சூழல் சமூகம் மற்றும் ஏனையோர்கள் கொடுக்கும் மன அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக 60 சதவீதமானவர்களுக்கு தலைவலி வந்துவிடுகிறது. சிலரே இதற்கான நிவாரணத்தை முறையாக பெற்றுக் கொண்டு இதனை சரியாக எதிர்கொள்கிறார்கள். ஏனையோர் இது குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லாமலேயேயிருக்கிறார்கள். இந்நிலையில் அண்மையில் ஒருவர் தலைவலியினால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு இதற்கு தீர்வாக போடெக்ஸ் எனப்படும் மருந்தை போட்டுக் கொள்ளலாமா? என கேட்டார். அதற்கு நான் அளித்த விளக்கம் இது தான்.

“தலைவலிக்கு போடெக்ஸ் போட்டுக்கொள்வது அண்மைய கண்டுபிடிப்பு. இது பலருக்கு வெற்றியையும், ஒரு சிலருக்கு தோல்வியையும் அளித்திருக்கிறது. தலைவலிக்கு இது மட்டும் தீர்வு என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. பல்வேறு தெரிவுகளில் இதுவும் ஒன்று. ஆனால் தலைவலிக்கு போடெக்ஸ் போட்டுக்கொள்ளும் முன் கவனிக்கவேண்டிய பல அம்சங்கள் இருக்கின்றன.

முதலில் நோயாளிக்கு தலைவலி என்பது நீண்ட நாளாக இருக்கவேண்டும். அதாவது ஒற்றை தலைவலியோ அல்லது தலைவலியோ சாதாரண மாத்திரைகளாலும், சாதாரண எளிய சிகிச்சைகளாலும் குணப்படுத்த இயலாத நிலையில், அவை கிரானிக் பெயினா இருக்கவேண்டும். ஆறு மாதமாக தொடர்ந்து தலைவலி இருக்கிறது. இதனால் நாளாந்த வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்ற நிலையில் இருந்தால், முதலில் வலி நிவாரண சிறப்பு மருத்துவர்களை நாடவேண்டும். அவர்கள் உங்களை பரிசோதித்து, தற்காலிக வலி நிவாரண சிகிச்சை மற்றும் நோய் தடுப்பு சிகிச்சை ஆகியவற்றை மேற்கொள்வார்கள்.

இவற்றில் தற்காலிக வலி நிவாரண சிகிச்சை மைக்ரேன் தலைவலிக்கு உகந்தது. இதன்மூலம் தலைவலியின் வீரியத்தையும், கடுமையையும் குறைக்க இயலுகிறது. இதனைத் தொடர்ந்து நோயாளியின் உடல் நிலை, நோயின் தன்மை, அவர்களின் வயது, உடல் எடை என பலவற்றை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஏற்ற சிகிச்சைகளை பரிந்துரைப்பார்கள். 

அதனையடுத்து சரியான தூக்கம், உடற்பயிற்சி, உணவு முறை, மன அழுத்தம் நீங்கும் பயிற்சி ஆகியவற்றைப் பற்றியும் எடுத்துரைப்பார்கள். அதன் பிறகு கழுத்து, தலை மற்றும் தோள்பட்டையின் சம நிலையைப் பற்றி எடுத்துரைத்து அதன் படி நிற்கவும், நடக்கவும் பயிற்சி கொடுப்பார்கள். இதே தருணத்தில் உணவுப் பொருள் மற்றும் மற்ற மாத்திரைகளால் தலைவலி தூண்டப்படுகிறது என்றால் அதனையும் மாற்றியமைப்பார்கள்.

இவையனைத்தும் ஒரு நோயாளிக்கு பலன் தரவில்லை என்ற நிலையிலும், தலை வலி தொடர்கிறது என்றால், இத்தகைய தருணங்களில் தான் போடெக்ஸ் ஊசியை போட்டுக்கொள்ளும் ஒரு சிகிக்சை முறையைப் பற்றி வலி நிவாரண சிறப்பு மருத்துவர்கள் எடுத்துரைப்பார்கள். ஏனெனில் அவர்கள் தான் தலைவலிக்கான போடெக்ஸை காருகேட்டர், புரோசிரஸ், பிராண்டாலிஸ், டெம்பராலிஸ், ஓஸிபிடாலிஸ், செர்வைகல் பாராஸ்பைனல், டிரபீஸியஸ் ஆகிய தசைகளில் கொடுப்பார்கள். இந்த போடெக்ஸ் சென்றவுடன், நரம்பும் தசையும் இணையும் இடங்களில் அசிடைல் கோலைன் என்னும் வேதியல் பொருள் வெளியேறுவதால் உண்டாகும் தசை இயக்கத்தை தடை செய்கிறது. 

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். நிரந்தரமான தலைவலிக்குரிய பல்வேறு சிகிச்சை முறைகளில் 60 சதவீத வெற்றியை பெற்றிருக்கும் ஒரு சிகிச்சை முறை தான் போடெக்ஸை பயன்படுத்துவதாகும். இதனை வலி நிவாரண சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையில் பேரில் செய்து கொள்வது நன்மையைத் தரும்.

டொக்டர் பி. பிரேமானந்த் M.D. D.A.,F I P M.,

தொகுப்பு  அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்