சர்வாதிகாரிகளுக்குச் சலுகைகாட்ட கிரிமினல் விசாரணைகளை நிறுத்துவதற்கு விரும்பிய ட்ரம்ப் - அம்பலப்படுத்துகிறார் போல்டன்

27 Jun, 2020 | 06:22 PM
image

இரண்டாவது பதவிக்காலத்திற்கும் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுவதற்கு உதவுமாறு சீன       ஜனாதிபதியிடம் கெஞ்சினார் ட்ரம்ப்

முஸ்லிம்களுக்காகத் தடுப்பு முகாம்களை அமைக்குமாறு சி ஜின்பிங்கை வலியுறுத்தினார் ட்ரம்ப்

புத்தக வெளியீட்டைத் தடுத்து நிறுத்த முயற்சித்த வெள்ளை மாளிகை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தான் விரும்பிய சர்வாதிகாரிகளுக்குத் தனிப்பட்ட ரீதியில் சலுகை காட்டுவதற்காக அவர்களுக்கு எதிரான கிரிமினல் விசாரணைகளை நிறுத்துவதற்கு முன்வந்தார் என்று அவரது முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் தனது புதிய புத்தகமொன்றில் எழுதியிருக்கிறார். 

ஊடகவியலாளர்களுக்கு மரண தண்டனை ...

'அது நடந்தேறிய அறை' என்ற தலைப்பில் தனது சுயசரிதையை போல்டன் எழுதியிருக்கிறார். இம்மாத இறுதியில் வெளியிடப்படவிருக்கும் அந்த நூலிலுள்ள சில பகுதிகள் பல்வேறு ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன. நூல் வெளியீட்டைத் தடுத்து நிறுத்தும் முயற்சியாக போல்டனுக்கு எதிராக தற்காலிக அவசரத்தடையுத்தரவைப் பிறப்பிக்கக்கோரி புதன்கிழமை ட்ரம்ப் நிர்வாகம் நீதிமன்றத்திற்கு விண்ணப்பம் செய்தது. 

இந்த நூல் பற்றி டுவிட்டரில் பதிவொன்றைச் செய்திருக்கும் ட்ரம்ப், அது பொய்களையும் போலிக்கதைகளையும் கொண்ட ஒன்று என்றும், போல்டனை போருக்கு மாத்திரம் போக விரும்பிய விரக்தியுற்ற, சலித்துப்போன ஒரு முட்டாள் என்றும் வர்ணித்திருக்கிறார். 

அமெரிக்காவின் விவசாய உற்பத்திகளைப் பெருமளவிற்குக் கொள்வனவு செய்வதன் மூலம் தான் மீண்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவாவதற்கு உதவமாறு சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கிடம் ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்ததாக இந்த நூலில் போல்டன் கூறியிருக்கிறார். 

சீன ஜனாதிபதியுடன் நல்ல தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ளும் நாட்டத்தில் சீனாவின் மனித உரிமைகள் மீறல் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாமல் ஒதுக்கிவைத்த ட்ரம்ப் சீனாவின் முஸ்லிம் உய்குர் சனத்தொகைக்காகத் தடுப்புமுகாம்களை நிர்மாணிக்குமாறு சீன கம்யூனிஸ தலைவரைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறார் என்று கூறியிருக்கும் போல்டன், ட்ரம்புக்கு எதிரான அமெரிக்க காங்கிரஸின் பதவிநீக்க விசாரணை அவரின் சொந்த அரசியல் இலாபத்துக்காக உக்ரேன் அரசாங்கத்தின் மீது நெருக்குதல்களைப் பிரயோகிப்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகளுடன் மாத்திரமே நின்றுவிடாமல், மேலும் பல விவகாரங்களை உள்ளடக்கியதாக இருந்திருக்க வேண்டும் என்று போல்டன் வாதிடுகிறார். 

Trump replaces NSA McMaster with former UN ambassador Bolton

வோல்ஸ்ரீட் ஜேர்னல், நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகிய பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கும் நூலின் பகுதிகளின்படி தனது சொந்தப் பயன்களுக்காக ஏனைய நாடுகளின் மீது அமெரிக்காவின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ட்ரம்ப் தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகளிலுள்ள ஊழல்தன்மையை போல்டன் வர்ணித்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது.

'தனது வழிமுறைகளில் ஒன்றாக நீதிக்குக் குந்தகத்தை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ட்ரம்ப் ஈடுபட்டிருக்கிறார். இதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது' என்று எழுதியிருக்கும் போல்டன் ஜனாதிபதியின் நடவடிக்கை தொடர்பான  தனது கவலையை சட்டமாதிபர் வில்லியம் பாரின் கவனத்திற்குக் கொண்டுவந்ததாக மேலும் கூறுகிறார்.

சீன ஜனாதிபதி தொடர்பாக இந்த நூலில் காணப்படும் கதைகள் சீனா தொடர்பில் கடுமையாக நிலைப்பாடு கொண்ட ஒருவராகத் தன்னைக் காட்டிக்கொள்வதற்கும், தனது எதிரியான ஜோபிடனை சீனாவின் கையாள் என்று காட்டுவதற்கும் ட்ரம்ப் முயற்சித்துக்கொண்டிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரான இந்தக் காலகட்டத்தில் அவருக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். 

போல்டன் நூலில் கூறியிருக்கின்ற தகவல்கள் உண்மையானவையாக இருந்தால் அவை தார்மீகத்திற்கு முரணானவை மாத்திரமல்ல, அமெரிக்காவின் நலன்களையும், அமெரிக்க விழுமியங்களையும் பாதுகாப்பதில் அமெரிக்க மக்களுக்குச் செய்யவேண்டிய புனிதமான கடமையை டொனால்ட் ட்ரம்ப் மீறியதாகவும் இருக்கிறது என்று ஜனநாயகக்கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜோபிடன் அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறார். பராக் ஒபாமாவின் இரு பதவிக்காலங்களிலும் உபஜனாதிபதியாக இருந்த பிடன், ஜனாதிபதி ட்ரம்ப் தனது அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக அமெரிக்க மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார். 

2019 ஜுனில் ஜப்பானில் ஜு-20 நாடுகளின் உச்சிமாநாட்டிற்குச் சென்றிருந்த வேளையில் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலுக்குப் புறம்பாக ட்ரம்பிற்கும், சீ ஜின்பிங்கிற்கும் இடையிலான நேரடியான தனிப்பட்ட சந்திப்புப் பற்றி போல்டன் வர்ணித்திருக்கிறார். அமெரிக்காவில் சீனாவைக் கண்டிப்பவர்கள் பற்றி ட்ரம்புக்கு சீ ஜின்பிங் முறையிட்ட போது ட்ரம்ப் அமெரிக்காவிற்குள் தனக்கிருக்கும் எதிர்ப்பைத் தோற்கடிப்பதற்கு சீன ஜனாதிபதி எவ்வாறு உதவமுடியும் என்றொரு வழியைக் கூறினார். பிறகு உடனடியாக அவர் சம்பாஷணையில் எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பற்றிப் பிரஸ்தாபித்து, தற்போது நடைபெறும் தேர்தல் பிரசாரங்களில் பாதிப்பு ஏற்படுத்துவதில் சீனாவின் பொருளாதார வல்லமைக்கு இருக்கும் ஆற்றலைப் பற்றிக்குறிப்பிட்டு, தனது வெற்றியை உறுதிசெய்வதற்கு உதவிசெய்யுமாறு வேண்டுகோள்விடுத்தார் என்று அவர் போல்டன் எழுதியிருக்கிறார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் விவசாயிகளின் முக்கியத்துவம் குறித்தும், கூடுதலானளவில் சீனா செய்யக்கூடிய அமெரிக்க சோயா மற்றும் கோதுமையின் முக்கியத்துவம் குறித்தும் ட்ரம்ப் வலியுறுத்திக்கூறினார் என்று குறிப்பிட்டிருக்கும் போல்டன், ட்ரம்ப் அதுவிடயத்தில் கூறிய அதே வார்த்தைகளைத் தன்னால் அச்சில் போடமுடியும். ஆனால் நூல் பிரசுரத்திற்கு முன்னரான அரசாங்கத்தின் பரிசீலனை செயன்முறைகள் அதைத் தடுத்துவிட்டன என்றும் தெரிவித்துள்ளார். 

ஜீ-20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக வெளியான செய்திகள் அமெரிக்க விவசாய உற்பத்திகளைக் கூடுதலானளவிற்கு வாங்குமாறு சி ஜின்பிங்கிற்கு ட்ரம்ப் நெருக்குதல் கொடுத்ததாகவும், எனினும் அது தொடர்பில் எந்தவொரு உறுதிமொழியையும் வழங்க அவர் தயங்கியதாகவும் கூறினார். கடந்த புதன்கிழமை அமெரிக்க செனட் சபையில் உரையாற்றிய வர்த்தகப் பிரதிநிதி ரொபேட் லைதிஸர் தேர்தலில் வெற்றிபெற உதவுமாறு ட்ரம்ப் சீன ஜனாதிபதியைக் கேட்கவில்லை என்று நிராகரித்தார். 

ஷின்ஜியாங் மாகாணத்தில் இலட்சக்கணக்கான உய்குர் இனத்தவர்களும் ஏனைய முஸ்லிம்களும் சிறையிலடைக்கப்பட்டு இருப்பது உட்பட சீனாவின் அப்பட்டமான மனித உரிமை மீறல்களினால் எந்தவிதத்திலும் கவலைப்படாத ஒருவராக போல்டனின் நூலின் பக்கங்களில் ட்ரம்ப் காட்டப்படுகிறார். 

ஒசாகா ஜி-20 உச்சிமாநாட்டின் ஆரம்பத்தில் இரவு விருந்தின்போது (உரைபெயர்ப்பாளர்கள் மாத்திரம் பிரசன்னமாகியிருந்த நிலையில்) ஷின்ஜியாங்கில் தடுப்புக்காவல் முகாம்களை தான் ஏன் நிர்மாணிக்கிறார் என்பதை ட்ரம்புக்கு சி ஜின்பிங் விளக்கிக்கூறினார். தடுப்புக்காவல் முகாம்களை நிர்மாணிப்பதே சரியான செயல் என்று நினைத்த ட்ரம்ப் அந்த நிலையங்களை நிர்மாணிக்கும் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென சி ஜின்பிங்கிடம் ட்ரம்ப் கேட்டுக்கொண்டதாக எமது உரைப்பெயர்ப்பாளர் வெளியிட்ட தகவல்களிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. சீனாவிற்கு 2017 நவம்பரில் மேற்கொண்ட விஜயத்தின் போது ட்ரம்ப் இதேபோன்ற கருத்தையே ஜனாதிபதி சி ஜின்பிங்கிடம் தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான மத்தியூ பொட்டிகிர் தன்னிடம் கூறினார் என்று போல்டன் எழுதுகிறார் என்பதை வோல்ஸ்ரீட் ஜேர்னலில் வெளியான நூலின் பகுதியிகளிலிருந்து தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. 

1989 தியனென்மென் சதுக்கப் படுகொலைகளை நினைவுகூர்ந்து ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கும் ட்ரம்ப் மறுத்தார். அது 15 வருடங்களு;ககு முன்னர் நடந்தது, அதைப்பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? நான் சீனாவுடன் சில இணக்காட்டுக்கு வரவிரும்புகிறேன் அதற்கு விரோதமாக எதையும் செய்ய விரும்பவில்லை என்று அந்த படுகொலைகளின் 30 ஆவது வருடாந்த நிகழ்வின்போது போல்டனிடம் ட்ரம்ப் கூறியதாக நூலில் எழுதப்பட்டிருக்கிறது. நூல் வெளியீட்டைத் தடுத்து நிறுத்துவதற்குப் பிறப்பித்த உத்தரவை நீதித்திணைக்களம் மேற்கொண்ட முயற்சி வெற்றிபெறவில்லை. இந்த முயற்சியை அற்பத்தனமானது என்றும், அரசியல் நோக்கமுடையது என்றும் போல்டனின் பிரசுர கர்த்தாக்கள் புதன்கிழமை அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறார்கள். போல்டனின் நூலின் ஆயிரக்கணக்கான பிரதிகள் ஏற்கனவே அமெரிக்காவிலும், உலகம்பூராகவும் விநியோகிக்கப்பட்டுவிட்டன. அரசாங்கத்தினால் கோரப்பட்ட இடைக்காலத்தடை எதனையும் சாதிக்கப்போவதில்லை என்றும் பிரசுர கர்த்தாக்களான சைமன் அன்ட் ஸ்சுஸ்ஸர் தெரிவித்துள்ளது. 

ட்ரம்புக்கு எதிரான பதவிநீக்க விசாரணையின் போது போல்டன் காங்கிரஸில் சாட்சியமளிக்க மறுத்துவிட்டார். அவர் சாட்சியமளித்திருந்தால், அவர் கூறியிருக்கக்கூடிய விபரங்கள் காங்கிரஸின் முன்னாள் வைக்கக்கூடிய மிக முக்கிய சான்றுகளாக அமைந்திருக்கும். அனுபவம் மிக்க இராஜதந்திரியான போல்டன் சாட்சியமளிக்க மறுத்தமைக்குக் காரணம் அதில் தான் கூறக்கூடிய விபரங்களைத் தனது புத்தகத்தில் பின்னர் வெளியிடுவதற்காகவே என்றும், தனது கடமையை விட தனிப்பட்ட இலாபத்தைப் பெரிதாகக் கருதிவிட்டார் என்றும் பரவலாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. 

செனட் தனக்கு அழைப்பாணை விடுத்திருந்தால் தான் விசாரணைக்குச் சென்றிருப்பேன் என்றும், விசாரணையில் சாட்சியங்கள் தோன்றுவதற்குத் தடைவிதிக்கும் தீர்மானத்தைக் குடியரசுக்கட்சிக்காரர்கள் நிறைவேற்றியிருந்தார்கள் என்றும் போல்டன் கூறினார். 

'ட்ரம்பின் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக காங்கிரஸ் முன்பாக போல்டனின் உத்தியோகத்தர்கள் கேட்கப்படுகிறார்கள். அவர்கள் அவ்வாறு சாட்சியமும் அளித்தார்கள். அவ்வாறு செய்ததன் மூலம் அவர்கள் பலவற்றை இழக்கவேண்டியிருந்தது என்றபோதிலும் உண்மையான துணிச்சலை வெளிக்காட்டினார்கள். போல்டனை சாட்சியமளிக்குமாறு கோரப்பட்டபோது அவர் மறுத்துவிட்டார். தனக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்வேன் என்றும் அவர் கூறினார். பதிலாக ட்ரம்பைப் பற்றிய தகவல்கள் எல்லாவற்றையும் அவர் தனது புத்தகத்திற்காக சேமித்துவைத்தார்' என்று டுவிட்டரில் எழுதியிருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புலனாய்வுக் கமிட்டியின் தலைவரான அடம் ஹஃப், 'போல்டன் ஒரு நல்ல நூலாசிரியராக இருக்கலாம். ஆனால் அவர் ஒ தேசபக்தன் அல்ல' என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ட்ரம்பை பதவியிலிருந்து நீக்குவதற்காக வாக்களித்த ஜனநாயகக்கட்சி செனட்டர்களில் ஒருவரான எலிசபெத் வாரெனும் ட்ரம்பைச் சுற்றியிருப்பவர்களைக் கடுமையாகக் கண்டனம் செய்தார். அவர்கள் ட்ரம்பை பொறுப்புக்கூற வைப்பதற்குத் தவறிவிட்டார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். 

உக்ரைன் விவகாரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டதாக விசாரணை நடத்தி, அதை விரைவாக நகர்த்தியமைக்காக காங்கிரஸின் ஜனநாயகக்கட்சி உறுப்பினர்கள் தவறாக நடந்துகொண்டார்கள் என்று போல்டன் குற்றஞ்சாட்டியிருக்கிறார். ஜோபிடன் தொடர்பான இரண்டுங்கெட்டான் தகவல்களைத் தன்னிடம் கையளித்தால் தான் உக்ரைனுக்கு இராணுவ உதவியை வழங்கலாம் என்று ட்ரம்ப் விதிமுறை விதித்தது தொடர்பாகவே விசாரணை நடந்தது. 

துருக்கி ஜனாதிபதி ஏர்டோகானுக்கு அனுகூலமான முறையில் அந்த நாட்டின் ஹல்க்பான்க் செயற்பட்டது தொடர்பான அமெரிக்க விசாரணைகளில் ட்ரம்ப் செய்த தலையீடு, சீன ஜனாதிபதியை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்குடன் சீனாவின் தொலைத்தொடர்பு உபகரணத்தயாரிப்புக் கம்பனியான இசற்.டி.ஈயில் ட்ரம்ப் செய்த தலையீடு ஆகியவை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் போல்டன் வாதிடுகிறார்.

வெனிசூலாவை ஆக்கிரமிப்பது மிகவும் அனுகூலமானது என்றும், உண்மையில் அந்த நாடு அமெரிக்காவின் ஒரு பகுதியே என்றும் ட்ரம்ப் கூறியதாக போல்டன் தனது நூலில் கூறுகிறார். நியூஜேர்ஸியில் கடந்த கோடைகாலத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பத்திரிகையாளரைக் கடுமையாகக் கண்டித்த ட்ரம்ப், 'இந்த ஆட்கள் தூக்கிலிடப்பட வேண்டியவர்கள். அவர்கள் வெறுக்கத்தக்க பேர்வழிகள் என்று கூறியதையும் போல்டன் நினைவுபடுத்துகிறார். 

வடகொரிய சர்வாதிகாரி கிம்ஜொங் உன்னுடனான உச்சிச்சந்திப்பு இராஜதந்திரம் உண்மையிலேயே ஒரு வெளியுலகப் பகட்டுக்கான நோக்கத்துடனேயே முன்னெடுக்கப்பட்டது என்று கொரிய நிபுணர்களின் நீண்டகாலமான சந்தேகத்தை முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான போல்டனும் உறுதிசெய்கிறார். அணுவாயுத பரிகரண விவகாரத்தில் ட்ரம்ப் அக்கறை கொண்டிருந்தாரென்று தோன்றவில்லை. 

'ஒரு கனதியான சாராம்சம் இல்லாத அறிக்கையில் கையெழுத்திட்டு கொரியத்தலைவருடன் நடத்திய பேச்சுக்கள் வெற்றியென்று பிரகடனம் செய்துவிட்டு, அங்கிருந்து வெளியேறத் தயாராக இருப்பதாக ட்ரம்ப் என்னிடம் கூறினார்' என்று எழுதுகிறார் போல்டன். 

உலகைப்பற்றி ட்ரம்புக்குத் தெரியாத பல விடயங்களைத் தனது புத்தகத்தில் அடுக்கிக்கொண்டு செல்கிறார். உதாரணத்திற்குக் கூறுவதென்றால் பிரிட்டனிடம் அணுவாயுதங்கள் இருக்கின்றன என்பதோ, பின்லாந்து ரஷ்யாவின் ஒரு பகுதியல்ல என்பதோ ட்ரம்புக்குத் தெரியாது. 

ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயுடனான ஒரு சம்பாஷணையின் போது ஆப்கானிஸ்தானின் தற்போதைய ஜனாதிபதி யார், முன்னாள் ஜனாதிபதி யார் என்று தெரியாமல் ட்ரம்ப் தடுமாறிக்கொண்டேயிருந்தார். பகிரங்கத்தில் ட்ரம்ப் மீது தாராளமான விசுவாசமுடையவராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோ வடகொரியத்தலைவர் கிம்ஜொங் உன்னுடனான 2018 உச்சிமாநாட்டின் போது ஜனாதிபதியின் முதுகுக்குப் பின்னால் அவரைக் கேலி செய்ததையும் நூலில் வர்ணிக்கிறார் போல்டன்.

(த கார்டியன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22