'நான் உண்மையான ஐக்கிய தேசியக் கட்சிக்காரன்' என கூறி கட்சிக்கு  களங்கம் ஏற்படுத்த வேண்டாம் - ரணில் விக்கிரமசிங்க

29 Jul, 2020 | 09:51 PM
image

(நா.தனுஜா)

எத்தகைய முரண்பாடுகள் ஏற்படினும் கட்சியைவிட்டுப் பிரிந்து செல்லாத ரணசிங்க பிரேமதாஸ, ஜே.ஆர்.ஜெயவர்தன போன்றோரால் பின்பற்றப்பட்ட கொள்கைகள் தற்போது உடைக்கப்பட்டிருக்கின்றன. 

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளில் உடன்பாடற்றவர்கள் லலித் அத்துலத்முதலி போன்று கட்சியைவிட்டு விலகிச்சென்று, புதிய கட்சியொன்றை உருவாக்கிக்கொள்ள முடியும். அதனை ஒருபோதும் சட்டரீதியாகத் தடுப்பதற்கு என்னால் முடியாது. 

ஆனால், அவ்வாறு செய்துவிட்டு 'நான் உண்மையான ஐக்கிய தேசியக் கட்சிக்காரன்' என்றுகூறி, கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

றம்புக்கனையில் இடம்பெற்ற பொதுத்தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

டீ.எஸ்.சேனாநாயக்கவினால் உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தி இடையூறு விளைவிக்க முற்படுகின்றது என்பதையே மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிப்படுத்துகின்றது. 

வெளியகத்தரப்பினரால் அத்தகைய தாக்கங்கள் எவையேனும் ஏற்படுமாயின், அதிலிருந்து கட்சியைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு எமக்கிருக்கிறது. அந்த வகையில் கடந்த காலங்களைப் போன்றே இம்முறையும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாப்பதை முன்நிறுத்தியே நாங்கள் செயற்படுகின்றோம். ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றுதான் இருக்கிறது.

எமது கட்சியின் சட்டரீதியான தன்மைக்கு சவால்விடுத்து, இங்கிருந்து விலகிச்சென்று ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியவர்கள் ஆரம்பத்தில் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்தார்கள். அந்த முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, மேல்நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். 

ஆனால், எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களைக் களமிறக்கியிருப்பது எமது கட்சிக்கு இடையூறை ஏற்படுத்தும் முயற்சியாகும் என்று மேல்நீதிமன்றம் அதன் தீர்ப்பில் சுட்டிக்காட்டியது. 

அதுமாத்திரமன்றி, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராக இருக்கின்ற ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இருக்கமுடியாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்த பின்னர் சிலர் இன்னமும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உரிமைகோருவது பொருத்தமற்றதாகும்.

அதன்படி கட்சியிலிருந்து விலகி, கட்சியின் கொள்கைகளுக்கும் விதிகளுக்கும் முரணாக செயற்பட்ட 115 பேரின் உறுப்புரிமை தற்போது இரத்துச்செய்யப்பட்டிருக்கிறது. 

மேலும், முறைகேடாக செயற்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 5 குழுக்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றன. விசாரணைகளின் முடிவில் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும். 

இது மிகவும் இலகுவாக எடுக்கப்பட்ட முடிவல்ல. மாறாக நன்கு சிந்தித்து ஆராந்து எடுக்கப்பட்ட தீர்மானமாகும். ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாப்பதற்காக என்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறேன்.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது சுமார் 25 இலட்சம் சிங்கள மக்களின் வாக்குகள் இல்லாதுபோனமையாகும். ஏன் எங்களுக்கு அந்த சிங்கள வாக்குகள் கிடைக்காமல் போனது என்று நான் ஆராய்ந்து பார்த்தேன். 

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது வடக்கு, கிழக்கிற்குச் சென்று அப்பகுதி மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டமையினால் நாம் தோல்வியடைந்த வாக்குகளின் வித்தியாசத்தை ஓரளவிற்கேனும் குறைத்துக்கொள்ள முடிந்தது. 

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும் சஜித் பிரேமதாஸவிற்குக் கட்சியின் பிரதித்தலைவர் பதவியை வழங்கினோம். அதற்காகப் பயிற்சியளித்தோம். பிரதமர் வேட்பாளராவதற்கு வாய்ப்பளிப்பதாகவும் கூறினோம். 

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் களமிறங்கவேண்டும் என்பதே எமது ஒரேயொரு நிபந்தனையாக இருந்தது.

எனினும், ஏதோவொரு காரணத்திற்காகக் கட்சியிலிருந்து விலகிச்சென்று, நீதிமன்றத்திலும் வழக்குத்தாக்கல் செய்தார். ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இருக்கமுடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

ரணசிங்க பிரேமதாஸவிற்கு எதிரான குற்றப்பிரேரணை இப்போது என் நினைவிற்கு வருகின்றது. நானும், காமினி திஸாநாயக்கவும், லலித் அத்துலத்முதலியும் நண்பர்கள். மூவரும் சட்டத்தரணிகள். எனினும், அந்தச் சந்தர்ப்பத்தில் நான் முதலில் கட்சியை முன்நிறுத்தியே செயற்பட வேண்டும் என்று கருதினேன். 

ஏனெனில், எமது இரத்தம் முழுவதிலும் டீ.எஸ்.சேனாநாயக்கவினால் உருவாக்கப்பட்ட இந்தக் கட்சியே வியாபித்திருக்கும் நிலையில், இதிலிருந்து எம்மால் விலகிச்செல்ல முடியாது. 

அந்தவகையில் நாமனைவரும் கட்சி என்ற ரீதியில் ஒன்றிணைந்து செயற்பட்டு பிரேமதாஸவிற்கு எதிரான குற்றப்பிரேரணையைத் தோற்கடித்தோம். அதனையடுத்து பிரேமதாஸ உடனடியாகக் கட்சியின் செயற்குழுவைக்கூட்டி குற்றப்பிரேரணை விவகாரத்துடன் தொடர்புடைய அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கினார். அதன் பின்னரே அவர்கள் இருவரும் வேறொரு கட்சியினை உருவாக்கினார்கள்.

இதுபற்றி அறிந்துகொண்ட ஜே.ஆர்.ஜெயவர்தன மறுநாள் காலை தன்னை வந்து சந்திக்குமாறு கூறினார். அவருடனான சந்திப்பின் போது 'நட்பை இரண்டாம் பட்சமாக்கி, கட்சியைப் பாதுகாப்பதை முன்நிறுத்தியே செயற்பட்டேன்' என்று நான் தெரிவித்தேன். 

நான் செய்தது சரியென்றே ஜே.ஆர்.ஜெயவர்தனவும் குறிப்பிட்டார். அதேபோன்று பிரேமதாஸவும் என்னிடம் ஒன்றைக் கூறினார். எப்போதேனும் எனக்கும், ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கும் இடையில் கொள்கை ரீதியான முரண்பாடுகள் ஏற்படுமாயின், அப்போது நான் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிடுவேனே தவிர, கட்சித்தலைவருக்கு எதிராக செயற்பட மாட்டேன் என்றார். நாம் ரணசிங்க பிரேமதாஸவுடன் கடைசிவரை ஒன்றிணைந்து பயணித்தோம்.

ஆகவேதான், எத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியுடனும், கட்சியின் தலைவருடனுமே இருக்கவேண்டும் என்று நான் எப்போதும் உறுதியுடன் இருந்தேன். அத்தகைய கொள்கையைக் கைவிடுவதாயின் அவர் உண்மையான ஐக்கிய தேசியக் கட்சிக்காரராக இருக்கமுடியாது. 

ஆனால், இன்று எத்தகைய முரண்பாடுகள் ஏற்படினும் கட்சியைவிட்டுச் செல்லாத பிரேமதாஸ, ஜே.ஆர்.ஜெயவர்தன போன்றோரின் கொள்கைகள் உடைக்கப்பட்டிருக்கிறது. தமக்கு விருப்பமில்லாவிடின் கட்சியைவிட்டுச் சென்று, லலித் அத்துலத்முதலி போன்று புதிய கட்சியொன்றை உருவாக்கிக்கொள்ளலாம். அதனை ஒருபோதும் சட்டரீதியாகத் தடுப்பதற்கு என்னால் முடியாது. ஆனால் அவ்வாறு செய்துவிட்டு 'நான் உண்மையான ஐக்கிய தேசியக் கட்சிக்காரன்' என்று கூறவேண்டாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02