எனக்கு கட்சிக்குள்ளிருந்தே அழுத்தமளிக்கப்படுகின்றது : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் செவ்வி

19 Jul, 2020 | 07:32 PM
image

(நேர்காணல்:- ஆர்.ராம்)

தேர்தலில் களச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றபோது எமது கட்சிக்குள்ளிருந்தே நிபந்தனைகளும், அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுகின்றமையானது வேதனையை ஏற்படுத்துவதாக உள்ளதென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:-  கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுமாறு அழைப்புக்கள் விடுக்கப்பட்டபோதும் அவற்றை நிராகரித்திருந்த நீங்கள் இம்முறை தேர்தல் களத்தில் பிரவேசிப்பதற்கு விசேட காரணங்கள் உள்ளனவா?

பதில்:- மக்கள் சேவையில் ஈடுபட்டிருந்த எனது கணவர் எம்மை விட்டு பிரிந்திருந்தார். அந்தக்கோர சம்பவத்தினால் தந்தையை பறிகொடுத்த பிள்ளைகள் மற்றும்  குடும்ப சூழ்நிலை காரணமாக என்னால் உடனடியாக எந்த தீர்மானத்தினையும் எடுத்திருக்க முடியவில்லை. அதுமட்டுமன்றி கணவரின் பிரிவுத்துயரிலிருந்தும் உடனடியாக என்னாலும் சரி என்குடும்பத்தினராலும் சரி மீள முடிந்திருக்கவில்லை.

மேலும் எனது கணவருடன் நெருங்கிப் பழகியவர்களில் ஒருவர் தான் தென்மராட்சிக் களத்திலே எனது கணவர் மேற்கொண்டிருந்த மக்கள் சேவையை தொடர்வதற்காக தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தனது விருப்பத்தை வெளியிட்டிருந்தார். ஆகவே அவ்விதமான காரணங்களால் எழக்கூடிய சிக்கல்களை கவனத்திற் கொண்டு அவற்றை தவிர்ப்பதற்காகவும் அரசியலில் பிரவேசிப்பதை நானாகவே தவிர்த்திருந்தேன்.

இருப்பினும் காலச்சூழல் தேர்தலில் பிரவேசிக்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்தியது. குறிப்பாக, எனது கணவர்  விட்டுச் சென்ற பணிகளை தொடர்வதில் இன்னமும் ஒரு தேக்க நிலையே காணப்படுகிறது. அதுமட்டுமன்றி தென்மராட்சி மக்களின் பிரதிநிதித்துவ அரசியலும் கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது.  தென்மராட்சி மக்கள் , மற்றும் பொது அமைப்புக்கள் , நிறுவனங்கள் , சமூகமட்ட தலைவர்கள், என்னைத் தொடர்ந்து , தென்மராட்சி பிரதேச பாராளுமன்ற பிரதிநிதியாக நீங்கள் வரவேண்டும் என்று தொடர்ந்து  வலியுத்தி வந்தார்கள்.

கேள்வி:- இம்முறை பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கியிருக்கும் உங்களின் இலக்கு என்னவாக இருக்கின்றது?

பதில்:- என்னுடைய கணவரின்  இலட்சியத்தை அடைவதற்கு படிப்படியாகவே முன்னேற வேண்டும் என்பது முதன்மையான விடயமாக அமைவதுடன் தென்மராட்சிப் பகுதியில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டியதும் கட்டாயமாகின்றது. அத்தோடு யாழ்.கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களுக்குக்கான பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதும் மிகவும் அவசியமாகின்றது.

அதுமட்டுமன்றி பெண்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்தல், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், பாதிக்கப்பட்டு துயரத்தில் இருக்கும் மக்களின் எதிர்காலம் குறித்த செயற்பாடுகள் உள்ளிட்டவற்றை சமாந்தரமாக முன்னெடுத்துச் செல்லுதல் ஆகியனவற்றை பிரதான விடயங்களாக கொண்டிருக்கின்றேன்.

இதனைவிடவும் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான அனைத்துக் கடமைகளிலும் மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைவாக செயற்படுவதென்ற எண்ணத்தினையும் திடமாகக் கொண்டிருக்கின்றேன்.

கேள்வி:- தற்போதைய சூழலில் யாழ்.தேர்தல்களம் உங்களுக்கு சவாலாக காணப்படுகின்றதா?

பதில்:- ஆம், ஒரேகட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களிடத்திலான ஒற்றுமை என்பதை கருத்தில்  கொள்ளும்  போது அதிருப்திகள் காணப்படுகின்றன. குறிப்பாக கட்சியைச் சார்ந்தவர்களால் எனக்கு ஆதரவு தருவதற்கு நிபந்தனைகளும் அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுவது என்னை வேதனைப் படுத்துவதோடு மிகுந்த சவாலாகவும் காணப்படுகிறது.

சொந்த மக்களினதும் சகோதர வேட்;பாளர்களினதும் ஆதரவையும் ஒத்துழைப்புக்களையும் என்னால்  பெறமுடியாதவிடத்து சிங்கள மக்களின் மனதை வெல்லவது மிகப்பாரிய சவாலாக அமையும் என்ற கேள்வி எனக்குள் எழுகின்றது. ஒற்றுமை என்பது வீட்டில் அல்லது குடும்பத்தில் இருந்து ஆரம்பித்து தேசம் நோக்கி கடந்து செல்லவேண்டும். இதிலே சில விட்டுக்கொடுப்புக்களையும் சகிப்புத்தன்மையையும் புரிந்துணர்வையும் நாம் கொண்டிருக்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாக உள்ளது.

கேள்வி:- உங்களுடைய தேர்தல் பிரசாரங்களில் தலையீடுகளும், தடைகளும் இருப்பதாக கூறியிருக்கின்றீர்களே?

பதில்:- ஆம்,  இதுவொரு கசப்பான உண்மை. யாரையும் சுட்டிக்காட்டி குறைகூறுவதற்கு நான் விளைவில்லை. ஆனால் யதார்த்தமான நிலைமைகளை மறைக்கவும் விரும்பவில்லை. அந்த அடிப்படையில் கட்சியின் மகளிர் அணி சேர்ந்த சிலரே என்னோடு பிரசார பணிகளில் ஈடுபடுகின்றனர். மகளிர் அணியின்  தலைவர் மற்றும் செயலாளர் போன்றவர்களின் ஆதரவு கிடைப்பதற்கான தாமதங்கள் தொடாந்து கொண்டே இருக்கின்றன. 

அத்தோடு வடமராட்சிப் பிரதேசத்தில் எமது தரப்பினைச்சேர்ந்தவொரு வேட்பாளரின் ஆதரவாளர்கள் எனது ஆதரவாளர்களின் பிரசாரப் பணிகளை திட்டமிட்டு தடுத்து வருகின்றார்கள்.  அதுமட்டுமன்றி எனது ஆதரவாளர்களைத் தொடர்புகொண்டு எனக்காக அவர்கள் மேற்கொள்ளும் பணிகளை நிறுத்துமாறும் தொடர்ச்சியாக கோரி வருகின்றனர்.  இத்தகைய செயற்பாடுகள்  நடுநிலை வாக்காளர்களின் தீர்மானத்தில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என்றே கருதுகின்றேன்.

கேள்வி:- இந்த விடயம் சம்பந்தமாக கட்சித்தலைமையுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளீர்களா?

பதில்:-  சில விடயங்கள் குறித்து பேசியுள்ளேன். ஆனால் அவற்றை பொதுவெளியில் பகிர்வதை நான் விரும்பவில்லை. அவ்விடயங்கள் அனைத்துமே உட்கட்சி விவகாரங்களாக இருக்கின்றன.

கேள்வி:- தென்மராட்சியை மையப்படுத்திய பிரதிநிதித்துவம் மாமனிதர் ரவிராஜுக்கு பின்னர் வெற்றிடமாக இருக்கின்ற நிலையில் இம்முறையும் வாக்குச்சிதறல்களால் கானல் நீராகிப்போகும் சூழல் இருக்கின்றதாக கூறப்படுகின்றதே?

பதில்:- இல்லை. அவ்வாறு நான் கருதவில்லை. எனது கணவரின் தூய அரசியல் பயணத்தினை பலர் அறிவார்கள். மேலும் தென்மராட்சி பிரதேசத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெண் வேட்பாளர் என்ற வகையில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

கேள்வி:- உங்களின் தேர்தல் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் மாமனிதரின் அரசியல் செயற்பாடுகளுக்கான பிரதியுபகாரமாகவும் கூட்டமைப்பின் ஊடாக பெண் பிரதிநித்துவத்தை உறுதி செய்யும் முகமாகவும் வாய்ப்பொன்று கட்சியால் வழங்கப்படுமென்று எதிர்பார்கின்றீர்களா?

பதில்:- இதுபற்றி பலர் பேசுகின்றார்கள். ஆனால் கட்சித் தலைமையே அது தொடர்பில் முடிவு செய்யவேண்டும். நான் எனது மக்களையே நம்பியிருக்கின்றேன்.

கேள்வி:- முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உங்கள் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்களை எவ்வாறு பார்கின்றீர்கள்?

பதில்:- இதை ஒரு ஆரோக்கியமான விடயமாகவே பார்க்கிறேன்.  நாம் இருவரும் குறுகிய கால இடைவெளியில் கணவர்களை பறிகொடுத்திருந்தோம். குழந்தைகள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் என்று பலவிதமான இன்னல்களுக்கு முகம் கொடுத்திருக்கின்றோம்.  அவர் அரசியலில் என்னைவிட அனுபவமுள்ளவர், எனக்கு ஆதரவாக கருத்தை வெளியிட்ட அவரின் துணிச்சலை பாராட்டுவதோடு அதற்காக அவருக்கு நன்றி கூறுகிறேன்.

கேள்வி:- மாமனிதர் என்ற கௌரவத்தினை உருவச் சிலையில் உள்ளீர்க்கப்படாமையை எவ்வாறு பார்கின்றீர்கள்?

பதில்:- அது ஒரு தனிநபரின்(தற்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) சொந்த நிதியில் அமைக்கப்பட்டது. அதில் எனது தலையீடு எதுவும் இருக்கவில்லை. அவ்வாறான விடயத்தில் நான் தலையீடு செய்வது முறையற்றதுமாகும். ஆயினும் எமது குடும்ப உறவினர் சிலர் வெளிப்படையாக எதிப்பை வெள்ளியிட்டத்தை  நான் அறிந்திருந்தேன். ஆயினும் மாமனிதர் என்ற பதம் இடம்பெறாதது எனக்கு அதிர்ச்சியையே ஏற்படுத்தியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22