பிரித்தானியாவானது 26 வருடங்களுக்குப் பின்னர் பெண் பிரதமர் ஒருவரை தெரிவு செய்வுள்ளது. 

அந்நாட்டு பழைமைவாத கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட பிந்திய வாக்கெடுப்பில் இறுதி இரு வேட்பாளர்களாக பெண் வேட்பாளர்களான உள்துறைச் செயலாளர் தெரேஸா மேயும் சக்தி வள அமைச்சர் அன்ட்றியா லீட்ஸம்மும் தெரிவாகியுள்ளார். 

மூன்றாவது போட்டி வேட்பாளரான நீதி செயலாளர் மைக்கேல் கோவ் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் தெரேஸா மே 199 வாக்குகளைப் பெருமளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 

அதேசமயம் அன்ட்றியா லீட்ஸம் 84 வாக்குகளையும் மைக்கேல் கோவ் 46 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

தெரேஸா மே பிரித்தானியா தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதற்கு ஆதரவாகவும் அன்ட்றியா லீட்ஸம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இறுதி இரு வேட்பாளர்களில் எவரை கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்வது என்பது தொடர்பில் தீர்மானமெடுக்கும் நடவடிக்கையில் பழைமைவாய்ந்த கட்சியின் உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்தக் கட்சி நாடெங்கிலும் சுமார் 150,000 உறுப்பினர்களுடன் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

வெற்றிபெறும் வேட்பாளரின் பெயர் எதிர்வரும் செப்டெம்பர் 9 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. 

அந்த வெற்றியாளர் பிரித்தானியாவின் இரண்டாவது பெண் பிரதமராக பதவியேற்பார். பிரித்தானியாவின் முதல் பெண் பிரதமர் இரும்புப் பெண்மணி என அழைக்கப்படும் மார்க்ரெட் தட்சராவார். அவர் 1990 ஆம் ஆண்டில் பதவி விலகும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார். 

பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவாக இடம்பெற்ற வாக்கெடுப்பையடுத்து அந்த ஒன்றியத்துடன் இணைந்திருப்பதற்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்த பிரதமர் டேவிட் கமெரோன் பதவி விலகுவதாக அறிவிப்புச் செய்திருந்தார். 

ஆரம்பத்தில் கமெரோனின் இடத்திற்கு 5 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில் பழைமைவாத கட்சி உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட இரு சுற்று வாக்கெடுப்புகள் மூலம் வேட்பாளர்களின் தொகை தற்போது இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

இந்த வாக்கெடுப்பில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெ ற்றிபெற்றுள்ள தெரேஸா மே அடுத்த பிரதமராக தெரிவு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

வாக்கெடுப்பிலான வெ ற்றியையடுத்து தெரேஸா மே உரையாற்றுகையில் பழைமைவாத டோரி கட்சியை ஒன்றுபடுத்துவதற்கு உறுதியளித்துள்ளார். 

தனது தலைமைத்துவத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.