சஜித் தலைமையில் ஆட்சி அமைப்போம் : மனோகணேசன் பிரத்தியேக செவ்வி

02 Aug, 2020 | 11:16 PM
image

(நேர்காணல்:- ஆர்.ராம்)

மார்ச்மாதம் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டபோது ராஜபக்ஷவினருக்கு காணப்பட்ட ஆதரவு அலை தற்போதுஇல்லை. சஜித் அலை மேலெழுந்து வருகின்றதை அனைவரும் உணர்ந்துவிட்டார்கள். ஆகவே சஜித் தலைமையில் நாம் ஆட்சி அமைப்போம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான மனோகணேசன் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். 

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, 

கேள்வி:- ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான கூட்டணிகள் ஊடாக தேர்தல்களம் கண்டுவந்த உங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி மூலமாக காணும் தேர்தல் களம் எப்படியிருக்கின்றது?

 பதில்:- இது ஒரு பிரச்சினையாக தெரியவில்லை. ஐக்கிய தேசியக் முன்னணியில் ஒரு பங்காளி கட்சியாக இருந்தோம், அவ்வளவுதான். இரண்டாவது ஐ.தே.மு.யில் பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சியில் பெரும் பிளவு ஒன்றும் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை. 95அக்கட்சியின் 95சதவீனமான  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள்  சஜித் பிரேமதாஸ தலைமையை ஏற்றுக்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து விட்டார்கள். ஆகவே கூட்டணியின் சின்னம், பெயர் ஆகியவை மாறியது தொடர்பில் எந்தவித சிக்கலும் கிடையாது. மேலும் இப்போது கூட்டணி தர்மம் கடந்த காலங்களை விட சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது. முன்பு ஐக்கிய தேசிய முன்னணி என்பது பெயரளவில்தான் இருந்தது. இப்போது ஐக்கிய மக்கள் சக்தி என்பது அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்ட கூட்டணியாக இருக்கிறது. 

கேள்வி:- தமிழ், முற்போக்கு கூட்டணி இம்முறை எத்தனை ஆசனங்களை இலக்குவைத்து களமிறங்கியுள்ளது?

பதில்:- கடந்த முறை ஆறு. இம்முறை ஆறு ப்ளஸ் என்பது தான் இலக்காகவுள்ளது.

கேள்வி:- இம்முறை கொழும்பு மாவட்டத்தில் வாக்குச்சிதறல்கள் இடம்பெறும் ஆபத்துள்ளதென்ற கருத்தினை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

 பதில்:- தமிழ்-முஸ்லிம் சிறுபான்மை மக்களின் ஆதரவை பெற்ற முதன்மை பெரும்பான்மை கட்சி தலைவர் என்ற அந்தஸ்த்தை ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க இழந்துவிட்டார். ஐ.தே.க.வின் பாரம்பரிய சிங்கள மேல்தட்டு சாதிய ஆதரவு அவருக்கு கொஞ்சம் இருக்கலாம். அதைத்தவிர ஐ.தே.க.வுக்கு கொழும்பில் இருந்த ஆதரவு தளம் எல்லாமே நொருங்கி வீழ்ந்து விட்டது.    

கேள்வி:-ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, உபதலைவர் ரவி கருணாநாயக்க ஆகியோருடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்த தாங்கள் இப்போது அவர்கள் மீது மிகக்கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றீர்களே?

 பதில்:- ரணிலுடன் இருந்த உறவு எல்லாமே அரசியல் உறவுதான். இவருடன் எனக்கு வேறு என்ன உறவு இருக்க முடியும்? ஆனால், நான் எப்போதுமே எடுத்தேன், கவிழ்த்தேன் என்று அரசியல் செய்வதில்லை. எனக்குள் எப்போதும் நிதானம் இருப்பதாக நினைக்கிறேன். 

இதற்கு முன்பே ரணிலுடன் இருந்த உறவைத் துண்டிக்க வேண்டுமென என் கட்சிக்கு உள்ளேயே பலமுறை வலியுறுத்தப்பட்ட சந்தர்ப்பங்கள் உள்ளன. அதன் உச்சக்கட்டம் தான், 2010 ஆம் ஆண்டு தேர்தலின் போது, கண்டி மாவட்டத்தில் மஹிந்தானந்த அளுத்கமகேயின் வன்முறையால் என் வெற்றி தடுத்து நிறுத்தப்பட்டு நான் பாராளுமன்றம் செல்ல முடியாமல் போனபோது, ரணில் தேசிய பட்டியலில் என்னை உள்வாங்க மறுத்தார்.

ரவி கருணாநாயக்க இதன் பின்னணியில் இருந்தார். அணி மாறாமல் தொடர்ந்து ஐ.தே.க.வுடனும், ரணிலுடனும் 2001 ஆம் ஆண்டிலிருந்து எதிர்க்கட்சி பங்காளியாக செயற்பட்ட என்னை, அதே ரணில் உதாசீனம் செய்தார். எனது பாராளுமன்ற பிரவேசம் மறுக்கப்பட்டால் அதனுடன் என் அரசியல் அஸ்தமனம் ஆகிவிடுமென ரவி கருணாநாயக்க கனவு கண்டார். அதற்கு ரணிலும் துணை போனார். ஆனால் பீனிக்ஸ் பறவையை போல் நான் சாம்பலிலிருந்து மீண்டும் எழுந்து வந்தேன்.

 ஆனால், அந்த வேளையிலும் கூட நான் ரணில் மற்றும் ஐ.தே.க. அணியுடன் இருந்த என் உறவை முழுமையாகத் துண்டிக்கவில்லை. அதாவது எனது பதவி தேவைகளை மட்டும் மையப்புள்ளியாக வைத்து நான் ஒருபோதும் எங்கள் கொள்கைகளை தீர்மானிப்பதில்லை. ஐ.தே.க.ரணில் அணியுடன் சேர்ந்து செயற்படுவதற்கும் எனக்கு அன்று காரணம் இருந்தது. அதுபோல் பிரிவதற்கும் காரணம் இன்று இருக்கிறது.

 இன்று நாம் மட்டும் அல்ல, ஐக்கிய தேசிய முன்னணியில்  இருந்த,  அனைத்து பங்காளி கட்சிகளும் ரணில் மீது நம்பிக்கை இழந்து, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து விட்டன என்பதை கவனியுங்கள். ஆகவே ஐக்கிய தேசிய முன்னணியும் இன்று இல்லை.   

 ஐ.தே.க. உபதலைவர் ரவி கருணாநாயக்கவுடன் எனக்கு எப்போது நல்லுறவு இருந்ததில்லை. அவரை ஒரு கனவான் அரசியல்வாதியாக நான் பார்ப்பதும் இல்லை. என் மீதும், சஜித் மீதும் அவருக்கு எப்போதும் ஒரு காட்டம், பொறாமை, காழ்ப்பு இருக்கிறது. ஐ.தே.க.வில் சஜித்துக்கு தரப்படும் அதே அந்தஸ்து தனக்கும் தரப்பட்ட வேண்டும் என்பது அவரது ஆசை. 

ஆனால், ஐ.தே.க. உறுப்பினர்கள் இவரை சஜித்தின் பக்கத்தில் வைக்ககூட தயார் இல்லை. இதனால் சஜித் மீது இவருக்கு காட்டம். வடகொழும்பில் என்னுடன் இவருக்கு வாக்கு போட்டி. இதனால்  என் மீதும் பொறாமை. இப்படியான சிறுபிள்ளைத்தனமானவருடன் நான் எப்படி உறவு வைக்க முடியும்? நாம் இவரை பெருட்டாக எடுப்பதே இல்லை.                     

கேள்வி:-ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கம் வகிக்கும் சிறுபான்மை தேசிய இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதி அல்லது பிரதமர் பதிவியைக் குறிவைத்திருக்கும் சம்பிக்க ரணவக்கவின் வலைக்குள் விழுந்து விட்டதாக விமர்சிக்கப்படுகின்றதே?

 பதில்:-  சம்பிக்க ரணவக்க வலை வீசவும் இல்லை. நாம் வலைக்குள் விழும் விபரம் அறியா மீன் குஞ்சுகளும் இல்லை.காலம் மாறுகிறது. மனிதர்களும் காலவோட்டத்தில் முதிர்ச்சியடைகிறார்கள். சம்பிக்க நிறைய மாறிவிட்டார் என நான் நினைக்கிறேன். இதை நல்மாற்றம் என்று நான் சொல்கிறேன். இல்லை, சந்தர்ப்பவாதம் என்று வேறு பலர் சொல்லலாம். அது அவரவர் கருத்து. ஆனால், என் நிலைப்பாட்டுக்கு உறுதியான காரணங்கள் என்னிடம் உள்ளன.

 முதலாவதாக இந்நாட்டின் ஆட்சியை அமைக்க, சம்பிக்க போன்ற ஒரு சிங்கள பெளத்த தேசியவாதி எங்கள் அணிக்குள் அவசியம் என்பது அரசியல் யதார்த்தம். இரண்டாவது, அந்த சிங்கள பெளத்த தேசியவாதம், ராஜபக்ஷ அணியின் சிங்கள பெளத்த தேசியவாதத்தில் இருந்து மாறுபட வேண்டும். அந்த மாறுதல் எனக்கு இன்று சம்பிக்கவில் தெரிகிறது. ராஜபக் ஷ தேசியவாதம் தமிழ், முஸ்லிம் மக்களை தள்ளி வைத்துள்ளது. சம்பிக்க ரணவக்க இன்று தமிழ், முஸ்லிம் மக்களை அரவணைத்து பயணிக்க விரும்புகிறார்.

 சிங்களம், பெளத்தம், தமிழ், முஸ்லிம், இந்து, கத்தோலிக்கம், இஸ்லாம் என்று “மாத்திரம்” பெருமை கொள்வதை நிறுத்தி விட்டு, முதலிடத்தை “இலங்கையர்” என்ற அடையாளத்துக்கு வழங்குவோம் என்ற கொள்கையை நான் இப்போது வலியுறுத்தி வருகிறேன். எனது இனம், மதம், மொழி மீது எனக்கு இருக்கும் பற்றை அடமானம் வைக்காமல் எம் தாய் நாட்டு அடையாளத்தையும் முன்கொண்டு செல்ல விரும்புகிறேன். இதுதான் இந்நாட்டின் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை கொண்டு வருமென நான் திடமாக நம்புகிறேன்.

 ஆனால், பத்து வருடங்களுக்கு முன் நான் இப்படி இருக்கவில்லை. தமிழின அடையாளம் மட்டுமே என் தலையில் இருந்தது. யுத்தம் எம் எல்லோரையும் கூர்மைப் படுத்தி வைத்திருந்தது. அப்படித்தான் சம்பிக்கவும் இருந்தார். இப்படி, ரவூப், ரிஷாத், சம்பந்தன் எல்லோரையும் காலம் மாற்றுகிறது எனவும் நம்புகிறேன். இது சந்தர்ப்பாவதம் அல்ல. காலம் கற்றுத் தரும் புது பாடங்கள். இந்த அங்கீகாரத்தை சம்பிக்க ரணவக்கவுகும் ஏன் கொடுக்கக் கூடாது?எப்படியும் காலம்தான் பதில் கூற வேண்டும். நிரந்தர தீர்வைத் தேடி சாத்தியமான எல்லா வழிகளிலும் பயணிக்க நாம் தயாராக வேண்டும். அதில் ஒன்று சம்பிக்க ரணவக்க.  

கேள்வி:-ராஜபக் ஷவினர் ஆட்சியமைக்கின்றபோது புதிய அரசிலமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் அதில் உங்களுடைய வகிபாகங்கள் காணப்படுமா?

பதில்:-  ராஜபக் ஷ ஆட்சி என முடிவு செய்து விட்டீர்களா? அவர்கள் ஆட்சி அமைத்தாலோ, நாமே ஆட்சி அமைத்தாலோ கூட அரசியலமைப்புக்கான விடயத்தினை   விட்ட இடத்தில் இருந்து தொடங்க வேண்டும். மீண்டும் முன்பள்ளியில் இருந்து தீர்வு தரும் புதிய அரசியலமைப்பை தயாரிக்க முடியாது. நாம் உருவாக்கி அரைகுறையில் விட்டுள்ள எமது நல்லாட்சி கால புதிய அரசியலமைப்பு ஆவணம் அல்லது கடந்த கால ராஜபக் ஷ ஆட்சியே கொண்டு வந்த சர்வகட்சி ஆவணம் இவற்றிலிருந்து அந்தப்பணிகளை ஆரம்பிக்க வேண்டும். இதுவே சம்பந்தன் மற்றும் ரவூப், ரிஷாத்  ஆகியோரின் நிலைபாடுகளாகவும் இருக்க வேண்டுமென நம்புகிறேன்.   

கேள்வி:-13,19ஆவது திருத்தச்சட்டங்கள் மறுசீரமைக்கப்படுகின்றபோது அதுதொடர்பில் செயற்பாட்டு ரீதியில் உங்களுடைய பிரதிபலிப்புக்கள் எவ்வாறு இருக்கும்?

பதில்:- 13 ஆம், 19 ஆம் அரசியலமைப்பு திருத்தச்சட்டங்கள் வெட்டிக்குறைக்கப்படவோ , கத்தரிப்புச் செய்யவோ உடன்பட முடியாது.

கேள்வி:-நீண்டகாலமாக நீடிக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது அடுத்தவரும் காலத்தில் சாத்தியப்படுமென்று கருதுகின்றீர்களா?

 பதில்:- தீர்வு அடுத்த தீபாவளிக்கு வரும், பொங்கலுக்கு வரும் என்று சொல்வதெல்லாம் வேடிக்கை வசனங்கள் அல்ல. இதுபற்றி வேடிக்கை பேசுகின்றவர்கள் தான் வேடிக்கை மனிதர்கள். தீர்வு வரும், வர வேண்டும், வந்தே தீரும் என்ற எமது நம்பிக்கையின் வெளிப்பாடுகள்தான் இந்த வார்த்தைகள். நானும் அப்படிதான் சொல்கிறேன்.    

கேள்வி:-இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் பொறுப்பைக் கொண்டிருந்த அமைச்சர் என்றவகையில் அண்மைய காலத்தில் மேலெழுந்துவரும் பௌத்த, சிங்கள தேசியவாதத்தினை மையப்படுத்திய அரசியல் கலாசாரத்தினை எப்படி பார்க்கின்றீர்கள்?

 பதில்:- பௌத்த, சிங்கள தேசிவாதத்தில் பிரச்சினை இல்லை. அது மேலாதிக்கவாதமாக மாறும் போதுதான் சிக்கல். அடுத்து, இந்த மேலாதிக்கவாதம், ஏதோ அண்மை காலத்தில், அதுவும் எமது ஆட்சி காலத்தில் மேலெழ வில்லை. யுத்த வெற்றியை  பௌத்த, சிங்கள மேலாதிக்க வெற்றியாக கருத தொடங்கிய காலத்தில் இருந்தே, இது மேலெழுந்தது. எமது ஆட்சியில்தான் இதன் வேகம் சற்று குறைக்கப்பட்டது.

 இதற்கு எனது அமைச்சு பெரும் பங்காற்றியது. ஆனால், அரசியல்ரீதியாக சிங்கள-பௌத்த மேலாதிக்கவாதத்தை தோல்வியடைய செய்ய வேண்டும் என்பதை எனது அமைச்சால் மாத்திரம் செய்து முடிக்க முடியாது என்பது யதார்த்தம். முழு நாடும் இதை உணரவேண்டும். முழு நாடும் இதை நோக்கி கொண்டு செல்லப்பட வேண்டும். அதை நாம் எதிர்கொள்வோம்.

 இங்கே தீமையிலும் ஒரு நம்பிக்கை ஒளி தெரிகிறது. இந்த ராஜபக் ஷ அரசுதான், சிங்கள-பௌத்த மேலாதிக்கவாதத்தின் உச்ச கட்டம். அதுதான் சிங்கள-பௌத்த மேலாதிக்கவாத எவரெஸ்ட் சிகரம். அதனைக் கடந்து யாராலும் செல்ல முடியாது  எனவே அவர்களுக்கு இனி இறங்குமுகம்தான். இதுதான் இயற்கை நீதி. எனவே இந்த அரசுக்குள் இருக்கும் மேலாதிக்கவாத மையப்புள்ளிகளை உடைத்தெறிவோம். சிங்கள முற்போக்காளர்களின் துணையுடன் அதில் வெற்றியடைவோம்

கேள்வி:-காலச்சூழலில் ஆளும் தரப்புடன் இணைவதற்கான நிலைமைகள் ஏற்படுமாகவிருந்தால் பேரம்பேசலின் அடிப்படையில் தமிழ் முற்போக்கு கூட்டணி அதுபற்றி ஆராயுமா?

 பதில்:- நாம் தான் ஆளும் தரப்பாக சஜித் தலைமையில் ஆட்சி அமைப்போம். மார்ச் மாதம் வேட்பு மனுவில் நான் கையெழுத்து போடும் போது, சிங்கள மக்கள் மத்தியிலிருந்த ராஜபக்ஷ ஆதரவு அலை இன்று வீழ்ச்சி அடைந்து, சஜித் அலை மேலேழுந்து வருகிறது.   

இன்றைய ஆளும் தரப்போ, எதிர்தரப்போ, ராஜபக்ஷ அணியுடன் பேச நாம் எப்போதும் தயார். ஆனால் அதற்கு ராஜபக்ஷ அணிதான் முதலில் தமது சிங்கள-பெளத்த மேலாதிக்க வாதத்தை கைவிட வேண்டும். தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற எம்முடன் மட்டுமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடனும் பேசலாம். நமக்கென்ன, நமது மக்களின் நலனே முக்கியம். அதற்குத்தான் முன்னுரிமை.  

கேள்வி:- கொழும்பு மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்திற்கான அங்கீகாரம் மனோ கணேசனுக்கு மீண்டும் கிடைக்குமா?

பதில்:- நிச்சயமாக, கடந்த தேர்தலை விட அதிக வாக்குகளை பெற்று நான் வெற்றி பெறுவேன். நான் ஒரு தனி நபர் அல்ல. ஜனநாயக மக்கள் முன்னணி கட்சித் தலைவர், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர். ஐக்கிய மக்கள் சக்தி என்ற தேசிய கூட்டணியின் தலைமைக்குழு உறுப்பினர். இந்த அரசியல் அந்தஸ்தை நான் பரசூட்டில் இறங்கி வந்து திடீரென சுலபமாக பெறவில்லை. எங்களுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. இந்த வரலாற்றுக்கு பின் எங்களது உழைப்பு, அர்ப்பணிப்பு, தியாகம் என்பவை இருக்கின்றன.

 1999ஆம் ஆண்டில் மேல்மாகாணசபை உறுப்பினராக கொழும்பு அரசியலுக்குள் ஒரு அரசியல் சிறுவனாக நுழைந்தேன். இன்று திரும்பி பார்க்கும் போது, கொழும்பில் மாத்திரம் பதினைந்து உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பாராளுமன்றம், அமைச்சரவை என வளர்ந்து விட்டோம். இதைதவிர கண்டி, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, பதுளை என்று தமிழ் முற்போக்கு கூட்டணியாக வளர்ந்துள்ளோம். இவையனைத்தும் எம்  அணியின் நேர்மை, அர்ப்பணிப்பு, தூரப்பார்வை, துணிச்சல், இனப்பற்று, தேசப்பற்று, கடும் உழைப்பு ஆகிய பண்புகளுக்கு கிடைத்த வெற்றிகளே.

கேள்வி:- உரிமைகளுக்காக குரல் கொடுத்து போராடும் நீங்கள் அபிவிருத்தி செய்யவில்லையே என்ற குற்றச்சாட்டு பற்றி என்ன கூறுகிறீர்கள்?   

பதில்:-யார் அந்த குற்றம் சாட்டும் அறிவாளி? எனக்கு ஒழுங்கான அபிவிருத்தி அமைச்சை 2015ஆம் ஆண்டு ஆட்சி அமைத்த போது, ரவி கருணாநாயக்காவின் அழுத்தம் காரணமாக ரணில் தரவில்லை.  பிறகு நான் விடாது அரசுக்குள்ளேயே போராடியதால், 2018ஆம் வருடம்தான் அதுவும் ஜனாதிபதி மைத்திரிபாலதான், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மீறி சில புதிய அம்சங்களை என் அமைச்சுக்கு தந்தார். இதனால் என் அமைச்சின் பெயரில் “சமூக மேம்பாடு” என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. தென்னிலங்கை, வடக்கு, கிழக்கு என மூன்று பிராந்தியங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவென விசேட ஒதுக்கீடுகளை போராடி பெற்றேன். 

அதனடிப்படையில், கொழும்பு மாவட்டத்துக்கு  150 மில்லியன்   ரூபாவும்,   வடமாகாணத்திற்கு 170 மில்லியன் ரூபாவும் கண்டி, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, மாத்தளை, கம்பஹா மாவட்டங்கள் உள்ளடங்கிய பிராந்தியத்திற்கு  160  மில்லியன் ரூபாவும் கிழக்கு மாகாணத்திற்கு  140 மில்லியன் ரூபாவும் அபிவிருத்திக்காக ஒருவருடத்திற்குள்ளே ஒதுக்கீடு செய்திருக்கின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21