வலிமையற்ற நாடுகளுக்கு தலைமைதாங்கி வழிகாட்டுவதற்கு பாதுகாப்புச்சபை உறுப்புரிமையை இந்தியா பயன்படுத்த வேண்டும்

22 Jun, 2020 | 09:04 PM
image

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் மீண்டும் உறுப்புரிமையைப் பெற்றிருக்கும் இந்தியா நேர்மையாகவும் துணிச்சலுடனும் செயற்பட்டு அந்தச் சபையில் நிரந்தர உறுப்புரிமை இல்லாத நாடுகளுக்கும்  வலிமையற்ற நாடுகளுக்கும்  தலைமைதாங்கி வழிகாட்டவேண்டும் என்று இந்தியாவின் பிரதான பத்திரிகைகள் வலியுறுத்தியிருக்கின்றன.

France pushes for India's permanent membership of UNSC » Sirf News

டெக்கான் ஹெரால்ட்

 

' நேர்மையாகவும் அச்சமன்றியும் செயற்படவேண்டும்' ( Be fair and fearless at UNSC) என்ற தலைப்பில் டெக்கான் ஹெரால்ட் பத்திரிகை சனியன்று எழுதியிருக்கும் ஆசிரிய தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது ;

   

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் நிரந்தரமற்ற உறுப்புநாடாக ஆசிய -- பசுபிக் பிராந்திய பிரிவில்( Asia -- Pacific Group ) இருந்து இந்தியா தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றமை உலக அரசியலில் பெரியதும் பொறுப்புவாய்ந்ததும் கூடுதலானளவுக்கு பயனுறுதியுடைய ஒரு பாத்திரத்தை வகிப்பதற்கான வாய்ப்பொன்றை திறந்துவிட்டிருக்கிறது.இதுவரையில் பாதுகாப்புச்சபையில் இந்தியா 7 தடவைகள் நிரந்தரமற்ற உறுப்புநாடாக இருந்திருக்கிறது.அதனால் அந்த சபையின் உயர்பீடத்துக்கு இந்தியா அதன் அனுபவங்களை கொண்டுசெல்லக்கூடியதாக இருக்கும்.

   

பாதுகாப்புச்சபையில் வகிக்கப்போகும பாத்திரத்துக்கு இந்தியா இத்தடவை மிகவும் பலமான ஆதரவுடன் தெரிவாகியிருக்கிறது. பாதுகாப்புச்சபையில் ஆசிய -- பசுபிக் குழுவின் வேட்பாளராக வருவதற்கு அந்தக்குழுவின் 55 நாடுகளினதும் ஏகமனதான ஆதரவு கிடைத்தது.அத்துடன் ஐ.நா.பொதுச்சபையில் செல்லுபடியாகக்கூடிய 194 வாக்குகளில் மொத்தம் 184 வாக்குகள் இந்தியாவுக்கு கிடைத்தன.இது 2021 -- 2022 காலகட்டததுக்கான உறுப்புரிமைக்கு பாதுகாப்புச்சபைக்கு செல்வதற்கு தேவையாக இருந்த 128 வாக்குகளையும் விட அதிக வாக்குகள் கூடுதலானதாகும்.

   

ஒப்பீட்டளவில் சுலபமாக பாதுகாப்புச்சபைக்கு செல்லக்கூடியதாக இருந்தமைக்காக குறைந்தபட்சம் மூனறு நாடுகளுக்கு இந்தியா கடமைப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் ஆகியவையே அந்த நாடுகள். பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் பதற்றமான உறவுகளை இந்தியா கொண்டிருக்கின்ற போதிலும் ஆசிய -- பசுபிக் குழுவின் வேட்பாளராக இந்தியா வருவதை அவ்விரு நாடுகளும் எதிர்க்கவில்லை.அடுத்து அந்த நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவையும் வழங்கி அங்கீகரித்தன.ஆப்கானிஸ்தானின் ஆதரவு இல்லாமல் 2021 ஆம் ஆண்டில் பாதுகாப்புச்சபையில் இந்தியாவின் பிரவேசம் சாத்தியமாகியிருக்காது.ஆசிய -- பசுபிக் குழுவின் 2021 --2022 வேட்பாளராக வருவதற்கு காபூல் ஏற்கெனவே முயற்சித்தது.ஆனால், இந்தியாவின் வேண்டுகோள் விடுத்ததையடுத்து அதிலிருந்து விலகி இந்தியா போட்டியிடுவதற்கு அனுமதித்தது.

     

பாதுகாப்புச்சபையில் வீட்டோ அதிகாரம்கொண்ட நிரந்தர உறுப்புநாடாக வருவதற்கு பல தசாப்தங்களாக இந்தியா முயற்சிசெய்துகொண்டுவருகிறது. பாதுகாப்புச்சபையை ஜனநாயகப்படுத்தி அதில்  இந்தியா, ஜப்பான் போன்ற முக்கியமான நாடுகளை உள்ளடக்குவதற்கு   ஐந்து நிரந்தர உறுப்புநாடுகள் குறிப்பாக, சீனாவின் தயக்கம் புதுடில்லி  அதன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு தடையாக இருந்துவருகிறது.அதனால், நிரந்தரமற்ற உறுப்புநாடு என்ற அந்தஸ்து வீட்டோ அதிகாரம் இல்லாதது என்பதால் அது ஒன்றும் இந்திய விரும்பிய  பெரிய ஒரு பரிசு அல்ல.    இருந்தாலும், நிரந்தரமற்ற உறுப்புநாடு என்ற வகையில் இந்தியா செல்வாக்கு மிகுந்த பாத்திரமொன்றை வகிக்கமுடியும்.

   

பாதுகாப்புச்சபையில் நிரந்தரமற்ற உறுப்புநாடாக இந்தியா இருந்த முன்னைய சந்தர்ப்பங்களில் அது முக்கியமான விவகாரங்களில் உருப்படியாக எதையும் செய்யாமல் வீண்பேச்சுப் பேசிக்கொண்டிருந்தது.வாக்களிப்பதன் மூலம் ஏதாவது ஒரு நாட்டைக் குழப்பத்திற்குள்ளாக்குதிலும் பார்க்க வாக்களிப்பில் பங்கேற்காமல்  இருப்பதற்கே இந்தியா  விரும்பியது.மதில்மேல் பூனையாக இருப்பதற்கு பதிலாக், முக்கியமான பிரச்சினைகளில் கோட்பாட்டின் அடிப்படையிலான ஒரு நிலைப்பாட்டை -அதாவது நேர்மையாகவும் அச்சமின்றியும் செயற்பட்டு சர்வதேச சமாதானம் மற்றும் நீதிக்கான இலட்சியங்களை மேம்படுத்த இந்தியா பாடுபடவேணடும்.ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தங்களுக்காக மிகுந்த வலிமையுடன் அழுத்தத்தை கொடுக்கவேண்டும்.

   

பாதுகாப்புச்சபையில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் தொடர்பில் கருத்தொருமிப்பைக் கட்டியெழுப்புவதற்கு சகல  நிரந்தர உறுப்புநாடுகள் மற்றும் நிரந்தமற்ற உறுப்புநாடுகள் மத்தியில் செல்வாக்கைப் பிரயோகிக்கக்கூடிய நிலையில் இந்தியா இருக்கிறது.பாதுகாப்புச்சபையில் உறுப்புரிமை இந்தியாவுக்கு பெரியதொரு வாய்ப்பாகும். உலகின் ஒரு தலைமைத்துவ நாடு என்ற பாத்திரத்தை செதுக்கியெடுப்பதற்கு பயன்படுத்தாமல், புதிய அந்தஸ்தை பாகிஸ்தானுடனான வன்மத்தை  தீர்த்துக்கொள்வதற்கு பயன்படுத்துவதில் இந்தியா  நாட்டத்தைக் காட்டினால் அது கிடைத்த நல்ல வாய்ப்பை விரயம் செய்வதாகவே அமையும்.

த இந்து

  ' இந்த ' பத்திரிகை ' உயர்பீடத்தில் இந்தியா ; ஐ.நா.பாதுகாப்புச்சபையில் இந்தியாவின் வெற்றி '( At the high table : On India's UN security Council win )என்ற தலைப்பில் சனிக்கிழமை எழுதிய ஆசிரியதலையங்கத்தில் கூறியிருப்பதாவது ;

   ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபைக்கு நிரந்தரமற்ற உறுப்புநாடாக  இந்தியாவின் தெரிவு உலக நிறுவனங்களில் சீர்திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்திவருகின்ற நாட்டுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு இராஜதந்திர வெற்றியாகும்.ஆசிய -- பசுபிக் குழுவின் ஆசனத்துக்கு போட்டியிட்ட ஒரே நாடாக இந்தியா இருந்ததால் அதன் வெற்றி ஒனறும் எதிர்பார்க்கப்படாததல்ல.ஆனால், மறுதலையாக எதுவும் நடந்துவிடாதிருப்பதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளில் இந்திய வெளியுறவுக்கொள்கை நிறுவனம் முன்னெச்சரிக்கையாக தீவிரமாக ஈடுபட்டது.ஏனெ்னறால் பாதுகாப்புச்சபையில் உறுப்புரிமையை பெறுவதற்காக ஐ.நா. பொதுச்சபையில் நடத்தப்படும் இரகசிய வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும்.193 உறுப்புநாடுகளைக் கொண்ட பொதுச்சபையில் 184 வாக்குகளைப் பெற்று இந்தியா பாதுகாப்புச்சபையில் ஆசனத்தை வென்றிருக்கிறது.

     மெக்சிக்கோ, நோர்வே, அயர்லாந்து ஆகிய நாடுகளும் பாதுகாப்புச்சபைக்கு தெரிவாகியுள்ளன.லத்தீன் அமெரிக்காவுக்கான ஆசனத்தை மெக்சிக்கோ போட்டியின்றி வென்றெடுத்த அதேவேளை, மேற்கு ஐரோப்பா மற்றும் ஏனைய குழுவின் ஆசனத்துக்கு இடம்பெற்ற மும்முனைப் போட்டியில் நோர்வேயும் அயர்லாந்தும் வெற்றிபெற்றன.இந்தக் குழுவில் கனடா போதுமான ஆசனங்களைப் பெறமுடியாமல் தோல்வி கண்டது.ஆபிரிக்காவின் ஆசனத்துக்காகபோட்டியிட்ட கென்யாவோ அல்லது டிஜிபோட்டியோ மூன்றில் இரண்டுபங்கு வாக்குகளைப் பெறவில்லை.இன்னொரு வாக்கெடுப்புக்கு அவை முகங்கொடுக்கவேண்டியிருக்கிறது. பல்தரப்பு அணுகுமுறை மற்றும் சீர்திருத்தங்களுக்கான ( Multilateralism and reforms)அதன் உறுதியான ஆதரவை முன்னிலைப்படுத்தியே நாடுகளின் ஆதரவை இந்தியா கோரியது.

   வாக்கெடுப்புக்கு முன்னதாக இந்தியா ஐ.நா.அமைதிகாக்கும் படையின் பணிகளுக்கான ஆணையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்ற கோரிக்கை, சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான விரிவான சாசனம் கொண்டுவரப்படவேண்டும் என்று இந்தியா தலைமையில் கொடுக்கப்படும் அழுத்தம், ஐ.நா.சீர்திருத்தங்களுக்கும் பாதுகாப்புச்சபை விரிவாக்கத்துக்கும் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கை  ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இந்தியா துண்டுப்பிரசுர பிரசாரமொன்றை முன்னெடுத்திருந்தது.வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரினால் வகுக்கப்பட்டவாறு ஒரு ' மறசீரமைக்கப்பட்ட பல்தரப்பு அணுமுறைக்கான புதிய திசையமைப்பே ' ( New Orientation for a Reformed Multilateral System -- NORMS)அடுத்தவருடம் தொடங்கும் இந்தியாவின் இரு வருட உறுப்புரிமைக்காலகட்டத்தின் ஒட்டுமொத்த இலக்காக இருக்கும்.

     இதைச் சாதிப்பது  இந்தியா எவ்வாறு அதன் இராஜதந்திரத்தை பாதுகாப்புச்சபையில்  முன்னெடுக்கும்  என்பதிலும் எவ்வாறு கூட்டணிகளை அமைத்துக்கொள்ளும் என்பதிலும் ஐந்து நிரந்தர உறுப்புநாடுகளின் நலன்களுக்கும் அப்பால் பிரச்சினைகளை எவ்வாறு கிளப்பும் என்பதிலுமே தங்கியிருக்கிறது. பாதுகாப்புச்சபையின் கட்டமைப்பு 21 ஆம் நூற்றாண்டின் யதார்த்த நிலைவரங்களைப் பிரதிபலிப்பதாக இல்லை என்ற நிலைப்பாட்டை நீண்டகாலமாக இந்தியா கொண்டிருக்கிறது.சீர்திருத்தங்களை வலியுறுத்துவதில் இந்தியாவுக்கு மற்றைய நாடுகளிடமிருந்து கிடைத்துவரும் ஆதரவும் அதிகரிக்கிறது.

    ஆனால், ஐந்து நிரந்தர உறுப்புநாடுகளும் இந்த முயற்சிகளை எதிர்த்துவருகின்றன.கொவிட் -- 19 பெருந் தொற்றுநோய் ஏற்கெனவே உலக ஒழுங்கை உலுக்கியிருப்பதுடன் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டி மனப்பான்மையையும் தீவிரப்படுத்தியிருக்கிறது.அது பல்தரப்பு அணுகுமுறையையும் பல்தரப்பு நிறுவங்களையும் பலப்படுத்துவது தொடர்பில் புதிய விவாதங்களையும் மூளவைத்திருக்கிறது.இத்தகைய பின்புலத்தில், இந்தியாவுக்கு முன்னால் பல சவால்கள் இருக்கின்றன.

    உலகளாவிய புவிசார் அரசியலின் எல்லைக்கோடுகள் அடிக்கடி வரையப்படுகின்ற பல்தரப்பு தீர்மானம் மேற்கொள்ளும் அமைப்புக்களில்(Multilateral Decision Making Bodies ) பாதுகாப்புச்சபை மிகவும் முக்கியமானது.பாதுகாப்புச்சபை கூடுதலான அளவுக்கு துருவமயப்பட்டுவருகின்ற ஒரு நேரத்தில் பக்கச்சார்பான  நிலைப்பாடுகளை எடுப்பதில் இந்தியா மருட்சிகொள்ளக்கூடாது.இந்தியா அதன் நலன்களுக்கு சேவை செய்வதற்கும் பல்தரப்பு அணுகுமுறை மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான அதன் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கும் பேரம்பேசலுக்கு இடமில்லாத விழுமியங்களை அடிப்படையாகக்கொண்ட  நிலைப்பாடுகளை எடுக்கவேண்டும் ; பாதுகாப்புச்சபையில் நிரந்தர உறுப்புரிமை இல்லாத நாடுகளினதும் வலிமையற்ற நாடுகளினதும் குரலாக ஒலிக்கக்கூடியவகையில் தலைமைத்துவத்தை எடுப்பதில் அக்கறை காட்டவேண்டும்.

இந்துஸ்தான் ரைம்ஸ்

   இதேவேளை இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை தீட்டிய ஆசிரிய தலையங்கத்தில் நண்பர்களை வென்றெடுப்பதற்கும் அரசாங்கங்கள் மீது செல்வாக்கைச் செலுத்துவதற்குமான ஒப்பற்ற ஒரு வாய்ப்புடன் இந்தியா ஐ.நா.பாதுகாப்புச்சபைக்கு ஏழு வருட இடைவெளிக்குப்பிறகு  திரும்பியிருக்கிறது.நிரந்தர உறுப்புரிமை இல்லாத நாடாக இருந்தாலும் தன்னால் பயனுறுதியுடைய முறையில் காரியங்களை சாதித்துக்காட்டமுடியும் என்பதை இந்தியாநிரூபித்தால் மாத்திரமே நிரந்தர உறுப்புநாடாகுவதற்கு அது மேற்கொள்ளும் முயற்சிகள் பலமடையக்கூடியதாக இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13