அரசாங்கம் வெற்றிபெற்றால் சர்வாதிகாரம் தலைதூக்கும் - ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட வேட்பாளர் எரான் விக்ரமரத்ன செவ்வி

01 Aug, 2020 | 10:56 AM
image

(நேர்காணல் எம்.ஆர்.எம்.வஸீம்)

ஏகாதிபத்திய ஆட்சியை மேற்கொள்ளவே அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கோருகின்றது. அந்த நிலை ஏற்பட்டால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட வேட்பாளர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

கேசரிக்கு வழங்கிய விசேட நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவருடன் மேற்கொண்ட நேர்காணல் பின்வருமாறு,

கேள்வி :  தேர்தல் பிரசார இறுதி தினத்தை அடைந்திருக்கும் நிலையில் கள நிலைமை எவ்வாறு இருக்கின்றது?

பதில் : ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் பொதுத் தேர்தல் ஒன்று இடம்பெறும்போது, அரசாங்க தரப்புக்கே தேர்தல் கள நிலைமை சாதகமாக இருக்கும். இருந்தபோதும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 9மாதங்கள் கடந்துள்ளன. அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை பார்த்தே மக்கள் தீர்மானங்களை எடுப்பார்கள். ஆனால் இந்த அரசாங்கம் கடந்த 9 மாதங்களில் மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதேபோன்று அரசாங்கத்தின் நிர்வாக முறையில் மக்கள் விரக்தியுற்றிருக்கின்றனர். அரச துறைகளின் பிரதானிகளை நியமிக்கும்போது துறைசாந்த நிபுணர்களை நியமிப்பதற்கு பதிலாக ஓய்வு பெற்ற இராணுவ வீர்ரகளே நியமித்திருக்கின்றனர். நாட்டு மக்கள் இதனை அரசாங்கத்திடம் எதிர்பார்க்கவில்லை.

கேள்வி : அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களின் சாதக பாதகம் தொடர்பில்?

பதில் : அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. அதிகாரத்துக்கு வந்து மூன்று மாதங்களுக்கு பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அதுவரை வரவு செலவு திட்டம் ஒன்றை அரசாங்கத்துக்கு சமர்ப்பித்துக்கொள்ள முடியவில்லை. நாங்கள் 2015இல் அதிகாரத்துக்கு வந்து முதலாவது பாராளுமன்றத்திலே இடைக்கால வரவு செலவு திட்டம் ஒன்றை சமர்ப்பித்து மக்களு நிவாரணங்களை வழங்கினோம். அதேபோன்று யுத்தத்தை வெற்றிகொண்டதுபோல் கொராேனா வைரஸையும் வெற்றிகொள்ளலாம் என நினைத்து செயற்பட்டதால், எமது நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 11மரணங்கள் ஏற்பட்டன. கடந்த ஜனவரியில் எமது நாட்டில் கொராேனா தொற்றாளர்கள் யாரும் இனம் காணப்பட்டிருக்கவில்லை. அப்போதே விமான நிலையத்தை மூடி இதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார். ஆனால் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. வியட்நாம் அதனை மேற்கொண்டது. அதனால் அந்த நாட்டில் கொராேனாவினால் யாரும் மரணிக்கவில்லை. அத்துடன் அரசாங்கத்திடம் வேலைத்திட்டங்கள் இருக்காதமையாலே பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்ல தீர்மானித்து.

கேள்வி : ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து புதிய கூட்டணி அமைத்து போட்டியிடும் உங்களது அணிக்கு, தேர்தலில் அந்த சவால் எவ்வாறு இருந்தது? 

பதில் : நாங்கள் இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியாக போட்டியிட்டிருந்தால், ஏப்ரல் குண்டுத்தாக்குதல், மத்திய வங்கி பிணைமுறி மோசடி போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு யார் பொறுப்பு கூறுவதென்று தெரிவிக்கமுடியாமல் போயிருக்கும். ஆனால் எமது புதிய அணியில் அந்த குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் யாரும் இல்லை.

அதேபோன்று நாட்டின் பிரச்சினையை தனி நபர் ஒருவரால் தீர்க்க முடியாது. அரசாங்கத்தரப்பினர் ராஜபக்ஷ் குடும்பத்தை மாத்திரம் முன்னிலைப்பாடுத்தியே களமிறங்கியிருக்கின்றது. அவர்களது அரசாங்கத்தில் எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் ராஜபக்ஷ்வினர் மாத்திரமே அதனை செயற்படுத்த முடியும். அவ்வாறு நாட்டை கொண்டு செல்ல முடியாது. 

அதற்கு ஒரு அணியாக செயற்பட்டு, அதில் திறமையானவர்கள் அனுபவமிக்கவர்கள் இளம் தலைவர்கள்  இருக்கவேண்டும். தேர்தலில் போட்டியிடும் ஏனைய கட்சிகளுடன் எமது அணியை ஒப்பிட்டு பார்க்கையில் இதனை புரிந்துகொள்ள முடியும். அதனால் சஜித் பிரேமதாச தலைமையில் நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழும்பு முடியுமான பல்துறைசார்ந்தவர்களைக்கொண்ட அணியாக தேர்தலில் போட்டியிடுகின்றமையால் எமக்கு பெரிய சவாலாக எதுவும் இருக்கவில்லை. 

கேள்வி : ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் என தெரிவித்து  53பேர் நீக்கப்பட்டதாக தெரிவித்து பெயர் பட்டியல் வெளிவந்திருக்கின்றது. அதில் சஜித் பிரேமதாசவின் பெயர் இல்லையே?

பதில் : தேர்தல் அண்மித்திருக்கும்போது மக்களை ஏமாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். இதுதொடர்பில் யாரும் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. நாங்கள் புதிய அணியில் தேர்தலில் போட்டியிடுகின்றபோது ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து எம்மை நீக்கியதாக தெரிவிப்பதன் மூலம் எமக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. எமது இலக்கு சிறிகொத்தவை கைப்பற்றுவதல்ல. அரசாங்கம் அமைப்பதாகும். 

கேள்வி : தற்போைதய அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 19ஆம் திருத்தத்தை இல்லாமலாக்குவதாக தெரிவிப்பது தொடர்பில்?

பதில் : புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்ட பின்னரே 19ஆம் திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படுகின்றது. ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்திய காலம்தொட்டு அதன்  அதிகாரங்கள் குறைக்கப்படவேண்டும் என்றே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அனைவரும் தெரிவித்து வந்தனர். ஆனால் அந்த ஆசனத்தில் அமர்ந்த பின்னர் அதன் அதிகாரங்களை இல்லாமலாக்க யாரும் முன்வரவில்லை. நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமலாக்குவதாக தெரிவித்து அதிகார்ததுக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ், இறுதியில் வாழ்நாள் முழுவதும் அந்த பதவியில் இருக்கும்வகையில் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொண்டார். அதேபோன்று பாராளுமன்றம் மற்றும் நீதித்துறையையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்து ஏகாதிபத்திய ஆட்சியை கொண்டுசெல்லவே தீர்மானித்தார். ஆனால் மக்கள் அதற்கு இடமளிக்காமல் தேர்தலில் அவரை தோற்கடித்தனர்.

எமது அரசாங்கத்தில்  19ஆம் திருத்தத்தை கொண்டுவந்து நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்க நடவடிக்கை எடுத்ததுடன் சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்து அரச துறையை உறுதிப்படுத்தினோம். அரச அதிகாரிகள், நீதித்துறை சுயாதீனமாக செயற்பட நடவடிக்கை எடுத்தோம். தற்போது அரசாங்கம் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கேட்பது மீண்டும் நாட்டில் சர்வாதிகாரத்தை ஏற்படுத்துவதற்காகும். நிறைவேற்று அதிகாரத்தை மஹிந்த ராஜபக்ஷ்வே முழுமையாக துஷ்பிரயோகம் செய்தார். அந்த நிலை மீண்டும் ஏற்படுவதற்கு மக்கள் இடமளிக்க கூடாது. அவ்வாறான நிலை ஏற்பட்டால்  பாரிய விளைவுகள் நாட்டில் ஏற்படும்.

கேள்வி : இறுதியாக வாசகர்களுக்கு தெரிவிக்க விரும்புவது?

பதில் : நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியுற்றிருக்கின்றது. கொராேனா தொற்று பாதிப்புடன் இது மேலும் அதிகரித்திருக்கின்றது. இந்த நிலையில் இருந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. தேர்தலுக்கு பின்னர் நிலைமை இன்னும் மோசமடையும்போது மக்களே அதன் சுமையை சுமக்கவேண்டிவரும். அதனால் கடந்த அரசாங்கத்தில் நாங்கள் நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பொருட்களின் விலைகளை குறைத்து மக்களின் பொருளாதார சுமையையும் குறைக்க நடவடிக்கை எடுத்தோம். 

அதேபோன்று நாட்டின் கடன் தவணையையும் செலுத்தி வந்தோம். ஆனால் தற்போதுள்ள நிலையில் எதிர்வரும் 2021, 2022 ஆண்டுகளில் பாரியதொரு தொகை சர்வதேசத்துக்கு வழங்கவேண்டிய கடன் தவணை இருக்கின்றது. அதனை செலுத்துவதற்கு தேவையான வேலைத்திட்டங்கள் எம்மிடம் இருக்கின்றன. சர்வதேசத்துடன் இருக்கும் தொடர்புகளை அடிப்படையாகக்கொண்டு எமது கடன் சுமையை குறைத்துக்கொள்ள நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதற்கான ஆணையை மக்கள் எமக்கு தரவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04