இலங்கைப் பொதுத்தேர்தல் 2020 ; உங்கள் வாக்கை பெறுமதி மிக்கதாக ஆக்குங்கள் !

01 Aug, 2020 | 10:19 AM
image

- கலாநிதி லயனல் போபகே

எந்தவொரு நாடும் வெற்றிகரமானதோர் நாடாக ஆவதற்கு, அது அனைத்து மக்களுக்கும் நிலையான நல்வாழ்வைத் தரும் ஓர் ஆட்சிமுறையைக் கடைப்பிடித்தல் வேண்டும். இலங்கையில் எமது அரசியல் நிலப்பரப்பு, சகல மக்களுக்கும் நிலையான முன்னேற்றத்தை உறுதிசெய்யும் வகையில் மாற்றமடைய வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை நம் எல்லோரதும் பெருநன்மை கருதித் தீர்மானிக்கவல்ல பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை, ஆகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் பொதுத்தேர்தல் எமக்கு மீண்டும் தருகிறது.

ஒரு எதேச்சதிகாரப் போக்குடைய ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ், பாரியளவு கடன்பெற்று மேற்கொள்ளவுள்ள தவறான அபிவிருத்திப் பாதையானது, மக்களின் நிலையான சந்தோசமான வாழ்வுக்குக் குந்தகமாகவே அமையும். உண்மை நிலையின் பெரும்படத்தை நாம் உய்த்துணர்ந்து, கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வோமாக.”

இவ்வாறு இலங்கையில் ஜனநாயகத்திற்கான குரலின், சர்வதேச வலையமைப்பு (அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா, ஐக்கிய இராச்சியம்) சார்பில் கலாநிதி லயனல் போபகே விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“தற்போதைய இடைக்கால அரசு ‘அதிகாரச் சமநிலை’, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றுக்குப் பயப்படுகின்றது. இதனால் ஒரு சர்வாதிகார ஆட்சியே இலங்கைக்குப் பாதுகாப்பையும் பொருளாதார அபிவிருத்தியையும் உறுதிப்படுத்தும் என்ற திட்டமிட்ட தவறான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்குத் தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தருமாறு வெளிப்படையாக மக்களைக் கேட்டுக்கொள்கிறது. இது நாட்டுக்குப் பல்வேறு பாரதூரமான, மீள்செய்யமுடியாத பின்னடைவுகளை ஏற்படுத்தும்:

  • மக்கள் பங்கேற்கும் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்பன முடிவுக்கு வரும்.
  • சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகிய அரச பிரிவுகளுக்கிடையிலான ‘அதிகாரப் பிரிவு’ மழுங்கிப் போகும்.
  • பாராளுமன்ற அதிகாரங்கள் நிறைவேற்று ஜனாதிபதியால் நலிவுறச் செய்படும்
  • சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாதொழிக்கப்படும்
  • மக்கள் முக்கியத்துவம்வாய்ந்த விடயங்களில், ஆக்கபூர்வமான அரசியல் கருத்துப் பரிமாறலும், பொது விவாதமும் அற்றுப்போகும்
  • பல்லின சமூகம் மட்டில் பொறுமை, சமத்துவம், பரஸ்பர மரியாதை என்ற கொள்கைகள் புறக்கணிக்கப்படும்
  • சமூக நிர்வாகங்கள் தேவையற்ற முறையில் இராணுவ மயமாக்கப்படும்
  • ஊடக அடக்குமுறையும் சுதந்திரமான பேச்சுக்குத் தடையும் ஏற்படும்
  • அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டம் இரத்து செய்யப்படும்.

ராஜபக்சக்களின் அரசு மீண்டும் பதவியேற்கும் பட்சத்தில், பொதுமக்களும் புத்திஜீவிகளும் முன்னெடுக்கவேண்டிய கொள்கைத் திட்டங்களை ஜனாதிபதி செயலணிகள் பொறுப்பேற்பது இயல்பாகிவிடுவதுடன், உறவினருக்கு முன்னுரிமை அளித்தல் மீள ஆரம்பிக்கும், பாரியளவு தேசிய சொத்துக்கள் வெளிநாட்டு நலன்களுக்கு விற்பனையாதல் தொடரும், எம் வருங்காலச் சந்ததியினர் திருப்பிச் செலுத்த முடியாதளவுக்கு நாடு மென்மேலும் கடனில் மூழ்கும்.

‘லெகேரம் வாழ்வுவளச் சுட்டு’ (Legatum Prosperity Index) இன் பிரகாரம், உலகின் அதி வளம்மிக்க நாடுகள் அவ்வாறு இருப்பதற்குக் காரணம், தமது குடிமக்களுக்கு அவை வழங்கும் சுதந்திரம், அவர்களது சுகாதார சேவைகளின் தரம், அவர்தம் சமூகங்களுக்கிடையே நிலவும் சகிப்புத்தன்மை, மற்றும் பொருளாதார விடயங்களில் கடைபிடிக்கும் சமவாய்ப்பு. தற்போதைய அரசு ஆட்சிக்கு மீண்டும் தெரிவுசெய்யப்படும் பட்சத்தில், இவையாவுமே மிகவும் தட்டுப்பாடாக இருக்கும்.

அத்தோடு, எந்தக்கட்சி அதிகாரத்துக்கு வந்தாலும், நாட்டில் கோவிட்-19 இனால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதாரத் தாக்கத்தை மீள்செய்ய இன்னும் பல ஆண்டுகள் இயலாதிருக்கும். உலகளாவிய இப் பெரும்பரப்புத் தொற்றுநோய் நன்கு முன்னேற்றமடைந்த நாடுகளைக்கூட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலைக்கு வீழ்த்தியுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது அரசு வாழ்க்கைச் செலவை குறைப்பதாக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது போனதும், அரிசி மற்றும் உணவுப்பொருட்களின் விலையைக் குறைக்கத் தவறியதும், இத்தேர்தலில் அது கொடுக்கும் வாக்குறுதிகளுக்கும் அதே கதிதான் ஏற்படும் என்பதற்கு உதாரணங்களாகும்.

ஆயுதப் படைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்தும் நிலைப்படுத்திவரும் அதேவேளையில், சர்வதேச கடன்வழங்கு நிறுவனங்களின் வேண்டுகோளின்படி நலன்புரி செலவுகள், கல்வி, மற்றும் சுகாதார சேர்வைகளுக்கான செலவுகளை அரசாங்கம் குறைத்துள்ளது. அத்துடன் சுதந்திர வர்த்தக வலையம், ரத்துபஸ்வல ஆகிய இடங்களில் இடம்பெற்றது போல, வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு போன்ற விடயங்களுக்கு எதிரான மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களை அடக்க அரசு வன்முறையை பயன்படுத்தத் தயங்காது என்பதே உண்மை.

மேலும், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கான சர்வதேச உதவி எப்பொழுதும் சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், ஊழல் கட்டுப்பாடு, மற்றும் எவ்வாறு அந்நாட்டு அரசுகள் தம் மக்களுக்கு தொண்டாற்றுகின்றன என்பவற்றின் அடிப்படையிலேயே தங்கியிருக்கிறது. எமது பல்லின மக்கள் வாழும் நாட்டில் என்றும் அழுத்துகின்ற தமிழர்களுடனான அதிகாரப்பகிர்வு பிரச்சினைகள், மற்றும் முஸ்லிம் மக்களுடன் படிப்படியாக மோசமடைந்துவரும் உறவுகள் – இவற்றுக்கு நேர்மையுடனும் விரைவாகவும் தீர்வு காணப்பட வேண்டும்.

ஆகவே, ஒரு நீடித்த நல்லாட்சியை உருவாக்குதில் தமது பங்கை அழிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். தமது கட்சி வேட்பாளர்களை அவர்கள் மனச்சாட்சிக்கு விரோதமாக மௌனிக்கச் செய்யவைக்கும் கட்சிகளுக்குப் பாராளுமன்றத்தில் இடமிருக்கக்கூடாது, அவர்கள் நிராகரிக்கப்பட வேண்டும். மாறாக, வரவிருக்கும் மிகச் சவாலான காலகட்டத்தில்கூட, சமாதானமும் சுபீட்சமும் மிக்க சமுதாயத்துக்கு வழிசெய்யவல்ல ஜனநாயக வழிமுறைகளிலும், வலுவான நிறுவனங்களிலும் உங்கள் நம்பிக்கையை வையுங்கள்.

எனவே, நாட்டின் சகல மூலைகளிலிருந்தும் வாக்களிக்கத் தகுதிபெற்ற அனைவரும் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, இலங்கையை ஓர் நீதியான நாடாக்க வல்ல, நாட்டின் சகல மக்களும் பரஸ்பர மரியாதை, சமஅந்தஸ்து, சமவாய்ப்புடன் செழிப்புற தம்மை ஈடுபடுத்தவல்லவர்கள் என நீங்கள் கருதும் கட்சியினருக்கு, உங்கள் வாக்கை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் வாக்கை பெறுமதி மிக்கதாக ஆக்குங்கள்!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04