எந்தவொரு பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடாத பொதுஜன பெரமுன பெருவெற்றி பெறும் வாய்ப்பு

Published By: Vishnu

09 Jul, 2020 | 02:54 PM
image

-ராஜன் பிலிப்ஸ் 

2020 ஆகஸ்ட் 5 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவிருக்கும் இலங்கையின் 16 ஆவது பாராளுமன்றத் தேர்தல் சுதந்திர இலங்கையில் ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெறுகின்ற நான்காவது பாராளுமன்றத் தேர்தலாகும். 

1947 ஆம் ஆண்டு முதன்முதலாக நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பு ஆகஸ்ட் 25 தொடக்கம் செப்டெம்பர் 20 வரை சுமார் ஒருமாதகாலத்திற்குக் கட்டங்கட்டமாக இடம்பெற்றது.

தேர்தலுக்குப் பிறகு பதவி விலகவிருந்த அமைச்சரவை உறுப்பினர்கள் டி.எஸ்.சேனாநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளரக்ளாகவே தேர்தலில் போட்டியிட்டார்கள். அவர்கள் நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றைய பகுதிக்கு அரசியல் பிரசாரங்களுக்குச் செல்வதற்காக அரசவளங்களைப் போதுமானளவிற்குப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் அந்தரங்க நோக்கத்துடனேயே ஒரு மாதகாலத்திற்கு வாக்களிப்பு நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வாறு பல நாட்களுக்கு வாக்களிப்பை நடத்துகின்ற நடைமுறை 1952 மற்றும் 1956 பொதுத்தேர்தல்களிலும் தொடர்ந்தது. 

1960 மார்ச் பொதுத்தேர்தலில் இருந்தே ஒரு நாளில் வாக்களிப்பை நடத்தும் நடைமுறை ஆரம்பித்தது. அதற்குப் பிறகு ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு பொதுத்தேர்தல்கள் நடத்தப்பட்டன. அந்த இரண்டுமே 1977 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஜனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்ட தற்போதைய அரசியலமைப்பின் கீழ் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் முதலாவது தேர்தல் 1994 ஆகஸ்ட் 16 இல் நடந்தது. அந்தத் தேர்தலில் 17 வருடங்களாகத் தொடர்ச்சியாக அதிகாரத்திலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியை திருமதி. சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொதுஜன முன்னணி தோற்கடித்தது. அதில் இரண்டாவது தேர்தல் 2015 ஆகஸ்ட் 17 இல் நடந்தது. 21 வருடங்களு;ககுப் பிறகு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு இருந்த பாராளுமன்றப் பெரும்பான்மைப் பலத்தை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கட்சிகள் அந்தத் தேர்தலில் இல்லாமல் செய்தன. 

நடைபெறவிருக்கும் ஆகஸ்ட் தேர்தல் அரசியல் உறுதிப்பாடு என்ற பெயரில் பல வருடங்களுக்குப் பிறகு ஒருகட்சி மேலாதிக்கத்தைக் கொண்டுவருமா? 

மார்ச் 18 ஆம் திகதி நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு ஏப்ரல் 25 இல் பொதுத்தேர்தலை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் திட்டங்களை மாற்றிவிட்டது. மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை கொவிட் - 19 தொற்றுநோயினால் பெருமளவிற்குப் பாதிக்கப்படவில்லை என்றபோதிலும் கூட, நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு மக்களின் வழமை வாழ்வு பாதிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 25 இலிருந்து ஜுன் 20 இற்கு மாற்றப்பட்ட தேர்தல் திகதி பிறகு ஆகஸ்ட் 5 ஆகத் தீர்மானிக்கப்பட்டது. 

தேர்தல் நடத்தப்படும் நேரமும், அது நடத்தப்படும் முறையும் வழமைக்கு மாறானவை. இந்த வழமைக்கு மாறான தன்மை இந்தத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெறப்போகின்றவற்றையும், இறுதி முடிவுகளையும் மாற்றியமைக்கப்போவதில்லை. ஆனால் தற்போதைய அரசியல் தலைவர்களினதும், அவர்களது நேசக்கட்சிகளது குறிக்கோள்களும் அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கின்ற நிர்ப்பந்த நிலைகளும், ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ் முன்னர் நடைபெற்ற பாராளுன்றத் தேர்தல்களை விடவும் குணாதிசயத்தில் மிகவும் வேறுபட்டவையாகும். இந்தத் தேர்தல் முடிவுகளும் கூட வேறுபட்டவையாகவே இருக்கும். இந்த வேறுபாடுகளுக்கும் கொரோனா வைரஸிற்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆனால் அதே வேறுபாடுகள் கொரோனா வைரஸினால் தோற்றுவிக்கப்பட்ட சவால்களைத் தேர்தல் முடிந்த பிறகு சமாளிக்கக்கூடியதாக நாடு எந்தளவிற்குத் தயாராக இருக்கும் என்பதில் தாக்கத்தைச் செலுத்தப்போகின்றன என்பதில் சந்தேகமில்லை. 

கடந்தகாலத் தேர்தல்கள்

ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ் இதுகாலவரையில் 7 பாராளுமன்றத்தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் 3 தேர்தல்கள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் இரண்டாவது பதவிக்காலத்தின் போது - 2000 அக்டோபர், 2001 டிசம்பர், 2004 ஏப்ரல் - நடைபெற்றன. திருமதி குமாரதுங்க மாத்திரமே பாராளுமன்றத் தேர்தலொன்றில் (1994 ஆகஸ்ட்) உறுதியான முறையில் வெற்றிபெற்று, அடுத்து மூன்றுமாத காலங்களுக்குள் (1994 நவம்பர்) வந்த ஜனாதிபதித் தேர்தலொன்றிலும் அதேயளவு உறுதியுடன் வெற்றிபெற்றுக் காண்பித்த ஒரேயொரு இலங்கைத் தலைவராவார். ஜே.ஆர்.ஜெயவர்தனவும் 1977 இல் பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றிக்குப் பிறகே ஜனாதிபதியாக வந்தார். ஆனால் அரசியலமைப்பிற்குத் திருத்தமொன்றைக் கொண்டுவந்து அதனூடாக பிரதமர் பதவியிலிருந்து ஜனாதிபதிப் பதவிக்கு மாறிக்கொண்டார். 

அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்த்திருக்காத முறையில் பாராளுமன்றத் தேர்தலொன்றை நடத்தாமல் 11 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்தவர் ஜெயவர்தன. ஆனால் அப்போது ஒரு பாராளுமன்றம் இருந்தது. 1977 ஜுலையில் தெரிவு செய்யப்பட்ட அந்தப் பாராளுமன்றம் 1982 டிசம்பரில் நடத்தப்பட்ட போலித்தனமான சர்வசன வாக்கெடுப்பு ஒன்றினூடாக 1988 வரை நீடிக்கப்பட்டது. ஜே.ஆர்.ஜெயவர்தன தனது ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிகப்பெரிய பெரும்பான்மைப் பலத்தைக்கொண்ட அடிமைத்தனமான பாராளமன்றத்தைப் பயன்படுத்தி, தனது பிரதான அரசியல் எதிரியான முன்னாள் பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை இடைநிறுத்தினார். 

ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழான முதலாவது பாராளுமன்றத் தேர்தல் 1989 பெப்ரவரி 15 ஆம் திகதி நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றது. ஆனால் முன்னரை விடவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய இடதுசாரி முன்னணியும் கடுமையான போட்டியைக் கொடுத்தன. 1989 டிசம்பரில் நடைபெற்ற இலங்கையின் இரண்டாவது ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரான அன்றைய பிரதமர் பிரேமதாஸ மீண்டும் குடியுரிமைகள் வழங்கப்பட்ட திருமதி பண்டாரநாயக்கவிற்கு எதிராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். திருமதி பண்டாரநாயக்க பிரேமதாஸவிற்கு மிகக்கடுமையான போட்டியைக் கொடுத்தார். ஜெயவர்தனவிற்குப் பிறகு பிரேமதாஸ 1989 ஜனவரியில் ஜனாதிபதியானார். 

ஜனாதிபதி பிரேமதாஸ 1993 மே தினத்தன்று கொழும்பில் விடுதலைப்புலிகளின் தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். 1959 செப்டெம்பரில் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க கொல்லப்பட்ட பின்னர் முதன்முதலாகக் கொலையுண்ட இலங்கையின் அரசாங்கத் தலைவரான பிரேமதாஸவே பதவியிலிருந்த காலத்தில் ஒரு ஜனாதிபதித் தேர்தலையோ அல்லது பாராளுமன்றத் தேர்தலையோ நடத்தாத ஒரே ஜனாதிபதியாவார். அவரின் மறைவிற்குப் பிறகு இடைக்காலத்திற்கு ஜனாதிபதியாகப் பதவியேற்ற டி.பி.விஜேதுங்கவினால் 1994 இல் பாராளுமன்றத் தேர்தலையும், ஜனாதிபதித் தேர்தலையும் நடத்தக்கூடியதாக இருந்தது. அவ்விரு தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக்கட்சி தோல்விகண்டது. அந்த ஜனாதிபதித்தேர்தலில் ஒரு வேட்பாளராக விஜேதுங்க போட்டியிடவில்லை. 

1989 - 1999 இல் பிரேமதாஸவைப் போன்று மஹிந்த ராஜபக்ஷ 2005 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். ஆனால் பிரேமதாஸவைப் போலன்றி ஜனாதிபதி ராஜபக்ஷ விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து அதன்மூலமாகக் கிடைத்த போர்வெற்றி நாயகன் என்ற ஒளிவட்டத்தைப் பயன்படுத்தி 2010 ஜனவரியிலும், ஏப்ரலிலுமாக ஒன்றன்பின் ஒன்றாக நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்றார். மூன்றாவது பதவிக்காலத்திற்கு ஜனாதிபதியாக வருவதற்கு ஜனவரியில் அவர் முயற்சித்தபோது அரசியல் வாய்ப்புக்கள் அவரைக் கைவிட்டுவிட்டது. அன்றைய பொது எதரிணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்ட மைத்திரிபான சிறிசேனவிடம் ராஜபக்ஷ தோல்விகண்டார். தனக்குப் பிறகு நிறைவேற்றதிகார ஜனாதிபதிப்பதவி முடிவு கட்டப்படும் என்றும், ஒரேயொரு பதவிக்காலத்திற்கு மாத்திரமே தான் ஜனாதிபதியாக இருக்கப்போவதாகவும் நாட்டுமக்களுக்கு வாக்குறுதி அளித்துக்கொண்டு ஜனாதிபதியாக வந்த சிறிசேன அதை நிறைவேற்றுவதற்கு - அதாவது ஜனாதிபதிப் பதவியை முடிவிற்குக் கொண்டுவருவதற்கு - எதையும் செய்யவில்லை. ஆனால் நாட்டுமக்கள் அவரின் ஆட்சியில் சலித்துப்போனார்கள். ஒரேயொரு பதவிக்காலத்திற்குப் பிறகு அவரது ஜனாதிபதிப்பதவிக்கு மக்கள்தான் முடிவு கட்டினார்கள். 

சிறிசேனவினால் 2015 ஆகஸ்டில் பாராளுமன்றத்தேர்தல் ஒன்றையும், 2019 நவம்பரில் ஜனாதிபதித் தேர்தலொன்றையும் நடத்தக்கூடியதாக இருந்தது. இடைப்பட்ட காலத்தில் சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் கூட்டாகத் தலைமை தாங்கிய அனர்த்தத்தனமான நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் கோத்தபாய ராஜபக்ஷ தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையைக் கைவிட்டுத் திடீரென்று அரசியலில் எழுச்சிகண்டு, ஒருவருடகாலத்திற்குள் நாட்டின் ஜனாதிபதியாவதற்கான தெளிவான பாதையை உருவாக்கிறது. கடந்த காலத்தைய தேர்தல்கள் பற்றிய இந்த விபரங்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 5 நடைபெறவிருக்கும் தேர்தல் மற்றும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் நிர்வாகம் ஆகியவற்றின் பின்னணியில் அரசியல் நிகழ்வுப்போக்குகளை அலசிப்பார்ப்பதற்கு உதவியாக இருக்கும். 

மிகவும் முக்கியமான வேறுபாடு

1947 ஆம் ஆண்டிற்குப் பிறகு, முதற்தடவையாக அதிகாரத்திற்குப் போட்டியிட்டு வந்த பிரதான பாரம்பரிய அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியோ இல்லாமல் ஒரு பாராளுமன்றத்தேர்தலை நாடு சந்திக்கவிருப்பது கடந்த காலத்திலிருந்து மிகவும் முக்கியமானதொரு வேறுபாடாகும். 1952 - 2015 இற்கு இடைப்பட்ட காலத்தில் பாராளுமன்றத் தேர்தலாக இருந்தாலென்ன ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலென்ன, ஒவ்வொரு தேர்தலிலும் ஆதிக்கம் செலுத்துகின்ற அரசியல் சக்திகளாக இவ்விரு கட்சிகளுமே இருந்துவந்தன. மாறிமாறி இவ்விரு கட்சிகளும் அரசாங்கத்திலும், எதிரணியிலும் இருந்துவந்தன. ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இவ்வாறு மாறிமாறி அரசாங்கத்திற்கும், எதிரணிக்கும் வருவதாக இருந்த நிகழ்வுப்போக்கை 'இலங்கை அரசியலின் சங்கீதக்கதிரை விளையாட்டு" என்று மாவோவாத அரசியல் செல்வாக்குடன் விளங்கிய காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் (பீகிங்) தலைவரான என்.சண்முகதாசன் கிண்டலாக வர்ணித்தார். 

1977 இல் அந்த சங்கீதம் நிறுத்தப்படும்வரை இந்த விளையாட்டுத் தொடர்ந்து கொண்டிருந்தது. நான்கு தசாப்தகாலத்தில் பழைய கட்சிகளும் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. 2019 ஜனாதிபதித் தேர்தலில் -லங்கா சுதந்திக்கட்சி இல்லை. எதிர்வரும் ஆகஸ்ட் பாரர்ளுமன்றத் தேர்தலிலும் கணக்கிலெடுக்கக்கூடிய முறையில் எந்தவொரு தாக்கத்தையும் செலுத்தப்போவதில்லை. 

கடந்த 5 வருட காலத்தில் சுதந்திரக்கட்சிக்கு நடந்தது இப்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு நடந்துகொண்டிருக்கிறது. உண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைமை படுமோசமானதாக இரு;ககிறது. 2015 ஆகஸ்ட் பாராளுமன்றத் தேர்தலில் சுதந்திரக்கட்சி ஒரு தனிக்கட்சியாகப் பிளவுபட்ட தலைமைத்துவங்களின் கீழ் (ராஜபக்ஷ - சிறிசேன) போட்டியிட்டது. மறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பாரதூரமான பிளவிற்குள்ளாகி அடுத்த தேர்தலில் இரு தனித்தனியான அணிகளாகப் போட்டியிடுகின்றன. ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழான சட்டபூர்வமான சிறிய ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாஸவின் கீழான ஐக்கிய மக்கள் சக்தியுமே அவ்விரு அணிகளாகும். இவ்விரு அணிகளும் தங்களுக்குள் உள்ள போட்டியில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுத் தேர்தலுக்குப் பிறகு பெருமையடித்துக்கொள்வதற்காக சண்டையிடுகின்றன. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தோற்றமே கடந்தகாலத் தேர்தல்களிலிருந்து எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தல் வரை முழுமையான வேறுபாடு கொண்டதாக மாற்றியிருக்கிறது. எதிர்வரும் ஆகஸ்ட் தேர்தலில் பெரும்பாலும் பெருவெற்றிபெறும் சாத்தியத்தைக்கொண்ட பொதுஜன பெரமுன இதற்கு முன்னர் பாராளுமன்றத்தேர்தலில் ஒருபோதும் போட்டியிட்டதில்லை.

சமூக அரசியல் சக்திகளின் எந்தவொரு அடிப்படையான மீள் அணிசேருகைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு புதிய கட்சியாகப் பொதுஜன பெரமுனவைப் பார்க்கமுடியாது. சுதந்திரக் கட்சியிலிருந்து முறைப்படியாகப் பிரிந்த ஒரு கட்சியாகக்கூட அதனைப் பார்க்கமுடியாது. மாறாக 2015 ஜனவரிக்குப் பிறகு நடைபெற்ற பிரத்யேகமான அரசியல் நிகழ்வுப்போக்குகளினால் தோன்றிய சூழ்நிலைகளின் கீழ் பசில் ராஜபக்ஷவினால் சுதந்திரக்கட்சியின் ஆதரவுத்தளம் மிகவும் கெட்டித்தனமான முறையில் கடத்திச்செல்லப்பட்டதன் விளைவாகத் தோன்றியதே இந்தப் பொதுஜன பெரமுன ஆகும். இங்கு 2015 ஜனவரிக்குப் பின்னரான அரசியல் நிகழ்வுப்போக்குகள் என்று நோக்கும் போது சிங்கள மக்கள் மத்தியில் ரணில் விக்கிரமசிங்க மீது ஏற்பட்ட தேசியவாத வெறுப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்காரர்கள் மத்தியில் மைத்திரிபால சிறிசேன மீது ஏற்பட்ட அதிருப்தி, நல்லாட்சி அரசாங்கத்தின் மகா தவறுகளினால் தொடர்ச்சியாக ஊக்கம் பெற்ற மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் கவர்ச்சி, சிங்களத்துறைசார் நிபுணர்கள் மற்றும் புதிய வர்த்தக வர்க்கங்கள் மத்தியில் கோத்தபாய ராஜபக்ஷவைப் பற்றிக் காரியத்தில் கண்கொண்ட ஒரு தலைவர் என்ற ஈர்ப்பு ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். 

பொதுஜன பெரமுனவின் வெற்றியை வடிவமைத்த காரணிகளில் எந்தவொன்றுமே சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்திக்குக் கிடைக்கக்கூடியதாக இல்லை என்பதை சுலபமாகப் பார்க்க முடிகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் அடிமட்டத்திலிருந்து புதியதொரு அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்பக்கூடிய ஆற்றலைக் கொண்டவராக சஜித் பிரேமதாஸவைக் காண்பிக்கும் எந்தவொரு சான்றுமேயில்லை. ஆனால் அதேவேளை எஞ்சியிருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி தலைமைத்துவத்திற்கான வாய்ப்புக்களும் படுமோசமானவையாகவே இருக்கின்றன. எப்படிப்பார்த்தாலும் இந்த இரு தரப்பினரிலும் எந்தவொரு தரப்புமே ஆகஸ்ட் தேர்தல்களுக்கு முன்னதாகத் தங்களது வாய்ப்புக்களை மேம்படுத்தக்கூடிய நிலையிலில்லை. ஆகஸ்ட் தேர்தலில் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் தேர்தலுக்குப் பிறகு அவர்கள் எவ்வாறு செயற்படுவார்கள் என்பதைக் காண்பிக்கும். அதாவது இருவரில் ஒருவரினால் கைவிடப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவுத்தளத்தை மீளக்கட்டியெழுப்பக்கூடியதாக இருக்குமா? அல்லது அந்தப்பணியை முன்னெடுப்பதற்குப் புதியதொரு அரசியல் சக்தி வெளிக்கிளம்புமா?

இந்த நிலைவரங்கள் எல்லாம் பொதுஜன பெரமுனவையும், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவையும் எங்கே கொண்டுபோய் விடப்போகின்றன, பொதுஜன பெரமுன பெருமளவு ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றிபெறும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகி விட்டது. அந்தக் கட்சி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறுமா என்பதே மக்கள் மத்தியிலுள்ள பிரதான கேள்வி. அதிகாரத்தில் தங்களது நீண்ட பதவிக்காலங்களை ஐக்கிய தேசியக் கட்சி தொடங்கிய 1977 ஆம் ஆண்டைப்போன்று அல்லது 1994 சுதந்திரக் கட்சியைப் போன்று அதேநிலையில் இன்று பொதுஜன பெரமுன இருக்கிறதா என்பது ஒரு வித்தியாசமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக உள்ளது.

இலங்கையின் தேர்தல் அரசியலில் '20 - 25 வருட நமச்சல்" என்று அழைக்கப்படக்கூடிய ஒரு போக்கை அடிப்படையாகக்கொண்டு பார்க்கையில் வரலாறு பொதுஜன பெரமுனவின் பக்கத்தில் இல்லாமலிருக்கலாம். அதாவது குறுகியகால இடைவெளிகளில் அரசாங்க மாற்றங்கள் இடம்பெறுவதைப் போலன்றி ஒவ்வொரு 20 - 25 வருடங்களுக்கும் சுனாமி போன்று ஒரு பெரிய அரசியல் அலை வீசி, நீண்டகாலமாக ஆட்சி செய்கின்ற கட்சிகளை வீழ்த்தி, புதிய கட்சிகளால் அவற்றைப் பதிலீடு செய்து வந்திருக்கின்றன. 1956, 1977, 1994 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்கள் சுனாமித் தேர்தல்கள். 

பொதுஜன பெரமுன புதியது, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அதைவிடப் புதியவர் என்ற போதிலும் ஆட்சியதிகாரத்துடனான ராஜபக்ஷாக்களின் சகவாழ்விற்கு இப்போது 15 வயது (1965 - 1970 காலகட்டத்தில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைப்போன்று 2015 - 2019 காலகட்ட நல்லாட்சி அரசாங்க வருடங்களைத் தவிர்த்து இதைப் பார்க்கவேண்டும்). அந்த அரசியல் அளவுகோலை அடிப்படையாகக்கொண்டு பார்க்கும்போது இலங்கை அரசியலில் மேலே குறிப்பிட்ட நமச்சல் காலகட்டத்தில் நடுப்புள்ளியை ராஜபக்ஷாக்கள் தாண்டிவிட்டார்கள் என்றுதான் கூறவேண்டும். 

பொதுஜன பெரமுனவையும், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவையும் எதிர்நோக்கியிருக்கின்ற சவால்கள் முன்னென்றும் இல்லாதவையாகும். கொவிட் - 19 இற்கு முன்னர் இருந்த வழமை நிலைக்கு விரைவில் திரும்பிவிடுவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்க முடியாது. அரசாங்கத்தில் பலவீனமான புள்ளியும், அதன் மிகப்பெரிய சவாலும் பொருளாதார நிலைவரமேயாகும். இதுவரையில் பொருளாதார நிலைவரத்தைக் கையாளுவதற்கு அரசாங்கம் எடுத்து வந்திருக்கும் நடவடிக்கைகள் அடுத்து என்ன செய்வதென்ற தடமறியாதவையாக இருப்பதாக சரியாகவே விமர்சனம் செய்யப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு மக்களுக்குச் சொல்வதற்கு அரசாங்கத்திடம் சாட்டுகள் இல்லாமல்போகும் போது மேலும் விமர்சனங்கள் வரும்.

பாராளுமன்றத்திற்கு வெளியேயும், உள்ளேயுமிருந்து பெருமளவான விமர்சனங்கள் வரக்கூடியது சாத்தியம். தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்ற எதிர்க்கட்சிகளில் எந்தவொன்றினாலுமே அரசாங்கம் மீதான அவற்றின் விமர்சனத்தின் மூலம் அல்லது அவர்களினால் முன்வைக்கப்படக்கூடிய எந்தவொரு மாற்று யோசனைகளின் மூலமும் பொதுமக்களின் கவனத்தைக் கவரக்கூடியதாக இருக்கப்போவதில்லை. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களது எதிரணியுடன் மோதுகின்ற ஒரு போக்கை இம்முறைத் தேர்தல் கொண்டிருக்கும். ஜனாதிபதியின் ஆதரவாளர்களுக்கும் பிரதமரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மறைமுக யுத்தமொன்றுக்கான சூழ்நிலை காணப்படுகிறது. 

பொதுஜன பெரமுனவிற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு கிடைத்தால் ஜனாதிபதியும் பிரதமரும் அவர்களது ஆதரவாளர்களும் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். யாருடைய அதிகாரம் அதிகரிக்கப்படும்? யாருடைய அதிகாரம் குறைக்கப்படும்? இருவருமே தங்களது அதிகாரங்களை அதிகரித்துக்கொள்ள முடியாது. இப்போது அவர்கள் இருவரும் ஒரு நொய்தான சமநிலையைக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைவரத்தில் வரக்கூடிய மாற்றம் ஒன்றில் பிரதமர் ஒரு பெயர்ப்பலகைப் பதவிக்குரியவராக மாறுவதாக அல்லது ஜனாதிபதி வில்லியம் கோபல்லாவ பாணியைப் பின்பற்றுவதாக இருக்க முடியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04