வெற்றுத்தேசியவாதத்தினால் பயனில்லை - சமத்துவக் கட்சியின் தலைவர் மு.சந்திரகுமார் செவ்வி

27 Jul, 2020 | 09:37 PM
image

(நேர்காணல்: ஆர்.ராம்)

தமிழினத்தின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டு வரும் நிலையில் வெற்றுத்தேசியவாதம் பேசிக்கொண்டிருப்பதால் பயனில்லை. அவ்வாறனதொரு செயற்பாடானது மறைமுக எதிர்த்தேசியவாதமென்றே கொள்ள வேண்டும் என்று சமத்துவக்கட்சியின் தலைவரும் கேடயம் சின்ன சுயேட்சைக்குழுவின் யாழ்.தேர்தல்மாவட்ட தலைமை வேட்பாளருமான முருகேசு சந்திரகுமார் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின்போது தெரிவித்தார்.

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- பாராளுமன்றத் தேர்தலிலும் சமத்துவக் கட்சி தனித்து  களமிறங்கியமைக்கான காரணம் என்ன?

பதில்:- “தனித்து போட்டியிடுகிறோம்” என்பதை “தனித்துவமாக நிற்கிறோம்” என்றே நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். எங்களுடன் கூட்டு வைப்பதற்காகச் சிலரும் தங்களுடன் எம்மை இணைத்துக் கொள்வதற்குச் சில தரப்பினரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். ஆனால், எங்களுடைய நிலைப்பாடோ முதலில் பலவீனப்படுத்தப்பட்டிருக்கும் தமிழ்ச்சமூகத்தை பலப்படுத்த வேண்டும் என்பதாகும்.

இன்று தமிழ்ச்சமூகம் பலவீனப்படுத்தப்பட்டுச் சிதைக்கப்பட்டுள்ளது. வடமாகாணம் பொருளாதாரத்திலும் கல்வியிலும் சனத்தொகை விகிதாசாரத்திலும் கடைசி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது எமது இனத்தின் இருப்பை நேரடியாகப் பாதிக்கிறது. இனத்தின் இருப்பைப் பற்றிச் சிந்திக்காமல் ‘வெற்றுத் தேசியவாதம்” பேசிக் கொண்டிருப்பதில் எமக்கு உடன்பாடில்லை. உண்மையில் அது மறைமுகமாக எதிர்த்தேசியமாகும்.

இதையெல்லாம் சீர்ப்படுத்தக் கூடிய கொள்கையும் வேலைத்திட்டமும் உள்ள தரப்புகளுடனேயே நாம் இணைந்து வேலை செய்ய முடியும். அத்துடன் செயற்பாட்டு அரசியலை முன்னெடுக்க வேண்டும். அதற்குரிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். தேர்தலில் தலைமைகளும் கட்சிகளும் வெற்றியடைவதற்குப் பதிலாக மக்கள் வெற்றியடையும் பண்பாடு உருவாக்கப்பட வேண்டும் என்றோம். எல்லோரும் பின்வாங்கினர்.

இதேவேளை கட்சியைப் பதிவு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். கால அவகாசம் போதவில்லை என்பதால் சுயாதீனத்தைப் பேணிக் கொண்டு, சுயேச்சைக்குழுவாகக் களமிறங்கினோம்.

கேள்வி:- உங்களுடைய தரப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசியல் தீர்வு,  அபிவிருத்தி போன்ற விடயங்களில் எவ்விதமான முன்மொழிவுகளைக் கொண்டிருக்கின்றது?

பதில்;:- இரண்டும் சமநிலையில், சமநேரத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அரசியல் தீர்வானது, தமிழ் மக்களுடைய அரசியல் போராட்டத்தையும் போருக்குப் பிந்திய அரசியல் நிலவரத்தையும் அடிப்படையாகக் கொண்டு காணப்பட வேண்டும். எமது நீண்ட போராட்டத்தின் இலக்கினை எட்டும் வகையில் பல்லின சமூகங்கள் வாழ்கின்ற நாடுகளுக்குரிய ஒழுங்கமைப்பின் அடிப்படையிலான பன்மத்துவத்தை உறுதி செய்யும் வகையில் சமத்துவத்தினை மையப்படுத்தியதாக  அரசியல் தீர்வு அமைய வேண்டும்.

அபிவிருத்தியானது, கிராமிய பொருளாதாரக் கட்டமைப்புகளை நவீனப்படுத்தி வலுப்படுத்தல். நிலைபேறான அபிவிருத்திக் கட்டமைப்புகளை உருவாக்குதல். இளைய தலைமுறையின் வேலை வாய்ப்புக்கான தொழிற்சாலைகளை எமது மண்ணில் நிறுவுதல். எமது வளங்களைப் பாதுகாத்துப் பயன்படுத்துதல். இதற்கான மக்கள் திரட்சியை – மனித ஆற்றலை பிரயோகித்தல் என்றவாறு அமைய வேண்டும்.

கேள்வி:- பல தமிழ்த் தேசியக் கட்சிகள் களமிறங்கியுள்ளமை தங்களுக்கு சவாலாக இருக்கின்றதெனக் கருதுகின்றீர்களா?

பதில்:- இல்லை. இந்தத் தமிழ்த்தேசியவாதக் கட்சிகள் இன்று மக்களிடம் நம்பிக்கையை இழந்து நிற்கின்றன. இவை எல்லாமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து உடைந்து சிதைந்தவையாகும். ஆக மொத்தத்தில் ஒரு கட்சி பல முகங்களோடு நிற்கிறது.

தற்போது இந்தத் தலைமைகள் எவரிடத்திலும் உருப்படியான ஒரு தீர்வுத்திட்டமோ தீர்வு யோசனையோ கிடையாது. சர்வதேச சமூகம் இலங்கையின் இனப்பிரச்சினைக்குப் பரிந்துரைக்கும் தீர்வு வேறு. இவர்கள் சர்வதேச சமூகத்திடம் கோரும் தீர்வு வேறு. ஆகவே சர்வதேச சமூகத்தின் ஆதரவையோ வலுவான அனுசரணையையோ இவர்களால் பெற முடியாது.

இதேவேளை இலங்கை அரசாங்கத்தின் சிந்தனை வேறு. இவர்களுடைய சிந்தனை வேறு. எனவே இலங்கை அரசாங்கத்தோடும் இவர்கள் தீர்வுக்குறித்துப் பேச முடியாது. இந்தியாவின் சிந்தனையும் அணுகுமுறையும் வேறு. இவர்களின் நிலைப்பாடு வேறு. ஆகவே இந்தியா மூலமான முயற்சியும் சாத்தியமில்லை. இதுவே அரசியல் ரீதியாக இவற்றின் இன்றைய தோல்வியாகும். ஆகவே எமக்கு யாரும் சவால் இல்லை. எம்மையே ஏனையவர்கள் தமக்கான சவாலாகக் கருதுகிறார்கள்.

கேள்வி:- கிளிநொச்சியை மையப்படுத்திய தங்களுடைய அரசியல் செயற்பாடுகள் பாராளுமன்றத்திற்கான அங்கீகாரத்தினை பெற்றுத்தரும் என்று நம்புகின்றீர்களா?

பதில்:- கிளிநொச்சி போரினால் முற்றாகப் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்ற அடிப்படையிலேயே என்னுடைய அரசியற் பணிகள் அங்கே கூடுதலாக இருந்தன. இன்னும் அந்தப் பாதிப்புகளிலிருந்து மக்கள் முழுமையாக மீண்டெழவில்லை. இதற்காக நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.

அதேவேளை என்னுடைய பணிகள் யாழ்ப்பாண மாவட்டத்திலும் விரிவாக்கப்பட்டிருக்கிறது.  தேர்தல் மாவட்டம் என்பது யாழ்ப்பாணத்தையும் கிளிநொச்சியையும் உள்ளடக்கியது என்ற வகையில் எமக்கான ஆதரவு இரண்டு மாவட்டங்களிலும் உண்டு. எமது பணிகளும் இரண்டு மாவட்டங்களிலும் விரிவாக்கம்பெற்றுள்ளன.

கேள்வி:- கிளிநொச்சிமாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக இருக்கும்தாங்கள், வாக்குகளை சிதறடிப்பதற்காகவே மத்தியால் தனித்து களமிறக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்படுகின்றீர்களே?

பதில்:- மக்களுடைய விடுதலைக்கும் முன்னேற்றத்துக்கும் எதிரானவர்களே இப்படிச்சொல்கிறார்கள். அதாவது தங்கள் வெற்றி பாதிக்கப்படப்போகிறதே! தங்களுடைய நலன் கெடப்போகிறதே என்று அச்சப்படுவோரே இப்படிச்சொல்கிறார்கள். இவர்கள்தான் தேர்தல் மேடைகளில் எம்மைப்பற்றிய பொய்களையும் கட்டுக்கதைகளையும் உருவாக்குகிறார்கள்.

நாங்கள் மக்களைத் தவிர வேறு யாருடனும் இணைந்திருக்கவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்த் தரப்பில் சுயாதீனமான நிலைப்பாட்டோடு இருந்தது சமத்துவக்கட்சி மட்டுமே. எவருக்கும் நாம் ஆதரவளிக்கவில்லை. எம்மை விமர்சிப்பவர்களே ஆளுக்கொரு அதிகார சக்திகளின் கால்களைப் பிடித்துக் கொண்டிருந்தவர்கள்.

கேள்வி:- நீங்களும்; தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீதான விமர்சன அரசியலையே செய்து வருகின்றீர்களே?

பதில்:- இல்லை இதை நான் முற்றாக மறுக்கிறேன். நாம் தமிழ் மக்களுடைய எதிர்காலத்துக்கான, அவர்களுடைய முன்னேற்றத்துக்கான, சமூக விடுதலைக்கான, தீர்வுக்கான  அரசியலையே முன்னெடுக்கிறோம். இதற்கு எதிரான எந்தச் சக்திகளையும் நாம் எதிர்ப்போம். விமர்சிப்போம். மக்களுக்கு தெளிவூட்டுவோம். அது எமது கடமையாகும். இதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல, சிங்கள இனவாதச்சக்திகளும் அடங்கும்.

கேள்வி:- தற்போதைய ஆட்சியாளர்கள் 13ஆவது மற்றும் 19ஆவது திருத்தச்சட்டங்களை நீக்குவதற்கு ஆணை கோருவதை எவ்வாறு பார்கின்றீர்கள்?

பதில்:- தமிழ் பேசும் சமூகத்தினருக்கும் இந்த நாட்டுக்கும் எதிரான எந்தச் சட்டத்தையும் எந்த நடவடிக்கைகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஆனால், இவ்வாறான ஒரு களச்சூழலை உருவாக்கியதில் ஐ.தே.கவுக்கும் அதனோடு கூட்டு வைத்துக் கொண்ட தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையகக் கட்சிகளுக்குப் பெரும் பங்குண்டு.

கேள்வி:- இத்தனை பெரிய கட்சிகளுக்கிடையிலான தேர்தற் களத்தில் சுயேட்சையாக நின்று வெற்றியடைய முடியுமென்று நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களா?

பதில்:- ஆம் வரலாற்று உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். 1989 இல் சுயேட்;சைக்குழுவாக நின்று 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்குக் கிழக்கில் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதைச் செய்தது எமது தமிழ் மக்களே. அப்போதும் பெரிய கட்சிகளும் அறியப்பட்ட தலைவர்களான அமிர்தலிங்கம், சம்பந்தன் போன்றவர்களும் போட்டியிட்டேயிருந்தனர். ஆனால், மக்கள் இவர்களைத் தோற்கடித்து சுயேச்சைகளை வெற்றியடைய வைத்தனர்.

எமது மக்கள் சரியானவற்றைத் தெரிவு செய்யத் தீர்மானித்து விட்டால் வரலாறு மாற்றியமைக்கப்படும். இது வரலாற்று மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலமாகும். காலம் மாறி விட்டது என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லத்தான் போகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48