நேபாள கம்யூனிஸ்ட் அரசாங்கத்துக்குள் கடும் முரண்பாடுகள்; இணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சீனா

10 Jul, 2020 | 09:17 PM
image

-பி.கே.பாலச்சந்திரன்

நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலீயின் மக்கள் செல்வாக்கு கடுமையாக வீழ்ச்சி கண்டிருக்கும் நிலையில், பாரதூரமான உள்முரண்பாடுகளின் விளைவாக கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் கதி அந்தரத்தில் தொங்குகிறது. ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இணைத்தலைவரான புஷ்ப கமால் தஹாலும் ‘பிரசண்டா’ பிரதமர் ஒலீயும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்களுக்கிடையிலான முரண்பாடுகள் குறித்து ஆராய்ந்து இணக்கப்பாடொன்றுக்கு வருவதற்காக சந்தித்தனர். ஆனால், எந்தவொரு இணக்கப்பாடும் ஏற்படவில்லை. ஒலீ பிரதமர் பதவியிலிருந்தும் கட்சியின் இணைத்தலைவர் பதவியிலிருந்தும் விலக வேண்டும் என்று பிரசண்டா வலியுறுத்துகிறார். ஆனால் அவ்வாறு விலக பிரதமர் மறுத்துவிட்டார்.

தன்னை பதவி கவிழ்ப்பதற்கு புதுடில்லியில் தீட்டப்பட்ட சதித்திட்டம் ஒன்றின் அங்கமாக பிரசண்டா செயற்படுவதாக ஒலீ பகிரங்கமாக குற்றஞ்சாட்டியதையடுத்து கட்சிக்குள் நெருக்கடி தீவிரமடைந்தது. குறிப்பிட்ட சில முக்கியமான புவிசார் மூலோபாய விவகாரங்களில் ஒலீ கடும்தேசியவாத நிலைப்பாட்டையும் சீனாவுக்கு சார்பான போக்கையும் கடைபிடித்து வருகின்றமையினால் புதுடில்லி எரிச்சலடைந்திருக்கிறது. ஆனால், நேபாளத்தின் தற்போதைய அரசியல் நெருக்கடியில் இந்தியாவுக்கு எந்த பங்கும் இல்லை என்று நிராகரித்திருக்கும் பிரசண்டா ‘நீங்கள் பதவியிலிருந்து விலகவேண்டும் என்று விரும்புவது இந்தியா அல்ல. நான்தான்’ என்று ஒலீயை பார்த்து கூறியிருக்கிறார்.

எது எவ்வாறிருந்தாலும், ஒலீ கட்சியின் இணைத்தலைவர் பதவியிலிருந்தும் பிரதமர் பதவியிலிருந்தும் விலக வேண்டும் என்று நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலையியற் குழுவின் 44உறுப்பினர்களில் 30பேர் வரை கோரிக்கை விடுத்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

மக்கள் பிரதிநிதிகள் சபையின் (பாராளுமன்றம்) கூட்டத்தொடரை பிரதமர் ஒலீ கடந்த வியாழக்கிழமை ஒத்திவைத்ததையடுத்து முன்னரை விடவும் சுலபமாக கட்சிகளை பிளவுபடுத்தக்கூடிய ஒரு ஒழுங்குவிதியின் ஊடாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை பிளவுபடுத்துவதற்கு அவர் திட்டமிடுகிறார் என்று விசனம் கிளம்பியிருக்கிறது. தனது ஐக்கிய மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு புத்துயிர் கொடுத்து நேபாள காங்கிரஸ_டன் இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைத்து தொடர்ந்தும் பிரதமராக இருப்பதற்கு அவர் திட்டமிடுகிறார் என்று கூறப்படுகிறது. 

நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் டியூபாவுடன் பிரதமர் ஒலீ 90நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒலீ சீன சார்பானவராகவும் டியூபா இந்திய சார்பானவராகவும் கூறப்படுகிறது. அது அவர்கள் இருவருக்கும் ஒரு பிரச்சினையாக இல்லை. கோட்பாட்டு ரீதியான பொருத்தப்பாட்டை விடவும் ஆட்சி அதிகாரமே பிரதான அக்கறையாக இருக்கிறது. 1917 ஒக்டோபர் பாராளுமன்றத் தேர்தலில் ஒலீ  - பிரசண்டா கூட்டணி மகத்தான வெற்றிபெற்றதையடுத்து, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டது. ஆனால் சுமார் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கொண்ட அந்த அரசாங்கம் மூன்று வருடங்களுக்கும் குறைவான காலத்துக்குள் அதன் ஆட்சியாற்றல் எல்லையின் முடிவை எட்டிவிட்டது.

தேர்தலுக்கு பிறகு 2018 மேயில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. பிரதமர் ஒலீயின் ஐக்கிய மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பிரதமர் பிரசண்டாவின் மாவோ வாத நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும் நாட்டுக்கு ஒரு உறுதியான மத்திய இடது மற்றும் தேசியவாத கோட்பாட்டுத் தளம் ஒன்றை கொடுப்பதற்காக ஒன்றிணைந்து கொண்டன. ஒலீ பிரதமராகவும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இணைத்தலைவர்களில் ஒருவராகவும் இருப்பதற்கும் பிரசண்டா மற்றைய இணைத்தலைவராக இருப்பதற்கும் இணக்கப்பாடு காணப்பட்டது. பாராளுமன்றத்தின் 5வருட பதவி காலத்தில் அரைவாசி காலத்துக்கு ஒலீ பிரதமராக இருப்பார் என்றும் அதற்கு பிறகு இரண்டாவது அரைவாசிக் காலத்துக்கு பிரசண்டா பிரதமராக வருவதற்கும் கூட இணக்கம் ஒன்று காணப்பட்டது.

ஆனால், ஒலீக்கும் பிரசண்டாவுக்கும் இடையிலான உறவுமுறை சீர்குலைவதற்கும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலையியற்குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஒலீக்கு எதிராக திரும்புவதற்கும் நீண்டகாலம் எடுக்கவில்லை. ஒலீ சர்வாதிகாரத்தனமாகவும் தன்னெண்ணப்படியும் செயற்படுவதுடன் தன்னை முற்றுமுழுதாக ஓரங்கட்டுகிறார் என்று பிரசண்டா குற்றம் சாட்டினார். பிரதமர் ஒலீ தனக்கு நெருக்கமான சிறிய ஒரு குழுவினருடன் மாத்திரமே கலந்தாலோசித்து தன் விருப்பப்படி செயற்படுவதுடன் தனது ஐக்கிய மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாட்டாளராக இருந்த ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரியுடன் பங்காளியாக செயற்படுவதாகவும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி முறையிட்டது. 

நேபாள பிரதமர் கே.பி. ஓலி ராஜிநாமா ...

மக்களை தன் பக்கம் இழுப்பதற்காக ஒலீ மேற்கு நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லையிலிருக்கும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த காலாபாணி, லிம்பியாதுர, லிபுலெக் என்ற மூன்று பகுதிகளில் இந்தியாவின் கட்டுப்பாடு தொடர்பான தேசியவாத பிரச்சினையை கிளப்பினர். இந்த பகுதிகளை நேபாளம் தனக்குரியதென உரிமைகோரி வந்தது. இந்தப் பிரச்சினையில் ஒலீக்கு பரந்தளவு ஆதரவு கிடைத்தது. சர்ச்சைக்குரிய இந்தப் பகுதிகளை முறைப்படி நேபாளத்துடன் உள்ளடக்கும் உத்தியோகபூர்வமான நேபாள வரைபடம் ஒன்றை வரைவதற்கு பாராளுமன்றம் அரசியலமைப்பு திருத்தமொன்றை ஏகமனதாக நிறைவேற்றியது. ஆனால், இந்த நடவடிக்கை அவர் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று அவரை எதிர்ப்பவர்களை நம்பவைக்க தவறிவிட்டது. ஒலீயின் எதிராளிகளை பொறுத்தவரை பிரதமர் என்ற வகையிலும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இணைத் தலைவர் என்ற வகையிலும் முறையாக செயற்படாமல் அவர் பெருந் தோல்வியை கண்டுவிட்டார் என்பதே அபிப்பிராயமாக இருந்தது.

தனது உறுதிமொழிகளை காப்பாற்றக்கூடிய முறையில் செயற்படவில்லை என்பது அவருக்கு எதிரான முறைப்பாடுகளில் முக்கியமானது. பாராளுமன்றத்தின் ஐந்துவருட பதவிகாலத்தில் முதல் அரைவாசியில் தான் பிரதமராக இருப்பதென்றும் அடுத்த அரைவாசி காலத்தை பிரசண்டாவுக்கு கொடுப்பதென்றும் காணப்பட்டிருந்த இணக்கப்பாட்டை அவர் மீறிவிட்டார். பேச்சுவார்த்தைகளையடுத்து, முழுமையான 5வருட பதவி காலத்துக்கும் பிரதமராக அவர் தொடர்வதற்கு அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அதற்கு பிரதியுபகாரமாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இணைத்தலைவர் என்ற வகையில் பிரசண்டா கட்சிக்கு தலைமைதாங்கி வழிநடத்துவதற்கு அவருக்கு முழுமையான நிறைவேற்று  அதிகாரங்களை கொடுக்க வேண்டும் என்று ஒலீயிடம் கேட்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் பிரசண்டாவும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலையியற் குழுவும் தொடர்ந்தும் ஓரங்கட்டப்பட்டன.

ஒலீ தனது கையில் அதிகாரங்களை குவித்து வைத்திருந்ததினால் நேபாளத்தில் நடக்கக்கூடிய தவறுகள் அனைத்துக்கும் அவரே பொறுப்பு என்ற குற்றம் சாட்டப்பட்டது. கொவிட் 19 தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு சீனாவிடமிருந்து மருத்துவ விநியோகங்களை கொள்வனவு செய்வதில் முறைகேடுகள் இடம்பெற்றன.

கொவிட் நோயினால்  பாதிக்கப்பட்டவர்களை இனங்காண்பதற்கு நம்பகத்தன்மையற்றதும் சர்ச்சைக்குரியதுமான உபகரணத்தை சீனாவிடமிருந்து கொன்வனவு செய்ததில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் கிளம்பியதாகவும் ஷிராத்த பொக்காரல் என்ற அரசியல் ஆய்வாளரான பெண்மணி ‘த டிப்ளோமற்’ சஞ்சிகையில் எழுதியிருந்தார். அந்த கொள்வனவு விவகாரத்தில் ஆளுங்கட்சிக்கு நெருக்கமான தனியார் கம்பனி ஒன்றுக்கு சலுகை காட்டப்பட்டதாக முறைப்பாடு ஒன்று கூறப்பட்டது. நேபாளம் மார்ச் பிற்பகுதியில் ஊரடங்கை நடைமுறைப்படுத்தியபோது கொவிட் 19 நோயினால் பீடிக்கப்பட்ட இருவர் மாத்திரமே இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், ஜூலை 6ஆம் திகதியளவில் 34பேர் பலியானதாகவும் 15884பேர் தொற்றுக்கு இலக்கானதாகவும் உறுதிப்படுத்தப்பட்டது. சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட நம்பகத்தன்மையற்ற உபகரணத்துக்கு பதிலாக பி.சி.ஆர். சோதனை செய்யப்பட வேண்டும் என்று மக்கள் கோருகிறார்கள்.

COVID-19 and hygiene in Nepal | WaterAid Global

கொவிட்- 19 தொற்றுக்கு இலக்கானவர்களை தனிமைப்படுத்தும் நிலையங்கள் மிகமோசமானளவுக்கு நெரிசல் நிறைந்ததாக இருந்தன. ‘தூயநீர், போஷாக்கான உணவு, மலசலகூடங்கள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததாக இருந்தன. மருத்துவ பராமரிப்பும் மிகவும் மோசமானதாக இருந்தது. நம்பகமான மருத்துவ பரிசோதனை நடைமுறை ஒன்றை கடைபிடிக்க நேபாளத்தினால் இயலாமல் இருந்தது. கொவிட்- 19இன் விளைவாக மரணமடைந்தவர்களில் பலருக்கு அந்த நோய் தொற்றியிருந்தது என்பதே மரணத்துக்கு பின்னர்தான் உறுதி செய்யப்பட்டது என்று ஷிராத்த பொக்காரல் எழுதுகிறார். கொவிட்- 19 பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் வரியிருப்பாளர்களின் பணம் எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பது தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் அரசாங்கம் செயற்படவில்லை என்றும் மக்கள் குறை கூறினார்கள். இதுவரையில் கொவிட்- 19 நெருக்கடியை கையாள்வதற்கு 8கோடியே 20இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு சமமான பணம் செலவு செய்யப்பட்டதாக ஒலீ அரசாங்கம் அறிவித்த பின்னணியில் மக்களினால் முன்வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டு முக்கியமான கவனத்துக்குரியது.

வீதி ஆர்ப்பாட்டங்களுக்கு புறம்பாக சமூக ஊடகங்களையும் செயற்பாட்டாளர்கள் பயன்படுத்தினார்கள். அரசாங்கத்தின் தவறுகளுக்கு எதிராக செயற்படுவதில் எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ்;  மிகவும் பலவீனமாக இருந்தது. அந்த ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்தவர்கள் தங்களுக்கு பரந்தளவில் ஆதரவை பெறுவதற்கு தங்களது போராட்டத்தின் ‘அரசியல் சார்பற்ற தன்மையை வெளிப்படுத்துவதற்கு பெரும் கஷ்டப்படவேண்டியிருந்தது.

Political manoeuvres compromise Nepal's COVID-19 response | East ...

இது பற்றி விளக்கமளிக்கும் ஷிராத்த எழுதியிருப்பதாவது:

‘கட்சி சார்பான மாணவர் சங்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் பக்கச்சார்பானவையாகவும் அராஜகத்தன்மை கொண்டவையாகவும் சர்ச்சைக்குரியவையாகவும் இருந்த நீண்ட வரலாற்றை மனதிற்கொண்டு இந்த போராட்டக்காரர்கள் தங்களது ஆர்ப்பாட்டங்களுக்கு அரசியல் கட்சிகளினதும் குழுக்களினதும் தொடர்புகள் இல்லாமல் இருக்க வேண்டுமென்று அக்கறை கொண்டிருந்தார்கள். நேபாளத்தில் அமைதியின்மையை தூண்டிவிடுவதற்கு வெளிநாட்டு சக்திகளினால் தீட்டப்படுகின்ற சதி முயற்சிகள் குறித்தும் பல்வேறு கதைகள் வந்ததினால் இந்த ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்தவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியேற்பட்டது. தேச விரோதிகள் என்று தங்களுக்கு நாமகரணம் சூட்டப்படும் என்று அவர்கள் பயந்தார்கள்.

‘உண்மையில் ஜூன் 13ஆம் திகதி பாராளுமன்றம் இந்தியாவுடனான சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதிகளை நோபாளத்துக்குள் உள்ளடக்கிய நாட்டின் புதிய அரசியல் வரைபடத்தை அங்கீகரித்தபோது இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசியலமைப்பு திருத்தத்தை வரவேற்று கொண்டாடத் தவறவில்லை. ஆனால், அதற்காக ஒலீ அரசாங்கத்தை அவர்கள் முழுமையாக ஆதரிக்கின்றார்கள் என்றும் இல்லை. தாங்கள் எந்தவொரு கட்சிக்கும் சார்பானவர்கள் இல்லை என்பதை வெளிக்காட்டுவதில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்’.

ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிளவொன்று வெகு விரைவில் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக தோன்றுகின்றபோதிலும், கட்சிக்குள் ஒரு இணக்கப்பாட்டை கொண்டு வருவதற்கு 2ஆம் மட்ட தலைவர்களினாலும் கட்சியின் இளைஞர் பிரிவினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் காரணத்தினால் தான் ஒலீயும் பிரசண்டாவும் அடிக்கடி சந்திக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.

சீனாவும் கூட கம்யூனிஸ்ட்க்குள் ஐக்கியத்தை கொண்டுவரும் முயற்சியில் ஒரு பங்கை வகிக்கிறது. ஏனென்றால் கம்யூனிஸ்ட் ஒருமைப்பாட்டிலும் அவர்கள் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருப்பதிலுமே நேபாளத்தில் சீனாவின் மூலோபாய மற்றும் பொருளாதார வெற்றி தங்கியிருக்கிறது.

2010ஆம் ஆண்டுக்கு பிறகு நேபாளத்தின் மீது சீனாவின் செல்வாக்கு வளர்ந்து கொண்டே வருகிறது. முதலாவதாக நேபாளம் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கின் பேரார்வம் மிக்க மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் அங்கமாக இருக்கிறது. இந்த செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டியவை என்று 35திட்டங்களை நேபாளம் அடையாளம் கண்டிருந்தது. இவற்றில் உட்கட்டமைப்பு, அபிவிருத்தி, சக்தி, நீர்ப்பாசனத் திட்டம், சுதந்திர வர்த்தகப்பகுதி ஆகியன உள்ளடங்குகின்றன. இந்த திட்டங்களுக்கு 1000கோடி டொலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்படுகின்றது.

இரண்டாவதாக சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் தோழமை உறவுகள் இருக்கின்றன. ஜூன் முற் பகுதியில் இரு கட்சிகளும் இயக்க ஒழுங்கமைப்பு விவகாரங்கள் தொடர்பில் இணையவழி கருத்தரங்கொன்றையும் நடத்தியிருந்தன. இந்த கருத்தரங்கில் பிரதம விருந்தினராக பிரசண்டா கலந்துகொண்டிருந்த அதேவேளை, பிரதமர் ஒலீ பங்கேற்கவில்லை.

மூன்றாவதாக காத்மண்டுவில் இருக்கும் சீனத் தூதுவர் ஹோ யாங்சி, நேபாளத்தில் கம்யூனிஸத்தின் பரந்தளவு நலன்களுக்காக ஒலீயும் பிரசண்டாவும் தங்களுக்கிடையிலான முரண்பாடுகளை களைந்து இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் கியாவாலி ஊடாக ஆலோசனை வழங்கினார். இவ்விருவரையும் இணங்கவைப்பதற்கு சீனாவினால் இயலுமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒலீயின் மக்கள் செல்வாக்கு வீழ்ச்சி கண்டு வருவது வெளிப்படையாக தெரிவதையும் சீனா கருத்தில் எடுத்து செயற்பட வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13