கொரோனா தொடர்பில் அரசாங்கம் வெளியிடும் தகவல்களில் நம்பகத்தன்மை இல்லை : தேர்தலைத் தவிர்க்கமுடியாது என்கிறார் ஹர்ஷ டி சில்வா

Published By: Digital Desk 3

24 Jul, 2020 | 04:46 PM
image

(நா.தனுஜா)

கொவிட் - 19 தொற்றுப்பரவல் விவகாரத்தில் அரசாங்கம் கூறும் விடயங்களை நம்பமுடியவில்லை. ஏனெனில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளடங்கலாக பல்வேறு சுகாதாரத்துறைசார் அமைப்புக்கள் இன்னமும் வைரஸ் பரவலுக்கான அச்சுறுத்தல்நிலை தொடர்வதாக எச்சரிக்கின்றன. இத்தகையதொரு சூழ்நிலையில் கொவிட் - 19 வைரஸ் பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டிருக்கிறதா என்ற சந்தேகமும் காணப்படுகின்றது.

ஆனால் மற்றொரு பக்கம் பொதுத்தேர்தலை நடத்தவேண்டியது மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் நீண்டகாலமாகப் பாராளுமன்றம் ஒன்று இல்லாமலேயே நாடு இயங்கிக்கொண்டிருக்கிறது. பாராளுமன்றத்தின் அனுமதியில்லாமல் சில முக்கிய விடயங்களில் ஜனாதிபதியினால் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டமை உண்மையில் அரசியலமைப்பிற்கு விரோதமானதாகும். இந்நிலை தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது என்பதால் தேர்தலை நடத்தவது தவிர்க்கப்பட முடியாததாக இருக்கிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் 2020 பொதுத்தேர்தல் வேட்பாளருமான ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் நாட்டில் கொவிட் - 19 நிலைவரம், தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு, பொருளாதார மீட்சி, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த அமுலாக்கம், சுவசரிய இலவச அம்பியூலன்ஸ் சேவையின் அடுத்தகட்ட மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஹர்ஷ டி சில்வா கேசரிக்கு வழங்கிய நேர்காணலில் பகிர்ந்துகொண்டார். அவருடனான நேர்காணலின் முழுவடிவம் வருமாறு

கேள்வி : 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் அனைவரும் ஒருமித்து  'ஐக்கிய தேசியக் கட்சியாக' போட்டியிட்ட போதிலும், அதில் வெற்றியடைய முடியவில்லை. அவ்வாறிருக்க இம்முறை இரண்டாகப் பிளவுபட்டு ஐக்கிய தேசியக் கட்சியாகவும், ஐக்கிய மக்கள் சக்தியாகவும் பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்கிறீர்கள். இத்தகைய சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களின் வாக்குகளும் பிளவடையும் என்பதால் உங்களால் வெற்றிபெறமுடியும் என்று கருதுகிறீர்களா?

பதில் : இப்போதும் நாமனைவரும் ஐக்கிய தேசியக் கட்சி தான் என்கிற போதிலும், ஒருபகுதியினர் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாகவும், மற்றொரு பகுதியினர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவாகவும் செயற்படுகின்றனர். இதனால் கட்சி ஆதரவாளர்களின் வாக்குகளில் குறித்தளவான பிளவொன்று ஏற்படும் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் அது எமது தரப்பிற்கு அந்தளவிற்குப் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் கருதவில்லை. ஏனெனில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பெருமளவான ஆதரவாளர்கள் எமது தரப்பிற்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

அதேபோன்று 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலின் போது காணப்பட்ட நிலைமை தற்போது இல்லை. ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாக்களித்த பலரும் இப்போது வெகுவாக அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். அண்மைக்காலமாக நாடு பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் பெருமளவில் வீழ்ச்சி கண்டிருக்கிறது. அவர்கள் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களித்தவாறு தற்போதைய செயற்பாடுகள் இடம்பெறவில்லை என்பதை மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபாய ராஜபக்ஷவிற்கு வாக்களித்து, அதிருப்தியுற்ற மக்களின் வாக்குகளும் இம்முறைத்தேர்தலில் எமது பக்கம் திரும்புவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

எனவே தேர்தலில் எம்மால் வெற்றியடைய முடியும் என்றே நம்புகின்றோம். அனைவரும் தேர்தலில் வெற்றி பெறுவதை இலக்காகக்கொண்டே போட்டியிடுகின்றோம். எனவே 113 ஆசனங்களைப் பெறமுடியும் என்று நம்புவதோடு, அதுவே எமது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. ஆனால் அவ்வாறு நடைபெறாத பட்சத்திலும் கூட, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு 113 ஆசனங்கள் கிடைக்கும் என்று நினைக்கின்றோம். அதாவது அரசாங்கத்தினால் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையேற்படும்.

கேள்வி : அண்மைக்காலமாக உங்களுடைய தரப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சனம் செய்துவரும் அதேவேளை, அவர்களும் ஐக்கிய மக்கள் சக்தியைக் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். இவ்வாறிருக்கையில் கடந்த காலங்களில் இந்த இருதரப்பும் ஒன்றிணைந்து ஐக்கிய தேசியக் கட்சியாக எப்படி நாட்டை நிர்வகித்தது என்ற சந்தேகம் எழுகின்றதல்லவா?

பதில் : உண்மையில் மோசமான அரசியல் கலாசாரத்தைப் பின்பற்றுபவர்கள் தான் இவ்வாறான விமர்சன அரசியலில் ஈடுபடுவார்கள். ஆனால் நான் அத்தகைய அரசியலைச் செய்வதில்லை. கடந்த காலத்தில் நாம் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆட்சியின்போது இடம்பெற்ற சிறந்த விடயங்களுக்கும், பாதகமான விடயங்களுக்கும் நாமனைவரும் பொறுப்பேற்பதே சரியானதாகும்.

ஆனால் இங்கு முக்கியமாகக் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயம் எதுவெனில் கட்சியிலுள்ள தனிநபர்களின் செயற்பாடுகளும், அவற்றுக்காக அவர்களின் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களுமாகும். சரியான செயற்பாடுகளை முன்னெடுத்தவர்களில் அதிகளவானோர் யாருடைய பக்கம் இருக்கிறார்கள் என்பதும், தவறுகளை இழைத்தவர்களில் பெருமளவானோர் யார் பக்கம் நிற்கிறார்கள் என்பதும் அவதானத்திற்குரிய விடயமாகும். அவற்றைக் கருத்திற்கொண்டு, நன்கு ஆராய்ந்தே மக்கள் வாக்களிப்பார்கள்.

கேள்வி : பெருந்தோட்டத்தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைப் பெற்றுத்தருமாறு நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்ற போதிலும், இதுவரையில் பதவியிலிருந்த எந்தவொரு அரசாங்கங்களும் அதனைப் பெற்றுக்கொடுக்கவில்லை. ஆனால் மீண்டும் ஆட்சியமைத்தால் 1000 ரூபாவைப் பெற்றுக்கொடுப்பதோடு, திறனடிப்படையில் 1500 ரூபா வரையில் கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என்றும் உங்களுடைய கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இது சாத்தியமா?

பதில் : எமது நாட்டில் பெருந்தோட்டங்களில் பெருமளவானோர் வசிக்கின்றார்கள். அவர்களில் அதிகளவானோர் தேயிலைத்தோட்டங்களில் தொழில்புரிகின்றனர். எனினும் அனைத்துத் தோட்டங்களிலும் தேயிலைப் பயிர்ச்செய்கை உச்சபட்ச வெளியீட்டைத்தரும் என்று கூறமுடியாது. தரங்குறைந்த தேயிலையையும் வெளியீடாகப் பெறவேண்டியிருக்கும். இத்தகையதொரு பின்னணியில் நாம் பெருந்தோட்டப்பகுதிகளில் தேயிலைப் பயிர்ச்செய்கையை மாத்திரமன்றி, அப்பகுதியின் சீதோஷணநிலைக்கு ஏற்றவாறான மாற்று உற்பத்திகளையும் ஊக்குவிக்க வேண்டும். உதாரணமாக தேயிலைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாத நிலங்களில் பாற்பண்ணை உற்பத்தியை மேம்படுத்த முடியும். பண்ணையில் நாளொன்றுக்கு ஒரு மாடு 30 - 40 லீற்றர் வரையில் பாலைக் கறக்குமென்றால், அதனூடாகப் பெருமளவில் வருமானமீட்ட முடியும். அதனூடாக பெருந்தோட்ட மக்களின் வருமானங்களில் அதிகரிப்பை ஏற்படுத்த முடியும். வருமானத்தை ஈட்டுவதற்கான புதிய வழிமுறைகள் கண்டறியப்பட வேண்டும்.

கேள்வி : இத்தகைய மாற்றுத்திட்டமொன்று உண்டெனின், அதனை ஏன் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னரான நான்கரை வருட காலப்பகுதியில் செயற்படுத்தவில்லை?

பதில் : நான் இதுவரையில் அமைச்சரவையில் அங்கம் வகித்திருக்கவில்லை என்பதனால் இந்தக் கேள்விக்குப் பதில் கூறுவது சற்றுக் கடினமானதாகும். எனினும் பொதுவில் பெருந்தோட்ட மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான என்தரப்பு ஆலோசனையாக நான் இதனையே முன்வைத்திருக்கின்றேன்.

கேள்வி : 1000 சம்பள உயர்வைப் பெற்றுத்தருவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்திருப்பதைப்போன்று, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நெருக்கடியை எதிர்கொண்ட குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு 20,000 ரூபாவை வழங்குவேன் என்ற சஜித் பிரேமதாஸவின் வாக்குறுதியும் 'இது நடைமுறையில் சாத்தியமா?' என்ற கேள்வியை ஏற்படுத்தியிருக்கிறது அல்லவா?

பதில் : நிச்சயமாக இது சாத்தியமான விடயமே. எவ்வாறெனில் பொருளாதாரத்தில் 'வறுமைக்கோடு' என்ற ஒரு நிர்ணயம் உண்டு. இதனடிப்படையில் நபரொருவர் மரணிக்காமல் வாழ்வதற்கு எவ்வளவு கலோரி உணவு தேவையென்பது கணிப்பிடப்படும். அந்த உணவையும், அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்வதற்கு நபரொருவருக்கு மாதமொன்றுக்கு 5000 - 5500 ரூபா வரையில் சராசரியாகத் தேவைப்படும். எமது நாட்டில் குடும்பமொன்றில் சராசரியாக 4 அங்கத்தவர்கள் இருக்கின்றனர். எனின் மாதமொன்றுக்கு ஒரு குடும்பத்திற்கு 20,000 ரூபாய் தேவைப்படுகிறது.

அடுத்ததாக நாட்டில் 2.7 மில்லியன் மக்கள் சுயதொழிலில் ஈடுபடுகின்றனர். 1.6 மில்லியன் மக்கள் நாளாந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களாக இருக்கின்றார்கள். அவர்களில் சராசரியாக அரைவாசிப்பேர் கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கருதினால் சுமார் 2 மில்லியன் பேருக்கு மாதாந்தம் 20,000 ரூபாவை வழங்கவேண்டும். எனினும் அவர்கள் அனைவருக்கும் 20,000 ரூபாவைத்தான் வழங்கவேண்டும் என்பதில்லை. மாறாக அவர்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்பை அவரவர் கிராமசேவகர் பிரிவின் ஊடாக மதிப்பீடு செய்யமுடியும் என்பதால் சிலருக்கு இதனைவிடவும் குறைவான தொகையைப் பெற்றுக்கொடுப்பது போதுமானதாக இருக்கும். எனவே 2 மில்லியன் குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு சராசரியாக 20,000 ரூபாவை வழங்குவதெனின் 40 பில்லியன் ரூபா தேவை. கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட நெருக்கடிநிலை சுமார் இரண்டு மாதங்கள் தொடர்ந்தமையினால், இருமாதகாலக் கொடுப்பனவை செலுத்துவதற்கு 80 பில்லியன் ரூபா தேவை.

அடுத்ததாக இருக்கின்ற கேள்வி இந்த நிதியை எங்கிருந்து பெற்றுக்கொள்வது என்பதாகும். உண்மையில் 80 பில்லியன் ரூபாவைத் திரட்டுவதென்பது மிகக்கடினமான காரியமல்ல. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பெரும் செல்வந்தர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரி வருமானங்களில் பாரியளவில் குறைப்பைச் செய்தது. அரசாங்கத்தின் இந்த முட்டாள்தனமான செய்கையினால் மாத்திரம் 500 பில்லியன் வரி வருமானம் இழக்கப்பட்டிருக்கிறது. எனவே வரி அறவீடுகளைத் திருத்தியமைப்பதன் ஊடாக கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதமொன்றுக்குச் செலுத்தத் திட்டமிட்டிருக்கும் நிவாரணக்கொடுப்பனவிற்கான நிதியைத் திரட்டிக்கொள்ள முடியும்.

கேள்வி : கொவிட் - 19 பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. எனினும் அண்மையில் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதிலிருந்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் விலகியதோடு, கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் பணிகளிலிருந்து பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களும் விலகினார்கள். எனவே நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலை தொடர்கின்றதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளது. இதுவிடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்த உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில் : கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் விடயத்தில் அரசாங்கம் கூறும் விடயங்களை நம்பமுடியவில்லை. ஏனெனில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளடங்கலாக பல்வேறு சுகாதாரத்துறைசார் அமைப்புக்கள் இன்னமும் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலை தொடர்வதாக எச்சரிக்கின்றன. கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வளித்தல் நிலையத்தில் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது அடையாளங்காணப்பட்டது. இது முதல்நிலை தொடர்பாகும். எனினும் பின்னர் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருப்பது இனங்காணப்பட்டது. இது முதல்நிலைத் தொடர்பாளர்களிடமிருந்து இரண்டாம்நிலைத் தொடர்பாளர்களுக்கு ஏற்பட்ட தொற்றாகும். இத்தகையதொரு சூழ்நிலையில் கொவிட் - 19 வைரஸ் பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டிருக்கிறதா என்ற சந்தேகமும் காணப்படுகின்றது.

ஆனால் மற்றொரு பக்கம் பொதுத்தேர்தலை நடத்தவேண்டியது மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் நீண்டகாலமாகப் பாராளுமன்றம் ஒன்று இல்லாமலேயே நாடு இயங்கிக்கொண்டிருக்கிறது. பாராளுமன்றத்தின் அனுமதியில்லாமல் சில முக்கிய விடயங்களில் ஜனாதிபதியினால் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டமை உண்மையில் சட்டத்திற்கு முரணானதாகும். இந்நிலை தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது என்பதால் தேர்தலை நடத்தவது தவிர்க்கப்பட முடியாததாகும்.

கேள்வி : கடந்த அரசாங்கத்தில் உங்களுடைய முயற்சியிலேயே 'சுவசரிய' இலவச அம்பியூலன்ஸ் சேவை நாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் தாம் ஆட்சியமைத்தால் அதனை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வோம் என்றும், ஹெலிகொப்டர்களில் வைத்தே நோயாளிகளுக்கு அவசர சிகிச்சைகளை அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வோம் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார். இதில் உங்களுடைய முயற்சிக்கான நற்பெயரை அவர் தனதாக்கிக்கொள்வதாக ஒரு விமர்சனம் எழுந்திருக்கிறதே?

பதில் : 'சுவசரிய' அம்பியூலன்ஸ் சேவையை அறிமுகம் செய்தமை முழுவதுமாக எனது யோசனையை மையப்படுத்தியதாகும். எனினும் ஒரு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிறந்த செயற்திட்டங்களுக்கான நற்பெயர் பிரதமரையும் சாரும் எனும் அதேவேளை, அவ்வரசாங்கத்தின் மோசமான செயற்பாடுகளின் விளைவுகளுக்கும் பிரதமர் பொறுப்புக்கூற வேண்டியது அவசியமாகும்.

எனினும் 'சுவசரிய' அம்பியூலன்ஸ் சேவையை எமது நாட்டில் அறிமுகம் செய்வது தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நான்தான் முதலில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டேன். அந்த முதல் கலந்துரையாடலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், நானும், அப்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக இருந்த யஷ்வந்த் சிங்ஹாவுமே இடம்பெற்றிருந்தோம். 2015 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் திகதி நடைபெற்ற அந்தச் சந்திப்பு மற்றும் அதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான காணொளியொன்று என்னிடம் உள்ளது. ஆனால் அதனை இப்போது வெளியிட்டு, தேர்தல் பிரசாரத்திற்கு ஆதரவு தேடிக்கொள்ளும் விருப்பம் எனக்கில்லை. நான் 'ஜென்டில்மேன்' என்பதால் தேர்தலின் பின்னரே அதனை வெளியிடுவேன்.

அந்தவகையில் 'சுவசரிய' அம்பியூலன்ஸ் சேவையின் அடுத்தகட்டமாக நான் ஹெலிகொப்டர்களைக் கொண்டுவரமாட்டேன். இலங்கை ஒரு சிறிய நாடாகும். எனவே ஹெலிகொப்டர்களைக் கொள்வனவு செய்து, அவற்றை சேவையில் ஈடுபடுத்துவதற்குப் பதிலாக மேலும் பல அம்பியூலன்ஸ் வாகனங்களைக் கொள்வனவு செய்வதே எனது திட்டமாகும். அத்தோடு அவற்றின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டிய தேவையிருக்கிறது. தற்போது நாடளாவிய ரீதியில் அம்பியூலன்ஸ் வரும் வரையில் காத்திருக்க வேண்டிய நேரம் சராசரியாக 12 நிமிடங்களும் 45 செக்கன்களுமாக இருக்கிறது. எனினும் மிகவும் அவசரமாக சிகிச்சை வழங்கப்பட வேண்டிய ஓர் நோயாளியினால் இவ்வளவு நேரம் காத்திருக்க முடியாது. அத்தகைய அவசர சந்தர்ப்பங்களில் 5 நிமிடங்களுக்குள்ளாக சுவசரிய அம்பியூலன்ஸ் உரிய இடத்திற்குச் செல்லக்கூடியவாறு மாற்றியமைக்க வேண்டும். அதேபோன்று 5 நிமிடத்திற்குள்ளாக சென்றடைய வேண்டிய அவசர சூழ்நிலைகள் மற்றும் சாதாரண சூழ்நிலைகளை வகைப்படுத்துவதற்கான திட்டமொன்றையும் தயாரிக்க வேண்டும்.

வெறுமனே வாயால் 'நான் அதைச் செய்வேன், இதைச் செய்வேன்' என்று கூறுவது இலகுவான விடயம். எனினும் அதனை நடைமுறைப்படுத்துவதென்பது அத்தனை இலகுவானதல்ல. அவ்வாறிருக்கையில் ஒரு தெளிவான இலக்கைக் கொண்டிருப்பதோடு, அந்த இலக்கை அடைவதற்கான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய ஆற்றல் என்னிடமுள்ளது என்பதைக் கடந்த காலங்களில் நிரூபித்திருக்கிறேன். அதேபோன்று 'சுவசரிய' அம்பியூலன்ஸ் சேவையிலும் மேலும் பல அம்பியூலன்ஸ் வாகனங்களைக் கொள்வனவு செய்தல், வேகத்தை அதிகரித்தல், அவசர சிகிச்சை தேவைப்படும் சூழ்நிலைகளைப் பிரித்தறிதல் ஆகியவற்றையே முதலில் செயற்படுத்த எதிர்பார்த்துள்ளேன்.

கேள்வி : உங்களுடைய தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் தமிழர் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு, அரசியல்கைதிகள் விடுதலை, காணாமல்போனோர் விவகாரம் போன்றவை குறித்து அதிகளவில் பேசப்படவில்லை. தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் தமிழர் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவது சிங்கள மக்களின் வாக்குகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்று அஞ்சுகிறீர்களா?

பதில் : நிச்சயமாக இல்லை. நாம் எமது நிலைப்பாடு என்னவென்பதைக் கடந்த காலங்களில் இருந்தே தெளிவாகக் கூறிவருகின்றோம். இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் உறுதிசெய்யப்படுவதோடு, சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும். அதேவேளை அனைவரும் சமளவில் பொறுப்புக்கூறுவதற்கும் கடமைப்பட்டவர்களாவர். உரிமைகள் தொடர்பில் வலியுறுத்துகின்ற போது, பெரும்பாலும் பொறுப்புக்கள் பற்றிப் பேசத்தவறிவிடுகின்றோம். அந்தவகையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுவதுமான நடைமுறைப்படுத்துவது என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

தற்போது பிறப்புச்சான்றிதழ் தொடர்பில் சர்ச்சையொன்று ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலத்திலிருந்து நாம் இத்தகைய மாற்றத்திற்கான அடித்தளத்தையிட்டு, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தோம். அனைவரும் 'இலங்கையர்' என்ற உணர்வுடன் செயற்பட வேண்டும், அந்த அடையாளத்தை வழங்கவேண்டும் என்பதே எமது நோக்கமாக இருந்தது. ஆனால் தற்போது அத்தகைய மாற்றமொன்று ஏற்படுவதாக செய்திகள் வெளியாகி ஒரேயொரு நாளிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, விமல் வீரவன்ச போன்றோர் அதனைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள். இத்தகைய அடிப்படைவாதத்தோடு இணைந்ததாக நாட்டை நிர்வகிக்க முடியாது. அத்தகைய கொள்கைகளைப் புறக்கணித்து, சமத்துவக்கொள்கை ஒன்றை முன்னிறுத்துவதே எமது நோக்கமாகும்.

நான் இரண்டு கொள்கைகளை முன்நிறுத்தியே அரசியலில் ஈடுபடுகின்றேன். நாட்டின் அனைத்து மக்களும் சமத்துவமானவர்கள் என்பதும், சமூக சந்தைப் பொருளாதாரக் கொள்கையின் ஊடாகவே பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்பதுமே அந்தக் கொள்கைகளாகும். நான் ஏனையவர்களைப் போன்று அரசியலுக்குள் நுழையவில்லை. முதலில் கலாநிதிப்பட்டம் வரையில் கல்வியைப் பூர்த்திசெய்து, பொருளியல் துறையில் பணியாற்றி, வெளிநாடுகள் பலவற்றிலும் பணியாற்றிய அனுபவத்தோடு, ஒரு சிறந்த வணிய முயற்சியாளராகவும் என்னை நிலைநிறுத்தி, அதன் பின்னரேயே அரசியலுக்குள் வந்தேன். எனவே என்னிடம் பல்வேறு துறைகள் பற்றிய பரந்த அனுபவமொன்று காணப்பட்டது. அதுமாத்திரமன்றி நான் ஒரு மத்தியதர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்களாவர். ஆகவே ஒரு சாதாரண குடிமகனின் எண்ணங்களையும், தேவைப்பாடுகளையும் என்னால் புரிந்துகொள்ள முடியும். இவையனைத்தினதும் அடிப்படையிலேயே நான் எனது அரசியல் பயணத்தை எதிர்காலத்திலும் முன்னெடுத்துச் செல்வேன்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22