சேறு பூசும் அரசியலில் தமிழ்க்கட்சிகள்!

05 Jul, 2020 | 06:59 PM
image

-கபில்

 சேறுபூசும் கீழ்த்தரமான அரசியலைக்  கைவிடுமாறு, தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கை தமிழ்க் கட்சிகளுக்கு மாத்திரமன்றி, எல்லாக் கட்சிகளுக்குமே பொருந்தக் கூடியது தான். சரியானதொரு தருணத்தில் பேரவையின் அறிக்கை மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது இந்தக் கருத்து.

தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் ...

ஏனென்றால், தேர்தல் அறிவிக்கப்பட்டது தொடக்கம், தமிழ் அரசியல் பரப்பில் ஆக்கபூர்வமான அரசியல் அணுகுமுறை எதையும் காண முடியவில்லை என்ற குறைபாடு பலராலும் உணரப்படுகிறது.

தேர்தல் என்பது அரசியல் கொள்கைகள் மற்றும் திட்டங்களை முன்னிறுத்தியே எதிர்கொள்ளப்படும் ஒன்றாக இருந்து வந்த காலம் மலையேறி விட்டது.

பொய்யான வாக்குறுதிகள்,  தவறான பிரசாரங்கள், கீழ்த்தரமான விமர்சனங்கள், போலியான குற்றச்சாட்டுகள், சேறுபூசும் கலாசாரம் என்பனவற்றினால் தான் இப்போதைய அரசியல் நிரம்பியிருக்கிறது. இந்த அரசியல் பண்பாடு குறுகிய காலத்துக்குள் தான் உருவானது.

தெளிவான அரசியல் நிலைப்பாடு,  உறுதியான கொள்கை, மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து எந்த விளக்கத்தையும் கொடுப்பதை விட, அதனை முன்வைத்து வாக்குகளை கேட்பதை விட, சேறு பூசும் அரசியல் தான் இன்று முதன்மையானதாக மாற்றப்பட்டுள்ளது.

ஏனைய கட்சிகளை கீழ்த்தரமாக விமர்சித்தும், ஏனைய வேட்பாளர்களை தரக்குறைவாக குற்றம்சாட்டியும், ஆளாளுக்கு சேறு பூசிக் கொள்வதையே இன்றைய அரசியல் நிலையாக மாறியிருக்கிறது. இது அரசியல் கட்சிகளுக்கிடையில் உள்ள போட்டி மாத்திரமன்று.

ஒரே கட்சிக்குள், ஒரே அணிக்குள் உள்ள வேட்பாளர்களுக்கு மத்தியில் கூட, இதே சேறுபூசல்கள் தான் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த அரசியல் பண்பாடு தமிழரின் ஆரோக்கியமான அரசியல் முன்னெடுப்புக்கும், எதிர்காலத்துக்கும் ஆபத்தானது என்று தமிழ் மக்கள் பேரவை சுட்டிக்காட்டியிருக்கிறது.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், தவறுகளைச் சுட்டிக்காட்டி, சரியான வழிக்கு தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டே தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இணைத் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை, ஆரம்பத்தில் அத்தகைய நோக்கத்தைக் கொண்டிருந்த போதும், காலப்போக்கில் அதன் அரசியல் சார்புத் தன்மையால், அரசியல் கட்சிகளை வழிப்படுத்தக் கூடிய தன்மையை இழந்து போனது.

இலங்கை மீது மாற்றுவழியை ...

ஒரு கட்டத்தில் தமிழ் மக்கள் பேரவை, எந்த வழியில் செல்வதென தடுமாறியதையும் மறுக்க முடியாது. எவ்வாறாயினும், விக்னேஸ்வரனின் அரசியல் கட்சி உருவாக்கத்தில் தமிழ் மக்கள் பேரவை பங்களித்திருந்தது என்பதை மறுக்க முடியாது.

இவ்வாறான நிலையால் தான், தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களின் சார்பில்,  தமிழ் அரசியல் கட்சிகளின் மீது அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய ஒரு வலிமையான தரப்பாக மாறமுடியாத நிலை காணப்பட்டது.

ஆனாலும், தமிழ் மக்கள் பேரவை இப்போது வெளியிட்டிருக்கின்ற அறிக்கை, அரசியல் கட்சிகளை வழிப்படுத்துகின்ற ஒன்றாக, மாற்றம் பெற்று வருவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியிருக்கிறது.

தமிழ் சிவில் சமூகத்தின் வலுவின்மை தான், தமிழ் அரசியல் கட்சிகளின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகள், முடிவுகள், நடத்தைகளுக்குக் காரணம்.

ஓய்வுநிலை மன்னார் ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை நோயுற்றதை அடுத்தே,  தமிழ் சிவில் சமூகத்தின் வலு குன்றத் தொடங்கியது. அதுவரை, அவர் பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில், தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பதிலும், அவற்றின் மத்தியில் முரண்பாடுகளுக்கு மத்தியில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதிலும், கணிசமான பங்களிப்பை வழங்கி வந்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பேரவை, ஒரு குழுவை அமைத்து, தமிழ்க் கட்சிகள் மத்தியில் கருத்தொற்றுமையை ஏற்படுத்த முயன்ற முயற்சி தோல்வியில் முடிந்தது.

எனினும், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அதனை விட அதிகதூரம் சென்று தமிழ் கட்சிகள் மத்தியில் ஒரு உடன்பாட்டை எட்டுவது வரை கொண்டு சென்றது.

ஆனாலும், அந்த உடன்பாட்டில் கையெழுத்திட்ட தரப்புகள், ஜனாதிபதி தேர்தலில் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்த தவறியதால் அது முறிந்து போனது.

ஒற்றுமையை சிதறடித்தார் சி.வி. : 5 ...

இந்தநிலையில் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய கட்சிகள் மத்தியில் ஒருங்கிணைப்பை ஒற்றுமையை உருவாக்குவதற்கு சிவில் சமூகத்தில் இருந்து பெரிதாக எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்று பல்வேறு அணிகளாக களமிறங்கும் நிலைக்கு அது மட்டும் காரணமல்ல.

தமிழ் சிவில் சமூகம் அரசியல் கட்சிகள் மத்தியில் ஆளுகையை செலுத்த முடியாதளவுக்குப் பலவீனப்பட்டுப் போயிருப்பதும் மற்றொரு காரணம். தமிழ் சிவில் சமூகம் பலமானதொன்றாக கட்டியெழுப்பப்படும் வாய்ப்பு கெட்டுப் போனதற்கு, தமிழ் மக்கள் பேரவையே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.

இவ்வாறானதொரு நிலையில், தேர்தல்களில் பக்கசார்பின்மையை உறுதிப்படுத்திக் கொண்டு, தமிழ்க் கட்சிகளை வழிப்படுத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவை முற்படுவது பொருத்தமானது. ஏனென்றால், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தற்போது தறிகெட்டு ஓடும் குதிரையின் நிலையில் இருக்கின்றன.

அவற்றுக்கு கடிவாளம் போடக்கூடிய நிலையில், யாருமில்லாத நிலையே இதற்குக் காரணம். கூட்டமாக- கும்பலாக  தறிகட்டு  சிதறி ஓடும் குதிரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் தான் ஓடும். வெவ்வேறு இலக்குகளைத் தான் தொடும்.

பந்தயக் குதிரையைப் போன்று, ஏனைய குதிரைகளுக்கு ஈடுகொடுத்து, இலக்கை நோக்கி ஓடக்கூடிய குதிரைகளைத் தான் உருவாக்க வேண்டும். அவற்றை இனங்காண்பதும். அவற்றுக்கு கூடுதல் வலிமையை சேர்ப்பதும் தான் வெளியே இருந்து செய்ய வேண்டிய வேலை.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் ...

அதனை தமிழ் மக்கள் பேரவை போன்ற சிவில் அமைப்புகளால் தான் செய்ய முடியும். தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் உள்ள வேறுபாடுகளை களைந்து கொள்வது இன்றைய நிலையில் சாத்தியமில்லை. ஒற்றுமைப்படுத்தும் வேலையும் நடக்கப் போவதில்லை.

ஆனால், சில விடயங்களிலாவது, அவற்றுக்கு அழுத்தங்களைக் கொடுத்து, ஒரே திசையில் பயணிக்கச் செய்வது முக்கியம். அதனை வலிமையானதொரு சிவில் சமூகத்தினால் தான் செய்ய முடியும்.

அவ்வாறானதொரு நிலையில் இருந்தே, சேறு பூசும் அரசியலில், பொய்யும், புரட்டும் மலிந்த அரசியலில்,  போலியான பிரசார அரசியலில் ஈடுபடுவது தமிழ்த் தேசிய அரசியல் நலனுக்கு அனுகூலமானது அல்ல என்று, தமிழ் மக்கள் பேரவை வெளிப்படுத்த முனைந்திருக்கிறது.

ஆரோக்கியமானதும், கொள்கை, நிலைப்பாடுகளை விளக்கக் கூடியதுமான அரசியல் நிலைக்குள் இந்தக் குதிரைகளைக் கொண்டு வரும் ஒரு முயற்சியாக இந்த அறிக்கை அமைந்திருக்கிறது.

ஆனாலும், அரசியல் சேற்றில் புரண்டு தமக்குத் தாமே சேறு பூசிக் கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகள் இந்த ஒரு அறிக்கையினால், தம்மைத் திருத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது கடினம் தான்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13