காத்தான்குடி பகுதியில் மோட்டார் சைக்கிள் குண்டு வெடிப்பு இடம்பெற்ற 43 ஏக்கர் காணி முன்னர் அரசியல்வாதி ஹிஸ்புல்லாஹ்வுக்கு சொந்தமானதாம் - மேலும் பல தகவல்கள்

07 Jul, 2020 | 05:39 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு முன்னர், கடந்த 2019 ஏப்ரல் 16 ஆம் திகதி காத்தான்குடி - பாலமுனை பகுதியில் உள்ள பால் தோனா தோட்டத்தில் மோட்டார் சைக்கிள் குண்டு ஒன்று வெடிக்கச் செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், சஹ்ரானின் கும்பலே உள்ளமையை  ஆரம்பக்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இரு நாட்களுக்குள்ளேயே வெளிப்படுத்த முடியுமாக இருந்ததாக காத்தான்குடி பொலிஸ் நிலைய முன்னாள் குற்றவியல் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர்  மொஹம்மட் ஜெசூலி  தெரிவித்தார். அத்துடன் குறித்த தோட்டத்துடன் ஒட்டியதாக  இரானுவத்தின் சிங்ஹ ரெஜிமென்ட் படைப் பிரிவின் சிறிய முகாம் ஒன்றும் உள்ளதாகவும், அங்குள்ளவர்களுக்கு வெடிப்புச் சப்தம் கேட்கவில்லை என்பது கூட நம்பும் படியாக இல்லை எனவும் அவர் சாட்சியமளித்தார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையபப்டுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க  விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி  விசாரணை ஆணைக் குழுவின்  சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில்  இடம்பெற்றது.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதிகளான  நிஹால் சுனில் ரஜபக்ஷ,  அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில்  குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றன.

 இதன்போது அரச சட்டவாதி மற்றும் ஆணைக் குழ்வின் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்தவாரு சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்படி விடயங்களை வெளிபப்டுத்தினார்.

 இதன்போது காத்தான்குடி பொலிஸ் நிலைய முன்னாள் குற்றவியல் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர்  மொஹம்மட் ஜெசூலி  வழங்கிய சாட்சியத்தின் சுருக்கம் வருமாறு:

' மொஹம்மட் முஸ்தபா அசனுல் பசரி  எனும் நபர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமையவே கடந்த 2019 ஏபரல் 17 ஆம் திகதி நானும் எனது குழுவினரும்  குறித்த தோட்டத்துக்கு சென்றோம்.  நாம் செல்லும் போது  இரவு ஆகிக்கொண்டிருந்தது. காத்தாண்குடி பொலிஸ் நிலையத்தில் இருந்து பல கிலோமீற்றர் தூரத்திலேயே அந்த தோட்டம் அமைந்திருந்தது.  பாலமுனை பகுதிக்கு சென்று பிரதான வீதியிலிருந்து பாலமுனை கடற்கரை வீதி நோக்கி 3 முதல் 4 கிலோமீற்றர்கள் சென்று வலது பக்கம் திரும்பும் போது குறித்த தோட்டம் உள்ளது. 43 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட அந்த காணி பால் தோனா  தோட்டம் என அடையாளப் படுத்தப்படுகின்றது.

 அந்த தோட்டம் ஒன்று, இரண்டு ஏக்கர்களாக பிரிக்கப்பட்டு விற்பனைக்காக தயார்ச் செய்யப்பட்டுள்ளது. சுற்றி கொங்றீட் கனுக்கள் மற்றும் தகரங்களால் மதில் அமைக்கப்பட்டுள்ளது.

 அந்த பகுதியில்  செறிவான குடியேற்றங்கள் இல்லை. மின்சார வசதி கூட இல்லை. அந்த தோட்டத்திலிருந்து அதாவது வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் இருந்து 300 முதல் 400 மீற்றர் தூரத்தில் இரானுவத்தின் சிங்ஹ ரெஜிமென்ட் படைப் பிரிவின் சிறிய முகாம் ஒன்று உள்ளது. அங்கு மட்டுமே சுற்றிலும் மின்சாரம் இருந்தது.

 நாம் குறித்த இடத்தை அடைந்து வெடிக்கச் செய்யப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை பார்வை இட்டோம்.  நான் 25 வருடங்கள் பொலிஸ் விஷேட அதிரடிப் படையில் சேவையாற்றியவன். வெடிபொருள் தொடர்பில் பயிற்சி பெற்றவன் எனவே அதனை பார்த்ததும் வெடிபொருள் கொண்டு மோட்டார் சைக்கிள் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளமை தெரிந்தது. அருகே இருந்த தகர மதிர்கள், கொங்றீட் தூண்களிலும் அதன் பாதிப்பை அவதானிக்க முடிந்தது.

 நான் விடயத்தை உடனடியாக பொலிஸ் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆரச்சியிடம் கூறினேன். அவர் மேல் அதிகாரிகளுக்கு அறிவித்தார். இருட்டிவிட்டதால் அன்று அங்கு பொலிஸ் பாதுகாப்பு போட்டுவிட்டு  சென்றோம்.

 மீள மறு நாள் அதாவது 2019 ஏபரல் 18  ஆம் திகதி காலை 8.30 மனியளவில் அங்கு சென்று விசரணைகளை ஆரம்பித்தோம். அப்போது பொலிஸ் தடயவியல் பிரிவினர், அனைத்து உளவுப் பிரிவினரும் அங்கு வந்திருந்தனர்.  அப்போது வெடித்த மோட்டார் சைக்கிளில் செசி இலக்கத்தை எம்மால்  அங்கிருந்த எச்சங்களில் இருந்து அடையஆளம் காண முடிந்தது. # எம்.ஈ.4 ஜே.எப். 396 எப்.எப்.800 7612# என்பதே அந்த இலக்கமாகும்.  அதனை மோட்டார் வாகன பதிவுத் திணைக்களத்துக்கு கொடுத்து வெடிக்க வைக்கப்பட்ட  மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை கண்டறிந்தோம். அது டப்ளியூ.பி. பி.சி.கியூவ். 0304 எனும் ஹொண்டா டியோ ரக இளம் பச்சை நிற ஸ்கூட்டி  மோட்டார் சைக்கிளாகும்.

 அதன் பதிவு உரிமையாளரை தேடினோம். அப்போது அந்த மோட்டார் சைக்கிள் களனி பகுதியைச் சேர்ந்த  நில்மினி ஜயகொடி என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவரிடம் விசாரித்த போது,  அவர் தனது நண்பரான  துஷார பிரியந்த என்பவர் ஊடாக அந்த மோட்டார் சைக்கிளை  அருண விக்ரமசேன எனும் மோட்டார் சைக்கிள் விற்பனையாளர் ஒருவருக்கு விற்றுள்ளமை தெரியவந்தது. அவரிடம் சென்று விசாரணை நடாத்திய போது,  ஜராட் யசிந்த சில்வா என்பவரின்  தேசிய அடையாள அட்டையின் பிரதி கொடுக்கப்பட்டு அந்த மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தமை தெரியவந்தது.

 ஜராட்டை நாங்கள் விசாரித்த போது, அவரது   பணப் பையுடன் தேசிய அடையாள அட்டை தொலைந்து போயுள்ளமை தெரியவந்ததுடன், அவரது அடையாள அட்டையில் சிம் அட்டைகள் பெறப்பட்டு அவற்றை சஹ்ரான் கும்பல் பயன்படுத்துவது தொடர்பில் அப்போதும் சி.ஐ.டி.க்கு அவர் வக்கு மூலம் கொடுத்துள்ளமை தொடர்பிலும் தெரியவந்தது.

 இவ்வாறான நிலையில் இந்த மோட்டார் சைக்கிள் வெடிப்புச் சம்பவத்துடன் சஹ்ரான் கும்பல் தொடர்புபட்டுள்ளமையை நாம் கண்டறிந்தோம். இந் நிலையில் தான் நாம் அவற்றை மையபப்டுத்தி கடந்த 2019 ஏபரல் 19 ஆம் திகதியே மட்டக்கலப்பு நீதிவான் நீதிமன்றில் இது தொடர்பில்  பீ 397/19 எனும் இலக்கத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தோம்.

 இவ்வாறான நிலையில் கடந்த 2019 ஏபரல் 26 ஆம் திகதி பொலிஸ் மா அதிபரின் உத்தர்வுக்கு அமைய இந்த விசாரணைகளை சி.ஐ.டி.யிடம் கையளித்தோம்.' என சாட்சியமளித்தார்.

 அதன் பின்னர் ஆணைக் குழுவின் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்தவாரு சாட்சியமலித்த காத்தான்குடி பொலிஸ் நிலைய முன்னாள் குற்றவியல் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர்  மொஹம்மட் ஜெசூலி ,

' குறித்த பால் தோனா எனும் தோட்டத்தின் ஒரு நுழைவுப் பகுதி இராணுவ முகாமுடன் ஒட்டியதாக இருந்தது. அந்த வழியில் உள்ள  வாயில் பூட்டப்பட்டிருந்தது.

 இந்த வெடிப்பின் போது, இராணுவ முகாமுக்கு சப்தம் கேட்டதா என நான் அறிய முற்பட்ட போது, அங்கு உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி முகாமுக்குள் அனுமதிக்க மறுத்தனர்.

 உண்மையில்  நாம் அங்கு செல்லும் வரை இராணுவத்தினரோ வேறு எவரோ வெடிப்பு இடம்பெற்ற இடத்துக்கு செல்லவில்லை. எனினும் மோட்டார் சைக்கிள் குண்டு வெடிக்கும் போது சப்தம் கேட்கவில்லை என இராணுவ முகாமில் உள்ளவர்கள் கூறுவது நம்பமுடியாதது.

 அத்துடன் இந்த காணி, முறைப்பாட்டளரான  மொஹமட் முஸ்தபா அசனுல் பசரி என்பவருக்கு சொந்தமானது. அவர் அப்பகுதியின் அரசியல்வாதியான ஹிஸ்புல்லாஹ்விடம் இருந்து அக்காணியை கொள்வனவு செய்துள்ளார். ஹிஸ்புல்லாஹ் வெளிநாட்டு ஒருவருக்கு காணியை விற்க முற்பட்டபோது அவர் கொள்வனவு செய்ததாக அறிந்தேன்.  எனினும் ஹிஸ்புல்லாஹ்வுக்கு அந்த காணி எவ்வாரு கிடைத்தது என்பது எனக்கு தெரியாது. நான் அது குறித்து விசாரிக்கவில்லை. நான் வெடிப்புச் சம்பவம் தொடர்பிலேயே விசாரணை செய்தேன்.' என சாட்சியமளித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-03-19 17:21:03
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-03-19 17:03:35
news-image

பொலிஸாருக்கு எதிராக இரு யுவதிகள் தாக்கல்...

2024-03-19 17:05:31
news-image

தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்காக அரசாங்கம் 2...

2024-03-19 16:45:00
news-image

நெடுங்கேணியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-03-19 16:49:55
news-image

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

2024-03-19 16:40:26
news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01