பிழைத்துப்போன கணக்கு...

Published By: J.G.Stephan

09 Aug, 2020 | 04:53 PM
image

(ஆர்.ராம்)

9ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் நிறைவடைந்து அடுத்த ஐந்து வருடத்திற்கான தலையெழுத்தினை தீர்மானிக்கப்போகும் 225 பேரும் யார் என்பதும் வெளிப்பட்டாகி விட்டது. 

எந்த அரசியல் கட்சி எவ்வளவு ஆசனங்களை பெறும், எந்தக் கட்சி எவ்வாளவு ஆசனங்களை பெறவேண்டும், யாரெல்லாம் வெற்றி பெற வேண்டும், யாரெல்லாம் வெற்றி பெறவே கூடாது, இவ்வாறு தேர்தல் அறிவிக்கப்பட்ட நாட்கள் முதல் ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட எதிர்பார்ப்பின் விளைவான ஏற்படும் பிரதிபலிப்புக்களைச் செய்துகொண்டே இருந்தார்கள். 

இலங்கையில் வாழ்பவர்கள், புலம்பெயர் தேசங்களில் வாழ்பவர்கள், இளையோர், முதியோர், இராஜதந்திரிகள், களமிறங்கிய வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் என்று ஒவ்வொரு தரப்பினரும் வெவ்வேறு தேர்தல் கணக்குகளை தமக்குள் போட்டு வைத்துக்கொண்டிருந்தனர். ஈற்றில் அந்தக் கணக்குகளை “மக்கள் தீர்ப்பு” தவிடுபொடியாக்கி விட்டது என்று தான் கூற வேண்டியுள்ளது. 

ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்து சொற்ப மாதங்ளுக்குள் நடைபெறுகின்ற பாராளுமன்றத் தேர்தலை தென்னிலங்கை தரப்புக்களும், வடக்கு கிழக்கு தரப்புக்களும் “இனத்துவ” அடிப்படையிலேயே கையாண்டிருந்தது என்பது பொதுப்படையான விடயமாகின்றது. 

ஜனாதிபதி தேர்தலின்போது, பெரும்பான்மையினத்தின் மத்தியில் விதைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு, மலையக மக்கள் இன்றியே ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றி விடலாம் என்ற பேரினவாத பெருமித மனோநிலையின் வீச்சினை அப்படியே தக்கவைத்துக் கொண்டது ராஜபக்ஷவினரின் கூடாராமான பொதுஜனபெரமுன.

பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுகளையும், பிரிவுகளையும் பயன்படுத்தி அத்தரப்பினர் ஆட்சி அதிகாரத்திற்கே இலாயக்கற்றவர்கள் என்ற மனோநிலையை மக்கள் மத்தியில் இலகுவாக உருவாக்கியது பொதுஜனபெரமுன.

தமிழ், முஸ்லிம் எதிர்ப்புவாதமும், சிங்கள பௌத்த மேலாதிக்க வாதமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக அமையவும் பொதுஜன பெரமுனவின் பரப்புரைகள் “தேர்தல் கொள்கை விளக்க அறிக்கை” இன்றி கடை நிலை நபரையும் சென்றடைந்தது.

அதுமட்டுமன்றி “வெளிப்படை தன்மை அற்ற” கொரோனா வெற்றியும், இறக்குமதிகள், கொடுக்கல் வாங்கல்களுக்கு கதவடைக்கப்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மையும், படையினரை மையப்படுத்திய ஆட்சியாளரை, சுபீட்சமான இலக்கை நோக்கி நாட்டை நகர்த்தும் ஆட்சியாளராக பிம்பப்படுத்தியது. 

அவ்வாறான நிலையே, ஜனநாயக மாண்புகளை களைந்தெடுப்பதற்காக மூன்றிலிரண்டு கோரப்படுகின்றது என்பதை பாமர சிங்கள மக்கள் மத்தியில் மறக்கடிக்கச் செய்து “ஆணை” வழங்க அடிப்படைக் காரணமாகியது. 

பொதுஜனபெரமுனவை ஆரம்பித்து நான்கு ஆண்டுகளுக்குள்ளேயே உள்ளுராட்சி மன்றத்தேர்தல், ஜனாதிபதி தேர்தல் தற்போது பாராளுமன்றத் தேர்தல் என அனைத்திலும் பெருவெற்றி பெறுவதற்கு “மூலோபாய கர்த்தாவாக” இருக்கும் அதன் ஸ்தாபக தலைவர் பசில் ராஜபக்ஷவே மூன்றிலிரண்டு பெரும்பான்மை இலக்காக இருந்தாலும் நேரடி வாக்களிப்பின் ஊடாக அது கிடைக்காது என்ற நம்பிக்கையிலேயே 140வரையிலான ஆசனங்களை வெல்வோம் என்று கட்டியங் கூறியிருந்தார். 

மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்காக ஏனைய தரப்புக்களிலிருந்து சிலரை “பிடுங்கி எடுத்து ஒட்டி விடலாம்” என்று அவர் போட்டு வைத்திருந்த கணக்கு அர்த்தமற்றுப் போய்விட்டது. மூன்றிலிரண்டு பெரும்பான்மை இயல்பாகவே கைக்கு வந்துவிட்டது. இவ்வாறு பொதுஜனவின் கணக்கு பிழைத்துவிடுகிறது.

அடுத்து “தலைமைத்துவ” போட்டியின் விளைவால் பிளைவடைந்த ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்க்கட்சி பாத்திரத்தினை பெற்றுக்கொள்வது யார் என்ற கணக்கினை தமக்குள் போட்டன. பழக்கப்பட்ட சின்னம், பழமையான கட்சி என்பது பெரும் பலமென ஐ.தே.க நம்பிக்கை கொண்டிருந்தது. 

ஈற்றில் 73வருட பழைமவாய்ந்த ஐக்கிய தேசியக் கட்சி அடையாளமற்றுப் போய்விட்டது.  உலக அரங்கில் ஜனநாயகத்தினை விரும்புபவர்களால் மதிக்கப்படும் தெற்காசியாவின் “மிஸ்டர் கிளீன்” ரணில் விக்கிரமசிங்கவே மக்களால் நிராகரிக்கப்படும் துர்ப்பாக்கியமே அரங்கேறியுள்ளது. 

தனது கட்சியின் ஊடாக பிறிதொருவரை ஜனாதிபதி அரசியாசனத்தில் அமர்த்தி அழகுபார்க்குமளவிற்கு சகிப்புத்தன்மையும், விட்டுக்கொடுப்பும் கொண்ட மனிதநேயத் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவே அரசியல் அரங்கிலிருந்து விடைபெறவேண்டிய கையறு நிலைமை ஏற்பட்டுள்ளதோடு எதிர்க்கட்சி அந்தஸ்துக்கான கணக்கும் காற்றில் பறந்துவிட்டது. 

புதிய அணி, புதிய தலைவர், புதிய சின்னம் என்று அதிகளவு பழைய முகங்களுடன் களமிறங்கிய சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்க்கட்சிக்கான அந்தஸ்து, மக்கள் ஏற்றுக்கொள்கின்ற தலைமை,தாய்கட்சியை விட அதிகளவான ஆசனங்கள் உள்ளிட்ட கனவுகள் நனவாகியுள்ளன. ஆனால் 70ஆசன இலக்கோடு களமிறங்கியிருந்தாலும் தேசியப்பட்டில் உட்பட 54ஆசனங்களையே பெறமுடிந்துள்ளமை பின்னடைவே. அத்தோடு ஆளும் தரப்புக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்தமையால் ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணி “கூட்டாக” தொடர்வதற்கு வழிசமைத்திருக்கின்றது. 

இல்லையேல், முக்கிய பங்காளிகள் பரிதவிக்கவிட்டிருப்பார்கள். இப்போது கூட எதிர்காலத்தினை மையப்படுத்தி அரசியல் கணக்குப்போடும் ஒருசிலர் வலிந்து கூட்டிலிருந்து வெளியேறிச் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

அடுத்து ஜே.வி.பி என்ற “கறை” படிந் அடையாளத்தினை நீக்குவதற்காக தேசிய மக்கள் சக்தியின் பெயரில் களம் கண்டிருந்தாலும் பெரிதான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. மூன்றாவது பெரும் அரசியல் சக்தி என்ற இடத்தினை தொடர்ச்சியாக தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.ஆசனங்கள் அதிகரிப்புக்குப் பதிலாக வீழ்ச்சி அடைந்திருக்கின்றமை அவர்கள் கணக்கையும் பிழைக்கவே செய்திருக்கின்றது. 

இவ்வாறிருக்க, 68வருடகால வரலாற்றைக் கொண்ட மற்றொரு பழம்பெரும் தேசியக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி அடையாள மறைவின் விளிம்பிற்குச் சென்றுவிட்டது. பொதுஜனப் பெரமுனவுடன் கூட்டணி என்ற பெயரில் அதன் “குடைக்குள்” சென்றிருந்தமையால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதைப் போன்றதொரு நிலைமையே ஏற்பட்டிருக்கின்றது. 

சுதந்திரகட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அதிகூடிய விருப்பு வாக்குடன் பொலன்னறுவையில் வெற்றி பெற்றிருந்தாலும் கூட,அதன் தனித்துவ அடையாளம் ஏறக்குறைய அற்றுப்போயே விட்டது. ஐ.தே.க.வுக்கு மாற்றுத் தேசியக் கட்சி என்ற நிலைமையும் அகன்றுவிட்டது. 

பொதுஜனபெரமுனவுக்கு வடக்கில் குறிப்பாக யாழ்.தேர்தல் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் வெளிப்படுத்தப்பட்ட பிரதிபலிப்பால் சுதாகரித்துக்கொண்டன் விளைவே ஒரு ஆசனத்தையாவது தக்கவைப்பதற்கு முடிந்துள்ளது. அதாவது, தாமரை மொட்டில் சென்றால் தமிழ் மக்கள் நிராகரித்து விடுவார்கள் என்பதை உணர்ந்து அங்கஜன் இராமநாதன், இலாவகமாக சுதந்திரக்கட்சி அடையாளத்தினை பயன்படுத்தினார். 

சுதந்திரக்கட்சிக்கும், பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற அடையாளத்தினை தக்கவைத்துக்கொள்வதற்கும், பொதுஜனப்பெரமுனவிடத்திலிருந்து ஒரு துளியாவது தனித்துவ அடையாளத்தினை காண்பிப்பதற்கும் ஒரு தேவை ஏற்பட்டது.  ஆகவே இருதரப்பினரின் தேவைப்பாடுகளின் வெளிப்பாட்டால் முடிவுகள் மிகப்பலவீனமாக இருந்தாலும் அங்கஜன் இராமநாதன் யாழ்.மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றமையால் தப்பிபிழைத்துள்ளது எனலாம்.  

இவ்வாறு தென்னிலங்கையின் நிலைமைகள் காணப்படுகையில் வடக்கு கிழக்கு நிலைமைகளை எடுத்துக்கொண்டால் “தமிழ்த் தேசியம்” என்ற ஏகாதிபத்தியத்துக்கு “பலத்த அடி” விழுந்திருக்கின்றது என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். 

தமிழ்த் தேசியப் பரப்பிலே இம்முறை சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் சிதறல்களில் ஒன்றிணைந்த விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் மும்முனை மோதலில் போட்டியிருந்தன. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஆட்சியில் முன்னெடுத்த “இணக்க” அரசியலும், கூட்டமைப்பாக கூட்டுப்பொறுப்பற்ற தன்மையும் “தமிழ்த் தேசிய நீக்கத்துக்கு” வித்திடுவதாய் அமைந்தது. இது வடக்கு கிழக்கில் பாரிய வாக்குச் சரிவையும், ஆசனக்குறைப்பையும் ஏற்படுத்தியது. அதுமட்டுமன்றி யாழ்.தேர்தல் மாவட்டத்தில் விருப்பு வாக்கில் முதன்மையாக  இருக்கும் அந்தஸ்தையும் இழக்கச் செய்திருக்கின்றது. 

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு “கொள்கை சார் விடயங்களில்” தடம்புரண்டது. தமிழ்த் தேசிய மென்வலுவுக்கும், தமிழ்த் தேசிய வன்வலுவுக்கும் இடையிலான போட்டா போட்டியும், வேட்பாளர்களுக்குள் காணப்பட்ட குத்துவெட்டக்களும், தனித்த ஓட்டங்களும், குழுக்களாக முன்னெடுக்கப்பட்ட பரப்புரைகளும் அப்பட்டமாகவே இருந்தன. 

அதனை சாதாரண மக்களாலேயே உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. இருபது ஆசனங்கள் என்ற இலக்கினை நிர்ணயித்துவிட்டு அதில் அரைவாசியைக் கூட எட்டமுடியாதயாதளவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. தேசியப்பட்டியல் ஆசனம் ஒன்று கிடைத்ததால் கிடைத்தமையால் அரைப்பங்கு ஆசனத்தினைப் பெற்றுக்கொண்டோம் என்று நெருடும் மனதை ஆற்றிக்கொள்ளலாம். 

இதனைவிடவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தாய்க்கட்சியாக இருக்கும் தமிழரசுக்கட்சியின் ஆதிக்கம் கூட்டமைப்பிற்குள் குறைந்தமை ஒருபுறமிருக்க, அதன் தலைவர் மாவை.சேனாதிராஜாவும், செயலாளர் கி.துரைராஜசிங்கமும் தோல்விடைந்திருக்கின்றார்கள். இந்த முடிவு, அறவழி அரசியல் தலைமைத்துவங்களின் கட்டமைக்கப்படாத போக்கின் மீதான வெறுப்பின் வெளிப்பாடா என்ற கேள்வியை உருவாக்குகின்றது.

கிழக்கில் முஸ்லிம் தரப்புடனான நல்லெண்ண சமிக்ஞையை வெளிபடுத்திய கூட்டமைப்பால் மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் ஆசன இழப்பினை சந்திக்க நேர்ந்திருக்கின்றதே தவிரவும் தக்கவைத்துக்கொள்ள முடிந்திருக்கவில்லை. எனினும் தமிழர் தரப்பின் சிரேஷ்ட அரசியல் வாதியான சம்பந்தன் திருமலையில் வெற்றி பெற்று அதிக வயதில் அதாவது தனது 87ஆவது வயதிலும் தேர்தல் முறை மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருக்கின்றமை ஒரு வரலாற்றுச் சதனை தான். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவுகளுக்கு பல விடயங்களை பட்டியலிட்டுக்கொண்டே செல்லமுடியும். ஆனால் இந்தப் பட்டியலை தேர்தல் பரப்புரை துரும்புகளாக வைத்துக்கொண்டு, தமிழ்த் தேசியத்திற்கு விக்கினேஸ்வரன் அணியும், கஜேந்திரகுமார் அணியும் “மாற்றுத்தலைமைத்துவம்” வழங்க தலைப்பட்டன.

கூட்டமைப்பின் பலவீனங்களை தங்களது பரப்புரை துரும்புகளாக விக்கினேஸ்வரன் அணியும், கஜேந்திரகுமார் அணியும் கைகளில் வைத்திருந்தபோதும் அவற்றை வெறுமனே கூட்டமைப்பின் மீதான எதிர்ப்புக் கோசங்களாகவே முன்வைத்து வந்தனரே தவிரவும் மற்றுத் தலைமைக்கான “வாக்கு திரட்சியாக” மாற்ற முடிந்திருக்கவில்லை. 

அதன் காரணத்தினாலேயே அந்த அணிகள் யாழ்.தேர்தல் மாவட்டத்தினை தாண்டி தமது தடத்தினை பதிக்க முடிந்திருக்கவுமில்லை. மாற்றுத் தலைமைத்துவத்திற்கான தளத்தில் வலுவாக காலூன்றியிருக்கவும் முடிந்திருக்கவில்லை. 

எவ்வாறாயினும், புதிதாய் உருவான தேர்தல் கூட்டணிக்கு ஆறுமாதத்தில் ஒருஆசனம் பெறவல்ல சக்தி கிடைத்திருப்பதாக விக்கினேஸ்வரன் தரப்பு தம்மை தாமே சுதாகரித்துக் கொள்ளமுடியும். அத்துடன், ஓய்வு பெற்ற நீதியரசரான விக்கினேஸ்வரன் போட்டியிட்ட முதல் பாராளுமன்ற தேர்தலிலேயே வெற்றி பெற்ற ஒருவராக காணப்படுகிறார். 

அத்துடன் தெற்காசியாவிலேயே அதிக வயதில் ஓய்வு பெற்ற நீதியரசர் ஒருவர்  (80வயது) பாராளுமன்றம் செல்கின்ற பெருமையையும் தன்னகத்தே கொள்கின்றார். எனினும் அவரது அணியினர் யாழில், மூன்று, வன்னியில் இரண்டு, திருகோணமலையில் ஒன்று என்று போட்டுவைத்திருந்த வெற்றிக் கணக்கை மீளவும் நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலைமையை முடிவுகள் ஏற்படுத்தயிருக்கின்றன. 

அதேபோன்றுதான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் 2010ஆம் ஆண்டிலிருந்தான போராட்டத்திற்கு வெற்றி ஆசனமொன்றும், மேலதிக ஆசனமொன்றும் கிடைத்திருந்தாலும் “கூட்டமைப்புக்கான மாற்று அணியினர்” என்ற அங்கீகாரத்தினை பெற்றுக்கொள்ள முடியவில்லை. 

ஆனால் “நடைமுறைச்சாத்தியமற்ற கொள்கையை வைத்துக்கொண்டிருக்கின்றார் கஜேந்திரகுமார்” என்ற விமர்சனத்திற்கு இம்முறை கிடைத்த வெற்றி பதிலடியை வழங்கியிருக்கின்றது. இருப்பினும் “தமிழருக்கான தேசத்தினை” முன்னிலைப்படுத்தும் இந்த தரப்பினருக்கு தமிழர் தேசம் முழுவதும் அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கவில்லை. ஆகவே தமது கொள்கை வழி பற்றுறுதியை எவ்வாறு பரப்புரை செய்யப்போகின்றார்கள் என்ற கேள்வி இங்கு மேலெழுகின்றது. 

இதனைவிடவும், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பிக்கு யாழிலும் வன்னியிலும் அங்கீகாரம் கிடைத்திருப்பதோடு வாக்கு வங்கியும் அதிகரித்திருக்கிறது. அதேபோன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் சிறையிலிருந்தவாறே வெற்றியீட்டியதோடு விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்து தேர்தல் முறை மூலம் பாராளுமன்றம் செல்லும் முதல் நபர் என்ற பதிவையும் தன்னகத்தே கொள்கின்றார். 

கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று பெரும்பான்மை கட்சியுடன் இணைபவர்கள் பொதுவாக அரசியல் அரங்கிலிருந்து புறக்கணிக்கப்படுவதே வரலாறாக இருக்கையில் வியாழேந்திரன் அந்த பாரம்பரியத்தினை உடைத்தெறிந்திருக்கின்றார். அத்துடன் சந்திரகாந்தனும், வியாழேந்திரனும், கருணா அம்மான் கையிலெடுத்திருந்த “முஸ்லிம் எதிர்ப்பு வாதத்தினை” பற்றிப்பிடித்து அதில் வெற்றியும் கண்டிருக்கின்றார்கள். 

இதனைவிடவும், தமிழ்த் தேசிய அரசியல் விடுதலைப் பயணத்தில் கணவனை தியாகம் செய்த அனந்தியோ, சசிகலாவோ, விஜயகலாவோ மக்களால் அங்கீகரிக்கப்படவில்லை. அதேநேரம், வடக்கு கிழக்கிலிருந்து பெண் பிரதிநிதித்துவமொன்று கூட கிடைக்காத நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. 

மலையகத்தில் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு அவருடைய புதல்வாரன ஜீவன் தொண்டமானுக்கு “அனுதாப அலை” வாக்குகளாக குவிந்திருக்கின்றது. ஆனால் பதுளையில் அந்த அலை சரியாக அடித்திருக்கவில்லை என்பது துரதிஷ்டமே. 

உள்ளக குத்துவெட்டுக்களைத் தாண்டி, மனோகணேசன் வெற்றிபெற்றிருப்பதும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைத்துவத்திற்கு அழகு சேர்ப்பதாகவும், அந்த கூட்டணியின் பிரதி தலைவர்களான திகாம்பரம், இராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றிருப்பது வலுச்சேர்ப்பதாகவும் இருக்கின்றது. 

மேலும் முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய தரப்புக்கள் தமது தனித்துவ அடையாளங்களுக்காக முஸ்லிம்களின் இதய பூமியில் போட்ட சண்டையில் சமநிலையில் நிறைவடைந்து தலா ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்றுள்ளன. அத்துடன் இந்த இரு அரசியல் தரப்பின் தலைமைத்துவங்களும் அமைச்சுப்பதவிகளின்றிய நிலையிலும், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பெற்றுக்கொண்டுள்ள வெற்றி மதிக்கப்படத்தக்கதாகின்றது.

இதனைவிடவும் இம்முறை மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பொதுஜன பெரமுன சார்பில் 8பெண்களும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் மூன்று பெண்களும் பிரதிநிதிநித்துவப்படுத்துகின்றனர். இந்த இரு தரப்பினரையும் தவிர பெண்பிரதிநிதித்துவம் என்பது ஏனைய அரசியல் தரப்புக்களில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் தெரியவில்லை. 

இந்த நிலைமையானது “அவளுக்கு ஒரு வாக்கு” வேலைத்திட்டத்திட்டம் பெரும்பன்மை சமுகத்தின் மத்தியில் வெற்றி கண்டாலும் சிறுபான்மை சமுகத்தின் மத்தியில் எடுபடவில்லையோ என்ற தோற்றப்பட்டையே பிரதிபலிப்பதாக உள்ளது.

மேலும், ஒட்டுமொத்தமாக இம்முறை பாராளுமன்றில் 27தமிழ் பிரதிநிதித்துவங்களும், 20முஸ்லிம் பிரதிநிதித்துவங்களுமாக 47 தமிழ் பேசும் பிரதிநிதித்துவங்கள் காணப்படுகின்றன. கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகளில் வெவ்வேறுபட்ட தரப்புக்களாக இருக்கின்றபோதும் “தமிழ் பேசும் சமுகத்தின் பால்” ஒன்றிணைவதற்கு ஒரு சந்தர்ப்பம் இல்லாமில்லலை. 

இறுதியாக, வாக்கெண்ணும் செயற்பாட்டின் போது தென்னிலங்கை அமைதியாய் அவதானித்து நிதானமாய் வெற்றிக்களிப்பை பிரதிபலித்தது. அதே வாக்கு எண்ணும் செயற்பாடு யாழ்.தேர்தல் மாவட்டத்தில் விருப்பு வாக்கு மாற்றம் இடம்பெற்றதாக இல்லையா என்ற விவாதத்தை அடுத்த ஐந்து வருடங்களுக்காக உருவாக்கி விட்டுள்ளது. 

அதுமட்டுமன்றி, இளம் சமூகத்தினரின் எதிர் மனநிலையும், வெளிப்பாடும் விசேட அதிரடிப்படை தடியடி செய்யுமளவிற்கு கலக நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிலைமைகள் ஜனநாயக விழுமியங்கள் மீதான நம்பிக்கையை பலவீனப்படுத்துவதோடு தமிழ்த் தேசிய அரசியல் மீதான வெறுப்புணர்வையும் விரக்தியான மனோநிலையையும் மேலும் வலுவடையச் செய்கின்றது. தற்போதைக்கு கணக்குகள் பிழைத்தாலும், காலவோட்டத்தில் செல்நெறி பிழைக்கதிருந்தால் தேவலை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13