இந்தியாவுடனான எல்லைத் தகராறை பெரிதுபடுத்துவதற்கு நேபாளத்தை தூண்டிய காரணிகள்

21 Jun, 2020 | 08:31 PM
image

புதுடில்லி, ( பி.ரி.ஐ.) நேபாளத்தின் உள்நாட்டு அரசியல் குமுறல்கள், சீனாவின் வலிமையான பொருளாதார ஆதரவின் விளைவாக தனது நிலைப்பாடுகளை உறுதியாகவும் தெளிவாகவும் தன்முனைப்புடன் வெளிப்படுத்துவதற்கு காத்மாண்டுவுக்கு ஏற்பட்ட துணிச்சல், நேபாளத்துடனான விவகாரக்களை கையாளுவதில் இந்தியா காண்பித்த மெத்தனப்போக்கு ஆகியவையே பல தசாப்த கால எல்லைப் பிரச்சினையை முன்னென்றுமில்லாத வகையில் புதிய உச்சத்துக்கு கொண்டுபோக அந்த நாட்டைத் தூண்டிய காரணிகள் என்று மூலோபாய விவகாரங்களில் நிபுணத்துவம் கொண்ட இராஜதந்திரிகளும் ஆய்வாளர்களும் கூறுகிறார்கள்.

   இந்தியாவுடனான எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளாக இருந்துவரும் லிபுலேக், காலாபாணி மற்றும் லிம்பியாதுர ஆகியவற்றை நேபாளத்தின் பிராந்தியங்களாகக் காட்டும் புதிய வரைபடமொன்றுக்கு பாராளுமன்றத்தின் கீழ்சபையின் ஏகமனதான அங்கீகாரத்தை நேபாளத்தின் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தினால் ஜூன் 13 சனிக்கிழமை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. இதை ஆட்சேபித்திருக்கும் இந்தியா 'செயற்கையான பிராந்திய விரிவாக்கத்தை ' ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறியிருக்கிறது.

    இரு நாடுகளுக்கும் இடையிலான ஏழு தசாப்தகால பரந்தளவிலான கலாசார, அரசியல் மற்றும் வாணிப உறவுகளைப் பொருட்படுத்தாமல் புதிய வரைபடத்துக்கு நேபாளப் பாரராளுமன்றம் அளித்த வாக்கு பிராந்திய வல்லரசான இந்தியா பொருதுவதற்கு அந்த நாடு தயாராயிருப்பதன் ஒரு பிரதிபலிப்பு என்பதுடன் பழைய உறவுமுறைக் கட்டமைப்பைப் பற்றி இனிமேலும் காத்மாண்டு  அக்கறைப்படப்போவதில்லை என்பதன் அறிகுறியுமாகும்.

   உறவுமுறை மிக மிக ஆபத்தான ஒரு கட்டத்துக்கு வருவதற்கு இரு தரப்புகளுமே அனுமதித்துவிட்டன என்றும் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து எல்லைத் தகராறு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காத்மாண்டு வலியுறுத்திவந்த நிலையில், இந்தியா அவ்வாறு பேச்சுவார்தையில் ஈடுபடுவதற்கு நேரத்தை ஒதுக்கியிருக்கவேண்டும் என்றும் 2008 -- 2011 காலகட்டத்தில் நேபாளத்துக்கான இந்தியத் தூதுவராகப் பணியாற்றிய ராகேஷ் சூட் கூறினார்." நேபாளத்தின் உணர்வுகளை மதித்துச் செயற்படாத போக்கொன்றை நாம் கடைப்பிடித்துவிட்டோம் என்று நான் நினைக்கிறேன்.நேபாளம் இப்போது அதன் நிலைப்பாட்டில் ஆழக்காலூன்றி நிற்கிறது. அதிலிருந்து அந்த நாட்டினால் வெளியே வருவது கஷ்டமாக இருக்கும் " என்று அவர் பி.ரி.ஐ.யிடம் கூறினார்.

    இந்தியாவின் ஐந்து மாநிலங்களுடன் -- சிக்கிம், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் -- 1,850 கிலோ மீட்டருக்கும் அதிகமான ஒரு எல்லையை நேபாளம் பகிர்ந்துகொள்கிறது.ஒப்பற்ற நட்புறவுக்கு ஒத்திசைவான முறையில் இரு நாடுகளும் எல்லைகளின் ஊடாக மக்கள் சுதந்திரமாக நடமாடும் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டிருக்கின்றன.

     சுமார் 80 இலட்சம் நேபாளப் பிரஜைகள் இந்தியாவில் வேலைசெய்துகொண்டு வாழ்கிறார்கள் என்று உத்தியோகபூர்வ தரவுகளில் இருந்து அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.இரு நாடுகளும் வலுவான பாதுகாப்பு மற்றும் வாணிப உறவுகளையும் கொண்டிருக்கின்றன.இந்தியாவே நேபாளத்தின் மிகப்பெரிய வாணிபப் பங்காளியாகவும் விளங்கிவருகிறது.2018 -- 19 இல் மொத்த இருதரப்பு வாணிபம் 57,858 கோடி ரூபாவாகும்.தற்போது நேபாளத்தைச் சேர்ந்த  32,000 கூர்க்கா படைவீரர்கள் இந்திய இராணுவத்தில் பணிபுரிகிறார்கள்.

Former Indian ambassador to Nepal urges Indian government to help ...

    தனது நிலையை வலுப்படுத்திக்கொள்ளவும் உள்நாட்டு அரசியல் குமுறல்களை வெற்றிகொள்ளவுமே பிரதமர் கே.பி..சர்மா ஒலீ புதிய வரைபடத்துக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறும் நடவடிக்கையை முன்னெடுத்ததாக  நேபாளத்துக்கான இந்தியத் தூதுவராக 2013 தொடக்கம் 2017 முற்பகுதி வரை பணியாற்றி இராஜதந்திரி ரஞ்சித் றே கூறினார்." இந்த வகையாக இந்திய விரோத உணர்வுகளைப் பயனபடுத்துவது   தேர்தல்களில் வெற்றிபெற அவருக்கு உதவியது.உள்நாட்டில் நெருக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் தற்போதும் இந்திய விரோதஉணர்வுகள் மீண்டும் தனக்கு உதவும் என்று அவர் நினைத்திருக்கிறார் " என்று றே தெரிவித்தார்.

   " நேபாளத்தில் பிரதமர் ஒலீயின் நிலை மிகவும் பலவீனமாக இருப்பபதால் உள்நாட்டில் அவர் எதிர்நோக்கும் பாதுகாப்பின்மையுடன் தொடர்புடையதே தற்போதைய எல்லைத்தகராறு என்று நான் நினைக்கிறேன்.பொருளாதார முனையிலும் கொவிட் --19 தொற்றுநோயின் விளைவான சுகாதார நெருக்கடியைக் கையாளுவதிலும் அரசாங்கத்தின் தோல்விகளின் காரணமாக நேபாளத்தில் அண்மைக்காலமாக பெருமளவு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.தலைமைத்துவத்தில் ஒரு மாற்றம் ஏற்படக்கூடும் என்று நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வதந்திகள் உலாவுகின்றன.அதனால் இந்தியாவுடன் பிரச்சினையைக் கிளப்புவது அவருக்கு முக்கியமான தேவையாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன் " என்றும் றே கூறினார்.

  2015 பொருளாதார முற்றுகையைத் தொடர்ந்து நேபாளத்துடனான இந்திய உறவுகள் கடுமையான நெருகுதல்களுக்கு உள்ளாகின.

    அதற்குப் பிறகு நேபாளத்துக்கு  பெருமளவு நிதி வளங்களை கொடுத்த சீனா நிலத்தினால் சூழப்பட்ட அந்த நாடு பெற்றோலியம் பொருட்களையும் ஏனைய அத்தியாவசிய உற்பத்திகளையும் கொண்டுசெல்வதற்கு சீன நகரங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வசதியாக நெடுஞ்சாலைகளையும் அமைத்துக்கொடுத்தது.புதுடில்லி மீது காத்மாண்டு தங்கியிருப்பதை துண்டிப்பதற்காகவே சீனா இவ்வாறு செயற்பட்டது எனலாம்.

  திபெத்தில் உள்ள ஷிகேட்சி பகுதியுடன்  காத்மாண்டுவை இணைக்கும் ரயில்வே பாதையையும் அமைப்பதற்கு சீனா திட்டமிடுகிறது. திபெத்தின் தலைநகர் லாசாவுக்கு தற்போது இருக்கும் ரயில்வே பாதையுடன் உத்தேச புதிய பாதை  ஷிகேட்சியில்தான் இணையும்.நிலத்தால் சூழப்பட்ட நேபாளம் பொருட்களை இறக்குமதிசெய்து கொண்டுசெல்வதற்கு இந்தியாவின் ஊடான மார்க்கங்களிலேயே முனனதாக  தங்கியிருந்தது.இப்போது சீனா அதன் நான்கு துறைமுகங்களின் ஊடாக நேபாளம் பொருட்களைக் கொண்டுசெல்வதற்கு அனுமதிக்க முன்வந்திருக்கிறது.

    சீனாவிடமிருந்து உறுதியான ஆதரவு கிடைத்துவருகிறது என்பதால் இந்தியாவுடன்  பிரச்சினைகளைக் கிளப்புவதில் கூடுதல் துணிச்சலை நேபாளம் காட்டுவதை நோக்கும்போது இந்த விவகாரங்கள் முழுவதிலும் சீனா ஒரு காரணியாக இருந்துவருகிறது என்பது தெரிகிறது என்று மூலோபாய விவகாரங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவரான பேராசிரியர் எஸ்.டி.முனி குறிப்பிட்டார்.ஆனால்,நேபாளியர்கள் தங்களது பிரச்சினைகளை தன்முனைப்புடன் வெளிக்காட்டத்தொடங்கியிருக்கிறார்கள் என்பதும் பழைய விசேட உறவுகள் கட்டமைப்பு எல்லாம் முற்றாகப் போய்விட்டது என்பதுமே நேபாளத்திடமிருந்து வருகின்ற மிகப்பெரிய செய்தி என்று முனி கூறுகிறார்.

  "பழைய உறவுமுறைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.நாம் நேபாளத்துடன் வித்தியாசமான முறையில் -- அதாவது அந்த நாட்டின் உணர்வுகளை மதித்து கூடுதல்  சாமர்த்தியத்துடன் --- செயற்படவேண்டியிருக்கும்.இது ஒரு புதிய நேபாளம்.65 சதவீதத்துக்கும் அதிகமான நேபாளியர்கள் மிகவும் இளையவர்கள்.அவர்களுக்கு கடந்த காலத்தைப் பற்றி அக்கறை கிடையாது.அவர்களுக்கென்று அபிலாசைகள் இருக்கின்றன.அந்த அபிலாசைகளுக்கு பொருத்தமானதாக இந்தியா இல்லாத பட்சத்தில் அவர்கள் இந்தியா பற்றி அக்கறைப்படப்போவதில்லை" என்றும் முனி விளக்கமளித்தார்.

    புதிய வரைபடத்துக்காக அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றைக்கொண்டுவந்ததன் மூலம் பிராந்தியம் தொடர்பிலான ்  உள்ளுணர்வு வேறுபாட்டை நேபாளம்  ஒரு தகராறாக மாற்றி அதன் நிலைப்பாட்டை பேச்சுவார்த்தைக்குட்படுத்த முடியாததாக்கிவிட்டது என்று தூதுவர் சூட் வாதிட்டார்." எமக்கு சீனாவுடன் நிலப்பிராந்தியத் தகராறு இருக்கிறது ; எமது இராணுவங்கள் இப்போது மோதல் தவிர்ப்பு குறித்து பேச்சு  நடத்திக்கொண்டிருக்கின்றன. பாகிஸ்தானுடன் எமக்கு நிலப்பிராந்திய தகராறு இருக்கிறது ; எமது இராணுவங்கள் நேருக்கு நேராக நிலைகொண்டிருப்பதுடன் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டு ஓரமாக துப்பாக்கிச்சமரும் அடிக்கடி இடம்பெறுகிறது " என்று சூட் கூறினார். பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் இருந்தே மக்களின் சுதந்திரமான நடமாட்டங்களுடன் கூடிய திறந்த எல்லையை நாம்  பகிர்ந்துகொண்டிருக்கும்போது நேபாளத்துடனான எல்லையில் தகராறு ஒன்று ஏற்டுவதை நாம் எவ்வாறு விரும்பமுடியும் என்று அவர் கேள்வியழுப்பினார். பேச்சுவார்த்தையை நடத்துவது மாத்திரமே  இரு நாடுகளுக்கும் முனனால் உள்ள தெரிவாகும் என்றும் அவர் சொன்னார்.

Know How Many Countries Touch Indian Border : IndiaNewsonWeb

    நேபாளத்தின் ' துணிச்சலான ' நடவடிக்கையின் பின்னணியில் சீனா இருக்கிறதா என்று சூட் அவர்களிடம் கேட்டபோது அண்மைய வருடங்களில் நேபாளத்தில் சீனாவின் செல்வாக்கு வளர்ந்திருக்கிறது என்பதை அவர் ஒப்புக்கொண்ட போதிலும், பெய்ஜிங்கின் ஏவலின் பேரில்தான் எல்லைப்பிரச்சினையை காத்மாண்டு கிளப்பியது என்று தான் நம்பவில்லை என்று கூறினார்.

    புரூசெல்ஸ், டக்கார், ஜெனீவா, இஸ்லாமாபாத் மற்றும் வாஷிங்டனில் இந்தியத்தூதரகங்களில் பணியாற்றிய சூட், எல்லைப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நேபாளம் விடுத்துவந்த அழைப்புக்கு இந்தியா உரியமுறையில் பதிலளிக்காதமை தொர்பாக விசனத்தை வெளிப்படுத்தியதுடன் அயல் நாட்டுடன் பேசுவதற்கு புதுடில்லி நேரத்தை ஒதுக்கியிருக்கவேண்டும் என்று கூறிப்பிட்டார்.

" எமது பிரதமர் 50 நாடுகளின் தலைவர்களுடன் வீடியோ மூலமான சந்திப்புகளை நடத்தியதாக ஒவ்வொரு நாளும் செய்திகளில் நாம் படிக்கிறோம்.எமது வெளியுறவு அமைச்சர் 70 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் வீடியோ மூலமாக பேச்சுக்களை நடத்தியிருக்கிறார். வெளியுறவு அமைச்சர் மட்டத்திலோ அல்லது வெளியுறவு செயலாளர் மட்டத்திலோ ஏதாவது ஒரு மட்டத்தில் நேபாள அதிகாரிகளுடன்  இந்தியாவினால் பேச்சு நடத்தக்கூடியதாக இருந்திருக்கவேண்டும் " என்றும் அவர் கூறினார்.

    சூட்டின் கருத்துக்களை லாவோஸ் நாட்டுக்கான இந்தியத் தூதுவராக பணியாற்றிய முனியும் ஏற்றுக்கொள்கிறார் போலத் தெரிகிறது." சிறிய அயல்நாடுகளுடன் விவகாரங்களைக் கையாளுவதில் இந்தியா அதீத நம்பிக்கையையும் மெத்தனப்போக்கையும் வெளிப்படுத்திய பெருவாரியான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.நேபாளமும் அதற்கு விதிவிலக்கு இல்லை " என்று முன கூறினார்.பெய்ஜிங் ஆதரவளித்து வருகின்றது என்பதால் இந்தியாவுடன் பிரச்சினையைக் கிளப்புவதற்கு நேபாளம் கூடுதலான அளவுக்கு உற்சாகத்தைப் பெற்றிருக்கிறது.அதனால் இந்திய -- நேபாள எல்லைச் சர்ச்சையில் சீனா ஒரு காரணியாக இருந்திருக்கிறது என்றும் அவர் சொன்னார்.

    புதிய வரைபடத்துக்காக அரசியலமைப்பு திருத்தம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு நேபாளம் எடுத்த தீர்மானம் பிரச்சினைக்கு  தீர்வு காண்பதைச்  சிக்கலாக்கிவிட்டது என்று ரஞ்சித் றே கூறினார்." இது உறவுகளை மேம்படுத்துவதை விடுத்து மேலும் சிக்கலானதாக்கப்போகின்றது என்று நான் நினைக்கிறேன்.இது பிரச்சினையை மேலும்  கையாளமுடியாததாக்கிவிடும்.பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அவர்கள் கடந்த நவம்பர் முதலிருந்தே கூறிவந்திருக்கிறார்கள்.ஆனால் ஏதோ ஒரு காரணத்துக்கா உடனடியாக பேச்சுவார்த்தை சாத்தியமில்லாமல் போய்விட்டது  என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.

" ஆனால், கொரோனாவைரஸ் நெருக்கடி முடிவுக்கு வந்த பிறகு பேசுவோம் என்று நாம் கூறினோம்.அதனால், அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றை முன்னெடுக்கவேண்டிய அவசரத்தேவை எதுவும் நேபாளத்துக்கு இருக்கவில்லை. எல்வாவற்றுக்கும் மேலாக இந்தப் பிரச்சினை 1997 ஆம் ஆண்டிலிருந்து நீடித்துவருகிறது என்பதை கவனத்திற்கொள்ளவேண்டும்.அதனால், இன்னும் சில மாதங்கள் பொறுதிருந்திருக்கலாம்.அதற்குள் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படுவது சாத்தியமாயிருக்காது " என்று றே தெரிவித்தார்.

   டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஒரு  தகைசார் பேராசிரியான முனி ' அயல்நாடுகள் முதலில் ' என்ற இந்தியாவின் கொள்கை தடம்புரண்டுபோய்விட்டது. ஏனென்றால் அதன் நடைமுறைப்படுத்தல் கட்டுப்பாட்டை மீறிச்செல்ல அனுமதிக்கப்பட்டுவிட்டது ' என்று குறிப்பிட்டார்.

   கொரோனாவைரஸ் நெருக்கடி முடிவுக்குவந்த பின்னர் மாத்திரமே எல்லைப் பிராந்திய சர்ச்சை குறித்து பேசலாம் என்று நேபாளத்துக்கு இந்தியா ஏன் சொல்லவேண்டும் என்று கேள்வியெழுப்பும் சூட் " இந்தியாவும் கூட  தவறிழைத்துவிட்டது என்பதே எனது கருத்தாகும்.நேபாளத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாம் நேரத்தை ஒதுக்கியிருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன் " என்று சொன்னார்.

  " நேபாளத்துடன் மிகவும் நெருக்கமான வரலாற்று ரீதியான கலாசார, மொழி மற்றும்  மதப் பிணைப்பை கொண்டிருப்பதாக நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.பிறகு எதற்காக நாம் 5--6 மாதங்களாக அவர்களுடன் பேச்சு நடத்துவதற்கு நேரத்தை ஒதுக்கமுடியவில்லை என்று கூறி அவர்களின் உணர்வுகளை மதிக்காமல் இருந்தோம்.அவர்கள் நவம்பரிலேயே இந்த பிரச்சினையைக் கிளப்பினார்கள்.அந்த வேளையில் கொவிட் பிரச்சினை இருக்கவில்லையே ".என்று அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22