(க.கமலநாதன்)

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே முழுப்பொறுப்புக் கூற வேண்டியவராக உள்ளார். எனவே நிதி குற்றப் புலனாய்வு பிரிவினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அழைத்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பொரளையில் இன்று இடம்பெற்ற சோசலிஷ மக்கள் முன்னணியின் ஊடகவியளாலர் சந்திப்பொன்றில் பங்கேற்று உரையாற்றுகையலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

அவர் மேலும் குறிப்பிடுகையில்,  

தற்போது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் காலத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளமை உண்மை என்பது தெரியவந்துள்ளது.   பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் தோல்வியடைந்து மூக்குடைத்துக்கொண்டுள்ளார் என்பதே உண்மையான நிலைப்பாடு. அதேநேரம் குறித்த ஆளுனர் பிரதமரின் ஆணைக்கு இணங்கவே செயற்பட்டுள்ளார் என்பதும் தெளிவாகத் தெரிகின்றது.

அர்ஜுன மகேந்திரன் காலத்தில் பிணை முறி வழங்களில் ஏற்பட்ட ஊழல் செயற்பாடுகளினால் மாத்திரம் மத்திய வங்கிக்கு பல பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது எமது நாட்டின் அரச சொத்துக்களில் செய்யப்பட்ட மோசடி என்றே கருதப்பட வேண்டும். அதனால் இது ஒரு பாரதூரமான காரணியாகும்.  

அதனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  இந்த நஷ்டத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய முதல் பிரஜையாக உள்ளார்.  எனவே அவரை உடனடியாக நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென தெரிவித்தார்.