இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜீவன் தொண்டமான் & நுவரெலியா தமிழர்கள்

19 Jul, 2020 | 06:47 PM
image

-டி.பி.எஸ்.ஜெயராஜ்

பாராளுமன்றத் தேர்தல் பிரசாரங்களின் ஆரவாரத்தில் நுவரெலியா மலைகள் அதிர்ந்துக் கொண்டிருக்கின்றன. வனப்புமிகு நிலக் காட்சியையும் நலமார்ந்த காலநிலையையும் கொண்ட நுவரெலியா மாவட்டம் 225ஆசனங்களை கொண்ட இலங்கையின் பாராளுமன்றுக்கு 8 உறுப்பினர்களை தெரிவு செய்கிறது. ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் அந்த மாவட்டத்தின் 577,717 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்வதற்கு தகுதியுடையவர்கள்.

நுவரெலியா மாவட்டம் - தமிழ் ...

இலங்கையின் தேர்தல் வரைபடத்தில் நுவரெலியா தேர்தல் மாவட்டத்துக்கு ஒப்பற்ற ஓர் இடம் இருக்கின்றது. அது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே தமிழ்ப் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட (இந்திய வம்சாவளித் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் மற்றும் இலங்கை சோனகர்கள்) ஒரேயொரு மாவட்டமாகும். 2012 சனத்தொகை கணக்கெடுப்பின் படி, நுவரெலியா மாவட்டத்தின் மொத்த சனத்தொகை 711,644 ஆகும். இவர்களில் இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்களின் தொகை 410,200 (57.6 சதவீதம்) ஆக இருக்கின்ற அதேவேளை, சிங்களவர்களின் எண்ணிக்கை 17,652 ஆக இருந்தது. வேறு சமூகக் குழுக்களின் சனத்தொகை எண்ணிக்கை 1730 ஆகும்.

நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் 4 தேர்தல் பிரிவுகள் இருக்கின்றன. நுவரெலியா – மஸ்கெலியா, கொத்மலை, ஹங்குராங்கெத்த மற்றும் வலப்பனை ஆகியவையே அந்த பிரிவுகளாகும். தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறையின் கீழ் இரண்டு பழைய தொகுதிகளாக இருந்த நுவரெலியாவும் மஸ்கெலியாவும் இணைக்கப்பட்டு நுவரெலியா - மஸ்கெலியா தேர்தல் பிரிவாக்கப்பட்டது. இந்த தேர்தல் பிரிவில் சுமார் 75 சதவீதமானவர்கள் தமிழர்கள், ஏனைய 3 தேர்தல் பிரிவுகளிலும் -முறையே கொத்மலை, வலப்பனை மற்றும் ஹங்குராங்கெத்த – தமிழர்களின் தொகை 53 சதவீதம், 26 சதவீதம் மற்றும் 21 சதவீதமாக இருந்தது. 

ஆகஸ்ட் 5 பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 275 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றார்கள். இவர்களில் 132 பேர் 12 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளையும் 143 பேர் 13 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்தவர்கள். 8 ஆசனங்களுக்கே இவர்கள் போட்டியிடுகின்றார்கள். 2015 பொதுத் தேர்தலிலும் 2010 பொதுத் தேர்தலும் நுவரெலியா – மஸ்கெலியாவிலிருந்து 5 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகினர். அந்த பின்னணியில் பார்க்கையில், பல அரசியல் கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த வேட்பாளர்களில் கணிசமான எண்ணிக்கையானோர் தமிழர்களாக இருக்கின்றனர். 6 சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர் பட்டியலில் முழுப்பேரும் தமிழர்களாக இருக்கின்றனர். 

தமிழர்களை தெரிவு செய்யும் இலக்குடன் தமிழ் வாக்குகளை நாடுவது அண்மைக்கால தோற்றப்பாடில்லை. பிரிட்டனிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கு சற்றுமுன்னதாக நடைபெற்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் மலையக வாக்காளர்களை பிரதிநிதித்துவப்படுத்திய 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். அவர்களில் 7 பேர் இலங்கை - இந்திய காங்கிரஸை (பிறகு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என பெயர் மாற்றப்பட்டது) சேர்ந்தவர்கள். அப்போதைய பாராளுமன்றம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட 95 உறுப்பினர்களையும் 6 நியமன உறுப்பினர்களையும் கொண்டிருந்தது.

இந்திய தமிழர்களின் குடியுரிமையும் வாக்குரிமையும் சுதந்திரத்துக்குப் பின்னர் உடனடியாகவே டி.எஸ்.சேனநாயக்கவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் பறிக்கப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த பாரிய அநீதி அந்த சமூகத்தை நாடற்றவர்களாக்கி வாக்குரிமையையும் இல்லாதவர்களாக்கிய அவர்கள் நிலையில் பல வருடங்களாக எந்தவொரு எம்.பி.யையும் தெரிவு செய்ய இயலாதவர்களாக இருந்தார்கள். 1947க்கு பிறகு மூன்று தசாப்தங்கள் கடந்து 1977 ஆம் ஆண்டில் தான் மலையக தமிழ் மக்களினால் நேரடியாக ஒரு தமிழ் எம்.பி.யை தெரிவு செய்ய முடிந்தது.

சௌமியமூர்த்தி தொண்டமான்

நொயல் தித்தவெல தலைமையிலான தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் நுவரெலியா – மஸ்கெலியா தொகுதிகள் இணைக்கப்பட்டு மூன்று உறுப்பினர்களை தெரிவு செய்யும் தொகுதியாக மாற்றப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் காமினி திசாநாயக்கவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அநுரா பண்டாரநாயக்கவும் முதலாவதும் இரண்டாவதும் எம்.பிக்களாக – முறையே 65,903 மற்றும் 48,766 வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டார்கள். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பழம்பெரும் தலைவரான சௌமிய மூர்த்தி தொண்டமான் காங்கிரஸின் அரசியல் பிரிவின் சார்பில் சேவல் சின்னத்தில் வேட்பாளராக போட்டியிட்டு 35,743 வாக்குகளை பெற்று மூன்றாவது எம்.பி.யாக தெரிவானார். 30 வருட உறங்கு நிலைக்கு பின் மலையக தமிழர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் கொண்டுவரப்பட்ட 1978 புதிய அரசியலைமைப்பு இலங்கையின் தேர்தல் முறையை நேரடியாக தொகுதிகளிலிருந்து எம்.பி.க்களை தெரிவு செய்யும் முறையிலிருந்து மாவட்ட அடிப்படையில் விகிதாசார பிரதிநிதித்துவத்தின் கீழ் எம்.பிக்களை தெரிவு செய்யும் முறைக்கு மாற்றியது. முதல் தடவையாக புதிய தேர்தல் முறையின் கீழ் 1989 பெப்ரவரியில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து ஒரு இந்திய தமிழரும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படவில்லை. 1994 ஆம் ஆண்டு இந்தப் போக்கு மாறத்தொடங்கியது. 

1994 ஆம் ஆண்டிலிருந்து நுவரெலியாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து கிரமமாக இந்திய வம்சாவளித் தமிழர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படத் தொடங்கினார்கள். சிலர் தேசியப் பட்டியலின் மூலமும்  எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டனர். மலையகத் தமிழர்களின் மூத்த தலைவரான சௌமியமூர்த்தி தொண்டமான் 1999 பிற்பகுதியில் காலமானார். இதையடுத்து தலைமைப் பொறுப்பு அவரது பேரன் ஆறுமுகம் தொண்டமானிடம் சென்றது. அவர் தன்னை ஒரு துணிச்சலான தலைவராக நிரூபித்து காட்டினார். ‘தம்பி’ என்று அன்பாக அறியப்பட்ட ஆறுமுகம் 1994 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் நுவரெலியாவிலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு வந்தார்.

1994க்குப் பிறகு தென்னிலங்கையின் 7 சிங்கள பெரும்பான்மை மாகாணங்களிலும் தமிழர்கள் பெருமளவில் வாழ்கின்ற நுவரெலியா மாவட்டத்திலிருந்தே எண்ணிக்கையில் கூடுதலானவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். 1994, 2000, 2001 மற்றும் 2004 பொதுத் தேர்தல்களில் குறைந்தது மூன்று அல்லது நான்கு தமிழ் எம்.பி.க்கள் அந்த மாவட்டத்திலிருந்து தெரிவானார்கள். 2010, 2015 பொதுத் தேர்தல்களில் அந்த எண்ணிக்கை தலா 5 ஆக உயர்ந்தது. 2015 வரை நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவாகின்ற பெரும்பாலான எம்.பி.க்கள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை சேர்ந்தவர்களாக இருந்தனர். பிறகு தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த புதியவர்கள் சில ஆசனங்களை கைப்பற்றத் தொடங்கினார்கள்.

  

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் பங்கேற்றதால் 2010 பொதுத் தேர்தலில் அது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பிலேயே போட்டியிட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆறுமுகம் தொண்டமான், வீ.இராதாகிருஷ்ணன் மற்றும் பெருமாள் இராஜதுரை ஆகியோர் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை முத்துசிவலிங்கம் அந்த முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் எம்.பி.யாக நியமனமானார். பிறகு இராதாகிருஷ்ணனும் இராஜதுரையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து வெளியேறினர். ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட பி.திகாம்பரம் தெரிவு செய்யப்பட்டார். அவர் பிறகு ராஜபக்ச அரசாங்கத்தில் இணைந்து கொண்டார். மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி 2014 ஆம் ஆண்டில் எதிரணியின் பொது வேட்பாளராக வந்ததும் இராஜதுரை எதிரணிக்குத் தாவினார். அவரை திகாம்பரமும் இராதகிருஷ்ணனும் பின் தொடர்ந்தனர். ஆனால் ஆறுமுகம் தொண்டமானும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ_ம் மகிந்தவுடனேயே இருந்தார்கள்.

மைத்திரிபால சிறிசேன மகிந்தவை தோற்கடித்து 2015 இல் ஜனாதிபதியானார். பாராளுமன்றத் தேர்தல்களை அந்த வருடம் ஆகஸ்டில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஒரு முக்கியமான திருப்பமாக மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியும் திகாம்பரம் தலைமையிலான தேசிய தொழிலாளர் சங்கமும் இராதாகிருஷ்ணனின் மலையக மக்கள் முன்னணியும் ஒன்றிணைந்து பாராளுமன்றத் தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியை அமைத்தன. 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடமிருந்து பிரிந்த இராதாகிருஸ்ணன் மலையக மக்கள் முன்னணியின் தாபகத் தலைவராக சந்திரசேகரன் மறைந்த பிறகு அதன் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்த அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டது. தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து மூன்று எம்.பிக்கள் (திகாம்பரம், இராதாகிருஷ்ணன், திலகராஜ்) நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவாகினர். அந்த முற்போக்கு கூட்டணியின் வேறு மூன்று எம்.பிக்களும் தெரிவு செய்யப்பட்டனர். (மனோகணேசன் - கொழும்பு, எம்.வேலுகுமார் - கண்டி, ஏ.அரவிந்தகுமார் - பதுளை);. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ_க்கு இரண்டு எம்.பி.க்கள் மாத்திரமே இருந்தனர். நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் - ஆறுமுகன் தொண்டமானும் முத்து சிவலிங்கமும்.

நுவரெலியாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கனிசமான வாக்குகளை தமிழ் முற்போக்கு கூட்டணி தனதாக்கிக் கொண்டதை 2015 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டின. திகாம்பரமும் மனோகணேசனும் அமைச்சரவை அமைச்சராகவும் இராதாகிருஷ்ணன் ஒரு இராஜாங்க அமைச்சராகவும் பதவியேற்றனர். முதல் தடவையாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எந்தவொரு அமைச்சுப் பதவியும் இல்லாமல் விடப்பட்டார். காங்கிரஸ் பின்னடைவை கண்டாலும் பெருந் தோல்வியை அடையவில்லை.

2018 பெப்ரவரியில் உள்ளுராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டபோது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செல்வாக்கு இழந்துபோன ஒரு அரசியல் சக்தியல்ல என்பதை அதன் அரசியல் எதிரிகளுக்கு காட்டுவதற்கு ஆறுமுகன் தொண்டமானுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவரின் சாதுரியமான தேர்தல் தந்ரோபாயத்தின் கீழ் தனித்து போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குறிப்பிட்ட உள்ளுராட்சி சபைகளிலும் ஏனையவற்றில் கூட்டணியின் தேர்தல் பங்காளியாகவும் போட்டியிட்டு பெரும் வெற்றியை பெற்றது. ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாவட்டத்தில் பல உள்ளுராட்சி சபைகளில் (சிலவற்றில் தலைவர் பதவிகள்) பதவிகளை பெற்றுக் கொண்டது.

2019 ஜனாதிபதித் தேர்தல் வந்தபோது அதன் தெரிவுகள் குறித்து ஆலோசித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்களின் 32 பிரச்சினைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கோரிக்கைகள் உள்ளடங்கிய ஆவணம் ஒன்றை தயாரித்து இரண்டு பிரதான கட்சிகளுக்கும் அதை சமரப்;பித்து கிடைக்கப் பெற்ற பிரதிபலிப்புகளை அடிப்படையாகக் கொண்டு கோத்தாபய ராஜபக்சவை ஆதரிப்பதற்கு தீர்மானித்த அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணி சஜித் பிரேமதாசவுக்கும் ஆதரவளித்தது. நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பெரும்பான்மையினர் வடக்கு கிழக்கு மாவட்டங்களில் நடந்தது போன்று சஜித் பிரேமதாசவுக்கே பெருமளவில் வாக்களித்தனர். சஜித்துக்கு 277,913 வாக்குகள் கிடைத்த அதேவேளை, கோத்தாபயவுக்கு 175,823 வாக்குகள் கிடைத்தன.

ஆறுமுகன் தொண்டமான்

நுவரெலியாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ_க்கு இருக்கும் அரசியல் பலத்தை ஜனாதிபதி தேர்தலொன்றில் ராஜபக்சாக்களுக்கான ஆதரவாக ஆறுமுகன் தொண்டமானால் மாற்ற முடியவில்லை என்பதை 2019 தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டின. கோத்தாபய ராஜபக்ச விடயத்தில் பொதுவில் சிறுபான்மை சமூகங்கள் மத்தியிலும் குறிப்பாக தமிழர்கள் மத்தியில் 'கோத்தா பீதி" ஆழமாக வேறூன்றியிருக்கின்றது போல் தோன்றியது. தங்களுக்கு வாக்குகளை பெற்றுத்தர முடியாவிட்டாலும் கூட ராஜபக்சாக்கள் ஆறுமுகமும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ_ம் வழங்கிய ஆதரவை மெச்சினார்கள். தேர்தலில் வெற்றி பெற்று புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற கோத்தாபய ராஜபக்ச தமது அமைச்சரவையை அமைத்தபோது ஆறுமுகன் தொண்டமான் சமூக வலுவூட்டல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

மார்ச் 2 பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய பொதுத் தேர்தலுக்கான திகதியாக 2020 ஏப்ரல் 25 அறிவிக்கப்பட்ட போது ஆறுமுகன் தொண்டமான் இ.தொ.கா.வை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அணியில் நம்பிக்கையுடன் இணைத்துக் கொண்டு தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு முடிவு செய்தார். ஆறுமுகன் தொண்டமான், பழனி சக்திவேல், மருதபாண்டி இராமேஸ்வரன், அருளானந்தம் பிலிப்குமார் மற்றும் கணபதி கனகராஜ் ஆகியோரும் நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்தனர். நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் பட்டியலுக்கு ஆறுமுகன் தலைமைத் தாங்கினார். பதுளையில் செந்தில் தொண்டமானையும் கண்டியில் பாரத் அருள்சாமியையும் தாமரை மொட்டு சின்னத்தில் இ.தொ.கா களமிறக்கியது. சனத்தொகையில் ஐந்தில் ஒரு பங்குக்கும் கூடுதலானவர்களை இந்தியத் தமிழர்களாகக் கொண்ட வன்னி மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவொன்றையும் இதொகா. ஆதரித்தது. 

எதிர்பாராத முறையில் வந்த கொவிட்19 அச்சுறுத்தல் தேர்தல் திட்டங்கள் எல்லாவற்றையும் குளறுபடியாக்கியது. தேர்தல் பிற்போடப்பட்டதுடன் நாட்டின் அன்றாட வாழ்வும் பெருமளவுக்கு சீர்குலைவுக்குள்ளானது. பிறகு இலங்கைக்கும் மலையகத் தமிழ் மக்களுக்கும் இ.தொ.கா.வுக்கும் தொண்டமான் குடும்பத்தினருக்கும் ஒரு பெரிய அனர்த்தம் நிகழ்ந்தது. மே 26 சௌமியமூர்த்தி ஆறுமுகம் இராமநாதன் தொண்டமான் மாரடைப்பால் காலமானார். 1964இல் பிறந்த அவர் மே 29 உயிருடன் இருந்திருந்தால் அன்றைய தினம் 55ஆவது பிறந்த தினத்தை கொண்டாடியிருப்பார். மே 31 நோர்வூட்டில் பூரண அரச மரியாதையுடன் தொண்டமானின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. அதற்கு  முன்னதாக ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளான மக்கள் தமது அஞ்சலியை அவருக்கு செலுத்தினர். ஆற்றல்மிக்க அரசியல் தலைவரான ஆறுமுகன் தொண்டமானின் வாழ்வும் பணியும் இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதப்பட வேண்டியவை. 

ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு இ.தொ.கா.வுக்குள் வெற்றிடத்தை உருவாக்கியது. அவரின் இடத்துக்கு இ.தொ.கா.வின் தலைவராக யார் வருவார் என்ற கேள்வியும் கிளம்பியது. நுவரெலியா மாவட்ட பொதுஜன பெரமுன வேட்பாளர் பட்டியலில் அவரின் இடத்துக்கு பதிலாக ஒருவரை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆறுமுகத்தின் ஒரே மகனான ஜீவன் குமாரவேல் தொண்டமானை நுவரெலியா வேட்பாளர் பட்டியலில் அவரின் இடத்துக்கு நியமிப்பதென்று இ.தொ.கா.வின் அரசியல் குழு ஏகமனதாக தீர்மானித்தது. பொதுஜன பெரமுனவின் தலைவரும் பிரதமருமான மகிந்த ராஜபக்சவுக்கு இந்த தீர்மானம் முறைப்படி அறிவிக்கப்பட்டது. தேர்தல் சட்டங்களின் பிரகாரம் ஆறுமுகன் மரணமடைந்து மூன்று நாட்களுக்குள் இது நடந்தது.

பொதுச் செயலாளர் 

ஜூன் நடுப்பகுதியில் நிகழ்வுப்போக்குகளில் குறிப்பிடத்தக்க ஒரு திருப்பம் ஏற்பட்டது. கொட்டகலையிலுள்ள காங்கிரஸ் தொழிலாளர் பவுண்டேசனில் ஜூன் 17 ஒரு கூட்டம் நடைபெற்றது. கட்சியின் நிறைவேற்றுக் குழுவுடன் தொழிற்சங்க பிரதிநிதிகளும்  கலந்து கொண்ட அக்கூட்டத்தில் ஜீவன் தொண்டமான் இ.தொ.கா.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். முன்னதாக ஆறுமுகன் தொண்டமானின் தலைமையின் கீழ் பொதுச் செயலாளராக அனுஷியா சிவராஜா செயற்பட்டுக் கொண்டிருந்தார். பொதுச் செயலாளராக ஜீவன் பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து, அனுஷியா இ.தொ.கா.வின் உபதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆறுமுகன் தொண்டமானின் இ.தொ.கா தலைவர் பதவி காலியாகவே விடப்பட்டது. அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு இ.தொ.கா.விலுள்ள எவருக்கும் அவசரம் இருப்பதாக தெரியவில்லை. ஆறுமுகன் தொண்டமானின் இடத்துக்கு பதிலாக நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஜீவன் தொண்டமானின் நியமனமும் இ.தொ.கா.வின் பொதுச்செயலாளராக அவர் தெரிவானமையும் தந்தையாரின் அரசியல்வாரிசு என்ற வகையில் இ.தொ.கா.வின் தலைவராக மகனே வருவார் என்ற ஊகங்களுக்கு வழிவகுத்தது. 

பேரனார் சௌமியமூர்த்தி தொண்டமான் 1999இல் காலமானபோது ஆறுமுகமும் இ.தொ.கா.வின் பொதுச்செயலாளராக பதவி வகித்தவர் தான். பிறகு அவர் இ.தொ.கா.வின் தலைவராக வந்தார். ஜீவனும் கூட எதிர்வரும் நாட்களில் பொதுச்செயலாளராக இருந்து கட்சிக்கும் மக்களுக்கும் சேவையாற்ற விரும்புவார் என்றே தெரிகிறது. ஜீவன் தனது 20களில் இருக்கும் இளம் பராயத்தவர் என்பதால் கொந்தளிப்பான தேர்தல் அரசியலுக்குள் அவரது பிரவேசம் பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஜீவனின் தந்தையார் ஆறுமுகமும் பாட்டனார் சௌமியமூர்த்தி தொண்டமானும் கூட அவர்களின் 20 வயதுகளில் தான் தொழிற்சங்க செயற்பாடுகளை அடிப்படையாகக்கொண்ட அரசியலுக்குள் பிரவேசித்தார்கள் என்பதை பலர் புரிந்துக் கொள்ளவில்லை போல் தெரிகிறது. ஜீவன் விடயத்தில் அரசியல் அவரது முதல் விருப்பத்துக்குரியதாக இருக்கவில்லை. விதி வேறு விதமாக அவரது வாழ்வை மாற்றிவிட்டது. தனது தந்தையாரையும் தன்னையும் பற்றிய நினைவுகள் சூழ்ந்த தேர்தல் பிரசாரம் ஒன்றின் நடுவில் அவர் இன்று இருக்கின்றார்.

ஜீவன் தொண்டமானை அரசியலுக்குள் இழுத்துவிட்ட அல்லது தள்ளிவிட்ட காரணிகளை அவரின் குடும்ப கடப்பாடுகள் மற்றும் தந்தைக்காற்றும் கடமையின் பின்னணியிலேயே விளக்க முடியும். இராஜலக்ஷ்மிக்கும் ஆறுமுகனுக்கும் மூன்று பிள்ளைகள். மூத்த இருவரும் பெண் பிள்ளைகள் - கோதமி நாச்சியாரும்  விஜயலக்ஷ்மியும். இவர்கள் இருவரும் மருத்துவ டாக்டர்கள். அவர்கள் இருவருக்கும் திருமணமாகி பிள்ளைகளும் இருக்கின்றனர்.

இளையவர்; ஜீவன் 1994 நவம்பர் 9ஆம் திகதி  பிறந்தார். கொழும்பில் கேட்வே ஆரம்ப பாடசாலையில் பாலர் வகுப்பிலும் முதலாம் வகுப்பிலும் படித்த பிறகு ஜீவன், தமிழ்நாட்டில் சென்னையிலுள்ள லேடி ஆண்டாள் வெங்கட சுப்ப ராவ் பாடசாலையில் இரண்டாம் வகுப்புக்கு சேர்ந்தார். 12ஆம் வகுப்பு வரை சென்னை  பாடசாலையில் கல்வி கற்ற பிறகு ஜீவன் கோயம்புத்தூரிலுள்ள சின்மயா சர்வதேச பாடசாலையில் ஒரு வருட காலம் பயின்றார். அதற்கு பிறகு ஐக்கிய இராச்சியத்திலுள்ள நியுகாசிலில் நோதம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் படிப்பதற்காக சேர்ந்து கொண்டார். 2017இல் சட்டத்துறை பட்டதாரியாக வெளியேறிய அவர், பிறகு சட்டத்தரணியாவதற்கான பரீட்சைகளில் தோற்றும் நோக்குடன் லண்டனில் வழக்கறிஞர் அலுவலகம் ஒன்றில் உள்ளக பயிற்சியையும் பெற்றுக்கொண்டார். ஒரு சட்டத்தரணியாக வரவேண்டும் என்பதே ஜீவனின் அபிலாசையாக இருந்தது.

இலங்கைக்கு திரும்பினார்

இலங்கைக்கு திரும்பிய ஜீவன் இங்கு ஒரு குறுகிய கால விடுமுறையில் வந்திருப்பதாகவே நினைத்தார். ‘அப்பா, ஆறுமுகத்துக்கு வேறு சிந்தனைகள் இருந்தன. கட்சியினதும் தொழிற்சங்கத்தினதும் பணிகளில் தனக்கு உதவியாக ஜீவன் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இலங்கையில் சட்டக்கல்லூரியில் பிரவேசித்து சட்டத்தரணியாக மகன் வருவதையே அவர் விரும்பினார். வெளிநாடுகளில் பல வருடங்கள் படித்ததினால் வளரும் காலத்தில் தனது தந்தையுடன் நெருக்கமாக வாழும் சந்தர்ப்பத்தை இழந்திருந்த ஜீவன், ஆறுமுகத்துடன் மிக நெருக்கமாக ஊடாடுவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார்.

விமானநிலைய சர்ச்சை குறித்து ஜீவன் ...

ஆறுமுகம், மகனை அரசியல் ரீதியில் வளர்த்தெடுக்க விரும்பினார். தந்தை செல்லுமிடமெங்கும் கூடச் சென்ற ஜீவன் சகல அரசியல் விடயங்களிலும் தந்தை பக்கத்தில் நெருக்கமாகவே நின்றார். மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படும்போது ஜீவன் நுவரெலியாவில் போட்டியிட வேண்டும் என்று ஆறுமுகன் விரும்பினார். ஒரு சட்டத்தரணியாவதே ஜீவனின் கனவாக இருந்தது. ஆனால், தந்தையாரின் விருப்பங்களுக்கு இணங்கிக்கொண்டார். அதேவேளை, ஆறுமுகனும் தனது மகன் இ.தொ.கா.வின் பிரதி பொதுச் செயலாளராக தெரிவாவதை உறுதிசெய்துக் கொண்டார். ஆனால், ஜீவன் தன்னை ஒத்த இளம் தலைமுறையினருடன் சேர்ந்து பணியாற்றி இ.தொ.கா.வின் இளைஞர் விவகார செயலாளராக வருவதையே விரும்பினார்.

இ.தொ.கா.வின் சாதாரண உறுப்பினர்களுடனும் அவர்களது குடும்பத்தவர்களுடனும் ஜீவன் மிகவும் நன்றாக பழகினார். அவர் பாசாங்கற்றவராகவும் சிநேகபூர்வமானவராகவும் எந்தநேரத்திலும் சந்திக்கக்கூடிய அளவுக்கு எளிமையானவராகவும் இருந்தார். இளைஞர்களுடனும் யுவதிகளுடனும் கூட அவருக்கு நெருக்கமான ஊடாட்டம் இருந்தது. அவர் இளம் பராயத்தவராக இருந்ததால் மற்ற இளைஞர்களுடன் மிக எளிதில் பழகக்கூடியவராக இருந்தார். அவர்களது பிரச்சினைகளை விளங்கிக்கொண்ட ஜீவன், அவர்களது அபிலாஷைகளை அனுதாபத்துடன் அணுகினார். இளைஞர் பிரிவு மீளமைக்கப்பட்டது. இ.தொ.கா.வின் அணிக்குள் மேலும் இளைஞர்கள் கவரப்பட்டார்கள். ஐந்தடி ஒன்பதரை அங்குலம் உயரமுடைய ஜீவன், ரசிகர்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு கொண்ட தென்னிந்திய சினிமா நடிகரான சித்தார்த்தின் உருவ ஒற்றுமைகளை கொண்டவர். ஆனால், ஆறுமுகன் தொண்டமானின்  திடீர் மரணத்துடன் எல்லாமே முற்றுமுழுதாக மாறிவிட்டது. ஜீவனின் இளம் தோள்களில் இரவோடிரவாக பாரியதோர் பொறுப்பு சுமத்தப்பட்டது. இ.தொ.கா.வின் சட்டப்பூர்வமான தலைவராக அவர் இல்லாமல் இருக்கலாம். ஆனால், மெய்நடப்பில் இப்போது அவர்தான் தலைவர் என்பதில் சந்தேகமில்லை. நுவரெலியாவிலும் பதுளை மற்றும் கண்டியிலும் பொதுத் தேர்தலில் இ.தொ.கா சிறப்பான முறையில் அதன் மக்கள் செல்வாக்கை உறுதி செய்வதே ஜீவனின் உடனடி பணியாகும். இ.தொ.கா.வுக்காக பிரசாரங்களில் ஈடுபடுகின்ற போதிலும் கூட, அவர் தனக்கும் பெருமளவு விரும்பு வாக்குகளை அறுவடை செய்ய வேண்டிய அவசியம் இருக்கின்றது. அதை செய்ய அவர் தவறினால் அவருக்கு அரசியல் ரீதியில் விரைவில் ஆபத்து ஏற்படக்கூடும். அரசியல் என்பது கழுத்தறுப்பும் துரோகத்தனமும் நிறைந்த ஒரு தொழில் துறையாகும். 

வாக்குகளை கவரும் பிரதான காந்தம்

வாக்குகளை கவரும் இ.தொ.கா.வின் பிரதான காந்தமாக தற்போது ஜீவனே இருக்கிறார். அவர் தனது உரைகளை மக்களுடன் சாதாரணமாக உரையாடுகின்ற  பாணியில் நிகழ்த்துகிறார். அது மக்களை பெருமளவுக்கு கவர்கின்றது. நுவரெலியா தேர்தல் பிரசாரம் இரண்டு நில இயல் பிரிவுகளை இலக்கு வைத்ததாக மேற்கொள்ளப்படுகிறது. 1994 முதல் மூன்று வேட்பாளர்களை முக்கியத்துவப்படுத்தி அவர்கள் சகலருக்கும் வாக்குகளை கவரும் தந்திரோபாயத்தையே இ.தொ.கா கடைப்பிடித்து வருகிறது. அதனால் ஜீவன் தொண்டமான் ஒரு புறத்தில் இராமேஸ்வரன் மற்றும் கனகராஜூடனும் இன்னொரு புறத்தில் சக்திவேல் மற்றும் பிலிப்குமாருடனும் கூட்டாக சேர்ந்து பிரசாரங்களை முன்னெடுக்கிறார். மக்களை கவரும் பிரதான வேட்பாளராக ஜீவனே இருக்கின்ற போதிலும் ஆறுமுகன் தொண்டமானின் ஆளுமைப் படிமத்தின் மீது தீவிர கவனம் செலுத்தியதாகவும் பிரசாரம் இருக்கிறது. இ.தொ.கா.வை பொறுத்தவரை, இழந்த அரசியல் செல்வாக்கை மீட்டெடுத்து தமிழ் முற்போக்கு கூட்டணியை விடவும் கூடுதல் ஆசனங்களை பெறவேண்டியது அவசியமாகின்றது. இது விடயத்தில் தனது தந்தையின் செல்வாக்கையும் கீர்த்தியையும் அவர் மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. 

ஜீவன் தொண்டமானுக்கு எதிராக ...

வருகின்ற தேர்தல்களில் சிறப்பாக செயற்பட வேண்டிய உடனடி பணிக்கு புறம்பாக மேலும் மூன்று கூடுதல் முக்கியமான நீண்டகால அல்லது வாழ்நாள் செயற்றிட்டங்கள் ஜீவனை எதிர்நோக்கியிருக்கின்றன. முதலாவது, கட்சியையும் தொழிற்சங்கத்தையும் மீளகட்டமைத்து இ.தொ.கா.வின் நாட்பட்டுப்போன வாசல்களுக்கு புதுக்காற்றை வீசவைக்க வேண்டியிருக்கிறது. இரண்டாவதாக, ராஜபக்ச அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட்டு தனது தந்தையார் மலையக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000ரூபா தினச் சம்பளம், மலையக தமிழர்களுக்கென தனியான பல்கலைக்கழகம், வீடமைப்பு திட்டங்கள் என்பன அந்த உறுதிமொழிகளில் முக்கியமானவை. மூன்றாவதாக தனது சமூகத்தின் வாழ்வை மாற்றியமைத்து கரத்தை மேம்படுத்த வேண்டிய நீண்ட செயன்முறையாகும்.

தோட்டங்களுக்குள்ளேயே அடைப்பட்டுக் கிடக்க தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் இளம் சந்ததியினர் இன்று விரும்பவில்லை. அவர்கள் நகர்ப் புறங்களிலும் தலைநகர் கொழும்பிலும் புதிய வாழ்வைத் தேடுகிறார்கள்.  வேலைவாய்ப்பின்மைக்கு முடிவுகட்ட விரும்புகிறார்கள். ஆண்கள் மத்தியிலுள்ள மதுப்பழக்கத்தையும் இளைஞர்கள் மத்தியிலுள்ள போதைப்பொருள் பாவனையையும் ஒழித்துக்கட்ட பெண்கள் விரும்புகிறார்கள். மேலும், மலையக தமிழ் சமூகம் பல்வேறு திசைகளில் பரவியிருக்கிறது. அதனால் அந்த சமூகத்தை வெறுமனே பெருந்தோட்ட நிறப்பிரிகையின் ஊடாக மாத்திரம் நோக்கக்கூடாது. வேதனத்துக்காக தொடர்ந்தும் போராடுவதற்கு பதிலாக தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றக்கூடிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். மலையகத்திலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்து தரமுயர்த்தி கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டியிருக்கிறது. சமூக குடியிருப்புகளுக்கு வழிவகுக்கக்கூடிய வீடமைப்புத் திட்டங்களை அமைக்க வேண்டும்.

புதிய வாழ்வை கொண்டுவரும் ஜீவன்

இந்தப் பணிகளை நிறைவேற்றும் வரை உருப்படியான திட்டங்களின் ஊடாக சளைக்காமல் தொடர்ந்தும் பணியாற்றுவதற்கு தொலைநோக்கும் ஆற்றலும் அவசியமாகிறது. ஜீவனின் பொதுக்கூட்டப் பேச்சுக்களையும் ஊடகங்களுக்கான பேட்டிகளையும் அவருக்கு நெருக்கமான பல்வேறு வட்டாரங்களிலிருந்து பெற்ற தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடும்போது, ஒரு மாற்றத்தை நிகழ்த்தக்கூடிய ஆற்றலும் துடிப்பும் அவரிடம் இருப்பதாக நான் உணர்கிறேன். தவிரவும் மிகவும் இளையவர் என்ற வகையில் தனது தொலைநோக்கு இலட்சியங்களை அடைவதை நோக்கி செயற்படுவதற்கு அவருக்கு போதுமான காலம் இருக்கின்றது. மரங்களை நடுவதற்கும் தனது உழைப்பின் மூலம் பழங்களை ருசிப்பதற்குமான காலம் இருக்கிறது. ஜீவன் என்பது உயிர் என்று அர்த்தப்படும். ஜீவன் தொண்டமான் இ.தொ.கா.வுக்கும் நுவரெலியா மக்களுக்கும் இலங்கையிலுள்ள இந்திய தமிழ் சமூகத்துக்கும் ‘புத்துயிரை’ கொண்டு வருவார் என்று நம்பப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குறணை கிராமமும் பொது மக்களின் சவால்களும்

2024-03-29 16:46:00
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48