தமிழரசின் தேசியப்பட்டியல் தெரிவில் நடந்தது என்ன?: மனந்திறந்தனர் மாவையும், துரைராஜசிங்கமும் 

Published By: J.G.Stephan

16 Aug, 2020 | 04:27 PM
image

9ஆவது பாராளுமன்ற தேர்தலில் பலத்த பின்னடைவுகளைச் சந்தித்திருக்கும் இலங்கை தமிழரசுக்கட்சி அதனை சற்றே சுதாகரிப்பதற்குள், தலைமை மாற்றம், தேசியப்பட்டியல் நியமனம் என்று அடுத்தடுத்து பிரச்சினைகளும், கட்சியில் உள்ளக முரண்பாடுகளும் பூதகரமாகிவிட்டன. 

கட்சித்தலைவரான மாவை.சோ.சேனாதிராஜா, பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் தேர்தலில் சந்தித்த பின்னடைவுகளில் இருந்து  மீள்வதற்குள் இரு அணிகளாகி தீர்மானிப்பது யார், செயற்படுத்துவது யார், யாருக்கு யார் உத்தரவிடுவது என்றவாறு 'அதிகார மையங்களை மையப்படுத்திய வாதப்பிரதிவாதங்கள்' பகிரங்கமாகுமளவிற்கு நிலைமகள் மோசமடைந்திருந்தன.  

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும், பொதுச்செயலாளரும் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமைகளை மையப்படுத்திய தன்னிலை விளக்கமளிக்கும் வகையிலான கருத்துப் பகிர்வுகளை வீரகேசரி வாரவெளியீட்டுடன் செய்திருக்கின்றார்கள். அவர்கள் அளித்த விளக்கங்களின் போது, உட்கட்சி விவகாரத்தினை பொதுவெளியில் பேசுவதை அதிகளவில் தவிர்த்தாலும், 'தமிழரசு குழப்பான நிலையில் இருப்பதை' இலகுவாகவே உணரச் செய்கின்றார்கள்.  

புயலாக தோன்றியிருக்கும் இத்தகைய நிலைமைகள் நீடிக்கப்போகின்றனவா இல்லை அப்படியே அடங்கப்போகின்றதா என்பதுள்ளிட்ட பல்வேறு வினாக்களுக்கு தலைவர் மாவையும், பொதுச்செயலாளரும் துரைராஜசிங்கமும் வெளிப்படுத்தியுள்ள கருத்துப் பகிர்வுகள் முழுமையானவையாக இல்லாது விட்டாலும் அடுத்த கட்டத்தினை ஊகிக்கப்பதற்கு வழிசமைக்கின்றன. அவை தனித்தனியே வருமாறு, 

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா பகிர்ந்துள்ளதாவது, 

எனது தெரிவு
பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இம்முறை வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் சார்பில் பெண் பிரதிநிதித்துவம் ஒன்றுகூட தெரிவாகியிருக்கவில்லை. இந்த நிலையில் எமது கட்சியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்த சசிகலா ரவிராஜை தேசியப்பட்டியல் ஊடாக நியமிப்பதற்கே தீர்மானித்திருந்தேன். இந்த நியமனம் மறைந்த தம்பி, ரவிராஜின் தியாகத்திற்கானது என்ற மனநிலையையும் நான் கொண்டிருந்தேன். 

அழைப்பும் நிலைப்பாடும்
இந்த சமயத்தில் கடந்த 7ஆம் திகதி அரசியல் பீடத்தினை கூட்டுவது தொடர்பில் பொதுச்செயலாளர் என்னிடத்தில் பேசினார். அதன்போது அதற்கான அனுமதியை அளித்ததோடு தேசியப்பட்டில் சார்ந்து நான் கொண்டிருந்த நிலைப்பாட்டினையும் தெரிவித்திருந்தேன். அதன் பின்னர் அவர் அண்ணன் சம்பந்தனின் வீட்டிலிருந்து என்னுடன் உரையாடும் போது கூட எனக்கு வருகின்ற பரிந்துரைகள் பற்றி அவரிடத்தில் கூறியிருந்தேன். 

திரண்ட கூட்டமும் பாரிய அழுத்தமும்
தேர்தலில் எனக்கு பின்னடைவு ஏற்பட்டிருந்த நிலையில் எனது வீட்டிலும், கட்சித்தலைமையகத்திலும் பெருந்திரளாக பொதுமக்களும், இளைஞர்களும், யுவதிகளும் ஒன்றுகூடியிருந்தார்கள். தமிழரசுக்கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் என்னை பாராளுமன்றத்திற்கு தேசியப் பட்டியல் ஊடாக செல்லுமாறு வற்புறுத்த ஆரம்பித்தார்கள். புலம்பெயர் உறவுகளும் அதே கருத்தினையே தொடர்ச்சியாக கூறி வந்தார்கள். 

இதனால் எனக்கு திரிசங்கு நிலையொன்று ஏற்பட்டது. மறுபக்கத்தில் கட்சியின் பின்னடைவுகள் சம்பந்தமாக உடனடியாக ஆராய வேண்டிய நிலைமையும் இருந்தது. அதற்குரிய ஆயத்தங்களையும் நான் முன்னெடுத்துக்கொண்டிருந்தேன். 

பங்காளிகளும், கட்சிக்காரர்களும்
இவ்வாறு நிலைமைகள் இருக்கின்போது, எமது கட்சியின் யாழ்.மாவட்டக்கிளைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், கனகசபாபதி உள்ளிட்டவர்கள் தேசியப்பட்டில் பிரதிநிதித்துவத்தினை என்னைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அதற்கான கோரிக்கையை அண்ணன் சம்பந்தனிடத்தில் விடுப்பதற்கான அனுமதியையும் பெற்றுச் சென்றனர். 

அதேபோன்று, சித்தார்த்தனும், செல்வம் அடைக்கலாநாதனும் என்னையே தேசியப் பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்ய வேண்டும் என்று பகிரங்கமாகவே கூறியிருந்ததோடு தமது விருப்பத்தினை என்னிடத்திலும் பகிர்ந்து கொண்டார்கள். அத்துடன் இக்கட்டான சூழலில் தமிழரசுக்கட்சியின் தலைவர் பாராளுமன்றில் இருக்க வேண்டும் என்றும் சுட்டிக் கூறினார்கள். ஈற்றில் நான் பலரின் விருப்பத்தின் காரணமாக அதற்கு சம்மதம் வெளியிட்டிருந்தேன். 

சம்பந்தனிடம் திடமாக கூறியது
எனது சம்மதத்துடன் 8ஆம் திகதி திருகோணமலைக்குச் சென்ற சி.வி.கே.சிவஞானம் மற்றும் கனகசபாபதி ஆகியோர் நிலைமையை சம்பந்தனிடத்தில் எடுத்துக்கூறினார்கள். அச்சமயத்தில் சம்பந்தன் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். நான் சசிகலாவிற்கே தேசியப்பட்டியல் ஆசனத்தினை வழங்குவதற்கு விரும்புகின்றபோதும் தமிழரசுக்கட்சியினரும், பங்காளிக்கட்சிகளும் ஏனையவர்களும் என்னை பாராளுமன்றத்திற்கு செல்லுமாறு வலியுறுத்துகின்றார்கள். 

ஆகவே நான் தேசியப்பட்டியல் ஊடாக இம்முறை பிரதிநிதித்துவப்படுத்த தீர்மானித்திருக்கி;ன்றேன் என்பதை அவரிடத்தில் கூறினேன். அதன்போது, நீங்கள் கேட்டால் நிச்சமாக வழங்கத்தானே வேண்டும் என்று சம்பந்தன் கூறியதோடு சிவஞானம் மற்றும் கனகசபாபதி ஆகியோருக்கும் தனது சம்மதத்தினை வெளிப்படுத்தியிருந்தார். அதுமட்டுமன்றி எனக்கு எழுத்துமூலமாக தேசியப்பட்டியல் ஆசனத்தினை தீர்மானிக்குமாறும் கூறியிருக்கின்றார் சம்பந்தன். 

திடீரென மாறிய தீர்மானம்
சிவஞானமும், கனகசபாபதியும் திருமலையிலிருந்து யாழ்.திரும்பியதும், சம்பந்தன், சுமந்திரன், துரைராஜசிங்கம் ஆகிய மூவரும் அன்று மாலையிலேயே அம்பாறைக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தினை வழங்குவதாக தீர்மானித்துவிட்டதை அறிந்தோம். அத்துடன் மறுதினமான 9ஆம் திகதி பொதுச்செயலாளர் அந்த தீர்மானத்தினை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துவிட்டதாக ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிப்பதை கண்டேன். 

எனக்கும் அறிவிக்கப்படாது, பங்காளிக்கட்சிகளுக்கும் தெரியாது, 14ஆம் திகதி வரையில் தேசியப் பட்டியல் ஆசனத்திற்கான பெயரை பிரேரிப்பதற்கு காலஅவகாசம் இருக்கையில் அவசரஅவசரமாக யாருடைய அனுமதியில் அந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது என்பதே இங்குள்ள பிரதான கேள்வியாகும். அத்துடன் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கும் இறுதி தீர்மானம் எடுப்பதற்கான அதிகாரங்கள் காணப்படுகின்றது. 

பொதுச்செயலாளரின் தன்னிச்சையான முடிவு
கூட்டமைப்பின் மூன்று கட்சிகளின் தலைவர்கள், மாவட்ட கிளைகள் தீர்மானங்களை ஒருமித்தநிலையில் வெளிப்படுத்துகின்ற போது அதனையே பொதுச்செயலாளர் செயற்படுத்தியிருக்க வேண்டும். அதற்கு மாறாக பொதுச்செயலாளரால் எவ்வாறு தீர்மானம் எடுப்பதற்கு அதிகாரமில்லாதவர்களால் எடுக்கப்பட்ட முடிவொன்றை எவ்வாறு அறிவிக்க முடியும். அவ்வாறு தன்னிச்சையாக அவர் செயற்பட்டு முடிவை அறிவிப்பதானது பாரதூரமானதொரு குற்றமாகும். 

எமது கட்சிக்குள்ளேயோ அல்லது கூட்டமைப்பிற்குள்ளேயோ மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்பட்டால் அவற்றை ஆராய்ந்து, கலந்துரையாடியே இறுதியான தீர்மானம் எடுக்கப்படுவது வழமையானது. அதற்கான பலதரப்பட்ட சந்திப்புக்களை நடத்திய அனுபவங்கள் கடந்தகாலத்தில் உள்ளன. மேலும் அத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான கால அவகாசமும் காணப்பட்டது. அப்படியிருக்கையில் அவசரமான அறிப்பின் பின்னணி என்ன?

அம்பாறையை நான் நன்கு அறிவேன்
அம்பாறையில் தமிழ் மக்களின் இருப்புக்காக பிரதிநிதித்துவம் அவசியம் என்பதை நான் நன்கு அறிவேன். நான் அம்பாறையில் தங்கியிருந்து செயற்பட்டு தேர்தலில் போட்டியிட்டும் உள்ளேன். வெறுமனே 800வாக்குகள் வித்தியாசத்தில் பாராளுமன்றிற்கு தெரிவாகியிருக்கவில்லை. ஆனால் பின்னர் அம்பாறை மாவட்டத்திற்கான நியமன உறுப்பினராக செயற்பட்டிருக்கின்றேன். 

அந்த மக்கள் எனது செயற்பாடுகளை நன்கு அறிவார்கள். அம்பாறைக்கு பிரதிநிதித்துவம் அவசியம். ஆனால் அது முறைதவறி வழங்கப்பட முடியாது. மேலும் அம்பாறை மக்களும், அங்குள்ள கட்சிப்பிரதிநிதிகளும் கட்சித்தலைவர் என்ற வகையில் என்னையே பிரதிநிதித்துவத்தினை பெறுமாறு வலியுறுத்தியிருந்தார்கள். 

மீளப்பெறுவது நோக்கமல்ல
தேசியப் பட்டியல் உறுப்புரிமையை அம்பாறையிடமிருந்து மீளப்பெற்று நானே அதனை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று தனிப்பட்ட விருப்பு எதுவும் எனக்கு இல்லை. ஆனால் முறையான தீர்மானங்களின்றி யாருடைய வழிகாட்டலிலோ கட்சி விதிமுறைகளுக்கு அப்பால் சென்று பொதுச்செயலாளர் செயற்பட்டுள்ளமையால் தான் இந்த நெருக்கடி எழுந்துள்ளது. 

தலைமைத்துவ மாற்றம்
நீண்டவரலாற்றைக் கொண்ட எமது கட்சியின் ஸ்தாபக தலைவர் செல்வா ஒருமுறை தேர்தலில் தோற்றார், அமிர்தலிங்கம் தலைவராக இருந்தபோது ஒருமுறை தோற்றார். ஆனால் மீண்டும் கட்சியை புனரமைத்து வெற்றிகளை ஈட்டி தமிழின விடுதலைக்காக உழைத்தனர். ஆகவே கட்சிக்கு வெளியில் சென்று தன்னிச்சையாக தலைமையையும், தலைமைமீதான குற்றச்சாட்டுக்களையும் வைப்பதில் பயனில்லை. நாங்கள் கட்சியை மீளக் கட்டியெழுப்பி எமது குரலை வலுப்படுத்த வேண்டியுள்ளது. அதற்குரிய நடவடிக்கைகளை அடுத்து எடுப்போம். 

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் பகிர்ந்துள்ளதாவது, 

சேனாதி அண்ணருக்கே முதல் அழைப்பு
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டாகிவிட்ட நிலையில் 7ஆம் திகதி மாலையில் முதல் தொலைபேசி அழைப்பினை சோனாதி அண்ணருக்கே எடுத்திருந்தேன். தேசியப்பட்டில் மற்றும் தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஆராய்வதற்காக எமது கட்சியின் அரசியல் பீடத்தினை உடன் கூட்டுவதற்கான அனுமதியை கோரினேன். அதற்கு ஆமோதித்த அவர், இடத்தினையும், நேரத்தினையும் பின்னர் அறிவிப்பதாக கூறி தொடர்பினை துண்டித்தார். 

திருமலை அழைப்பு
8ஆம் திகதி சம்பந்தன் ஐயா, திருமலைக்கு வருமாறு அழைத்தார். மட்டக்களப்பிலிருந்து பயணத்தினை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, சேனாதி அண்ணரை மீண்டும் அழைத்து திருமலைக்கு வருகின்றீர்களா எனக் கேட்டபோது தான் வரவில்லை நீங்கள் செல்லுங்கள் என்றே கூறினார். அங்கு சென்றபோது, சுமந்திரன் இருந்தார். சம்பந்தன் ஐயாவின் வீட்டு வளாகமெங்கும் பலர் கூடியிருந்தனர். திருமலை கிளை அலுவலகமும் நிறைந்தே இருந்தது. 

மறுக்கப்பட்ட இராஜிநாமா
நேரடியாக சம்பந்தன் ஐயாவிற்கு அருகில் சென்ற நான், மக்கள் ஆணையை நான் வென்றிடவில்லை. தொடர்ச்சியாக செயலாளர் பதவியில் நீடிப்பதற்கு நான் விரும்பிவில்லை. நான் பின்னடைவுகளுக்கு பொறுப்பேற்று இராஜிநாமாச் செய்யவுள்ளேன் என்று எனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினேன். ஆனால் தற்போதைய சூழலில் பணிகள் அதிகமிருப்பதால் அதனை பின்னர் பார்க்கலாம் என்றுகூறிய சம்பந்தன் ஐயா, தேசிய பட்டியல் விடயத்தினை பேச ஆரம்பித்தார். 

ஆரம்பமான ஆராய்வு
அடுத்து, துறைசார் நிபுணர்கள் அல்லது பிரதிநிதித்துவத்தினை இழந்த மக்களுக்காக தேசிய பட்டியல் ஆசனத்தினை வழங்குவது என்ற கொள்கையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டதோடு, இம்முறை ஒரு ஆசனமே கிடைத்திருப்பதால் பிரதிநிதித்துவத்தினை இழந்த அம்பாறைக்கு வழங்க வேண்டும் என்று பரிந்துரைந்தேன்.

அம்பாறையைச் சேர்ந்த மூன்று குழுக்கள் இருப்பதால் யாருக்கு வழங்குவது என்பதில் இடர்பாடுகள் இருப்பது என்னிடத்தில் சுட்டிக்காட்டப்படவும், அதனை கலந்துரையாடல் மூலமாக தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையை நான் வெளியிட்டிருந்தேன். 

சுமூக திர்வுக்காக குகதாசன்
தேசிய பட்டில் கிடைத்தால் அதற்கான முதலில் குதாசன் நியமிக்கப்படுவார் என்பது கட்சியின் நியமனக்குழுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு அமைவாக அவரை நியமித்து விட்டால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டிவிடும் என்று எனக்கு கூறப்பட்டதோடு திருகோணமலையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பிரதிநிதி ஒருவர் அவசியம் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. 

அம்பாறைக்கு எம்.பி
இச்சமயத்தில், வடக்கு கிழக்கில் நாம் பின்னடைந்துள்ள நிலையில் அதிலும் அம்பாறை பிரதிநிதித்துவத்தினை இழந்துள்ள நிலையில் அதற்கான அடையாளத்தினை வழங்குவது நியாயமானது என்பதோடு எமது கட்சியின் மரியாதையும் அதிகரிக்கும் என்று வலியுறுத்தினேன். அப்போது யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்தபோது கலையரசனின் பெயரை நான் பரிந்துரைத்தேன். 

நாவிதன்வெளி தவிசாளராக இருதடவையும், கிழக்கு மாகாண சபை உறுப்பினராக ஒரு தடவையும், கட்சிக்கு விசுவாசமாக நீண்டகாலமாகவும் துடிப்புடன் செயற்படும் இளையராகவும் அவர் இருப்பதை சுட்டிக்காட்டினேன். அத்துடன் குகதாசனுக்கு வாக்குறுதி வழங்கினாலும் அவருக்கு நிலைமையை புரிய வைப்பதெனவும் தீர்மானித்தோம்.

தெரிவிக்கப்பட்ட முடிவு
அம்பாறைக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தினை வழங்கும் தீர்மானத்தினை சம்பந்தன் ஐயா, தொலைபேசி மூலமாக சேனாதி அண்ணருக்கு தெரிவித்துவிட்டு, என்னிடத்தில் அழைப்பினை வழங்கினார். அச்சமயத்தில் சேனாதி அண்ணன், தான் விரும்பாத போதும் பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமென்று பலர் வலியுறுத்துகின்றார்கள். ஆகவே தேசியப்பட்டியல் ஆசனத்தினை எனக்கு வழங்குங்கள் என்று கூறினார். அச்சமயத்தில் மீண்டும் பேசிய சம்பந்தன் ஐயா, அம்பாறைக்கு வழங்குவதே பொருத்தமானது என்று கூறி தொடர்பினை துண்டித்தார். 

அறிவிப்பும், கோபமும்
இந்த பின்னணியில் 9ஆம் திகதி தேசியப் பட்டியல் ஆசனத்திற்காக கலையரசனை பெயரிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துவிட்டு அவருடன் ஊடகவியலாளர் சந்திப்பினையும் நடத்தியிருந்தேன். அதனைத்தொடர்ந்து நான் வீடு திரும்பியதும் சேனாதி அண்ணன் என்னை தொடர்பு கொண்டார். தேசிய பட்டியல் ஆசன முடிவு தொடர்பாக விடுத்த அறிவிப்பால் கோபமாக பேசினார். அதன்போது அமைதியாகஅவரின் கருத்துக்களை செவிமடுத்து சம்பந்தன் ஐயாவுடன் பேசுவோம் என்று கூறி தொடர்பினை துண்டித்தேன்.

முற்கூட்டியே அறியவில்லை
வழமையாக தேசியப்பட்டியல் உள்ளிட்ட விடயங்களை எனது கட்சித்தலைவர்கள் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துபேசுவார்கள். கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் அதிகமாக நான் கலந்துகொள்வதுமில்லை. ஆகவே தலைவர்கள் மட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவே நான் கருதியிருந்தேன். அதுமட்டுமன்றி நியமனக்குழு கூட்டத்தில் தேசியப்பட்டியல் தொடர்பில் பங்காளிகளுடன் ஏறக்குறைய இணக்கபாடு எட்டப்பட்டிருந்தமையும் எனது மனதில் இருந்தது. 

தன்னிச்சை முடிவில்லை
1989இல் தமிழர் விடுதலைக் கூட்டணியில் தேசியப்பட்டியல் சர்ச்சை எழுந்தபோது, செயலாளர் நாயமாக இருந்த அமிர்தலிங்கம் தன்னையே தேசியப்பட்டியல் உறுப்பினராக பிரேரித்திருந்தார். பின்னர் ஏனையவர்கள் சென்று கேள்வி எழுப்பியபோது 'அது முடிந்த விவகாரம்' என்ற பதிலளித்திருந்தார்.  ஆக, நான் தன்னிச்சையாக செயற்படுவதென்றால் என்னுடைய பெயரையே நான் பரிந்துரைத்து, அம்பாறை மாவட்டத்தினை நானே கவனத்திக்கொள்வதாக கூறி நியாயப்படுத்தியிருக்க முடியும் ஆனால் அவ்வாறு செய்யவில்லை. 

நிலைப்பாட்டின் நியாயம்
கடந்த தேர்தலில் நான் பேராசிரியர்.சிற்றம்பலத்தினை முன்மொழிந்தபோதும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அம்பாறைக்கு இரண்டரை வருடங்கள் வழங்குவதாக கூறப்பட்டபோதும் அதுவும் செயற்படுத்தப்படவில்லை. ஆனால் இம்முறை தனி நபர்களை விடவும் நெருக்கடியில் இருக்கும் மாவட்டத்தின் மக்களே மேலானவர்கள் என்ற அடிப்படையில் அம்பாறைக்கு பிரதிநிதித்துவம் அவசியம் என்பது எனது நிலைப்பாடாக இருந்தது. அது நியாயமாகவும் இருந்தது. அதனை பெற்றுக்கொடுத்ததில் ஒரு மனநிறைவும் ஏற்பட்டது. இதில் யாருடைய கைபொம்மையாகவும் இருந்து செயற்பட்டிருக்கவில்லை.

பின்னுறுதிப்படுத்தல்
அம்பாறைக்கான பிரதிநிதித்துவம் பறிபோய்விடுமோ என்று அந்த மக்கள் கலங்கிக்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே தீர்மானங்களை எடுப்பதில் நடைமுறை ரீதியாக சில குறைபாடுகள் இருந்தாலும் நியாயமான முடிவு என்ற அடிப்படையில் அனைத்து தலைமைகளும் அம்பாறைக்கான பிரதிநிதித்துவத்தினை பின்னுறுதிப்படுத்துவதே சாலச்சிறந்தது. 

மாற்றம் தேவையில்லை
எமது கட்சியின் தலைவர்கள் பாராளுமன்றப் பிரதிநிதித்துவமின்றியும் கட்சிக்கும், மக்களுக்கும், விடுதலைக்கும் தலைமை வகித்திருக்கின்றார்கள். சேனாதி அண்ணரும் பல களம் கடந்து வந்தவர். அவருக்கும் அந்த தகமை இருக்கின்றது. அவரே கட்சித்தலைமைக்கு சாலப்பொருத்தமானவரும் கூட. ஆகவே தற்போதைய நிலையில் அவருடைய தலைமைத்துவத்தில் மாற்றம் என்ற பேச்சே தேவையற்ற விடயமாகும். 

(தொகுப்பு:- ஆர்.ராம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13