அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஆட்சியமைக்கப் போவது யார்? தீர்மானிக்கப்போகும் 10 மணித்தியாலங்கள்

01 Aug, 2020 | 10:22 PM
image

-ரொபட் அன்டனி

ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதிக்குப் பின்னர்  நாட்டில் யார்  அரசாங்கத்தை அமைக்கப்போவது என்பதை  தீர்மானிப்பதற்கான   தேர்தல்  5 ஆம் திகதி புதன்கிழமை  நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.  தேர்தல் பிரசாரப்பணிகள் யாவும்  நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன்   முடிவடையவுள்ள நிலையில்  கட்சிகள் மற்றும்  சுயேச்சைக் குழுக்கள்   இன்றும் நாளையும்   தமது இறுதி   தீவிர பிரசாரப்  பணிகளில்   ஈடுபடவுள்ளன.   

இம்முறை தேர்தலானது  பல வழிகளிலும் மிகவும்  ஒரு  தீர்க்கமான   சூழலில் நடைபெறுகிறது.  மேலும்  ஜனாதிபதி தேர்தல் கடந்த  நவம்பர் மாதம் நடைபெற்ற நிலையில்   அதில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ வெற்றிபெற்று  மஹிந்த தரப்பினர்   ஆட்சி அமைத்துள்ள சூழலில்  இம்முறை தேர்தல் நடைபெறுகிறது.  அதுமட்டுமன்றி   கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில்   முன்னெப்போதுமில்லாத  வகையில் இந்த தேர்தல் நடைபெறவுள்ளது.   அத்துடன் அரசியல் ரீதியிலும்   ஒரு  தீர்க்கமான    நிலைமை  இம்முறைத் தேர்தலில் காணப்படுகின்றது. 

கட்சிகளின் பிளவுகள்  

வரலாறு முழுவதுமே நடைபெற்ற  தேர்தல்களில்   மிகப்பெரும் சக்தியாக  போட்டியிட்ட ஐக்கிய தேசியக்கட்சி  இம்முறை  இரண்டாகப் பிளவடைந்து  சஜித் அணி,  ரணில் அணி  என இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றன.   அதுமட்டுமன்றி  வடக்கிலும்  இம்முறை அரசியல் சூழல்  மிகவும் தீர்க்கமானதாக காணப்படுகின்றது.  தமிழ் தேசியக்கூட்டமைப்பு  பிளவடைந்த நிலையில்  அங்கும்  பல அணிகள்  இம்முறை களமிறங்கியுள்ளன.  இதேபோன்று  கிழக்கு மாகாணத்திலும்   பல அணிகள்  இம்முறை களமிறங்கியிருக்கின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. 

5 ஆம் திகதி நாடளாவிய ரீதியில்  12984  நிலையங்களில்  தேர்தல் வாக்களிப்பு நடைபெறவிருக்கிறது.   அதேபோன்று  தேர்தலில் 16263885  வாக்காளர்கள்  தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.  பாராளுமன்றத்திற்கு தேர்தலின் ஊடாக 225 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவிருக்கின்றனர். அவர்களில் 196 பேர்  வாக்காளர்கள் ஊடாக நேரடியாகவும்   29  பேர் தேசிய பட்டியல் ஊடாகவும்  பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.  தேர்தலானது 2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நடைபெறுகிறது. இம்முறை தேர்தலுக்கு  மறுதினமே  வாக்குகள் எண்ணப்படவுள்ளன.   நாடளாவிய ரீதியில்  தேர்தல்   ஆணைக்குழுவினால்  அமைக்கப்பட்டுள்ள  மத்திய நிலையங்களில்   வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெறவுள்ளன.  

தீவிர போட்டி 

வாக்காளர்களின்  ஊடாக நேரடியாக  196 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில்   சுயேச்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பாக 7452  வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.   எனவே தேர்தல் களத்தில் போட்டி என்பது மிகவும்  தீவிரமானதாகவே  காணப்படுகிறது. 

நாட்டில்  22 தேர்தல் மாவட்டங்களில்  160  தேர்தல் தொகுதிகள் உள்ளன. யாழ்ப்பாணம், மற்றும்  கிளிநொச்சி மாவட்டங்கள் யாழ். தேர்தல் மாவட்டமாகவும்   முல்லைத்தீவு   மன்னார், மற்றும் வவுனியா மாவட்டங்கள்  வன்னி தேர்தல் மாவட்டமாகவும் இருக்கிறது.   பிரதேசவாரி  தேர்தல் முறைமையே எமது நாட்டில் நடைமுறையில் இருக்கின்ற சூழலில்   தேர்தல் முடிவுகள் மாவட்ட அடிப்படையிலேயே   கவனத்தில் கொள்ளப்படும்.   

தொகுதிகளின் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும்   விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ்   அரசியல் கட்சிகள்,  சுயேச்சைக்குழுகளின் சார்பாக தெரிவாகும்  உறுப்பினர்கள்  மாவட்ட மட்டத்திலேயே  தெரிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள்.  அதனால் இந்த விகிதாசார  தேர்தல் முறை என்பது  மாவட்ட மட்டடத்தில்   பார்க்கப்படுகின்ற ஒரு   தேர்தல்  முறைமையாகும். 

வாக்காளர் ஒருவர்  தேர்தலில் ஒரு கட்சிக்கு வாக்களித்துவிட்டு  அந்த கட்சியின் சார்பில் குறித்த மாவட்டத்தில் போட்டியிடுகின்ற  வேட்பாளர்களில் மூவருக்கு தமது விருப்பு வாக்குகளை அளிக்கலாம்.   எனவே தான் இந்த விகிதாசார  தேர்தல் முறைமையானது மாவட்ட மட்டத்திலேயே  முக்கியம் பெறுவதாக  அமைகிறது. 

வாக்களிப்பது எவ்வாறு ?

இந்த நிலையில்  வாக்காளர்கள்  வாக்களிக்கும்போது  முதலில் தான் விரும்பிய  கட்சிக்கு அல்லது சுயேச்சைக் குழுவுக்கு  அதன் சின்னத்தில்    வாக்களிக்கவேண்டும்.   அதன் பின்னர்  வாக்களிப்பு அட்டையின் கீழே காணப்படும்   விருப்பு வாக்கு இலக்கங்களில்   மூன்று பேருக்கு  தமது விருப்பு வாக்குகளை அளிக்க முடியும்.   அதாவது   முதலில்   வாக்களிப்பு அட்டையில்   கட்சியின் சின்னம்  அல்லது  சுயேச்சைக்குழுவின் சின்னம்   ஆகியவற்றுக்கு வாக்களித்துவிட்டு  அதன் பின்னரே  விருப்பு வாக்கு இலக்கத்துக்கு  புள்ளடியிட்டு  தமது விருப்புவாக்கை அளிக்கலாம். 

விருப்பு வாக்கைப் பொறுத்தவரையில் மூன்று பேருக்கு, இரண்டு பேருக்கு  அல்லது ஒருவருக்கு கூட   அளிக்க முடியும்.  விருப்பு வாக்கு அளிக்க விருப்பமில்லையேல் கட்சிக்கு அல்லது  சுயேச்சைக்குழுவிற்கு வாக்களித்துவிட்டு வரலாம்.  ஆனால்   அரசியல் கட்சிக்கோ,  அல்லது சுயேச்சைக் குழுவிற்கோ  வாக்களிக்காமல்    வாக்களிப்பு சீட்டின் கீழே உள்ள   வேட்பாளர்களின்  விருப்பு வாக்கு இலக்கங்களுக்கு   விருப்பு வாக்களிக்க முடியாது.  வாக்காளர்கள் அவ்வாறு செய்தால்  அந்த வாக்கு செல்லுபடியற்றதாகிவிடும்.  எனவே இந்த விடயத்தில்  வாக்காளர்கள் மிகவும்  கவனமாகவும்  அவதானத்துடனும் செயற்படவேண்டும். 

இலங்கையில் அதிகூடிய வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில்  1785964  வாக்காளர்கள்  வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.  அதேபோன்று   கொழும்பு மாவட்டத்தில்  இரண்டாவது  1709209  வாக்காளர்கள்    வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.  அதேபோன்று  287024  வாக்காளர்களுடன்  மிக குறைந்த  வாக்காளர்களைக் கொண்ட  மாவட்டமாக வன்னித் தேர்தல் மாவட்டம் காணப்படுகின்றது.   இந்த தேர்தலை அமைதியாகவும்  சுந்திரமாகவும் நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை   தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது. 

தென்னிலங்கை கள நிலை 

தென்னிலங்கையில் இம்முறை நான்குமுனைப் போட்டி நிலவுகின்றது.  மிகப் பிரதானமாக  சுதந்திரக்கட்சியும்,   சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து  மொட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றன.  தற்போதைய ஜனாதிபதியின்  ஆளும் கூட்டணியாகவே  சிறிலங்கா பொதுஜன பெரமுன போட்டியிடுகின்றது.  யாழ்ப்பாணம் தவிர்ந்த  அனைத்து மாவட்டங்களிலும் பொதுஜன பெரமுன போட்டியிடுகின்றது.  அதேபோன்று  ஐக்கிய தேசியக்கட்சி இம்முறை இரண்டாகப் பிளவடைந்து களமிறங்கியிருக்கிறது.   ரணில் தலைமையிலான   ஐக்கிய தேசிய   கட்சியும், சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும்  இம்முறை தேர்தலில் களமிறங்கியிருக்கின்றன.  அதேபோன்று   மக்கள் விடுதலை முன்னணியானது  தேசிய மக்கள் சக்தி என்ற  பரந்துபட்ட  கூட்டணியின் ஊடாக களமிறங்கியிருக்கிறது.  அந்த வகையிலேயே   இம்முறை  நான்குமுனைப்போட்டி  வடக்கு கிழக்கு தவிர்ந்த  ஏனைய பகுதிகளில் பார்க்கப்படுகின்றது.    வழமையாக   ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, ஜே.வி.பி. என மும்முனைப்போட்டி நிலவுவது வழக்கமாகும். ஆனால் இம்முறை    நான்குமுனைப் போட்டி நிலவுகிறது.   ஐக்கிய தேசியக்கட்சி பிளவடைந்தமையே    இதற்கான காரணமாகும். 

வடக்கு, கிழக்கு நிலை

வடக்கைப் பொறுத்தவரையிலும் யாழ். தேர்தல் மாவட்டத்தில்    பாரிய போட்டி காணப்படுவதுடன்   பல அணிகள் தேர்தலில் களமிறங்கியிருக்கின்றன.  யாழ். மாவட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு , தமிழ்தேசிய மக்கள் கூட்டணி,  தமிழ் மக்கள் தேசிய முன்னணி,  ஐக்கிய தேசியக்கட்சி,   ஐக்கிய மக்கள் சக்தி,   சிறிலங்கா சுதந்திரக்கட்சி,  என  பல அணிகள்  யாழ். தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றன.  அத்துடன்   பல சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் களமிறங்கியிருக்கின்றன. 

இவ்வாறு பல அணிகள் பிரிந்து நின்று களமிறங்கியுள்ளதால்  அங்கு  வாக்குகள் சிதறடிக்கப்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.  எனவே  மக்கள் சிந்தித்து   தமது பிரதிநிதித்துவங்களை அதிகரித்துக்கொள்ளும் வகையில் வாக்களிப்பது அவசியமாகும்.  

கிழக்கு  நிலை

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில்  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் சஜித் அணியும்    இணைந்து ஐக்கிய மக்கள் சக்தியாக களமிறங்கியுள்ளன.  அதேபோன்று  ஐக்கிய தேசியக்கட்சி, சிறிலங்கா பொதுஜன பெரமுன, தமிழ் தேசியக்கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,   தேசிய காங்கிரஸ், மற்றும்  சுயேச்சைக்குழுக்கள் களமிறங்கியிருக்கின்றன.  

மட்டக்களப்பு மாவட்டத்திலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு,  ஐக்கிய மக்கள் சக்தி,  முஸ்லிம் காங்கிரஸ்,   பிள்ளையானின் கட்சி,  ஐக்கிய தேசியக்கட்சி,  சிறிலங்கா  பொதுஜன பெரமுன , தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி,  தமிழ் தேசிய மக்கள் முன்னணி,  எனப் பல கட்சிகள் போட்டியிடுகின்றன.   சஜித் அணியில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸும்  நல்லாட்சிக்கான மக்கள்  இயக்கமும் மட்டக்களப்பில்  இணைந்து போட்டியிடுகின்றன. 

திருமலை மாவட்டத்தில்  தமிழ் தேசியக் கூட்டமைப்பு,   சிறிலங்கா பொதுஜன பெரமுன,  ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி,  தமிழ் மக்கள்  தேசிய கூட்டணி, தமிழ்  தேசிய மக்கள் முன்னணி,     உள்ளிட்  கட்சிகள் போட்டியிடுகின்றன இந்த மாவட்டத்தில்  சஜித் அணியிலேயே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து போட்டியிடுகின்றன.    

மலையக நிலை

இம்முறை  மலையகத்தில்   பல அணிகள்  போட்டியிடுவதை காணமுடிகின்றது.  முக்கியமாக மலையகத்தில் ஆளும் சிறிலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணியின்  மக்கள்  ஐக்கிய சக்தி ஆகியன போட்டியிடுகின்றன. அத்துடன் சுயேச்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளன.   மேலோட்டமாக  பார்க்கின்றபோது  இம்முறை தேர்தலில்   கட்சிகள் மத்தியில் பல்வேறு பிளவுகள்  ஏற்பட்டிருப்பதை காணமுடிகின்றது. 

மக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும்  

வடக்கு, கிழக்கு,  மலையகம் மற்றும் கொழும்பை பொறுத்தவரையில்  தமிழ் பேசும் மக்கள்  அரசியல் ரீதியில்  ஆழமாக சிந்தித்து   தமது பிரதிநிதித்துவங்களை அதிகரித்துக் கொள்ளும் வகையிலும்    பிரதிநித்துவங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையிலும்   வாக்களிக்கவேண்டியது மிகவும்  அவசியமாகும்.    வாக்களிக்கும் போது மக்கள்  தமது பிரதிநிதித்துவங்கள் பாராளுமன்றத்திற்கு செல்வதன் மூலமே  தமது உரிமைகளை  வென்றெடுக்க முடியும் என்பதை மனதில் வைத்து  வாக்களிக்க வேண்டியது இன்றியமையாதது. 

அதுமட்டுமன்றி   தென்னிலங்கையில்  நான்கு முனை போட்டி நிலவுகின்ற நிலையில்  ஆளும் கட்சித் தலைவரான  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,  ஐக்கிய மக்கள்  சக்தியின் தலைவராக  சஜித் பிரேமதாச,  மற்றும்  ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரான  ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் பாரிய போட்டி நிலவுகிறது.   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.   அதேபோன்று  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்  சஜித் பிரேமதாசவும்   ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும்   கொழும்பில் களமிறங்கியிருக்கின்றனர்.   சஜித் பிரேமதாசவுக்கும்   ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் கொழும்பு மாவட்டத்தில் பாரிய போட்டி நிலவுகிறது. கடந்த 20 வருடகாலமாக   அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேர்தலில்  களமிறங்கிய   சஜித் பிரேமதாச இம்முறை  கொழும்பில்  களமிறங்கியிருக்கின்றமை விசேட அம்சமாகும். 

அடுத்த ஐந்து வருடங்கள் ஆட்சியமைக்கப்போவது யார்  ?

அந்தவகையில் கட்சிகளுக்கிடையில்  பாரிய போட்டி  நிலவுகிறது.  அடுத்த அரசாங்கத்தை   தீர்மானிக்கப்போகின்ற  மிகப்பெரிய பலப்பரீட்சையாக  பாராளுமன்றத் தேர்தல் அமையவுள்ளது.  மக்கள்  சிந்தித்து நிதானமாக  வாக்களிக்கவேண்டும்.  மக்களினால்   ஜனநாயக ரீதியில்  தெரிவு செய்யப்படுகின்ற தரப்பினருக்கு  நாட்டை  அடுத்த  ஐந்து வருடங்களுக்கு  ஆட்சி செய்யும் சந்தர்ப்பம் கிடைக்கும். எனவே மக்கள்   ஆழமாக  ஆராய்ந்து  தமது தலைவிதியை தீர்மானிக்கும்  வாக்குரிமையை  5 ஆம் திகதி பிரயோகிக்கவேண்டியது அவசியமாகும். 

 அதேநேரம் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாம் இன்னும் அபாயகரமான நிலையிலேயே  இருக்கின்றோம். இந்நிலையில்  கொரோனா வைரஸ் தொற்று  தேர்தல் காலத்தில் பரவாமல் தடுக்கும் வகையில்  என்ன செய்யவேண்டும் என்பது குறித்து    அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன அவற்றை தவறாமல் பின்பற்றி அபாயத்தை தவிர்த்து அனைவரும் செயற்படவேண்டும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22