தமிழர்களின் பிரச்சினைகளைப் பேசுவதால் தேர்தலில் பின்னடைவைச் சந்திக்க நேரும் என்ற அச்சம் எமக்கில்லை - ரவி கருணாநாயக்க செவ்வி

21 Jul, 2020 | 11:17 AM
image

(நா.தனுஜா)

எமது நாட்டை குறித்தவொரு தரப்பினர் அடிப்படைவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் முன்நிறுத்தி நிர்வகிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. மாறாக நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்வத இனமக்கள் அனைவரும் 'இது எனது நாடு' என்று உரிமையுடன் கூறத்தக்கதான நிலையை உருவாக்கவேண்டும்.

 இலங்கையின் பல்வகைமைத்தன்மைக்குள் பிளவுகளின்றி அனைவரும் ஒருமித்து வாழக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும். இவற்றைச் செயற்படுத்த முயற்சித்தமைக்காகவே கடந்த காலங்களில் நாம் தேர்தலில் தோல்வியடைந்திருக்கின்றோம். இருப்பினும் தொடர்ந்தும் இந்த நோக்கத்தை ஈடேற்றுவதற்காகவே புதியவர்களுடன் மீண்டும் தேர்தலில் களமிறங்குகின்றோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி தேர்தல் பிரசாரங்களில் தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்துப் பேசுவதற்கு ஒருபோதும் அச்சப்படவில்லை என்றும், கடந்த காலங்களில் அவ்வாறு அனைத்துத் தரப்பினரதும் பிரச்சினைகள் தொடர்பில் பேசியமைக்காகத் தோல்வியடைந்த வரலாற்றைத் தமது கட்சி கொண்டிருக்கிறது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பொதுத்தேர்தல் பிரசாரங்கள், தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு, பொதுத்தேர்தலின் பின்னரான கூட்டணி, பொருளாதார மீட்சி, ஜனாதிபதி செயலணிகள் குறித்த நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர் கேசரிக்கு வழங்கிய நேர்காணலில் பகிர்ந்துகொண்டார். அவருடனான நேர்காணலின் முழுவடிவம் வருமாறு:

கேள்வி : 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி சஜித் பிரேமதாஸவை வேட்பாளராகக் களமிறக்கியது. நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலுக்கு முகங்கொடுத்த போதிலும் வெற்றியடைய முடியவில்லை. தற்போது இரண்டாகப் பிளவுபட்டுப் பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுப்பது உங்களுடைய தரப்பிற்கு சாதகமாக அமையுமென்று நம்புகிறீர்களா?

பதில் : ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வந்து முடிந்துவிட்டன. நாங்கள் களமிறக்கிய வேட்பாளரால் எதிர்பார்த்தளவிற்கு மக்களை ஈர்த்துக்கொள்ள முடியவில்லை என்பதுதான் தெளிவாகின்றது. வெவ்வேறு கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகுதான் தற்போது இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். எமது கட்சியில் அடிப்படைவாதத்திற்கு இடமில்லை. அத்தகைய அடிப்படைவாத இயல்புடைய நபர்கள் இப்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதால், அவர்களை விலக்கி புதியவர்களை இணைத்துக்கொண்டு, பிழைகளைத் திருத்திக்கொண்டு ஒரு புதிய பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம். அதனூடாக இலங்கையின் பல்வகைமைத்தன்மையை நாங்கள் மேலும் அண்மித்திருப்பதாகவே கருதுகின்றோம்.

கேள்வி : உங்களுடைய கட்சிக்குள் இடம்பெற்ற பிளவின் பின்னர் நீங்கள் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்களை சாடும் அதேவேளை, அவர்களும் உங்கள் தரப்பைக் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். எனின், கடந்த காலத்தில் எவ்வாறு ஒன்றிணைந்து நாட்டை நிர்வகித்தீர்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா?

பதில் : மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் கடந்த காலத்தில் எப்படியிருந்தார்கள்? அரசியலில் இவையனைத்தும் மிகவும் சகஜமான விடயங்களே. ஆனால் நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியினரைத் துரத்தவில்லை. அவர்கள்தான் எம்மைவிட்டுச் சென்றுவிட்டார்கள். அவர்களாகச் சென்றதன் பின்னர் நாம் என்ன செய்யமுடியும்? நாடு சுதந்திரமடைந்த காலப்பகுதியிலிருந்து ஒன்றிணைந்து செயலாற்றுவதும், ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதுமே எமது முதன்மைக் கொள்கைகளாக இருந்துவந்திருக்கிறது. 

அந்தக் கொள்கைகளுக்கு மாறான கருத்தைக் கொண்டவர்கள் எம்மிடமிருந்து விலகியிருக்கிறார்கள். எனவே பிழைகளை சரிசெய்து கொண்டு முன்நோக்கிப் பயணிக்க முடியும் என்றே கருதுகின்றேன். பல்வேறு சவால்கள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். சவால்கள் அற்ற அரசியல் கட்சிகள் இருக்கமுடியாது. எனினும் ஒன்றிணைந்து அவற்றை எதிர்கொண்டு எமது கட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியினரின் ஒரே நோக்கமாக இருக்கிறது.

தற்போது எமது தமிழ்த் தலைவர்களையும், முஸ்லிம் தலைவர்களையும் நாம் இந்தக் கட்சிக்குள்ளேயே உருவாக்க வேண்டும். எமக்கு தமிழ், முஸ்லிம் தலைவர்கள் தேவையில்லை என்ற தவறானதொரு கருத்தை எம்மிடமிருந்து பிரிந்துசென்ற அடிப்படைவாதிகள் பரப்பியிருந்தார்கள். அவர்களிலும் நல்லவர்கள் இருக்கின்ற போதிலும், இப்போது அவர்கள் வேறு கட்சியைச் சேர்ந்தவர்களாவர். அவர்களில் விலகல் விசனமளித்தாலும் பழமையான எமது கட்சியைத் தொடர்ந்தும் பாதுகாத்து முன்நோக்கி நகர்த்திச்செல்ல நாம் தயாராக இருக்கின்றோம்.

கேள்வி : 2015 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் நீங்கள் வடகொழும்பில் இருந்தும், ரணில் விக்கிரமசிங்க மத்திய கொழும்பிலிருந்தும் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டீர்கள். இருப்பினும் நீங்கள் இருவரும் கொழும்பிற்காக எதனையும் செய்யவில்லை என்று எதிர்த்தரப்பினர் விமர்சிக்கின்றனர். இதனை எப்படி நோக்குகிறீர்கள்?

பதில் : அவ்வாறு கூறுபவர் இறந்து, தற்போதுதான் பிறந்திருப்பார் என்று நினைக்கிறேன். இத்தகைய அடிப்படைவாத, சந்தர்ப்பவாத நபர்களைக் கடந்த காலத்தில் எமது கட்சியில் இணைத்துக்கொண்டதால் ஏற்படக்கூடிய விளைவுகள் இவைதான் என்பதை இப்போது புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

கேள்வி : அண்மைக்காலமாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் இராணுவ அதிகாரிகளை உள்ளடக்கி, விசேட ஜனாதிபதி செயலணிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி எத்தகைய நிலைப்பாட்டில் இருக்கிறது?

பதில் : நாட்டில் சிவில் ஜனநாயக ஆட்சியொன்றை முன்னெடுப்பது அவசியமாகும். யாரை நியமித்தாலும் 'ஜனநாயகம்' நிலையாக இருக்கவேண்டும். செயலணிகளில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளோ அல்லது முப்படையைச் சேர்ந்தவர்களோ இருக்கலாம். ஆனால் நிர்வாகம் என்று வருகிறபோது ஜனநாயகத்தை முன்நிறுத்தி செயற்படுவது மிகவும் அவசியமாகும். அதேபோன்று இந்த செயலணிகளில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்வாங்கப்படவில்லை என்று சிலர் சுட்டிக்காட்டியிருந்தார்கள். உண்மையில் அவ்வாறு அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இணைத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும்.

கேள்வி : ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் அதிகளவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு மற்றும் பொருளாதார மீட்சி பற்றியே பேசுகிறது. தமிழர் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு, அரசியல்கைதிகள் விடுதலை, காணாமல்போனோர் விவகாரம் போன்றவை குறித்துப் பேசப்படவில்லை. தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் தமிழர் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவது சிங்கள மக்களின் வாக்குகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்று அஞ்சுகிறீர்களா?

பதில் : எமது கட்சி ஒருபோதும் அவ்வாறு அச்சப்பட்டு அரசியல் செய்யும் போக்குடைய கட்சியல்ல. இந்த நாட்டின் மக்களான சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என அனைத்துத் தரப்பினர் தொடர்பிலும் பேசியமைக்காகக் கடந்த காலங்களில் தேர்தல்களில் தோல்வியடைந்திருக்கிறோம். எனவே 'தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் ஏன் அதைக் கூறவில்லை? ஏன் இதைக் கூறவில்லை' என்று எம்மீது குற்றஞ்சாட்டுவது மிகவும் பிழையான விடயமாகும். நாங்கள் எப்போதும் கூறியவற்றை நடைமுறையில் செயற்படுத்திக் காட்டியிருக்கிறோம். டீ.எஸ்.சேனாநாயக்க வெள்ளையர்களிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதிலிருந்து ஐக்கிய தேசியக்கட்சி 'நல்லிணக்கத்தையே' முதலீடாகக் கொண்டு செயற்பட்டு வந்திருக்கிறது. அனைவரும் ஒன்றிணைந்து வாழத்தகுந்த நாட்டைக் கட்டியெழுப்புவதே இலக்காக இருந்திருக்கிறது.

கடந்த காலத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தைக் கொண்டு வந்தது யார்? காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை நிறுவியது யார்? இவ்விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது யார்? இவையனைத்தையும் கூறியவுடன் நாம் முப்படையினருக்கு இடரை ஏற்படுத்தியதாக சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனால் உண்மையில் முப்படையினருக்கு அதிகளவில் உதவிய கட்சி எமது ஐக்கிய தேசியக் கட்சியாகும். 

அவர்களுக்கான சம்பள உயர்வை வழங்கினோம். அதேபோன்று நாம் இராணுவத்தினரை சர்வதேசத்தின் மின்சாரக்கதிரையில் ஏற்றுவதாகவும் சிலர் குறிப்பிட்டார்கள். ஆனால் இதுவரையில் ஒருவரைக்கூட நாம் அவ்வாறு காட்டிக்கொடுக்கவில்லை. நாம் எப்போதும் அடிப்படைவாதத்தையும், பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் தோற்கடிப்போம். அதனை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள்தான் எம்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர்.

சில தமிழ்க் கட்சிகளும் கூட தேர்தல் காலத்தில் மாத்திரம் ஏனைய கட்சிகளை விமர்சித்து வாக்குகளைப் பெறமுயற்சிக்கின்றன. தமது இனம், மதத்தை விற்று வாக்குகளைச் சேகரிக்கின்றன. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான கட்சியாகும். நாம் கொழும்பில் ஒன்றையும், மட்டக்களப்பில் மற்றொன்றையும், யாழ்ப்பாணத்தில் வேறொன்றையும் கூறுபவர்கள் அல்ல. தேர்தலின் போது வாக்குக் கோருகின்ற கட்சிகள் ஏன் பிரச்சினை ஏற்படும் போது வருவதில்லை என்று மக்கள் சிந்திக்க வேண்டும். தமது பிரச்சினைகளின் போது குரல்கொடுப்பவர்களைத் தெரிவுசெய்வதற்குத் தேர்தல் சிறந்ததொரு சந்தர்ப்பம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கேள்வி : தேர்தலின் பின்னரான செயற்பாடுகள் மற்றும் கூட்டணி தொடர்பில் இதுவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏதேனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறீர்களா?

பதில் : எமது ஊடாட்டங்கள் அனைத்தும் மக்களுடனேயே இருக்கின்றன. மக்கள் அளிக்கின்ற தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடல் நிகழ்த்தியே நாம் செயற்படுவோம். கடந்த காலத்திலிருந்து அவ்வாறுதான் செயற்பட்டு வருகின்றோம். இம்முறை தேர்தலுக்குப் பின்னர் ஏனைய கட்சிகளுடன் பேசுவோமே தவிர, தேர்தலுக்கு முன்னர் எந்தவொரு தரப்பினருடனும் எந்த டீலையும் செய்துகொள்ளவில்லை. எமது டீல் நாட்டுமக்களுடன் மாத்திரமே இருக்கிறது.

கேள்வி : பொதுஜன பெரமுன எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோருகின்றது. அதனூடாக அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் அல்லது அதனை இல்லாமல் செய்யவேண்டும் என்று எதிர்த்தரப்பினர் கூறிவருகின்றனர். இதுகுறித்து ஐ.தே.க எத்தகைய நிலைப்பாட்டில் இருக்கிறது?

பதில் : பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக்கொண்டு திருத்தங்களைக் கொண்டுவருவது திறமையல்ல. மாறாக எம்மைப்போன்று 40 உறுப்பினர்களை வைத்துக்கொண்டு திருத்தத்தை ஏற்படுத்துவதுதான் திறமை. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம், அரச ஊழியர்களுக்கு 10 000 ரூபா சம்பள அதிகரிப்பு, பெற்றோல் மற்றும் எரிவாயு விலைக்குறைப்பு, பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதி உள்ளிட்ட அனைத்தையும் பாராளுமன்றத்தில் 40 உறுப்பினர்களை வைத்துக்கொண்டே செயற்படுத்தினோம். எனவே இவர்கள் எதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோருகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது. ஜனநாயக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையில்லை. அதேவேளை அவர்கள் இம்முறைப் பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டைப் பெறுவதற்கு முதல் பெரும்பான்மையைப் பெறட்டும். பின்னர் ஏனைய விடயங்கள் பற்றி சிந்திக்கலாம்.

கேள்வி : உங்களால் பெரும்பான்மையைப் பெறமுடியும் என்று கருதுகின்றீர்களா?

பதில்: ஆம், நிச்சயமாக.

கேள்வி : நாட்டில் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியினால் மாத்திரமே மீட்டெடுக்க முடியும் என்று கூறிவருகிறீர்கள். பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு எத்தகைய திட்டங்களைக் கொண்டிருக்கிறீர்கள்?

பதில் : ஏன் அவ்வாறு கூறுகின்றோமென்றால், கடந்த காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிகண்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாமே அதனை மீட்டுக்கொடுத்திருக்கிறோம். நாம் செயற்பாட்டாளர்கள். ஏனைய அனைவரும் வெறும் வாய்ச்சொல் வீரர்கள். கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டு 5 மாதங்கள் ஆகின்றன. அரசாங்கம் பொருளாதாரத்தை சீரமைத்திருக்கிறதா? கடந்த காலத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாவினால் சம்பளத்தை அதிகரிக்கவிருப்பதாகக் கூறியபோது, 'அது எவ்வாறு சாத்தியம்' என்று கேட்டார்கள். 

ஆனால் நாங்கள் அதனைச் செய்து காண்பித்தோம். நாடு எதிர்கொண்டிருக்கும் சவால்களில் கொரோனா வைரஸ் பரவல் என்பது ஒரு பகுதியாகும். அதற்குப் பொருளாதாரத்தைப் பலிகொடுக்க முடியாது என்பதுடன், அதனைக் காரணங்காட்டி மக்களையும் அச்சத்திற்குள்ளாக்க முடியாது. மீண்டும் அச்சமின்றி வாழக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்துவதற்கே நாம் முயற்சிக்கின்றோம். அதேபோன்று தற்போது நாட்டின் இளைஞர், யுவதிகளுக்கு இல்லாமல் செய்யப்பட்டிருக்கும் சிறந்த எதிர்காலத்தை நாம் மீண்டும் ஏற்படுத்த எதிர்பார்க்கின்றோம். ஒரு குறித்த தரப்பு இந்த நாட்டை அடிப்படைவாதத்தினால் நிர்வகிப்பதற்கு இடமளிக்கக்கூடாது. மாறாக நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்வத மக்கள் அனைவரும் 'இது எனது நாடு' என்று கூறத்தக்க நிலையை உருவாக்கவேண்டும். இலங்கையின் பல்வகைமைத்தன்மைக்குள் ஒருமித்து வாழக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும். எனவே இவற்றை மனதில்கொண்டு மக்கள் இம்முறைப் பொதுத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22