மீண்டும் 17ஆவது திருத்தமா?

Published By: J.G.Stephan

16 Aug, 2020 | 12:33 PM
image

பொதுத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைக் கைப்பற்றிய போதும், அதன் கூட்டுக் கட்சிகளின் துணையுடன், அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான 150 ஆசனங்களைப் பெற்றிருக்கிறது. இந்த தேர்தலில் தமது கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தருமாறு தான் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் அவரது கட்சியினரும் மக்களிடம் ஆணை கோரியிருந்தனர்.

19 ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தருமாறு கேட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன, பின்னர் தற்போதுள்ள அரசியலமைப்புக்கு பதிலாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு மக்களிடம் ஆணை கோரியது. தற்போதைய அரசியலமைப்பு நடைமுறையில் இருந்தால், இந்தியாவின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தில் கை வைக்க முடியாது.

அதனையும் சேர்த்தே ஒழிப்பதென்றால், அரசியலமைப்பை முற்றாக மாற்றியமைக்க வேண்டும், புதிய அரசியலைமைப்பைக் கொண்டு வர வேண்டும். புதிய அரசியலமைப்பைக் கொண்டு வந்தால், 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரிவுகளை அதற்குள் உள்ளடக்க வேண்டிய அவசியமில்லை. ஆட்சி முறைகளிலும் வேறு மாற்றங்களை செய்ய முடியும்.

அதனையே தான் தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்கிறது. ஆனால் புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டு வருவது ஒரே இரவில் நடந்து விடக் கூடிய காரியமல்ல. அதற்கென பல நடைமுறை ஏற்பாடுகள் இருக்கின்றன. மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கம் அரசியலமைப்பில் அவசரமான திருத்தங்களைச் செய்தபோது, அதனை மாற்றியமைப்பதற்கு நீண்ட வழிமுறைகளைக் கடக்க நேரிட்டது. அதற்குள்ளாகவே, அந்த அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பலமிழந்து போனது. அந்த அரசியலமைப்பு மாற்ற முயற்சிகளும் தடைப்பட்டுப் போயின.

தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதாக பலகாலமாக கூறி வரும் நிலையில், அதற்கான இரகசியமான திட்ட வரைவு எதையாவது கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் போன்ற சட்ட வல்லுனர்களைக் கொண்டுள்ள அரசாங்கம், ஆட்சிக்கு வர முன்னரே புதிய அரசியலமைப்புக்கான யோசனை ஒன்றை தயாரித்து சமர்ப்பித்திருக்க முடியும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. அவ்வாறு செய்தால், 13 ஆவது திருத்தச்சட்டம், சுதந்திர ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட பல விடயங்கள் பற்றிய அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டியிருக்கும்.

அது அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் பணியாற்றுவதற்கும் வழிவகுத்து விடலாம். அதேவேளை, புதிய அரசியலமைப்பின் சில விடயங்களை தூக்கிப் பிடித்து எதிர்க்கட்சிகள், பிரசாரம் செய்து தேர்தல் வெற்றியைக் குழப்பி விடவும் கூடும். எனவே, புதிய அரசியலமைப்புக்கான ஆணையைப் பெற முயன்ற அரசாங்கம், அந்த யோசனையை முன்வைத்து ஆணை கேட்கவில்லை. புதிய அரசியலமைப்பு வரைவு ஒன்றைத் தயாரித்து, அதனை நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று, சட்டமாக்கி, அதற்கு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு குறிப்பிட்ட காலஅவகாசம் தேவைப்படும்.

தற்போதைய அரசாங்கம் தாம் நினைத்தவாறு அரசியலமைப்பை எழுதிவிட முடியாது. அவ்வாறு எழுதினால் அது சர்வாதிகார யாப்பு என்று முத்திரை குத்தப்பட்டு விடும். எனவே, புதிய அரசியலமைப்பை உருவாக்க ஒரு குழுவை நியமித்து, அந்தக் குழு கட்சிகள், அமைப்புகள், பொதுமக்களுடன் கலந்துரையாடி கருத்துக்களைப் பெற்றே ஒரு வரைவை தயாரிக்க வேண்டும்.

இதற்கெல்லாம் இரண்டு மூன்று வருடங்கள் கூட தேவைப்படலாம். அதுவரையில், தற்போதைய 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் நாட்டை ஆட்சி செய்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. இந்த திருத்தத்தை ஒழிப்பதற்கு ஏற்கனவே அரசாங்கம் மக்களின் ஆணையைப் பெற்று விட்டது. துரதிஷ்டம் என்னவென்றால், இந்த அரசியலமைப்புத் திருத்தம் தான், நாட்டுக்குள் ஓரளவுக்கு ஜனநாயக சூழலை உருவாக்கியது. ஜனநாயகம் குறித்த நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

ஆனால், இப்போது அதற்கு எதிராகவே பெரும்பான்மையான மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதனை மாற்றுவதற்கு மக்கள் ஆணையைக் கொடுத்திருக்கிறார்கள். எனினும், ஒரு விடயம் உண்மை, 19 ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கு ஆணை கொடுத்த மக்கள், அல்லது புதிய அரசியலமைப்புக்கு ஆணை கொடுத்த மக்கள், ஜனநாயகம் மறுக்கப்பட்ட ஒரு சூழலுக்குத் திரும்புவதற்கு அந்த ஆணையைக் கொடுக்கவில்லை. 

ஜனநாயக கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்ட ஒரு அரசியலமைப்பு பற்றியே எதிர்பார்ப்பார்கள். அந்த விடயத்தில் தற்போதைய அரசாங்கமும் கூட எழுந்தமானமாகச் செயற்பட முடியாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கிறது என்ற துணிவில் தான்தோன்றித்தனமாகச் செயற்பட முடியாது.

தற்போதைய அரசாங்கத்தின் கடந்த காலம் தான்தோன்றித்தனமானது, எதேச்சாதிகாரப் போக்குடையது என்று ஏற்கனவே பெயரெடுத்தது. அவ்வாறான நிலை திரும்பவும் ஏற்படுத்தப்படுவது சர்வதேச அளவில் இலங்கையை அந்நியப்படுத்தும். எனவே தான், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஜனநாயக கட்டமைப்புகள் பலவீனப்படுத்துவதற்கு பெரும்பாலும் இடமளிக்கப்படாது என்று எதிர்பார்க்கலாம்.

எவ்வாறாயினும், புதிய அரசியலமைப்பு ராஜபக்ச வம்சத்தின் ஆட்சியை இன்னும் பல தலைமுறைகளுக்கு கொண்டு செல்வதற்கான பாதையை வகுத்துக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறான ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கு குறிப்பிட்ட காலம் தேவை.  அதுவரை 19 அவது திருத்தத்தை விட்டு வைக்க அரசாங்கம் தயாரில்லை. இந்த திருத்தம் ஜனாதிபதியை அதிகாரமற்றவராக்கி வைத்திருக்கிறது, பிரதமருக்கு அதிகாரத்தை கூட்டியிருக்கிறது,

இதன் விளைவாகவே மைத்திரி- ரணில் இடையே மோதல்கள் ஏற்பட்டன. தற்போதைய ஜனாதிபதியும், பிரதமரும் சகோதரர்களாக இருப்பது கூடுதல் புரிந்துணர்வைக் கொடுத்தாலும், அதிகாரங்களைக் கையாளும் போது முரண்பாடுகளை ஏற்படுத்தலாம் என்று இருதரப்பும் கருதுகின்றன. இது 19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் அவசரப்படுவதற்கு ஒரு காரணம், 19 ஆவது திருத்தம் நடைமுறையில் இருப்பதால் தான், பசில் ராஜபக்சவினால் நாடாளுமன்றம் வர முடியவில்லை. அவரால் அமைச்சர் பதவியையும் ஏற்க முடியவில்லை.

இதனை நீக்கி விட்டால், ராஜபக்ச குடும்பத்தினருக்கு உள்ள பல இடர்ப்பாடுகள் நீங்கி விடும். எனவே, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி, 19 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற முடியும்.

அதனை செய்வதற்கு நீண்ட காலம் தேவையில்லை.  அதனைச் செய்து விட்டால், 18 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்து விடும். 18 ஆவது திருத்தம் ஜனாதிபதியை கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரியாக மாற்றியது, ஜேஆரிடம் இருந்ததை விட கூடுதல் அதிகாரத்தைக் கொடுத்தது. எத்தனை முறை வேண்டுமானாலும் ஒருவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடலாம் என்ற நிலையை உருவாக்கியது. இது மகிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரையில் ஆபத்தானது. ஒருவேளை புதிய அரசியலமைப்பைக் கொண்டு வர முடியாத சூழல் உருவாகி விட்டால், 18 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வலுவானவராக மாறி விடுவார்.

அது மகிந்த குடும்பத்தின் அரசியலுக்கு ஆபத்தானது. கோத்தாபய ராஜபக்ச மூன்றாவது முறை போட்டியிடக் கூடிய நிலையையும் ஏற்படுத்தி விடலாம். அது நாமலின் அரசியல் எதிர்காலத்தை சிதைத்து விடும். எனவே தான், மீண்டும் 17 ஆவது திருத்தத்தை நோக்கி திரும்பிச் செல்ல அரசாங்கம் முற்படுவதாக தெரிகிறது, 17 ஆவது திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரத்தையும் வலுவாகப் பேணும், அதேவேளை அவர் இரண்டு முறைக்கு மேல் பதவியில் இருக்க முடியாது என்ற வரையறையையும் கொண்டிருக்கும்.

எந்த 17 ஆவது திருத்தம் தமது எதிர்காலத்துக்கு பாதகமானது என்று கருதி 18 ஆவது திருத்தத்தை மகிந்த ராஜபக்ச கொண்டு வந்தாரோ, அதுவே இப்போது அவருக்கு சாதகமானதாக தெரிகிறது. தான் தூக்கியெறிந்த 17 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வர முயற்சிக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. 17 ஆவது திருத்தம் மீண்டும் செயற்பாட்டுக்குள் வந்தால், அது நிரந்தரமானதாக இருக்காது. 

அரசியலமைப்பு ஒன்றை கொண்டு வருவதற்கான இடைவெளியில் தான் அது நடைமுறையில் இருக்கும். ஆனாலும், அந்த காலஇடைவெளிக்குள் கூட 18, 19 ஆவது திருத்தங்களை நடைமுறையில் வைத்திருக்க அஞ்சுகிறது தற்போதைய அரசாங்கம்.

-சத்ரியன் -

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04