யாருக்கு அளித்த அங்கீகாரம்?

11 Aug, 2020 | 06:19 PM
image

-கார்வண்ணன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் புலி நீக்க அரசியலை முன்னெடுத்தனர் என்ற குற்றச்சாட்டு பலகாலமாக கூறப்பட்டு வரும் ஒன்று.

TNA meets President. | Live 24

புலிகளின் ஆதரவுடன் கூட்டமைப்புக்குள்  வந்தவர்களை- அவர்களின் கொள்கைகளுடன் ஒத்துப் போகிறவர்களை, படிப்படியாக கட்சியை விட்டு நீக்கி புலி நீக்கத்தை இவர்கள் செயற்படுத்தினார்கள் என்பது குற்றச்சாட்டு.

2010 பொதுத் தேர்தலிலின் போது செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருக்கு போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனித்துப் போட்டியிட முனைந்த போது தொடங்கியது இந்தக் குற்றச்சாட்டு.

அதற்குப் பின்னர், அனந்தி சசிதரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் அதே குற்றச்சாட்டு கூறப்பட்டது.

புலிகளால் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் எல்லோரும் புலிகளின் கொள்கை வழியில் இருப்பவர்கள் அல்ல. இப்போது இருக்கின்றவர்களும் அல்ல.

உதாரணத்துக்கு, கிழக்கில் புலிகளால் நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்தப்பட்ட ஜெயானந்த மூர்த்தியும்,  வன்னியில் களமிறக்கப்பட்ட சதாசிவம் கனகரத்தினமும் இப்போது ‘மொட்டு’ கட்சியில் இருக்கின்றனர்.

அதுபோல இன்னும் பலர் வழிமாறி தடம் மாறி சென்று விட்டனர்.

தமிழ் மக்களின் உரிமை வேட்கையை ...

செல்வராஜா கஜேந்திரனுக்கும், பத்மினி சிதம்பரநாதனுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதில் தொடங்கிய புலி நீக்க அரசியல் என்ற குற்றச்சாட்டு இந்த தேர்தலின் போதும் பிரசாரத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் அனந்தி சசிதரன்  பிரசார மேடைகளில் கூட்டமைப்பு தன்னை மாகாணசபைத் தேர்தலில் நிறுத்தி விட்டு, தோற்கடிக்க முயன்றது என்று குற்றம்சாட்டினார்.

அதாவது, புலிகளுக்கு செல்வாக்கு இல்லை என்பதை நிரூபிக்க தன்னைத் தோற்கடிக்க சதி செய்யப்பட்டது என்று ஒரு குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார்.

உண்மை அதற்கு மாறானது. அனந்தி சசிதரனை கூட்டமைப்பு போட்டியில் நிறுத்தியதே அவர் மூலம் அனுதாப வாக்குகளையும், புலிகள் ஆதரவு வாக்குகளையும் பெற வேண்டும் என்பதற்காகத் தான்.

மாகாணசபைத் தேர்தலில் புலிகளின் செல்வாக்கு இல்லை என்று நிரூபிப்பதன் மூலம் கூட்டமைப்புக்கு என்ன இலாபம் கிடைத்திருக்கப் போகிறது? 

இதுபோன்ற தர்க்க நியாய முரண்களைக் கூட அவர் கவனத்தில் கொள்ளவில்லை.

தன்னைத் தோற்கடித்து புலிகளைத் தோற்கடித்து விட்டதாக திருப்திப்பட்டுக் கொள்ள கூட்டமைப்பு விரும்பியது என்று அவர் கூறியது, யாராலும் நம்பக் கூடியதாக இருக்கவும் இல்லை.

ஆனால், அவர் இந்தக் கருத்தின் மூலம், இம்முறை தேர்தலில் தன்னை புலிகளின் பிரதிநிதியாக மக்கள் முன்னிலையில் நம்ப வைக்க முயன்றார்.

தனக்கு ஏற்படும் தோல்வி புலிகளின் தோல்வியாகி விடும் என்று அர்த்தப்படுத்த முயன்றார்.

அதேவேளை, தமிழ்த் தேசிய நீக்க அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கிறது என்ற குற்றச்சாட்டும் இம்முறை முன்வைக்கப்பட்டது.

இந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதே எல்லா தரப்புகளினதும் பிரதான இலக்காக இருந்தது.

அரசாங்கமும் அதையே தான் செய்தது. தமிழ்க் கட்சிகளும் அதனையே தான் செய்தன. புலம்பெயர் தமிழர்கள் இரவுபகலாக அதற்காக வேலை செய்தனர். 

புலம்பெயர் ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் இருப்போர் எல்லாம், கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்காக தமது நேரத்தையும் உழைப்பையும் பணத்தையும் செலவழித்தனர்.

இதுபோதாதென்று தமிழ்நாட்டில் செல்வாக்கிழந்து போன கட்சிகள், அமைப்புகள், தலைவர்கள் மட்டுமன்றி, கவிஞர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் கூட கூட்டமைப்புக்கு எதிராக வேலை செய்தனர்.

இங்குள்ள தமிழ் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும், யாரை நிராகரிக்க வேண்டும் என்று அவர்கள் எல்லாம் பாடம் கற்றுக் கொடுக்க முனைந்தனர்.

இங்குள்ள தமிழ் மக்களுக்கு அரசியல் தெரியாது என்பது போலவும், இவர்களை ஒன்றுமறிய மந்தைகள் போன்றும் கருதிக் கொண்டு, அவர்களும், வேறெங்கோ எல்லாம் இருப்பவர்களும் தமிழ் மக்கள் கூட்டமைப்பைத் தோற்டிக்க வேண்டும் என்று வழிகாட்ட முனைந்தனர்.

இவையனைத்தும் நடந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்காகவே. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்காக  பணியாற்றிய பெரும்பாலானவர்களால் சரியான வழி எது என்றோ, சரியான தெரிவு எது என்றோ வழிகாட்ட முடியவில்லை.

ஏனென்றால், அதற்காக அறிவு அவர்களிடம் இல்லை. அதற்கான தெளிவும் அவர்களிடம் இல்லை. தவறைச் சுட்டிக்காட்டுபவர்களுக்கு சரியானதைச் சுட்டிக்காட்டும் தகுதியும் இருக்க வேண்டும்.

தங்களையே சரியாக வழிப்படுத்த, வழிநடத்த தெரியாதவர்களெல்லாம், இங்குள்ள தமிழ் மக்களுக்கு வழிகாட்டுவதற்கு புறப்பட்டு வந்தமை தான், இந்த தேர்தலில் மிகப்பெரிய அவலம்.

தமிழ் மக்களுக்கான ஒரு தலைமைத்துவ வெற்றிடம், எந்தளவுக்கு நிலைமையைக் கொண்டு வந்திருக்கிறது என்பதற்கு இதுவே சான்று.

தங்களது சொந்த நாட்டில் ஆயிரம் வாக்குகளை பெறுவதற்குக் கூட திராணியற்றவர்கள் எல்லாம், கூட்டமைப்பை தோற்கடிக்க, அறைகூவல் விடுக்கும் அளவுக்கு தமிழ்த் தேசிய அரசியலில் வெறுமை ஆட்கொண்டிருக்கிறது.

2009 இற்குப் பின்னர் தமிழரின் அரசியல் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட வெற்றிடம் இன்னமும் நிரவப்படவில்லை. 

தலைமை தாங்குவதாக வந்தவர்கள் எவரும் அதற்கான தகுதியுடன் இருக்கவும் இல்லை.

அவ்வாறு இருந்திருந்தால், இப்படியொரு அவல நிலை வந்திருக்காது.

சொந்த மக்களின் மீது நம்பிக்கை வைக்காமல்,  சொந்த மக்களுக்குப் புத்தி சொல்ல வெளிநாட்டில் இருந்து ஆட்களைக் கூட்டி வரும் அளவுக்குத் தான், மாற்று அரசியல் இருக்கிறது.

மாற்று அரசியல், மாற்றுத் தலைமைத்துவம் என்பன, அதுவல்ல. அது மக்களிடம் இருந்து வர வேண்டியது. மக்களால் உணர வேண்டியது. 

அதனை வெளியில் உள்ள எவரும் ஏற்படுத்தி விட முடியாது. அவ்வாறாக உருவாக்கப்படும் மாற்றம் நிரந்தரமானதாக இருக்கவும் முடியாது.

தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்த தரப்புகள் இம்முறை தமக்குள் சண்டையிட்டுக் கொண்டனவே தவிர பிரதான எதிரியை மறந்து போய் விட்டனர்.

அதன் விளைவு இந்த தேர்தலில் எதிரொலித்திருக்கிறது.

ஆயினும், கடும் எதிர்ப்பிரசாரங்களுக்கு மத்தியிலும், இந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கும் வாக்குகள் - முதன்மையிடம் எதனை உணர்த்தியிருக்கிறது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய நீக்க அரசியலை முன்னெடுக்கிறது என்ற பிரசாரத்துக்கு கிடைத்த அங்கீகாரத்தையா?

புலி நீக்க அரசியலை முன்னெடுக்கிறது என்ற பிரசாரத்துக்கு கிடைத்த அங்கீகாரமா?

இப்படி கேள்வி எழுப்ப முயன்றால் அது யாருக்கு அவமானம்? யாருக்குத் தலைகுனிவு?

தமிழ்த் தேசிய அரசியலையும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஒன்றாக குழப்பியதன் விளைவு தான் இது.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம், விடுதலைப் புலிகளுடன் முடிந்து போனது. அந்த நிலைப்பாட்டை யாராலும் இனிமேல் முன்னெடுக்கவும் முடியாது. அதனை அடைவதற்கு அரசியல் வழியில் சாத்தியமும் இல்லை.

தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் சக்திகள், தமது நலனுக்காக, தமது வெற்றிக்காக தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒரு பிரசார ஆயுதமாக மாற்றினர்.

அதனைக் கையில் எடுத்து, எப்படியாவது வென்று விடலாம், நாடாளுமன்றத்துக்குள் புகுந்து விடலாம் என்று கருதினர்.

அதற்காகத் தான் புலிகளையும், போராட்டத்தையும் இழுத்துக் கொண்டு வந்து தெருவில் நிறுத்தினார்கள். 

புலிகளையும், மாவீரர்களையும், தலைமையையும் பயணம் வைத்து வெற்றி பெற்று விட தலைகீழாக நின்றார்கள்.

புலிகள் ஒருபோதும், நாடாளுமன்றம் செல்ல விரும்பியதில்லை. விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற கட்சியைப் பதிவு செய்தாலும், அது அவர்களின் ஒரு அரசியல் உத்தியாக இருந்ததே அன்றி, அதனை நாடாளுமன்றம் செல்வதற்கான வழியாக பயன்படுத்த முயன்றதில்லை.

அவ்வாறான புலிகளை பணயம் வைத்து அவர்களின் கொள்கை , இலட்சியம் போன்றவற்றை வியாபாரப் பொருளாக்கி அரசியல் ஆதாயம் தேட முனைந்தனர்.

இந்த தரப்புகள் இந்த தேர்தலின் மூலம் இலாபம் அடைந்திருக்கலாம். அல்லது நட்டம் அடைந்திருக்கலாம்.

ஆனால் புலிகள், போராட்டம், தலைமை ஆகியவற்றின் நிலை என்னவாகும் என்று ஒரு கணம் கூட சிந்திக்கவில்லை.

அரசாங்கத்தின் ஏமாற்றுப் போக்கு ...

புலிகளைத் தோற்கடிப்பதற்காக தன்னைத் தோற்கடிக்க கூட்டமைப்பு முயன்றது என்று கூறி வாக்கு கேட்ட, அனந்தி சசிதரன் வெற்றி பெற முடியாமல் போனது, அவரது தோல்வியாக அல்லது புலிகளின் தோல்வியா?

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மாத்திரமன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பும் கூட புலிகளைப் பணயம் வைக்கத் தவறவில்லை.

உள்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புலிகளுக்கு எதிரான அமைப்பாக, அதன் தலைவர்களை புலிகளுக்கு எதிரானவர்களாக அடையாளப்படுத்தி, அதனை தோற்கடிக்க முயன்றவர்கள் அடைந்திருக்கும் தோல்வி எதனை உணர்த்துகிறது?

இதையெல்லாம் மீறி கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கும் ஆதரவும் வாக்குகளும், புலி நீக்க அரசியலுக்கான, தமிழ்த் தேசிய நீக்க அரசியலுக்கான அங்கீகாரமாக அல்லவா எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், இந்த ஆபத்தான ஆயுதங்களைக் கையில் எடுப்பதற்கு முன் இதையெல்லாம் யோசித்திருக்க வேண்டுமல்லவா?.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04