யார் பக்கம் வீசும் வெற்றிக் காற்று?

Published By: Digital Desk 4

02 Aug, 2020 | 07:42 PM
image

 -கபில்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரங்கள் இன்று முடிவுக்கு வரவுள்ள நிலையில், இன்னும் மூன்று நாட்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. முன்னெப்போதும் இல்லாதளவுக்கு இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.

தெற்கு அரசியலில் ஆட்சியைப் பிடிப்பதற்கான போட்டி நிலவுகிறது என்பதை விட, மூன்றில் இரண்டுக்கான போட்டியும், யார் உண்மையான எதிர்க்கட்சி என்பதை உறுதி செய்வதற்கான போட்டியும் தான் நடக்கிறது.

ஏனென்றால் பொதுஜன பெரமுன ஆட்சியைப் பிடிப்பது இந்தச் சூழலில் கடினமானதல்ல.

ஆனால், அதற்குச் சவாலாக இருப்பது, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்வது மட்டும் தான்.

இப்போது, பொதுஜன பெரமுனவுக்கு சமதையாக எந்தக் கட்சியும் இல்லை என்பதே உண்மை.

ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்டிருப்பது அதற்கு முக்கியமான காரணம்.

ஐக்கிய தேசியக் கட்சியா- ஐக்கிய மக்கள் சக்தியாக வலிமையானது என்ற போட்டி தான் பிரதானமாக உள்ளது.

எனவே, பொதுஜன பெரமுனவுடன் போட்டி என்பதை விட, சஜித்- ரணில் இடையிலான போட்டியே முதன்மையானதாக இருக்கிறது.

இந்தக் கட்டத்தில் வடக்கு, கிழக்கு அரசியலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏக போகத்தை உடைத்து விடுவதற்கு பல தரப்புகள் கங்கணம் கட்டியிருக்கின்றன.

எப்படியாவது இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற பலத்தை ஒற்றை இலக்கத்துக்குள் சுருக்கி விட வேண்டும் என்பதில், அரசதரப்பும் உறுதியாக இருக்கிறது. தமிழ்த் தரப்புகளும் உறுதியாக இருக்கின்றன.

அதிகளவு சுயேட்சைகளைக் களமிறக்கி தமிழ்த் தேசிய வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதில் ஆளும் தரப்புகளின் பங்கு கணிசமாக இருக்கிறது என்பதே தமிழ்த் தேசிய கட்சிகளின் குற்றச்சாட்டு.

இந்தக் குற்றச்சாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் முன்வைக்கவில்லை.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கூறுகிறது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் கூறுகிறது. தமிழ்த் தேசிய பசுமை இயக்கமும் கூறுகிறது,

அதேவேளை, இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்குதம் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபட்டு நிற்கின்றனவா என்று பார்த்தால், அவர்கள் ஒருவரை ஒருவர் முட்டி மோதிக் கொண்டு, நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து விடுவதற்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வாக்குகளைப் பிரிக்க சுயேட்சைகள் களமிறக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டை கூறுகின்ற அருகதை தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குக் கிடையாது.

ஏனென்றால், அவர்களும் கூட தமிழ்த் தேசிய வாக்காளர்களின் வாக்குகளைப் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

சலுகைகளுக்கு விலைபோகாத- தமிழ்த் தேசியப் பற்றுடைய தமிழ் மக்களில் பெரும்பாலானோர் இந்த தேர்தலில் அக்கறையற்றிருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் விரக்தியான நிலை காணப்படுகிறது.

கடந்த காலங்களில் தாங்கள் தெரிவு செய்த பிரதிநிதிகள், பிரிந்து நிற்பதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கிறது.

அந்தந்தக் கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள் தொடர்ந்தும் அதையே பின்பற்றுவார்கள். அதாவது தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்தவர்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள். தமிழ் காங்கிரசுக்கு வாக்களித்தவர்களும் அவ்வாறே இருப்பார்கள். ஈபிஆர்எல்எவ், ரெலோ, புளொட் போன்றவற்றின் ஆதரவாளர்களும் மாறப் போவதில்லை.

ஆனால், குழப்பமடைந்திருப்பவர்கள், தமிழ்த் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் வாக்காளர்கள். ஒன்றுபட்டு நிற்பதை விரும்பும் வாக்காளர்கள் தான்.

தமிழ் தேசிய நிலைப்பாட்டில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று கருதும் இந்த வாக்காளர்களுக்கு, பிளவுபட்டிருக்கின்ற தமிழ்த் தேசியக் கட்சிகளை காணப் பொறுக்கவில்லை.

அவர்களில் யாரைத் தெரிவு செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறான தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு தான், பேரினவாதக் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் தமிழ்த் தேசிய வாக்காளர்களின் உறுதியை உடைக்க முனைகின்றன.

சலுகைகளை நீட்டியும், பிற சந்தர்ப்பவாத கருத்துக்களை முன்வைத்தும், தமிழ்த் தேசிய வாக்காளர்களைத் தமது பக்கம் இழுக்க முனைகின்றன.

வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் மத்தியில், இம்முறை நிலவுகின்ற குழப்ப நிலையால், வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் வாயைத் திறக்க மறுக்கிறார்கள்.

யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை தமக்கு நெருக்கமானவர்களுடன் கூட பகிர்ந்து கொள்ளத் தயாராக இல்லாத நிலை காணப்படுகிறது.

தமிழ்த் தேசிய அரசியலின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர்கள் கூட, வாக்களிக்கும் ஆர்வத்தில் இல்லை என்பதையே இது காண்பிக்கிறது.

கடைசி நேரத்தில் இவர்கள் முடிவெடுக்கப் போகிறார்களா அல்லது வாக்களிப்பில் இருந்து ஒதுங்கிக் கொள்ளப் போகிறார்களா என்று கணிக்க முடியாத சூழல் காணப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளும், விமர்சனங்களும் எந்தவொரு தேர்தலிலும் பிரதிபலிப்பதில்லை.

ஏனென்றால் சமூக வலைத்தளங்களில் இருக்கும் வாக்காளர்களை விட, அதற்கு வெளியே இருக்கும் வாக்காளர்கள் தான் அதிகம்.

இளையோர் தான் அதிகளவில் சமூக வலைத்தளங்களில் இருக்கிறார்கள். அவர்கள் காரசாரமாக விவாதிக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் வாக்களிக்க முன்வருவார்களா என்ற கேள்வி இருக்கிறது.

அண்மையில், ஆங்கில ஊடகம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் புதிய வாக்காளர்களில் 47 வீதமானோர் வாக்களிப்பில் ஆர்வமின்றி இருக்கிறார்கள் என்று தெரியவந்திருக்கிறது.

அரசியல் மீதுள்ள வெறுப்பு மற்றும் அரசியல்வாதிகள் மீதுள்ள அவநம்பிக்கையே இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் கணிப்பு உண்மையானால், வடக்கு கிழக்கில் சமூக வலைத்தளங்களின் பாதிப்பு தேர்தலில் எதிரொலிக்காது.

தமிழ்த் தேசிய வாக்காளர்களை குழப்புகின்ற வகையில் புறச் சூழ்நிலைகள் இருந்தாலும், தமிழ் வாக்காளர்கள் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

பேரினவாதக் கட்சிகள், பேரினவாதக் கட்சிகளுடன் கூட்டு வைக்கத் தயாராக உள்ள கட்சிகள், குழுக்கள், ஆகியவற்றுடன், தமக்குள் மல்லுக்கட்டும் தமிழ்த் தேசியக் கட்சிகள் என மூன்று தெரிவுகள் அவர்களுக்கு உள்ளன.

இவர்களில் யாரை தமது பிரதிநிதிகளாக தமிழ் வாக்காளர்கள் தெரிவு செய்யப் போகிறார்கள்?

இந்த மூன்றில் ஒரு பிரிவுக்குள் நுழைந்து விட்டால் கூட பல தெரிவுகள் அவர்களுக்கு உள்ளன.

வெறும் சலுகைகளை மாத்திரம் வைத்துக் கொண்டு முடிவுகளை எடுக்கும் வாக்காளர்கள் மிக குறைந்தளவானோர் தான்.

அவர்கள் மாறப் போவதும் இல்லை. மாற்றுவதும் கடினம்.

அதேவேளை உரிமை சார்ந்த விடயங்களில், உறுதியாக உள்ள வாக்காளர்களையும் மாற்றுவது கடினம்.

இந்த இரண்டுக்கும் நடுவில் உள்ள மிதக்கும் வாக்காளர்கள் தான் முக்கியமானவர்கள்.

அவர்கள் எடுக்கப் போகும் முடிவு தான், யார் பலசாலி ஆகப் போகிறார் என்பதை தீர்மானிக்கப் போகிறது.

அபிவிருத்திக்கான அரசியலா - உரிமைக்கான அரசியலா என்ற கேள்வி கடந்த காலங்களில் முன்னிலை பெற்றிருந்த போதும், இப்போது,  உரிமையுடன் சேர்ந்த அபிவிருத்தி என்ற கோசம் முன்னிலை பெறத் தொடங்கியிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கட்சிகளால் கூட அபிவிருத்தியை புறந்தள்ள முடியாத நிலை காணப்படுகிறது.

இந்தச் சிக்கலான சூழலில் தமிழ் வாக்காளர்களின் தெரிவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தேர்தலில் பெரும்பாலான மக்கள் அளிக்கப் போகும் தீர்ப்பு அடுத்த ஐந்து ஆண்டுகள் தமிழ் மக்களின் பிரதிநிதி யார் என்பதை முடிவு செய்யப் போகிறது.

இந்த முடிவு உறுதியானதாக இருக்க வேண்டும். வலிமையானதாகவும் இருக்க வேண்டும்.

உறுதியற்ற முடிவு எடுக்கப்பட்டாலோ, சலுகைகளுக்கு விலை போனாலோ, அதன் விளைவுகளை தமிழ்மக்கள் தான் எதிர்கொள்ள வேண்டியிருக்குமே தவிர, தெரிவாகப் போகும் பிரதிநிதிகள் அல்ல.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48