பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ள இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற கையடக்கத்தொலைபேசி செயலிகள் மூலம் விளம்பரப்படுத்தி பாலியல் அடிமைகளாக விற்று வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கு ஈராக்கில் யாஜிதி இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் கடந்த 2014 ஆகஸ்டில் நுழைந்த ஐஎஸ் தீவிரவாதிகள் அங்கிருந்த 3,000 பெண்கள் மற்றும் சிறுமிகளை பிணை கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

உள்ளூரை சேர்ந்த அரபு மற்றும் குர்தீஷ் போராளிகள் பிணை கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட 134 பெண்களை ஒரே மாதத்தில் மீட்டு வந்தனர். 

இதனால் உஷாரடைந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் குர்தீஷ் போராளிகளை கொன்று குவித்து வருகின்றனர். இதன் காரணமாக ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து பெண்களை மீட்கும் நடவடிக்கைகள் குறைந்து வருகின்றன.

அதே சமயம் அரசு படைகளின் தீவிர தாக்குதலால் கடும் பின்னடை வை சந்தித்து வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களது நிதி தேவைக்காக தற்போது பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ள பெண்களை பாலியல் அடிமைகளாக விற்று வருகின்றனர். 

இதற்காக அவர்கள் வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற கையடக்கத்தொலைபேசி செயலிகள் மூலம் விளம்பரம் செய்து வருகின்றனர். அண்மையில் 12 வயது சிறுமியை ரூ.8 இலட்சம் வரை விலை கொடுத்து வாங்க பலர் போட்டி போட்டிருப்பதாகவும் எனவே அவர் விரைவில் விற்கபடுவார் என்றும் ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்ட விளம்பரம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மன் ஈராக் நல அமைப்பு நிறுவனர் மிர்சா டனாய் கூறும் போது, ‘‘ஒவ்வொரு பெண்களையும் தீவிரவாதிகள் பதிவு செய்து வைத்துள்ளனர்.ஐ.எஸ் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளுக்கும் அந்த பெண்களை பற்றிய தகவல் கொடுக்கப்படுகிறது. இதனால் அவர்களால் எளிதில் தப்பித்து செல்ல முடிவதில்லை’’ என்றார்.

அண்மையில் லாமியா அஜி பஷர் என்ற இளம் பெண் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து எப்படியோ தப்பித்து வந்தார். ஆனால் நில கண்ணிவெடியில் சிக்கியதில் அவரது வலது கண் பார்வை பறிபோனது. அவருடன் வந்த 8 வயது அல்மாஸ் என்ற சிறுமியும் கேத்ரின் என்ற இளம் பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதேபோல் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி பிழைத்த நாடியா மவுரத் என்ற பெண் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன் ஆஜராகி யாஜிதி பெண்களை காப்பாற்ற சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.