ஜெயம் ரவி - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி மூன்றாவது முறையாக இணையவிருக்கிறது. அது என்ன படம்? 

‘மிருதன்’ படத்திற்கு பிறகு ஜெயம் ரவி தற்போது ‘ரோமியோ ஜுலியட்’ படத்தை இயக்கிய லட்சுமண் இயக்கத்தில் ‘போகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு ஏ.எல்.விஜய் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கெனவே, ஜெயம் ரவி நடித்த ‘தாம் தூம்’, ‘எங்கேயும் காதல்’ ஆகிய படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். தற்போது மூன்றாவது முறையாக ஜெயம் ரவியுடன் ஹாரிஸ் இணைகிறார்.

ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்து பணிபுரிவது குறித்து ஜெயம் ரவி கூறும்போது, “ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்து பணிபுரிவதில் எங்கள் எல்லோருக்கும் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கதையில் பல சுவாரஸ்யங்களையும், மக்களின் ரசனைகளுக்கு ஏற்ற பல விஷயங்களையும் உள்ளடக்கி இருக்கிறோம். இப்படி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் எல்லா குண அதிசயங்களும் இந்த படத்தில் இருக்க, தற்போது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் எங்களுடன் கைக்கோர்த்து இருப்பது மேலும் பலம். 

அதுமட்டுமின்றி, இந்த படத்தை மக்களிடையே பெரும் அளவில் கொண்டு சேர்க்கும் வலிமையான தூணாகவும் ஹாரிஸ் திகழ்கிறார். விரைவில் இந்த படத்துக்கான பாடல்களை தனக்குரிய மெட்லி ஸ்டைலில் இசையமைக்க இருக்கிறார் ஹாரிஸ். அவருடைய இசையில் உருவாகும் பாடல்கள் யாவும் மக்களுக்கு இசை விருந்தாக அமையும்’’ 

இவ்வாறு நம்பிக்கையுடன் கூறினார்.