இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின இனத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அடிலாபத்தின் புறநகர் பகுதியில் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த போது 3 இளைஞர்கள் அந்த முச்சக்கரவண்டியினை தடுத்து நிறுத்தினர்

அந்த இளைஞர்கள் முச்சக்கரவண்டி சாரதியினை தாக்கி அங்கிருந்து விரட்டி விட்டு, அந்த சிறுமியை அடித்து உதைத்து அருகில் இருந்த புதருக்குள் இழுத்துச் சென்று பலமுறை பலாத்காரம் செய்தனர்.

இதை அந்த இளைஞர்களில் ஒருவர் தனது கையடக்கத்தொலைபேசியில் வீடியோ பதிவும் செய்து உள்ளார்.மேலும் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவோம் எனவும் அந்த சிறுமியை மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன சிறுமி தான் பாலியல் துஷ்பிரியோகத்திற்குட்பட்டதை குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம், பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மற்றும் இளைஞர்களின் கொலை மிரட்டல் குறித்தும் சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுது உள்ளார். உடனடியாக சிறுமியின் பெற்றோர் இது குறித்து பொலிஸாரிடம் முறைபாடு  அளித்தனர்.

பொலிஸார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் இளைஞர்கள் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் பொலிஸார் அந்த சிறுமியை மருத்துவபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்